
வேலூரில் கோட்டை, பொற்கோயில் , CMC மருத்துவமனை, வேல்டெக் காலேஜ் என விரல்விட்டு எண்ணக்கூடிய இடங்களுக்கு மக்கள் அதிகமாக செல்கின்றனர். இவர்களை நம்பியே வேலூரில் பலரும் ஆட்டோ ஓட்டி வருகின்றனர். வரலாற்று சிறப்புமிக்க வேலூரில் அன்றாடம் பிழைக்கவே ஆட்டோ ஓட்டுநர்கள் படும்பாட்டை சொல்லி மாளாது.
குறுகிய நகரத்துக்குள் தொழில்போட்டி!
சில ஓட்டுநர்களை சந்தித்து பேசியதில் இருந்து அவர்களின் வாழ்க்கை போராட்டம் பற்றி புரிந்துகொள்ள முடிந்தது. வேலூரின் நகர எல்லைக்குள் தொழிற்பேட்டைகள் இல்லாததாலும், வேலூரின் மையத்திலிருந்து சுமார் 15 கிமீ சென்றாலே மாவட்ட எல்லை முடிந்து விடுவதாலும் ராணிப்பேட்டை போன்ற தொழிற்பகுதிகளுக்கோ, சுற்றியுள்ள கிராமங்களுக்கோ சவாரி எடுக்கவும் முடியாத நிலையில் இருக்கின்றனர்.
மகளிர் கட்டணமில்லா பேருந்தால் பெண்கள் சவாரியும் கிடைப்பதில்லை. இந்நிலையில் ஆண்டுதோறும் புதிய ஆட்டோக்களுக்கும் பர்மிட் தந்து வருவதால் நெருக்கடி மேலும் அதிகமாகிறது.
இது போதாது என்று போக்குவரத்து காவல்துறையும் தன் பங்கிற்கு ஆட்டோ ஓட்டுநர்களை துன்புறுத்துகிறது. ஆட்டோ ஓட்டுநர்களில் சிலர் சமையல் எரிவாயுவை பயன்படுத்தியது உள்ளிட்டு விதிமீறுகின்றனர் என்று ஒத்துக்கொள்ளும் ஓட்டுநர்கள் பல சமயங்களில் காவல்துறையினர் நேர்மையின்றி நடந்துகொள்வதாக விவரித்தனர்.
தோழர் பகத்சிங் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல சங்கத்தின் செயலர் சரவணன் கூறும்போது ”அரசு 1.8 கி.மீ.க்கு குறைந்த பட்ச கட்டணமாக 50ரூபாயையும் , கூடுதல் தூரத்துக்கு 15/ கி.மீ. என நிர்ணயித்தால் உதவியாக இருக்கும்” என்றார்.
துன்புறுத்தும் அதிகார வர்க்கம்!
சாலையில் சவாரி எடுப்பதே சவாலாக இருக்கும் நிலையில், எடுத்த சவாரியை இறக்கிவிட சாலை ஓரத்தில் நிறுத்தினால் கூட ”நோ பார்கிங்” என வழக்கு போட்டு வதைக்கின்றனர். இதையெல்லாம் தாண்டி ஆட்டோ ஓடுனருக்கு ஹெல்மெட் போடவில்லை என்று அபராதமும் போட்டுள்ளனர்.
TN 23 CK 3620 என்ற பதிவெண்ணில் ஆட்டோ ஓட்டும் சரவணனுக்கு 16.10.2024 இல் ஹெல்மெட் போடவில்லை என்று ஆன்லைனில் அபராதம் போட்டுள்ளனர் என்று ஸ்கிரீன்ஷாட்டை காட்டினர் தோழர் பகத்சிங் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல சங்கத்தினர். ஆட்டோ ஓட்டிக்கொண்டிருந்த தனக்கு பொய்வழக்கு போட்டுள்ளதையும், காவல்துறையின் தரப்பில் தெளிவில்லாத ஒரு புகைப்படத்தை ஆன்லைனில் பதிவேற்றியுள்ளதையும் காட்டினார் சரவணன்.

போக்குவரத்து காவலர்களுக்கு அபராம் வசூலிக்க டார்கெட் இருக்கலாம். அதற்காக, ஆட்டோவில் போனால் கூட இப்படியா அபராதம் போடுவது?
சேட்டுகள் காட்டில் மழை!
கந்து வட்டிக்கு, மீட்டர் வட்டிக்கு பணம் தருவது போல ஆட்டோவுக்கு பணம் தந்து RC புக்கை வைத்துக் கொண்டு வட்டி வாங்கும் சேட்டுகள் அதிகம். சொந்தமாக ஆட்டோக்களை புதிதாக இறக்கி, RTO அலுவலகத்தில் பதிவும் செய்து, கூலிக்கு ஓட்டவிட்டும் சம்பாதிக்கின்றனர்.
படிக்க:
🔰 ஆட்டோ டாக்ஸிகளை ஒழித்துக் கட்ட பார்க்கும் அபராதங்கள்!
🔰 திருச்சியில் ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் தலைமையில் இரயில் மறியல் போராட்டம்!
சென்னை சென்ட்ரலில் வந்து இறங்கும் ஓட்டுநர்கள் சேட்டுகளின் ஆட்டோக்களை எடுத்து ஒரு வாரம் கூலிக்கு ஓட்டிவிட்டு, குடும்பத்தை பார்க்க சொந்த ஊர்களுக்கு வாரம் ஒருமுறை சென்று திரும்புவதும் நடக்கிறது.
வேலூரில் சொந்தமாக வண்டி எடுக்கவும் , எதிர்பாராத செலவுகளின்போதும் கந்துவட்டி கடன் வலையில் சிக்கும் ஓட்டுநர்கள், இவர்களின் கடன் வலையில் இருந்து மீளமுடியாமல் தற்கொலை செய்து கொள்வதும் அவ்வப்போது நடக்கிறது.
பணம் படைத்தவர்கள் பத்து ஆட்டோக்களுக்கு மேல்கூட பர்மிட் வாங்கி கூலிக்கு டிரைவரை வைத்து ஓட்டுகின்றனர். ஆனால் லோன் போட்டு சொந்தமாக வண்டி இறக்கி, சாலையில் காத்துக்கிடந்து சவாரி எடுத்து தவணை கட்டமுடியாமல் தவிப்பவர்கள்தான் அதிகம் என்கிறார் தோழர் சரவணன்.
புற்றீசல் போல் பெருகும் ஆட்டோக்களை கட்டுப்படுத்துவது எப்படி? வண்டிக்கு பெர்மிட் தருவதை மாற்றி ஒரு டிரைவருக்கு ஒரு பெர்மிட்தான் என்று விதியை உருவாக்கி கட்டுப்படுத்த வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர் ஓட்டுநர்கள். அரசு தீர்வை தருமா?
ஏழைக்கு ஒரு நியாயம்!
சவாரி கிடைத்தாலும் அது மார்க்கெட் சவாரியாக இருந்தால் லக்கேஜ் ஏற்ற முடியாது. பயணியுடன் அவரின் காய்கறி மூட்டையை ஏற்றினால் அதற்கும் அபராதம் போடுகிறது வேலூர் காவல்துறை. ஆம்னி பேருந்துகள் ஒரே நேரத்தில் பயணிகள் மற்றும் சரக்குகளை ஏற்றிக்கொண்டு தேசிய நெடுஞ்சாலையில் ’பறப்பதை’ அனுமதிக்கும் அதிகார வர்க்கத்தினர் ஆட்டோவிற்கு மட்டும் சட்டத்தை நீட்டுகின்றனர்.
பெட்ரோல், டீசல், எரிவாயு விலைகளை எண்ணெய் கார்ப்பரேட்டுகளும், அதிகார வர்க்கமும் தம் விருப்பத்துக்கு ஏற்றி கொழுக்கின்றனர். ஆட்டோமொபைல் துறையில் கோலோச்சுபவர்களும் உள்நாட்டு சந்தை, உலக சந்தை என தொழிலை விரிவாக்கி வருகின்றனர். ஆனால் நடுவில் ஓட்டுநர்களும் பொதுமக்களும்தான் கார்ப்பரேட்டுகளின் பிடியில் சிக்கி சீரழிகின்றனர்.
ஓலா, ஊபர், ரேப்பிடோ போன்றவை வேலூருக்கும் வந்தால் ஆட்டோ ஓட்டுனர்கள் மொத்தமாக தொழிலைவிட்டே போக வேண்டியிருக்கும். அல்லது ஓட்டுநர்களை சங்கமாக்கி உரிமைகளை மீட்டெடுக்க அரசுடனும், கார்ப்பரேட்டுகளுடனும், கந்துவட்டி கும்பலுடனும் மோத வேண்டும். ஓட்டுநர்களான உழைக்கும் மக்களுக்கு நாம் துணை நிற்போம்.
இளமாறன்.






