‘ஏகாதிபத்தியமும், பாட்டாளி வர்க்க புரட்சியும்’ என்ற லெனினிச சகாப்தத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் உலகை சூறையாடி வரும் அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் ஏகாதிபத்தியங்களில் ஆதிக்கத்தை வீழ்த்துவதற்கு போராட வேண்டியுள்ளது,
ஏகாதிபத்திய நிதி மூலதனம் இன்று படு பிற்போக்கான, மூர்க்கத்தனமான பாசிச சர்வாதிகாரத்தை திணிக்கின்ற காலகட்டத்தில் இந்திய பாட்டாளி வர்க்கத்தின் அரசியல் போராட்டத்தை முன்னெடுத்து செல்வதற்கு மாமேதை தோழர் லெனின் பிறந்த ஏப்ரல் 22 அன்று புதிய ஜனநாயகத்தின் சார்பில் தினசரி இதழை முகநூல் பக்கத்தில் துவங்கியிருந்தோம்.
இன்றுடன் தினசரி இதழ் துவங்கப்பட்டு 100 நாட்கள் ஆகிறது. இந்த நூறு நாட்களில் ஒன்று, இரண்டு தினங்களை தவிர உள்நாட்டு, உலக அரசியலை அவதானித்து கட்டுரைகளை வெளியிட்டு வருகின்றோம் என்பதை அறிவீர்கள்.
நாடு தழுவிய அளவில் ஒன்றுபட்ட பாட்டாளி வர்க்க கட்சியை கட்டுகின்ற முயற்சியில் இந்த தினசரி குறிப்பிடத்தக்க பங்காற்றும் என்று கருதுகின்றோம்.
தினசரியின் நூறாவது நாள், 500 வது நாள், ஆயிரமாவது நாள் என்று நாட்களை அதிகரித்துக் கொண்டே செல்வது பெருமைக்குரிய விடயம் என்று நாங்கள் கருதவில்லை. இந்திய உழைப்பாளி மக்களின் மீதான துன்ப துயரங்களுக்கு உடனடி தீர்வை புதிய ஜனநாயக புரட்சியின் மூலம் அளிக்காமல் நாள்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டு போவது பாட்டாளி வர்க்கத்துடன் இணைந்து எமக்கும் வேதனை தருவதாகும்.
நாடு தழுவிய அளவில் ஒன்றுபட்ட கட்சியை உருவாக்கி ஏற்றத்தாழ்வான வளர்ச்சி கொண்ட இந்திய சமூக அமைப்பில் புதிய ஜனநாயக புரட்சியை முன்னெடுத்து செல்வதற்கு தங்களின் ஆதரவும், ஒன்றிணைப்பும் அவசியம் என்றே கருதுகின்றோம்.
இத்தகைய ஒன்றிணைப்பை சாதிப்பதற்கு புதிய ஜனநாயகம் தினசரியில் நீங்களும் பங்களிக்க முடியும். அதாவது உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகளை பாட்டாளி வர்க்க கண்ணோட்டத்தில் எழுதி அனுப்புவதன் மூலமும், புதிதாக கட்டுரைகளை எழுத பழகிக் கொள்வதன் மூலமும் நீங்களும் புதிய ஜனநாயக புரட்சிக்கு மேலான பங்களிப்பை செலுத்த முடியும் என்றே கருதுகின்றோம். இந்த முயற்சியில் ஆர்வமுள்ள தோழர்களை வரவேற்கின்றோம்.
புதிய ஜனநாயக புரட்சிப் பாதையில் பாட்டாளி வர்க்கம் முன்னேறிக் கொண்டிருக்கையில், தற்போதைய அரசியல், பொருளாதார சூழலில் ஆளும் வர்க்கங்களுக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடு காரணமாக உருவாகியுள்ள கார்ப்பரேட் காவி பாசிசத்தை வீழ்த்துவதற்கு ஜனநாயக கூட்டரசு ஒன்றை நிறுவுவதை உடனடி இலக்காக முன்வைத்து செயல்படுகின்றோம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
பேச்சுரிமை எழுத்துரிமை சங்கம் கட்டும் உரிமை உள்ளிட்ட ஜனநாயக உரிமைகளை குழி தோண்டி புதைக்கின்ற பாசிச பயங்கரவாதத்தை வீழ்த்துகின்ற மகத்தான பணியில் நாம் அனைவரும் ஒன்று பட்டு செயல்பட வேண்டிய காலகட்டம் இது. அதற்கான ஒன்றிணைப்பையும் சாதித்துக் காட்டுவோம்.
குறிப்பிட்ட கால இலக்கு வைத்து தினசரி இதழை இன்றைய டிஜிட்டல் யுகத்திற்கு பொருத்தமான இ-பேப்பராக கொண்டு வருவதற்கும், அதனை வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து நாடு தழுவிய அளவில் பாட்டாளி வர்க்கத்தின் போர்க் குரலாக ஒலிக்கச் செய்வதற்கும் எம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்று உறுதியளிக்கின்றோம்.
புதிய ஜனநாயகம் தினசரி முகநூல் பக்கத்தை தங்களது உறவினர்கள், நண்பர்கள், உடன் பணி புரியும் தொழிலாளர்கள், அக்கம் பக்கத்து வீட்டில் குடியிருப்பவர்கள், பாசிசத்திற்கு எதிராக போராட முன் வருகின்ற கட்சிகள், அமைப்புகள், தனிநபர்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்யுங்கள்.
புரட்சிகர வாழ்த்துகள்!
தோழமையுடன்,
ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.







பாட்டாளி வர்க்கத்தின் போர் ஆயுதமாக விளங்கும் “புதிய ஜனநாயகம்” தினசரி
தனது 100-வது நாளில் அடியெடுத்து வைப்பதற்கு மகிழ்வுறுகிறேன். நாட்டின் புரட்சிகர மாற்றத்தைக் கொண்டு வர அதன் பங்கு மென்மேலும் தழைத்தோங்கட்டும்!
பாராட்டுக்கள்! புரட்சிகர வாழ்த்துக்கள்!!
நன்றித் தோழரே!