சனாதனிகள் விவேகானந்தரைக் கொண்டாடுவதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது சாதி, சனாதனம், சனாதனிகள் பற்றிய அவரது இரட்டை நிலைப்பாடு. இதற்குச் சான்றாக அவரது நூல்களிலிருந்தே ஒரு சில கட்டுரைகளைத் தொகுத்து எழுதுகிறேன்.
முதல் நூல் விவேகானந்தர் எழுதிய “வேதாந்த தத்துவம்” (1923 பதிப்பு) எனும் நூல்.அமெரிக்கப் பிரயாணத்தின்போது ஜாதிப்பிரிவினை பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு விவேகானந்தர் அளித்த பதில் இது,
(கேள்வி) ஜனங்கள் அடையக்கூடிய இந்த ஆத்ம சம்பந்தமான சுதந்தர முக்திக்கும், ஜாதிக் கட்டுப்பாட்டைக் கவனிப்பதற்கும் சம்பந்தம் உண்டா?
பதில் [ஜாதிப்பிரிவினையைப்பற்றி ஸ்வாமிகள் கூறியிருக்கும் பதில் நிரம்பவும் கவனிக்கத்தக்கது.] (மத விஷயத்தில்) ஜாதி வித்தியாச பாவனை கூடாதென்று சொல்லுகிறார்கள். ஜாதி தர்மங்களுக்கு உட்பட்டிருப்பவர்கூட “அது ஒரு பூர்ணமான உதவியாகமாட்டாது” என்கின்றார்கள். ஆதலால், இதைக்காட்டிலும் அதிக நன்மையைக் கொடுக்கக்கூடியதான வேறு சாதனங்கள் உண்டாக்க முடியுமானால் இந்த ஜாதிப் பிரிவினையை விட்டுவிடுகிறோம். ஜாதிப் பிரிவினையே இல்லாத இடம் எங்கிருக்கிறது? உங்கள் தேசத்தில்கூட நீங்கள் எப்போதும் ஜாதிப் பிரிவினைகளை உண்டாக்குவதிலேயே சக்தியைச் செலவிட்டுக்கொண்டிருக்கின்றீர்கள். ஒரு மனிதனுக்கு ஒரு பை நிறையப் பணம் கிடைத்துவிட்டால் “அந்த நானூறு பேர்களில் நானும் ஒருவன்” என்று சொல்லிக் கொள்கின்றான். ஒரு சாசுவதமான ஜாதிப் பிரிவினையை ஏற்பாடு செய்து கொண்டது நாங்கள் மாத்திரம்தான். இதர தேசத்தார்கள் பிரயத்தனம் செய்தும் பலிக்கவில்லை. எங்களிடம் மூட பக்திகளும் தீமைகளும் வேண்டியவரையில் இருக்கின்றன. உங்கள் தேசத்திலிருந்து மூட பக்திகளையும் தீமைகளையும் எடுத்துக்கொண்டால் காரியம் நிறைவேறி விடுமா? இந்த ஜாதிப் பிரிவினை ஒழுங்காக இருப்பதால்தான் முப்பது கோடி ஜனங்களுக்கு இன்னமும் உண்பதற்குச் சாப்பாடு கிடைக்கிறது. இந்த ஜாதிப் பிரிவினையானது பரிபூர்ணமான ஏற்பாடு அல்ல என்பது உண்மைதான். ஆனால், இந்த ஏற்பாடு இல்லாமலிருந்தால் சமஸ்கிருத புத்தகங்களே இல்லாமற் போயிருக்கும். இந்த ஜாதிப் பிரிவினை என்னும் ஏற்பாடு தன்னைச் சுற்றிலும் மதில்களை எழுப்பிக் கொண்டது. அந்த மதில்களைச் சுற்றி விதம் விதமான படையெடுப்புகளெல்லாம் சூழ்ந்துகொண்டு முடிந்த வரையிலும் தாக்கியும் அவற்றால் மதில்களை உடைத்துச் செல்ல முடியவில்லை. அந்த அவசியம் இன்னமும் நீங்கவில்லையாதலால் ஜாதிப் பிரிவினை என்பது இன்னமும் இருக்கிறது. இப்போது இருக்கும் பிரிவினையானது எழுநூறுவருஷங்களுக்கு முன்னால் இருந்ததைப் போன்றதல்ல. (அதைத் தாக்கிய ) ஒவ்வொரு அடியும் அதன் உருவை மாற்றியிருக்கிறது. உலகத்திலேயே வெளி தேசங்களை ஜெயிக்காத தேசம் இந்தத்தேசம் ஒன்றுதான் என்பதைத் தெரிந்துகொண்டீர்களா? “அசோகன் என்ற பெரிய சக்கிரவர்த்தியானவன் தன் பின் சந்ததியில்கூட எவனும் ஜெயிப்பதற்காக வெளிக்கிளம்பக் கூடா” தென்று அழுத்திச் சொன்னான். இதரர்கள் எங்களுக்கு ஆசாரியர்களை அனுப்பப் பிரியங்கொண்டால் உதவி செய்யட்டும், ஆனால், கெடுதல் செய்யாமலிருக்கவேண்டும். இவ்வளவு ஜனங்களும் ஏன் ஹிந்துக்களை ஜெயிக்கப் பிரியங் கொள்ளவேண்டும். அவர்கள் பிற சமூகங்களுக்கு என்ன கெடுதலைச் செய்துவிட்டார்கள்? அவர்களால் செய்ய முடிந்த சிறு நன்மைகளை உலகிற்குச் செய்திருக்கின்றார்கள். இதர தேசத்தார்களுக்கு சாஸ்திரங்களையும் தத்துவங்களையும் மதத்தையும் உபதேசஞ் செய்து நாகரீகமே கொஞ்சமும் இல்லாமல் திரிந்துகொண்டிருந்த காட்டுமிராண்டிக் கூட்டத்தார்களை நாகரீக மடையச் செய்திருக்கின்றார்கள். இதற்குப் பிரதியாக இவர்களுக்குக் கிடைத்திருப்பதைப் பாருங்கள்! கொலையும், கொடுமையும், ‘நாகரீகமில்லா அயோக்கியர்கள்’ என்று சொல்லப்படுவதும்தான். இந்தியாவுக்கு வந்துவிட்டுப் போகும் மேனாட்டு யாத்திரிகர்கள் இந்தியாவைப்பற்றி எழுதியிருக்கும் புத்தகங்களைப் படித்துப் பாருங்கள்! என்ன கஷ்டங்களை அவர்கள் இங்கு அடைந்துவிட்டு அதற்குப் பிரதியாக இவ்விதம் தூஷிக்கிறார்கள்?
படிக்க:
🔰 எனது அனுபவத்தில் சங்கிகள் என்போர் | தினகரன் செல்லையா
நீங்கள் தத்துவ சாஸ்திரிகளாதலால் ஒரு பை பொன் இருப்பதால் மனிதர்களுக்குள் வித்தியாசம் ஏற்படுமென்று நினைக்கமாட்டீர்கள். இயந்திரங்களும் நூதன ஆராய்ச்சி சாஸ்திரங்களும் எவ்வளவு வரையில் பயன்படும்? அறிவைப் பரவச்செய்கிற வரையில் உபயோகம், அவ்வளவுதான். தேவைகளே இல்லாமற் செய்ய முடியுமா; அவற்றைக் கூர்மையாக்கினீர்கள்; அவ்வளவே, யந்திரங்களால் வறுமை ஒழியாது; மனிதர்கள் அதிகமாகக் கஷ்டப்படும்படி செய்யும். போட்டி பலப்படும். ஒரு கம்பிவழியே மின்சாரத்தைச் செலுத்தக்கூடியவனுக்கு ஞாபகார்த்த அடையாளம் எதற்காக? பிரகிருதியிடம் இந்தச் சக்தி லட்சக்கணக்காக அதிகப்பட்டிருக்கவில்லையா? எல்லா சக்திகளும் பிரகிருதியில் அடங்கிக் கிடப்பவை யல்லலா? அவற்றில் ஒன்றை நீ யடைவதால் பலனென்ன? ஏற்கனவேயிருந்த சக்தி வெளிப்படையாகியிருக்கிறது. இந்த ஜகத்து முழுமையும் ஆத்மா பழகுவதற்காக ஏற்பட்ட கசுரத்து பூமியேயாகும்! ஆதலால், ஒவ்வொன்றும் எவ்வளவு வரையில் கடவுளின் குணத்தைப் பிரகாசப்படுத்துகிற தென்று கண்டு மதிக்கப்படல்வேண்டும். மனிதனிட மிருக்கும் தெய்வத்தன்மை ஆவிர்ப்பவிக்குமாறு செய்வதே நாகரிகமாகும்.
(கே) பெளத்தர்களுக்கு ஜாதி சம்பந்தமான விதிகள்
உண்டா?
(பதில்) பௌத்தர்களிடம் ஜாதிப்பற்று அதிகம் இருந்ததில்லை; இந்தியாவில் பௌத்தர்களே மிகச் சொற்பம். பௌத்தர்; சமூகச் சீர்த்திருத்தக்காரர். அப்படியிருந்தும் பௌத்த மதம் பரவிய தேசங்களில் ஜாதிப் பிரிவுகளை உண்டாக்கப் பிரயத்தனங்கள் நடைபெற்று வருவதைப் பார்த்திருக்கின்றேன். ஆனால், அவை பலன்படவில்லை. பௌத்தர்களுடைய ஜாதியென்பது அனுஷ்டானத்தில் யாதொன்று மில்லை. ஆனால், அவர்கள் மனதில் அதைப்பற்றிக் கர்வங் கொள்கிறார்கள்.(இருப்பதாகவே நினைத்து.)
பௌத்தர்: வேதாந்த தத்துவத்திற்கண்ட சன்னியாசிகளில் ஒருவர். தற்காலம் உண்டாக்கப்படும் புதிய வகுப்புகளைப் போலவே அவரும் ஒரு புதிய உள்மத வகுப்பை ஸ்தாபித்தார். இப்போது பௌத்த மதம் என்ற பெயருடன் வழங்கும் கொள்கைகள் அவருக்குச் சொந்தமல்ல. அவைகள் (அவர் காலத்திற்கும்) முற்பட்டவைகள். அந்தக் கொள்கைகளுக்கு சர்வசக்தியுமளித்தவர் ஒரு மகா புருஷர். பௌத்த மதத்தின் விசேஷமானது சமூக சமத்துவத் தன்மை வாய்ந்திருப்பதுதான், பிராஹ்மணர்களும் க்ஷத்திரியர்களுமே எப்போதும் எங்களுக்குப் போதகர்கள். உபநிஷத்துக்களில் அநேகம் க்ஷத்திரியர்களால் எழுதப்பட்டவை. வேதங்களின் கர்ம காண்டங்கள் பிராஹ்மணர்களிடமிருந்து கிடைத்தவை. இந்தியா எங்கும் விளங்கிய பெரிய ஆசாரியர்கள் க்ஷத்திரியர்கள். அவர்கள் போதனைகளெல்லாம் உலகப் பொதுவானவை. பிராஹ்மண மகான்களில் இருவர் தவிர மற்றவர்கள் தனிப்பட்ட உபதேசங்களைச் செய்பவர்களாயிருந்திருக்கிறார்கள். கடவுளின் அவதாரங்களாகக் கொண்டாடப்படுகிற ஸ்ரீராமர்,ஸ்ரீகிருஷ்ண பரமாத்மன், பௌத்தர் முதலியோர் க்ஷத்திரியர்களே யாவார்.
உதவிய நூல்: Tamil-VEDANTA PHILOSOPHY-வேதாந்த தத்துவம்-A New Book of SWAMI VIVEKANANDA-[A Lecture and interesting Conversation with the learned professors and students of the Harward University.]
ஸ்ரீ ஸ்வாமி விவேகாநந்தர் அமெரிக்கா:- ஹார்வார்ட் கலாசாலையில் செய்தருளிய
அற்புத உபந்நியாசமான ‘வேதாந்த தத்துவம்’
[கலாசாலைமானவர்கள் கேள்விகட்கு சுவாமிகள் அளித்த விடைகளுடன்.]
மொழிபெயர்ப்பாசிரியர்:-
ஆர். நாராயண ஸ்வாமி அய்யர்-1923
சாதி பற்றிய விவேகானந்தரின் இரட்டை நிலைப்பாட்டை அறிந்துகொள்ள மேலுள்ள கேள்வி பதில் உதவும் என எண்ணுகிறேன். இதன் தொடர்ச்சியாக சனாதனிகள் பற்றி விவேகானந்தரின் பார்வை அடுத்த கட்டுரையில் இடம்பெறும்.
(தொடரும்…)
நன்றி: தினகரன் செல்லையா