ஜூன் 29ஆம் தேதி டி20 கிரிக்கெட் விளையாட்டுப் போட்டி இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் நடந்தது. ஒட்டுமொத்த இந்தியாவின் இளைய தலைமுறையினரும் நடுநிசியில் கண் விழித்துக் கொண்டு, ஒவ்வொரு பந்துக்கும் ஊளையிட்டுக் கொண்டிருந்தனர்.
இறுதியாக 7 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றவுடன் ஏற்கனவே வாங்கி வைத்திருந்த வாணவேடிக்கைகளையும், பொது இடங்களில் கூடி குத்தாட்டம் போட்டு இந்தியாவின் வெற்றியை கொண்டாடினார்.
இளைஞர்களின் சிந்தனை இப்படித்தானே இருக்கிறது, இதனை ஆதரித்து அவர்களுக்கு அனுசரணையாக சென்று அவர்களுடன் உரையாடி, அவர்களை மீட்டெடுக்க வேண்டுமே தவிர கரடு முரடாக விமர்சனங்களை வைத்து அவர்களின் முகசுளிப்பை வாங்கிக் கொள்ளக் கூடாது என்று எதிர்பார்க்கின்றனர் சிலர்.
உண்மைதான் இளைஞர்களின் துடிப்புமிக்க ரசனையை ஆதரிக்கலாம் தான்! ஆனால் அந்த விளையாட்டை பற்றிய உண்மையை தெரிந்துக் கொள்ளும்போது நமக்கு குமட்டிக் கொண்டு வருகிறது.
இந்தியாவில் கடந்த தேர்தல் ஏழு கட்டங்களாக 2024 நாடாளுமன்ற தேர்தல்கள் நடந்த போது ஐபிஎல் கிரிக்கெட் நடந்து கொண்டிருந்தது. ஜூன் 5 தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு பாசிச பாஜக மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இந்திய ஒன்றிய ஆட்சியை நடத்துவதற்கு தனிப்பெரும்பான்மை இல்லாத போதிலும், கடந்த பத்தாண்டு கால ஆட்சியின் செய்த பல்வேறு அடாவடித்தனங்களையும், பாசிச அடக்குமுறைகளையும் துவங்கி விட்டது பாஜக.
அதில் ஒன்று ஜூலை 1-ஆம் தேதி முதல் கிரிமினல் சட்ட திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் நாட்டையே திறந்த வெளி சிறைச்சாலையாக மாற்றுவதற்கு திட்டமிட்டுள்ளது. அதேபோல நாடெங்கிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறி தாக்குதல்கள் அதிகரித்துள்ளது. ஆதிக்க சாதிக் கட்சிகளுடன் உறவு வைத்துக் கொண்டு பல்வேறு இடங்களில் ’சாதி பாதுகாப்பு’ என்ற பெயரில் ஆணவப் படுகொலைகளை அரங்கேற்றி வருகிறது.
இதே காலகட்டத்தில் இந்திய பங்கு சந்தை செயற்கையாக உயர்த்தப்பட்டது, அதன் பிறகு வீழ்ச்சியடைய செய்யப்பட்டது போன்றவை காரணமாக அதானியின் ஷெல் பங்கு நிறுவனங்கள் பல்லாயிரம் குடிகளை சுருட்டியது.
இது போன்ற அரசியல், பொருளாதார ரீதியாக முக்கிய நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும்போது நாட்டின் பெரும்பான்மை மக்களை அதாவது, குறிப்பாக இளைய தலைமுறையினரை இது போன்ற விவாதங்களில் ஈடுபட விடாமல், கேளிக்கை விளையாட்டான கிரிக்கெட்டை ஊக்குவிப்பதன் மூலம் அவர்களின் உணர்வுகளை திட்டமிடே காயடித்து வருகிறது பாசிச பாஜக.
அதே சமயத்தில் பாஜக ஆதரவு கார்ப்பரேட்டுகள் பல்வேறு வகையில் வருமானங்களை ஈட்டிக் கொண்டு இருக்கிறது. இந்திய கிரிக்கெட் வாரியமான ஐசிசி, குறிப்பாக தற்போது இந்தியா வெற்றி பெற்றுள்ள டி20 விளையாட்டுப் போட்டியில் பரிசு தொகையாக 11.25 மில்லியன் அமெரிக்க டாலரை மொத்தமாக பரிசுத்தொகையாக வழங்கி உள்ளது. வெற்றியாளர்களுக்கு US 2.45 மில்லியன்அமெரிக்க டாலரும் இரண்டாம் இடத்தைப் பிடித்தவர்கள் 1.28 மில்லியன் அமெரிக்க டாலரும் பரிசாக பெறுகின்றனர்.
அமித்ஷாவின் மகனான ஜெய்ஷா பொறுப்பு போதிக்கும் ஐசிசி எவ்வாறு வருவாய் ஈட்டுகிறது என்றால் இது போன்ற கிரிக்கெட் விளையாட்டு போட்டியின் போது விளம்பரங்களை செய்வதற்கும், ஒளிபரப்புவதற்கான ஊடக உரிமை, விளையாட்டு வீரர்களின் கிரிக்கெட் மட்டை, துவங்கி அவர்கள் அணியும் தொப்பி, காலணி, ஜெர்சி உள்ளே – வெளியே அணியும் ஆடைகள் போன்ற அனைத்தையும் ஸ்பான்சர் பெயரை குறிப்பிட்டு வெளியிடுவது, அதன் பிறகு விளையாட்டு மைதானங்களில் நேரடி டிக்கெட் விற்பனை மற்றும் ஆன்லைன் மூலம் விற்கப்படும் விற்பனை தொகை, இவை எல்லாவற்றுக்கும் மேலாக விளையாட்டு மைதானங்களில் சிக்னோஜ் முறையில் ஒளிபரப்புவது, மைதானத்தை சுற்றி உள்ள திரைகளில் கிராபிக்ஸ் முறையில் ஒளிபரப்புவது,, கார்ப்பரேடுகளின் லோகோ-வை பிரபலப்படுத்துவது போன்றவறின் மூலமும் லாபத்தைக் குவிக்கிறது. இது போன்ற கிரிக்கெட் விளையாட்டு மைதானங்களை மிகப்பெரிய விளம்பர சந்தையாக பார்க்கின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.
உதாரணமாக விளம்பரங்களுக்கு 10 வினாடிகளுக்கு 6.2 லட்சம் வசூலிக்கிறது. இந்த டி20 கிரிக்கெட் மேட்ச்சை இந்தியாவின் முன்னணி டயர் உற்பத்தி நிறுவனமான மம்மன் மாப்பிள்ளையின் எம்ஆர்எப் நிறுவனம் மற்றும் அமெரிக்காவின் கடன் அட்டை&டிஜிட்டல் முறையில் நிதி அளிக்கக்கூடிய மாஸ்டர் கார்டு, இந்தியாவின் உயர்தர மது வகைகளை தயாரிக்கின்ற கோலி சகோதரர்களின் மதுபான தயாரிப்பு நிறுவனமான ராயல்ஸ் ஸ்டாக், கிரிக்கெட் மற்றும் விளையாட்டு ஒளிபரப்புகளை தனது ஆப் வழியே ஒளிபரப்புகின்ற ட்ரீம் 11, அமெரிக்காவின் கோகோ கோலா, இந்தியாவின் இண்டஸ் இன்ட் வங்கி, குஜராத் நிறுவனமான அமுல் போன்றவை இந்த விளம்பரங்களின் மூலம் தனது விற்பனையை பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு அதிகரித்துக் கொள்ளத் துடித்தனர்.
படிக்க: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ஒழிப்பது எப்போது?
இதுபோன்ற ஸ்பான்சர்ஷிப் மூலமாகவே ஐசிசி 2023 ஆம் ஆண்டு 150 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாக பெற்றது. தற்போதைய டி20 போட்டிகளுக்கான விளம்பரங்களில் மூலம் மட்டும் 2000 கோடி ரூபாயை அள்ளிக் குவித்துள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற கிரிக்கெட் ஆட்டங்களை பார்க்கின்ற பார்வையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. ஐபிஎல் மேட்சை 510 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். தற்போதைய டி20 மேட்ச் 25 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்
மேற்கண்ட புள்ளி விவரங்கள் அனைத்தும் நமக்கு தெரிவிப்பது என்ன ஒரு சாதாரண கிரிக்கெட் விளையாட்டை, விளையாட்டு வீரர்களின் திறனை வெளிப்படுத்துகின்ற விளையாட்டை போல அல்லாமல் மிகப்பெரிய வியாபார விளையாட்டாக மாற்றி சூதாட்டமாக மாற்றியுள்ளது ஐசிசி.
இதன் மூலம் கார்ப்பரேட்டுகள் நேரடியாக பல்லாயிரம் கோடியை கொள்ளையடிக்கின்றனர் என்பது அவர்களுக்கு கிடைக்கின்ற லாபமாகும். அதே நேரத்தில் நாட்டின் முக்கியமான அரசியல், பொருளாதார சிக்கல்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது பெரும்பான்மை மக்களை அதில் கவனம் செலுத்த விடாமல், அவர்களின் சிந்தனையை மழுங்கடிக்கின்ற காயடிக்கின்ற வேலையை திறனாக செய்கின்ற பங்களிப்பு இது போன்ற கிரிக்கெட் விளையாட்டுகளுக்கு உள்ளது இது வேறொரு வகையிலான லாபமாகும்.
இந்தியாவின் தேசிய விளையாட்டு ஹாக்கி என்று அழைக்கப்பட்டாலும், பார்ப்பன கும்பல் மிகவும் விரும்பி விளையாடும் கிரிக்கெட் தான், இந்தியாவின் முதன்மை விளையாட்டாக மாறியுள்ளது. அதை பார்ப்பவர்கள் மட்டுமல்ல, அதில் விளையாடுபவர்களும் பெரும்பாலும் பார்ப்பனர்களாகவே உள்ளனர் என்பதும், தற்போது இந்த விளையாட்டின் மூலம் ஆதாயத்தை பெறுகின்ற முதலாளிகளும் பார்ப்பன, பனியா கும்பலைச் சேர்ந்தவர்களாகவே உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
எதற்கெடுத்தாலும் சுரண்டல்-கொள்ளை, மக்களின் உணர்வுகளை மழுங்கடிப்பது என்று பேசிக் கொண்டே போனால் எதைத்தான் செய்வது என்று அங்கலாய்க்க கூடாது.
”மக்களின் வயிறு காலியாக இருப்பதைப் பற்றி கவலைப்படாதே! அவர்களின் மூளை காலியாக இருப்பது தான் ஆபத்தானது” என்று ரஜபுத்திர மன்னர்களுக்கு ஆலோசனை கூறினான் சாணக்கியன். ”அந்த மூளையை காலியாக வைக்காமல் ராமாயணம், மகாபாரதம் போன்ற கட்டுக் கதைகளை இட்டு நிரப்பு” என்று ஆலோசனை கூறினான். இன்றோ மக்களின் மூளையை இது போன்ற கிரிக்கெட் சூதாட்டங்களின் மூலம் இட்டு நிரப்புவது ஆளும் வர்க்க சாணக்கியர்களுக்கு மிகவும் சுலபமான பணியாக உள்ளது.
எனவேதான் நாம் இதனை எச்சரிக்க வேண்டியுள்ளது. கார்ப்பரேட்டுகளின் கல்லா கொட்டுகிறது! உங்கள் மூளை காலியாகிறது என்பதுதான் நாட்டின் பெரும்பான்மை மக்களுக்கு நாம் மீண்டும் மீண்டும் சொல்ல வேண்டிய செய்தியாகும்.
கனகசபை.