வெனிசுலா:
அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு எதிராக போராடும்
தென்அமெரிக்க கண்டத்தின் நட்சத்திரம்!


வெனிசுலா தென் அமெரிக்க கண்டத்தில், வடக்கு கடற்கரை ஓரத்தில் உள்ள உலகின் 33 வது பெரிய நாடாகும். இது கரீபியன் கடலில் உள்ள பல தீவுகளையும், 2,800 கி.மீ, நீண்ட கடற்கரையையும் கொண்டுள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் உள்ள மிகவும் நகரமயமாக்கப்பட்ட வாழ்க்கையில் வாழுகின்ற மக்களைக் கொண்ட நாடு வெனிசுலா.

19 ஆம் நூற்றாண்டின் துவக்கம் வரை வெனிசுலா ஸ்பெயின் நாட்டின் காலனியாக இருந்தது. 1811 ஆம் ஆண்டு ஸ்பெயினில் இருந்து சுதந்திரத்தைப் பெற்றது. 1830 ஆம் ஆண்டு முழுமையான இறையாண்மை கொண்ட ஒரு நாடாக உருவானது.

வெனிசுலா உலகில் முன்னணி எண்ணெய் ஏற்றுமதி நாடாக இருந்த போதிலும், அதன் வளங்கள் அனைத்தும் தனியார் முதலாளிகளின் கையில் இருந்தது. வெனிசுலாவின் ஒரினோகோ படுகை, வெனிசுலாவின் சமவெளி பிரதேசங்கள் மற்றும் கரீபியன் கடற்கரைப் பகுதிகள் ஆகியவை பெட்ரோலிய வளம் நிறைந்த பகுதிகளாகவும், இயற்கை எரிவாயு கிடைக்கும் பகுதிகளாகவும் உள்ளது.

இது மட்டுமின்றி காபி, கோகோ போன்ற விவசாய விளை பொருள்கள் உற்பத்தி ஆகின்றன. இயற்கை கனிமவளங்களில் முக்கியமாக இரும்புத்தாது, தங்கம் மற்றும் பிற கனிமங்கள் வெனிசுலாவின் பொருளாதாரத்தில் இரண்டாம் பட்சமாக முக்கிய பங்கு வகிக்கின்றன.

வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை அமெரிக்க மேல்நிலை வல்லரசு பல கட்டாய ஒப்பந்தங்களின் மூலம் கொள்ளையடிக்கிறது. இதனால் தான் முக்கியமான பிரச்சினை உருவாகிறது. நாட்டில் உற்பத்தியாகின்ற எண்ணெய் வளங்கள் அனைத்தையும் தனக்கு மட்டுமே ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று அமெரிக்கா தொடர்ந்து நிர்பந்தித்து வந்தது.

தென் அமெரிக்க கண்டத்தின் மக்கள் மீது தனது மறுகாலனியாதிக்கத்தை நிறுவுவதற்கு படுகொலைகள், ஆட்சிக் கவிழ்ப்புகள், இராணுவ சர்வாதிகாரத்தை நிறுவுதல் போன்ற வழிமுறைகளின் மூலம் முயற்சித்தது. அதுமட்டுமன்றி ஏகாதிபத்தியங்களின் லாப வேட்டைக்காக கொண்டு வரப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் உள்ளிட்ட புதிய தாராளவாத கொள்கைகளை 1970-கள் முதலே தென் அமெரிக்க மக்கள் மீது திணித்தனர். அமெரிக்க அடிவருடி கார்லோஸ் மூலம் உலகமயக் கொள்கைகளை அமுல்படுத்தியது.

1980-களில் இருந்த பத்தாண்டை ‘தொலைந்து போன பத்தாண்டுகள்’ என்று தென் அமெரிக்க கண்டத்தின் மக்கள் கூறிவருகின்றனர். 21-ஆம் நூற்றாண்டில் துவக்கத்திலிருந்தே ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதிலும், புதிய தாராளவாதக் கொள்கைகளை எதிர்ப்பதிலும் முன்னணியில் நின்று செயல்படுகின்றனர்.

வெனிசுலாவில் கிடைத்த எண்ணெய் வளத்தை அங்கிருந்த தனியார் முதலாளிகளும், ஒரு சில பணக்கார குடும்பங்களும் தனது சொத்துக்களாக பயன்படுத்தி கொள்ளை அடித்து வந்தனர். நாட்டின் இயற்கை வளம், கனிம வளம் பெரும்பான்மை மக்களுக்கு எந்த பயனையும் அளிக்கவில்லை. மக்கள் வறுமையிலும், பஞ்சத்திலும் வாடினார்கள்.

இந்த சமயத்தில் 1997 ஆம் ஆண்டு 5வது குடியரசு கட்சி என்ற பெயரில் சோசலிசத்தை முன் வைத்து கட்சியை துவக்கினார். உலகமயக் கொள்கைகளுக்கு மாற்றாக சமூக பொருளாதார மாற்றத்தை கொண்டு வருவதே தனது லட்சியம் என்று அறிவித்தார். எண்ணெய் விற்பனையின் மூலம் கிடைக்கின்ற வருவாய் அனைத்தையும் நாட்டு மக்களுக்கு கிடைக்கச் செய்வதாகவும், எண்ணை வயல்களை நாட்டுடமையாக்குவதாகவும், 1998 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் போட்டியிட்ட ஹியூகோ சாவேஸ் வாக்குறுதி அளித்தார். அது போலவே தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு நாட்டிற்கு முக்கியமான வருவாயை ஈட்டித் தருகின்ற துறையான பெட்ரோலிய துறையை நாட்டுடைமை ஆக்கினார்.

ஹியூகோ சாவேஸ்

1999 ஆம் ஆண்டு ஹியூகோ சாவேஸ் ஆட்சிக்கு வந்தபின் வெனிசுலாவில் எண்ணெய் வளங்கள் அனைத்தையும் நாட்டுடைமை ஆக்கும் வகையில் புதிய அரசியல் நிர்ணய சபை மூலம் அரசியலமைப்பு சட்டத்தை திருத்தினார். அதன் மூலம் உள்நாட்டில் எண்ணெய் விலை மிகக் குறைவான விலைக்கு விற்பனையானது. இதைக்கண்ட அமெரிக்கா வெறி கொண்டு வெனிசுலாவின் மீது தொடர்ந்து பல பொருளாதாரத் தடைகளை விதித்து கொண்டிருந்தது. இவற்றையெல்லாம் மீறி வெனிசுலா சுயசார்பு பொருளாதாரத்துடன் தன்னை தக்கவைத்துக் கொண்டது. 2002 ஆம் ஆண்டு உலகின் நான்காவது பெரிய எண்ணெய் உற்பத்தி நாடானது.

சாவோஸ் எண்ணெய் வளத்தை நாட்டுடைமையாக்கி அதன் மூலம் கிடைத்த 66% வருவாயை கொண்டு பல்வேறு சமூக நலத் திட்டங்களை மேற்கொண்டார். அதற்காக அதிக அளவில் அரசு வருவாயில் இருந்து செலவு செய்தார். வறுமையை ஒழிப்பதற்கு தனியார் நிறுவனங்களில் குறிப்பிட்ட சிலவற்றை அரசுடைமையாக்கி வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்தார். மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்கள் அனைத்தையும் பொதுத் துறையாக்கினார்.

2000 ஆண்டு வாக்கில் அமெரிக்க மேல்நிலை வல்லரசு தென் அமெரிக்க கண்ட நாடுகள் அனைத்தையும் ஒன்றிணைத்து, அமெரிக்க சுதந்திர வர்த்தக பிராந்தியம் (Free trade area of Americas) ஒன்றை நிறுவ அமெரிக்க தொடர்ந்து முயற்சி செய்து வந்தது. இதனை நடை முறைப்படுத்த எண்ணி அமெரிக்கா, அர்ஜெண்டினா நாட்டில் ஏற்பாடு செய்த மாநாட்டில் ஹியூகோ சாவேஸ் கலந்துக் கொண்டு அமெரிக்காவின் ஆதிக்கத்தை எதிர்த்து களத்தில் நின்றார். அர்ஜெண்டினா நாடு முழுவதும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்கள் வெடித்தன. கலவரங்கள் வெடித்தன. மிகப்பெரும் எதிர்ப்பு கிளம்பியது.

2013 ஆம் ஆண்டு சாவோஸ் மரணத்திற்கு பிறகு ஆட்சியில் அமர்ந்த மதுரே ஆட்சிக்கு வந்தபோது ஏற்பட்ட சர்வதேச ரீதியில் 2014 ஆம் ஆண்டு உலக அளவில் ஏற்பட்ட எண்ணெய் விலை சரிவால் அந்த நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு நிலை தடுமாறியது. எண்ணெய் ஏற்றுமதியை முக்கியமான வருவாயாக கொண்டு செயல்பட்டதால் நாட்டின் பொருளாதாரம் சிக்கலுக்கு உள்ளாகியது. இதனால் 2017-ஆம் ஆண்டு வெனிசுலாவில் 2820%-மாக இருந்த பணவீக்கம், 2018 ஆம் ஆண்டு 12,870% உயர்ந்தது.

அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான வெனிசுலா மக்களின் போராட்டம்

சாவோஸ் வெனிசுலாவின் மருத்துவம், கல்வி ஆகியவற்றை அடிப்படையாக மக்களுக்கு தேவையான வகையில் முன்னுரிமை கொடுத்து பொருளாதாரத்தை கட்டியமைத்து இருந்தார்.  ஆனால் உணவு உற்பத்தி மற்றும் பிற உற்பத்தித் துறைகள் அனைத்தும் தனியார் வசமே இருந்தன. சாவேஸ் இறப்பிற்குப் பிறகு ஆட்சிக்கு வந்த நிக்கோலஸ் மதுரோ ஆட்சிக் காலத்தில், இவற்றைப் பயன்படுத்திக் கொண்டு தனியார் முதலாளிகள் உணவு பொருட்களின் விலையை பல மடங்கு உயர்த்தி நாட்டு மக்களை வறுமையிலும், பசியிலும் தள்ளினர்.

முதலாளித்துவ ஊடகங்கள் குறிப்பிடுவதைப் போல ஒரு முட்டை வாங்குவதற்கு ஒரு மூட்டை நாணயத்தை கொடுக்க வேண்டிய அளவிற்கு அவல நிலை ஏற்பட்டது. இதற்கு உணவு துறையில் ஆதிக்கம் செலுத்தி வந்த தனியார் முதலாளிகளின் லாபவெறி தான் முக்கிய காரணமாகும்.

வறுமைக்கும், பசிக்கொடுமைக்கும் தள்ளப்பட்ட மக்கள் அரசுக்கு எதிராக போராட்டங்களில் இறங்கினர். இந்தக் கொடுமைகளுக்கு நாட்டை ஆட்சி செய்கின்ற ஆட்சியாளர்கள் தான் காரணம் என்றும், அதிலும் குறிப்பாக ஹியூகோ சாவேஸ்-க்கு பிறகு வந்த மதுரோ ஆட்சி தான் காரணம் என்றும், அவரை 2016 ஆம் ஆண்டு தேர்தலில் தோற்கடித்தனர். இதன் பின்னணியில் அமெரிக்க அடிவருடி ஜியான் குயோடோவும், அமெரிக்க ஆதரவு ஊடகங்களும் பல்வேறு சதிச் செயல்களை செய்து வந்தார். ஆனால் அமெரிக்காவின் வெறியாட்டம் அடங்கவில்லை.

வெனிசுலாவின் அரசு நிறுவனமான பெட்ரோலிய டி வெனிசுலா எஸ்ஏ (Petro’leos de venezuela, SA) நிறுவனத்திடமிருந்து யாரும் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் வாங்கக் கூடாது என்று 2019 ஆம் ஆண்டு மீண்டும் அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. ஆனால் அமெரிக்க எஜமானனின் மிரட்டல்களை யாரும் ஏற்கவில்லை. குறிப்பாக அமெரிக்கவின் நிரந்தர அடிமையான இந்தியாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் (Reliance industries) கூட பணியவில்லை இதுபோலவே ரஷ்யாவின் ராஸ் நெஃட் (Rosneft) ஸ்பெயின் நாட்டின் ரெப்சால் (Repsol) அமெரிக்காவின் செவ்ரான் (Chevron) ஆகிய நிறுவனங்கள் வாங்கினர். அமெரிக்காவின் சூழ்ச்சிகள் பெரிதளவு பயன் தரவில்லை.

அமெரிக்காவின் மறுகாலனியாக்க சூழ்ச்சிகளை தொடர்ந்து நிகோலஸ் மதுரோ அம்பலப்படுத்தி பிரச்சாரம் செய்து வந்தார். வெனிசுலாவின் மக்கள், நாடு இந்தளவு பொருளாதார ரீதியாக பின்னடைவு அடைந்ததற்கு அமெரிக்காவின் பொருளாதார தடை மற்றும் உள்நாட்டு முதலாளிகளின் லாப வெறி தான் காரணம் என்பதை தற்போது புரிந்து கொண்டுள்ளனர். இதனால் தற்போது நடைபெற்றுள்ள தேர்தலில் நிக்கோலஸ் மதுரோ-வை மீண்டும் அதிபராக தேர்வு செய்துள்ளனர்.

நிகோலெஸ் மதுரோ

தென் அமெரிக்கக் கண்டத்தை பொறுத்தவரை பொலிவியா, கியூபா, வெனிசுலா போன்ற நாடுகளில் நடைபெறுகின்ற ஏகாதிபத்திய எதிர்ப்பு, அதிலும் குறிப்பாக அமெரிக்க மேல்நிலை வல்லரசை எதிர்த்து நடைபெறுகின்ற போராட்டங்களை, அமெரிக்காவிற்கு எதிரான வெற்றிகளை சர்வதேசிய கண்ணோட்டத்திலிருந்து பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க வேண்டும். சர்வதேச அரங்கில் இருந்து அமெரிக்க மேல்நிலை வல்லரசை தனிமைப்படுத்தி முறியடிக்க வேண்டும்.

  •  இரா.கபிலன்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here