பசித்தழும் குழந்தைகளுக்கு
பால்நிலவை உருட்டி வருகையில்
என் காலுடைத்தாள் மனைவி

உழைத்தும் பசி நீங்கா கோடியர்களுக்கு
அட்சய பாத்திரம் ஏந்தி வருகையில்
என் கையை கொய்தனர் உறவோர்

இலக்கிய வானில்
விண்மீன்களை நடுகையில்
மானுட மனம் உயர பாடுகையில்
பணத்தில் தலை புதைந்த
ஒழுக்கம் இல்லா வணிக மாக்கள்
சொத்தில் சமாதியிட்டு
என்னை உயிரோடு புதைத்தனர்

சீழ்பிடித்த பாழுலகம் அழுகி நாறுகையில்
புத்துலகை அடிவயிற்றில் பிரசவிக்க உந்துகையில்
என் புடைத்த வயிற்றை கிழத்து கொன்றனர் மதவெறியர்கள்

எரிக்கும் வெயில் தாங்கா உயிர் வெளியை
வாயு மண்டலமாக அரண் செய்கையில்
என்னை அணுகுண்டால் சிதற கொலுத்தினர் இலாப வெறியர்கள்

பேரொலி அருவியாய் பயம் தரும் சூழ்ச்சிகள் இரைந்தன

என் இசைக்க முடியா வாழ்க்கை
ஆயிரம் ஆயிரம் இறந்தன
நீர்படு குமிழ்களாய் உடைந்தன

நான் இறந்தேன் என்பதே திண்ணம்
எரிக்கவோ புதைக்கவோ ஆண்டுகள் ஆகலாம்
ஆயினும் ஆயினும்
மின்னல்படு ஒளிபோல்
திடுதீம் என்று உயிர்க்கின்றேன்

மானுடத்தின் உயிராய்
நான் குரலிடும்போதும்

இயற்கையின் இதயமாய் நான் இசைத்திடும்போதும்

வீரத்தின் தோழராய் நான் களம்சேரும்போதும்

பிரபஞ்சத்தின் ஆன்மாவாய்
மக்கள் அதிகாரம் நிலைபெறும்போதும்

மரணமில்லா பெரும் வாழ்வில்
சிலாகித்து நனைகின்றேன்

யாதும் போரே
யாவரும் தீர்ப்பீர்

  • புதியவன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here