முப்பாட்டன் நந்தனார் நுழைந்த
தெற்கு வாயிலை அடைத்து நிற்கும்
தீண்டாமை சுவரை தகர்ப்போம்!


சிதம்பரம் நடராசர் கோவிலில் தெற்கு வாயிலை அடைத்து நிற்கும் தீண்டாமை சுவர் தமிழகத்தின் அவமானச் சின்னமாக உயர்ந்து நிற்கிறது. தில்லை நடராசனுக்கு பல சுற்று மதில்களும், பிரகாரங்களும் சோழ, பாண்டிய, தொண்டைமான் மற்றும் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. மூன்றாம் சுற்று மதில் சுவரும் பிரகாரமும் கி.பி.1178 முதல் கி.பி.1218 வரை ஆட்சி புரிந்த குலோத்துங்க சோழனால் கட்டப்பட்டது. இதில் உள்ள தெற்கு வாயிலில் தான் தீண்டாமை சுவர் தீட்சிதர்களால் எழுப்பி அடைக்கப்பட்டு உள்ளது.

இன்றைய மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் அருகில் மேற்காட்டு ஆதனூரில் ஏறக்குறைய 5 ஆம் நூற்றாண்டில் பிறந்த நந்தனார், தில்லை நடராசன் மீது அளவற்ற அன்பும், பக்தியும் கொண்டிருந்தார். தனது கிராமத்தின் அருகில் உள்ள திருப்புன்கூரில் உள்ள சிவனுக்கு பூசனைப் பொருட்களை சேகரித்து தருவதையும், கோவில் குளத்தை கட்டும் பணியிலும் ஈடுபட்டு வந்துள்ளார்.

பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டு வரும் சூத்திர, பஞ்சம சாதிகளை சேர்ந்த மக்களுக்கு “கோபுர தரிசனம் கோடி புண்ணியம்” என்ற பழமொழிக்கு பின்னே சாதி ஆதிக்கத்தின் கொடூரமான அடக்குமுறை நிலவியது, இன்றும் நிலவுகிறது என்பது எத்தனை பேருக்கு புரியும்.

கிட்டிபுள்ளு: நம்ம மதுர ...பழைய படங்கள்.

சிற்றம்பல மேடையில் தமிழ் பாடும் உரிமை அரசாணையாக கையில் இருந்தும் தீட்சிதர் பார்ப்பனர்களை எதிர்த்து ஒரு லத்திக் கம்பும் சுழலவில்லை. தீட்சிதர்கள் மகா சிவராத்திரி பூஜையில் இருந்ததால் அவர்களுக்கு உச்சநீதிமன்றம் பூணூல் என்ற வயர்லெஸ் மூலம் அனுப்பியிருந்த சிற்றம்பல மேடையில் தமிழ் பாடும் உரிமையை மறுக்கும் தடையாணை கிடைக்கவில்லை, அதனால் அவகாசம் வேண்டும் என்று கதையளக்கிறார்கள். அரசு அதிகாரிகள், போலீஸ் அதை நம்புகிறது.

செயற்கை நுண்ணறிவு திறன் பயன்படுத்தப்படும் இந்த காலத்திலும் நம்மை ஒடுக்குவதற்கும், நம் போராட்டங்களை நசுக்குவதற்கும் பார்ப்பனியமும், சாதி ஆதிக்கமும் அதி நுட்பமாக பயன்படுகிறது எனும் போது 5 ஆம் நூற்றாண்டில் மேலாதனூர் கிராமத்தில் பிறந்த நந்தன் ஆடல் வல்லானை தரிசிக்க அனுதினமும் உருகி, உருகி தனது ஆண்டையான பார்ப்பன நிலப்பிரபுவிடம் கோரிக்கை வைத்த போது என்ன நடந்து இருக்கும் என்பது புரிந்துக் கொள்ள சாதிக் கொடுமை பற்றிய ஆழமான புரிதலும், அதற்கெதிரான வெஞ்சினமும் இருந்தால் மட்டுமே புரியும்.

“பறையா நீ சிதம்பரம் என்று சொல்லப்

படும்மோடா போகப்படுமோடா – அடா

மாடு தின்னும் புலையா உனக்கு

மார்கழி மாதம் ஏதடா?

என்று நந்தனின் மீதும், ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நிலவிய சாதி – தீண்டாமை அடக்குமுறையை கீர்த்தனைகளாகவே பாடினார் கோபாலகிருஷ்ண பாரதி.

ஆடல் வல்லானை தரிசிக்க துடித்த நந்தனின் கடுமையான உழைப்பை சுரண்ட ஒரே நாளில் நெல்லை விளைவிக்க வேண்டும் என்று ‘நீட் தேர்வு போல, ஒரு கொடும் சோதனை’ வைத்தாராம் ஆண்டை. அந்த சோதனையில் வெற்றிகண்ட நந்தன் தில்லையை நோக்கி தனது பக்தி பயணத்தை துவக்கி தேவாரம், திருவாசகம் பாடல்களுடன், “என்னப்பன் அல்லவா? என் தாயும் அல்லவா?” என்று பாடியபடியே சிதம்பரம் – ஓமக்குளத்திற்கு வந்து சேர்ந்தார்.

படிக்க:

  தில்லை போராட்டம் | பத்திரிக்கை செய்தி 

தனது பக்தன் வருவதை கண்காணித்துக் கொண்டே இருந்த ஆடல்வல்லான் தீட்சிதர்களின் கனவில் தோன்றி “எனது பக்தன் நந்தன் வந்து கொண்டிருக்கிறார். அவனை அக்னி குண்டத்தில் ஏற்றி அவனது இழிந்த உடலை புனிதமாக்கி, பூணூல் அணிவித்து கோவிலுக்குள் நந்தனை அனுமதியுங்கள்” என்று கூறினாராம். இதனால் நந்தனை எரித்து கொன்று, அவரையும் நாயன்மார்களில் ஒருவராக ஆக்கி கொண்டனராம். இவையெல்லாம் நந்தனார் பற்றிய பெரிய புராணத்தில் உள்ள கதை மற்றும் விளக்கம்.

பார்ப்பன (இந்து) மதம், புனிதம், பழக்க வழக்கம், நம்பிக்கை, புராணம், இதிகாசம், வேதம், சாத்திரம், தல வரலாறு என்று பல பெயர்களில் அன்று சமணம், பெளத்தம் இன்று இசுலாமியர், கிறித்தவர்கள் போன்ற பிற மதங்களை ஒடுக்குவதற்கும், மதத்திற்குள் உள்ள பெரும்பான்மை மக்களை நசுக்குவதற்கும், பார்ப்பனர்கள் தனது மேலாண்மையை நிறுவிக் கொள்வதற்கும் வழிவகுப்பதை இந்த நூற்றாண்டிலும் நாம் பார்க்க முடிகிறது.

உச்சநீதிமன்றத்தில் உள்ள பார்ப்பன நீதிபதிகள் முதல் உள்ளூரில் மணி அடிக்கும் அர்ச்சகர் பார்ப்பான் ஈறாக, இழவு காரியங்கள், திருமணங்கள் வரை வேதம் ஓதி வயிறு வளர்க்கும் சவுண்டி பார்ப்பான் வரை அவர்கள் முதுகில் ஓடும் பூணூல் கோடு, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தையும் கிரிமினல் மற்றும் சிவில் சட்டங்களையும் பலவிதமான பார்கோடுகளையும் விட வலிமையானது என்பதையே கண்ணெதிரில் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த தைரியத்தில் தான் கி.பி 8 ஆம் நூற்றாண்டு வாக்கில் கட்டி முடிக்கப்பட்ட தில்லை நடராசன் கோவிலில் காசியிலிருந்து மணி அடிப்பதற்கு வந்த தீட்சிதர் பார்ப்பனர் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக கோவிலின் மீது தனது அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொண்டு அதற்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும், தங்குமிடங்கள், சத்திரங்கள், தங்க, வைர நகைகள் மற்றும் பெரும் அளவில் புழங்கும் பணம் அனைத்தையும் ஏகபோகமாக அனுபவித்து கொண்டு, நடராசனுக்கு வரும் சட்டபூர்வ, சட்டவிரோத காணிக்கைகள் அனைத்தையும் திருடிக்கொண்டு கொட்டமடிப்பதை உச்சநீதிமன்றம் அனுமதிக்கிறது.

பார்ப்பன ஆதிக்கத்தின் பொருளியல் அடிப்படையை “காலம் காலமாக பார்ப்பனர்கள் சமூகத்திலும், அரசியலிலும் ஆதிக்கம் செலுத்துவதற்கு அவர்களின் பொருளாதாரப் பின்புலமும் ஒரு காரணமாக இருந்தது. தமிழ்நாட்டில் தஞ்சை நிலங்கள் கணிசமான அளவு கோவில்கள், மடங்கள் ஆகியவற்றின் பிடியில் இருந்தன. கோவில் பணிக்காக பார்ப்பனர்களுக்கு அரசர்கள், மடத்தலைவர்கள், ஜமீன்தார்கள் ஆகியோரால் தரப்பட்ட நஞ்சை நிலங்கள் அவர்கள் கையில் இருந்தன.

படிக்க:

  திருச்சிற்றம்பல மேடையில் தமிழ் முழங்குவோம்! சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் 

அதோடு கோவில்களின் நிலையான வருமானத்தையும், கோவில் பார்ப்பனர்களே ’நிர்வாகம்’ என்ற பெயரில் அனுபவித்து வந்தனர். கிறிஸ்தவர்களால் ஆன வெள்ளை அரசு தன்னுடைய பாதுகாப்புக்காக இந்து சம்பந்தமான விஷயங்களில் தலையிடாமல் இருந்து வந்தது.

எனவே நீதிக்கட்சி 1920-ல் இந்தியாவிலேயே முதல் முறையாக இந்து அறநிலையத்துறையிணை நிறுவி கோவில்களை பார்ப்பனர், மடாதிபதிகள் ஆகியோர் பொதுச்சொத்துக்களை விருப்பம்போல் அனுபவித்து வந்ததை நிறுத்தியது.”  என்று ’இதுதான் பார்ப்பனியம்’ என்ற நூலில் தோலுரிக்கிறார் சிவக்குமரன்.

ஆதார் அட்டை முதல் ரேசன் அட்டை வரை வாங்கி சாதாரண வாழ்க்கை வாழும் தீட்சிதர்கள் கைலாயத்தில் இருந்து சிவனுடன் வந்தனர் என்ற முட்டாள் தனத்தை, புராணக் கதையை, புளுகு மூட்டையை அப்படியே ஏற்கும் நீதிமன்றம், தெற்கு வாயிலில் நந்தன் நுழைந்தது மட்டும் பெரியபுராணத்தின் கதை என்று பார்ப்பனர்களின் கூற்றை வழிமொழிந்து வாயடைக்க பார்க்கிறது.

உண்மையில் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில், அதாவது இந்தியா சுதந்திரம் வாங்குவதற்கு முன்னர், முதல் குடமுழுக்கு நடத்தப்பட்ட 1937 வரை தெற்கு வாயிலில் நந்தனாருக்கு என்று தனியே ஒரு சன்னதியே இருந்திருக்கிறது. நடராஜருக்கு செய்யப்பட்ட பூஜை. புனஸ்காரம் மாலை மரியாதை அனைத்தும் முதல் மரியாதையாக நந்தனாருக்கு செலுத்தப்பட்டிருக்கிறது..

நந்தனார் கீர்த்தனை சரித்திரம் என்ற நூலில் கோபாலகிருஷ்ண பாரதி இதனை தெளிவாக விளக்குகிறார். நிகழ்கால சாட்சியமாக திகழும் தமிழ் வளர்ச்சித்துறை முன்னாள் இயக்குனர் கொண்டல் சு.மகாதேவன் எழுதியதை ஆதாரமாக வைத்து, ’தெரியாத்தனமாக உளறி மாட்டிக்கொண்ட’ பாஜக பிரமுகர் இல. கணேசன் உள்ளிட்ட அனைவரும் தெற்கு வாயிலில் நந்தனார் சன்னதியும் தோளிலே உழைப்பாளிகளுக்கு உரிய மண்வெட்டியை சுமந்த நந்தனாரின் உருவச்சிலையும் இருந்த உண்மையை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

சிதம்பரம் நந்தனார் மடமும் அதன் தற்கால நிலையும் - தமிழ்ஹிந்து

ஆனால் நந்தன் நுழைந்த காரணத்தினால் தீட்டுப்பட்டு விட்டதாக கூறி சாதித் திமிருடன், தெற்கு வாயிலை அடைத்து வைத்திருக்கிறார்கள் தீட்சிதர்கள். மனித உடலை அடிப்படையாக கொண்டு கட்டப்பட்ட சிதம்பரம் கோவிலின் கட்டிடக்கலைக்கு எதிராக எட்டு துவாரங்களை கொண்ட நடராசர் கோவிலில் தெற்கு வாயில் துவாரம் மட்டும் அடைக்கப்பட்டிருக்கிறது.

கோவிலுக்குள் தீண்டாமை சுவர் கோவிலுக்கு வெளியில் தீண்டத்தகாதவர்கள் என்று இழிவு படுத்தப்படும் ஒடுக்கப்பட்ட மக்களின் உழைப்பின் விளைந்து நிற்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் இவை இணைந்து தீட்சிதர்களின் ஆதிக்கத்தை இன்றும் நம் கண்முன்னே நிறுத்தி நமக்கு சவால் விடுகிறது.

“அங்கமெலாம் குறைந்தழுகு தொழுநோயராய்

ஆவுரித்துத் தின்றுழலும் புலைய ரேனும்

கங்கைவார் சடைக்கரந்தார்க் கன்ப ராகில்

அவர்கண்டீர் நாம் வணக்கும் கடவுளாரே”

என்று சிவபெருமானை விட மேலானவர்களாக தாழ்த்தப்பட்ட மக்களை வணங்குவதாக கூறிக்கொள்ளும், அப்பரின் தேவார பாடலின் நம்பிக்கையின் அடிப்படையில் பார்த்தாலும் நந்தனாரின் தெற்கு வாயில் அடைக்கப்பட்டு கிடப்பது நாட்டின் பெரும்பான்மை மக்களை இழிவுபடுத்தும் கொடூரமாகும்.

பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமன் பிறந்தான் என்ற புனைக் கதையை கட்டிவிட்டு மசூதியை இடிப்பதற்கும், கோத்ராவில் ரயிலை எரித்து கலவரத்தைத் தூண்டி இசுலாமியர்களின் மீது இனப்படுகொலை நடத்துவதற்கும், பகுத்தறிவாளர்கள், நாத்திகர்கள், கம்யூனிஸ்டுகள், பார்ப்பன (இந்து) மதத்திலேயே தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்களாக ஒடுக்கப்படும் பெரும்பான்மை மக்கள் அனைவரையும் அடக்கி ஒடுக்குவதற்கும் தான் ’இந்துவே எழுந்து நில்’ என்ற கூச்சல் ஆர்எஸ்எஸ் கும்பலுக்கு தேவைப்படுகிறது.

ஆனால் கோவிலுக்குள் சமத்துவம் இல்லை கோவிலுக்கு வெளியிலும் சமத்துவத்தை அனுமதிப்பதில்லை இந்த இழிவுகளை இனியும் நாம் தலையில் சுமந்துக்கொண்டு வளர்ச்சி, முன்னேற்றம் என்று கற்பனையாக பேசித் திரிவது அவமானம்.

சீரங்கநாதனையும் தில்லை நடராசனையும், பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ என்றார் பாரதிதாசன். நந்தன் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து நிற்கும் தீண்டாமை சுவரை தகர்த்து, வெள்ளம் போல் உள்ளே புகுந்து, அலையலையாக ஒடுக்கப்பட்ட மக்கள் சிற்றம்பல மேடையில் ஏறி தமிழை பாடவும், கருவறைக்குள் பார்ப்பனரல்லாத, அனைத்து சாதி அர்ச்சகர்கள் முழங்குவதும் எப்போதோ அப்போதே பெரும்பான்மை உழைக்கும் மக்களுக்கு பொன்னாள்! அந்த நாளை நோக்கி பயணத்தை தொடர்வோம்.

  • சண். வீரபாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here