ஆகமக் கோயில்களில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்களை நியமிப்பதற்கு எதிராக, சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பின் உண்மைத் தன்மையை விளக்கி,எமது சங்கமும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையமும் இணைந்து 8.9.22 அன்று சென்னை ரிப்போர்ட்டர்ஸ் கில்டில் ஊடகவியலாளர் சந்திப்பும், கூட்டமும் நடத்தினோம். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திரு.தொல்.திருமாவளவன், மேனாள் நீதியரசர் அரி பரந்தாமன் ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கத்தை உருவாக்குவதற்கும்; உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் வழக்கு நடத்துவதற்கும் தொடர்ந்து முயற்சி எடுத்து வருபவர்களான, மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு, ம.உ.பா மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன், வழக்கறிஞர் மில்டன், ம.க.இ.க வின் முன்னாள் செயலர் தோழர் மருதையன் ஆகியோர் இக்கூட்டத்தில் உரையாற்றினர். இந்நிகழ்ச்சி ஊடகங்களின் பரவலான கவனத்தைப் பெற்றது.

இக்கூட்டம் வெற்றிகரமாக நடந்ததைத் தொடர்ந்து, எங்கள் அனைவரையு மட்டுமின்றி, அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமித்த திமுக அரசையும் மிக இழிவாக அவதூறு செய்து வினவு இணையதளம் ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது. அதில் “கலைஞரும் திமுக அரசும் பிழைப்புவாதிகள்”, “ஸ்டாலினுக்கு திராவிட ஆட்சியை நடத்தும் விருப்பம் இல்லை”, “திமுகவின் மானம் காற்றில் பறக்கிறது”, “வாஞ்சிநாதன், மருதையன் போன்றோர் பதவிக்காக திமுக வுக்கு சோப்பு போடுகிறார்கள்” – என்று பலவாறாக வசைபாடியுள்ளனர். https://www.vinavu.com/2022/09/10/some-stars-are-moving-here-too/ இக்கட்டுரையில், அர்ச்சகர் பிரச்சனைக்காக எங்கள் சங்கமும், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையமும் நடத்திய ஆர்ப்பாட்டங்களின் புகைப்படங்களையும் இணைத்துள்ளனர். இதனைப் படித்த சிலர் என்னைத் தொடர்பு கொண்டு “நீங்கள் இவர்கள் கருத்தை ஆதரிக்கிறீர்களா?” என்று என்னை விமர்சித்தனர். அதன் பின்னர்தான் வினவு கட்டுரையைப் படித்தேன். உடனே வினவு தளத்தை தொடர்பு கொண்டேன்.

“நீங்கள் வெளியிட்டிருக்கும் கட்டுரையில் எனக்கு எள்ளளவும் உடன்பாடில்லை. திமுக அரசையும் வாஞ்சிநாதன் உள்ளிட்ட தோழர்களையும் இழிவுபடுத்துவதுதான் உங்கள் நோக்கம். உங்கள் கேடான நோக்கத்துக்கு அர்ச்சக மாணவர்கள் புகைப்படத்தைப் பயன்படுத்தாதீர்கள். அவற்றை நீக்குங்கள்” என்று கோரினேன். முடியாது என்று அவர்கள் மறுத்து விட்டனர்.

தற்போது வினவு தளத்தை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வெற்றிவேல் செழியன், மருது, அமிர்தா போன்ற நபர்களுக்கு திமுக எதிர்ப்புதான் முழுமுதற் கொள்கை. “திராவிட மாடலும் ஆரிய மாடலும் ஒன்றே”, “ஸ்டாலினும் மோடியும் ஒன்றே” “திராவிட மாடல் இந்துராஷ்டிரா” என்றவாறு வினவு தளத்தில் தொடர்ந்து அவதூறு செய்து வருகிறார்கள். அந்த வரிசையில் இப்போது எங்கள் பிரச்சனையையும் சேர்த்துள்ளனர்.

ஓராண்டிற்கு முன்னதாக, மதுரை உயர்நீதிமன்றத்தில் எமது சங்கம் தொடுத்திருந்த ஒரு வழக்கின் செலவுக்காக வெற்றிவேல் செழியன், மருது தரப்பினர் ரூ.5,000/- நன்கொடை கொடுத்தனர். அதற்கு ஈடாக “வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், ராஜு ஆகியோருடன் தொடர்பு வைத்து கொள்ளக் கூடாது” என்று எனக்கு நிபந்தனை விதித்தனர். நான் மறுக்கவே, “ரூ.5000-த்தை திருப்பிக் கொடு, அது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சுரேஷ் சக்தி முருகனின் சொந்தப்பணம்” என்று நெருக்கடி கொடுத்தனர். சுரேஷ் சக்தி முருகனும் அப்பணத்தை திருப்பி தருமாறு கேட்டு வருகிறார்.

ஆகஸ்டு 14, 2021 அன்று அர்ச்சகர் நியமனத்தைத் தொடர்ந்து, இவ்வழக்குக்காக பல ஆண்டுகளாகப் பாடுபட்ட வழக்கறிஞர்கள் ராஜு, வாஞ்சிநாதன் மற்றும் தோழர் மருதையன் ஆகியோரின் பெயரைக் குறிப்பிட்டு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டேன். உடனே வெற்றிவேல் செழியன், மருதுவின் அமைப்பினர் தொலைபேசியில் எனக்கு கொலைமிரட்டல் விடுத்தனர்! “போலீசிடம் புகார் செய்வேன்” என்று எச்சரித்த பின்னரே நிறுத்திக்கொண்டனர். இவர்களுடைய பண்பாட்டுத்தரத்துக்கும் அரசியல் நாகரிகத்துக்கும் இச்சம்பவங்களே சான்று.

உண்மையில், அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் ஆகிய அமைப்புகளுக்கும் இவர்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. வினவு இணையதளத்தை கைப்பற்றி வைத்திருப்பதால், அதில் விருப்பம் போல பொய்களை எழுதிப் பரப்புகின்றனர்.

சென்ற ஆண்டு பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்ட பின் அவர்களுக்கு என்ன நடந்தது என்று இவர்கள் யாரும் அக்கறைப்படவில்லை. சில கோயில்களில் பார்ப்பன அர்ச்சகர்களால் அவர்கள் இழிவுபடுத்தப்பட்டதையும், கருவறைக்குள் அனுமதிக்கப்படவில்லை என்பதையும் நேரில் சென்று விசாரித்து உண்மைநிலையை வெளியே கொண்டுவந்தவர்கள் வழக்கறிஞர் வாஞ்சிநாதனும் தோழர் மருதையனும்தான். அதன் விளைவாகத்தான் அறநிலையத்துறையும் நடவடிக்கை எடுத்தது.

இந்த ஆண்டு தொடக்கத்தில், உயர்நீதிமன்றத்தில் பார்ப்பனரல்லாத அர்ச்சகர் நியமனத்துக்கு எதிராக 25 க்கும் மேற்பட்ட வழக்குகளை ஆர்.எஸ்.எஸ் சார்பு நபர்கள் போட்டிருக்கிறார்கள் என்ற அபாயத்தை சுட்டிக்காட்டி, விரிவான ஒரு அறிக்கையை பிப்ரவரி மாதமே வெளியிட்டது மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம். அதுமட்டுமல்ல, நியமிக்கப்பட்ட அர்ச்சகர்கள், பிற அமைப்பினர் ஆகியோரை வழக்கில் இணைந்து கொள்ளுமாறு கூறியதுடன், அர்ச்சக மாணவர் சங்கத்தை இவ்வழக்கில் இணைத்ததும் ம.உ.பா.மையம்தான்.

தற்போதைய உயர்நீதிமன்றத் தீர்ப்பின் உண்மைநிலையை ஊடகங்கள் வாயிலாக அனைவருக்கும் எடுத்துக் கூறியவர்கள் வழக்கறிஞர் வாஞ்சிநாதனும், தோழர் மருதையனும்தான். தற்போது செப்,8 கூட்டத்தை நடத்துவதற்கு பொருளாதார வலிமையற்ற எமது சங்கத்துக்கு உதவியவர்களும் மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தோழர்கள் சரவணன், மில்டன்,வாஞ்சிநாதன் ஆகியோரே.

மேற்சொன்ன ஆக்கபூர்வமான செயல்பாடுகளுக்கும் வினவு தளத்தின் அவதூறுப் பேர்வழிகளுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. நிலுவையில் உள்ள வழக்குகள் பற்றியோ, முதல்வர் தொடங்கி வைத்திருக்கும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் புதிய மாணவர்களை சேர்ப்பதற்கு நாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பற்றியோ, பழைய பயிற்சி பெற்ற மாணவர்களின் வயது வரம்பினை தளர்த்துவதற்காக அரசிடம் நாங்கள் மேற்கொண்ட முயற்சிகளைப் பற்றியோ இவர்களுக்கு எதுவும் தெரியாது.

பாஜகவைப் பற்றி சமூக ஊடகங்களில் வாய்ச் சவடால் அடிப்பதற்கு மேல், எவ்வித உருப்படியான நடவடிக்கைகளில் ஈடுபடும் நோக்கமும் இவர்களுக்கு கிடையாது. அதனால்தான் தங்களுடைய தனிப்பட்ட வன்மத்தைத் தீர்த்துக் கொள்ளும்பொருட்டு, இப்பிரச்சனைக்காக அக்கறையுடன் செயல்பட்டு வரும் தோழர்களைப் பற்றி கூசாமல் பொய்களைப் பரப்புகின்றனர். இது அத்தோழர்களுக்கு எதிரான அவதூறு மட்டுமல்ல, எமது சங்கத்துக்கு எதிரான நடவடிக்கையும் ஆகும்!

இவ்வாறு ஜனநாயக சக்திகள் மீதும் திமுக அரசு மீதும் அவதூறு பரப்புவது, சனாதன பாசிச சக்திகளை வலுப்படுத்தவே உதவும் என்று தெரிந்தே இத்தகைய சீர்குலைவுச் செயலில் வினவு தளம் ஈடுபடுகிறது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். தங்களிடம் வந்தால் ஆதரிப்போம், இல்லாவிட்டால் எதிர்ப்போம் , பிரச்சனையைப் பற்றி அக்கறையில்லை என்ற வினவின் போக்கு ஆபத்தானது. ஆர் எஸ் எஸ் – பா ஜ க- விற்கு எதிராக தமிழகத்தில் உருவாகிவரும் அனைத்து கட்சிகள், அமைப்புகள், இயக்கங்களின் ஒற்றுமையை சிதைக்கக் கூடியது.

எனவே,அர்ச்சக மாணவர்களுக்கு ஆதரவு கொடுத்து வரும் திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள், பெரியாரிய, அம்பேத்கரிய, இடதுசாரி , இசுலாமிய அமைப்புகள் உள்ளிட்ட அனைவரும் வினவு தளம் மற்றும் வெற்றிவேல் செழியனின் மக்கள் அதிகாரம் ஆகியோரின் இந்த இழிவான நடவடிக்கைகளைக் கண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

14.09.2022

ரங்கநாதன், தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம்;
அனைத்து சாதி அர்ச்சக மாணவர்கள் சங்கம்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here