“பதிப்பகத்தைத் தடை செய்| பதிப்பக நிர்வாகிகளை குண்டாசில் உள்ளே தள்ளு” என்று கீழைக்காற்றுப் பதிப்பபகத்திற்கு எதிராக தமிழகத்தில் உள்ள காவிக் கும்பல் விஷத்தைக் கக்கி வருகிறது. நீதித்துறை, காவல்துறை, உள்துறை என பல்வேறு துறைகளுக்கும் புகார்களை அனுப்பியும் உள்ளது. அவர்களின் விருப்பப்படியே உயர் நீதிமன்றத்தால் நூல் தடை செய்யப்பட்டுள்ளது.
நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனை விமர்சித்து வெளிவர இருப்பதாக விளம்பரம் தரப்பட்ட நூல் குறித்த புகாரின் மீது ஜனவரி 7ஆம் தேதி மதியம் சென்னை உயர்நீதிமன்றம் புத்தகத்தை தடை செய்து உத்தரவிட்டுள்ளது. நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் குறித்து இந்நூல் புத்தக கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்படக்கூடாது என்று கண்காணிக்குமாறு தமிழக அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது. மூன்று வாரத்திற்குள் இது குறித்து பதிப்பகம் பதிலளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2025 ஆம் ஆண்டில் மதுரை திருப்பரங்குன்றம் தொடர்பான சர்ச்சைகளும், அதில் தீபம் ஏற்றியே தீர வேண்டும் என்று ஒரு கலவரத் தீயை மூட்ட துடித்த சங்கி கும்பல்களின் பல்வேறு முயற்சிகளும், அதை எதிர்த்து முற்போக்காளர்கள் ஜனநாயக சக்திகள் உள்ளிட்டோர் நடத்திய போராட்டங்களும் வரலாற்றில் நிற்கின்றன. தற்காலிகமாக அமைதி நிலவி வருகிறது. தீர்க்கப்படாத பிரச்சனைகள் அடுத்த கார்த்திகைக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
தற்போது 2026 ஜனவரியிலேயே இப்பிரச்சினை மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. நில அளவைச் கல்லின் மீது தீபம் ஏற்றுவதற்கு உத்தரவிட்டு சர்ச்சையை தொடங்கி வைத்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் குறித்த நூல் ஒன்றை வெளியிடுவதாக கீழைக்காற்று பதிப்பகம் விளம்பரம் செய்திருந்தது.
தம்மை அம்பலப்படுத்தும் விளம்பரத்தை பார்த்து கொதித்து எழுந்துள்ள காவிக் கும்பல் “அந்நூலை தடை செய்ய வேண்டும்; பதிப்பகத்தாரை குண்டாஸில் உள்ளே தள்ள வேண்டும்; பதிப்பகத்தை தடை செய்ய வேண்டும்” என்றெல்லாம் குதிக்க ஆரம்பித்துள்ளது. தமது புகார்களை காவல்துறைக்கும், ஒன்றிய அரசின் உள்துறைக்கும் கூட அனுப்பியும் உள்ளனர். இது குறித்த செய்திகள் பார்ப்பன தினமலரிலும், தமிழ் இந்து தினசரி பத்திரிக்கையிலும் அவர்களது இணைய பத்திரிக்கையிலும் கூட வெளியிடப்பட்டுள்ளது.
கருத்துரிமை உள்ளதா?
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் செயல்பாடுகள் தவறு என்பதால்தான் பாராளுமன்ற எம்.பிக்கள் அவரை பதவி நீக்க வேண்டும் என்று கையெழுத்திட்டு மனு தந்தனர். அதே நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் குறித்த ஒரு வெளியீட்டைக் கொண்டு வருவதாக கீழைக்காற்றும் விளம்பரம் செய்தது. அதன் தலைப்பாக “ஜி.ஆர் சாமிநாதன் நீதிபதியா? ஆர்எஸ்எஸ் ரவுடியா?” என தலைப்பிட்டு இருந்தது. அட்டைப் படத்தில் ஜி.ஆர். சாமிநாதன் ஒரு கையில் காவிக் கொடியுடனும், மற்றொரு கையில் திரிசூலத்துடன் நிற்கும் கேலிச்சித்திரமும் இடம்பெற்று இருந்தது. நீதிபதி ஜி.ஆர்.எஸ் மீது இப்படி ஒரு விமர்சனம் புதிதல்ல. அவர் மீதான குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று நூற்றுக்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் Impeachment நடவடிக்கைக்குக் கோரியுள்ளனர்.
புத்தகத்தைக் கடையில் வைக்காதே!
இதற்கிடையில் ஜனவரி எட்டாம் தேதி சென்னையில் தொடங்க உள்ள புத்தக கண்காட்சியில் கீழைக்காற்று அரங்கில் இந்நூலை விற்பனைக்கு வைக்க கூடாது என்று பபாசி நிறுவனத்திற்கு சங்கிகள் அழுத்தம் தந்தனர். அதன் விளைவாக பபாசி நிர்வாகம் கீழைக்காற்று நிர்வாகிகளிடம் பேசி நூலை விற்பனைக்கு அரங்கில் வைக்க வேண்டாம் என்று வலியுறுத்தியது.
புத்தகக் காட்சி சிக்கல் இன்றி நடக்க வேண்டும்; அதில் கடை போட்டுள்ள விற்பனையாளர்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்றதை ஏற்று, கீழைக்காற்று பதிப்பகமும் புத்தகக்காட்சியில் நீதிபதி GRS பற்றிய நூலை விற்பனைக்கு வைக்கவில்லை என்று முகநூலில் அறிவிப்பும் செய்துள்ளது.
நூலைப் படிக்காமலேயே அது வெளிவரக்கூடாது என்று அடாவடி செய்கிறது காவிக் கும்பல். அவர்களுக்குத் துணை செய்வதாகத்தான் உயர்நீதிமன்ற உத்தரவும் உள்ளது. தான் விரும்பாத, தன்னை விமர்சிக்கின்ற, தமது ஆதரவு நீதிபதி குறித்து அம்பலப்படுத்துகின்ற நூலை புத்தகக்காட்சியில் விற்கக்கூடாது என்று காவிகளின் எண்ணம் ஈடேறிவிட்டது.
இதன் மூலம் நீதிபதிகளும் அவரின் செயல்பாடுகளும் பரிசீலனைக்கு அப்பாற்பட்டவை என்று நிலைநாட்ட நீதிமன்றம் விரும்புகின்றது. ஆனால் அந்நீதிபதி சமூகத்தின் அமைதியை குலைக்கும் வகையிலும், கலவரத்தைத் தூண்ட எத்தணிக்கும் காவி கும்பலுக்கு வலு சேர்க்கும் வகையிலும், தனது நீதிபதி பதவியை பயன்படுத்திக் கேடான தீர்ப்புகளை, அநீதியான தீர்ப்புகளை வழங்கி வரும் சூழலில் கூட நாம் அமைதி காக்க வேண்டுமாம். அவரை யாரும் விமர்சிக்கக் கூடாது; அந்நீதிபதியின் செயலை யாரும் பரிசீலனைக்கு உட்படுத்தக் கூடாது என சங்கிக் கும்பல் கூச்சலிடுகிறது. அதாவது சங்கிகளுக்கு ஆதரவாக ஒரு நீதிபதி துணைக்கு வருகிறார். அந்நீதிபதி அம்பலப்படும்போது சங்கி கும்பல் அவருக்கு ஆதரவாக களத்திற்கு வருகிறது.
நீதிபதிகளை விமர்சிப்பது தெய்வக்குற்றமா?
பக்தியுடன் பகுத்தறிவும் தர்க்கமும் தமிழர்களின் மரபிலேயே உள்ளது. அநீதிக்கு அடிபணியாத நெஞ்சுரத்தைப் போற்றி வந்துள்ளது. நீதிபதியை மட்டுமல்ல, மன்னனை மட்டுமல்ல, கடவுளே ஆனாலும் நாங்கள் எதிர்த்து கேட்போம் என்ற மரபு நம்மிடம் உள்ளது.
பொறுப்பில் உள்ள நீதிபதியை விமர்சிக்கக் கூடாது என்று தான் உயர்நீதிமன்றம் நூலைத் தடை செய்துள்ளது. ஆனால் பொறுப்பில் உள்ளவர்கள் தவறிழைக்கும் பொழுது அதை தட்டிக் கேட்பது தான் நமது மரபு.
இலக்கியங்களில் இருந்து சான்றுகளை பரிசீலிக்கலாம். ”நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே” என்று கடவுளுக்கு எதிராக கவிஞன் நின்றதாக, சிவனை எதிர்த்து நக்கீரர் நின்றதாக நாம் படித்துள்ளோம். திருவிளையாடல் திரைப்படத்திலும் பார்த்து ரசித்து உள்ளோம்.
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் எதை எழுதியுள்ளார்? தீர்ப்பு சொன்னது மன்னனே ஆனாலும், அத்தீர்ப்பு தவறு என்றால் எதிர்த்து கேள்வி கேட்கலாம் என்பதை தானே பதியவைத்துள்ளார். கண்ணகி தனது காற்சிலம்பை எடுத்துக்கொண்டுச் சென்று நீதி கேட்டு, பாண்டிய மன்னனின் தீர்ப்பை தவறு என்று நிரூபித்து, மதுரையை எரித்த கதையையும் கேட்டுள்ளோம். மனிதர்கள் கிடக்கட்டும்; கன்றை இழந்த பசு ஆராய்ச்சி மணியை அடித்து, சோழ மன்னனிடம் நீதி விசாரணையை கேட்டு, மன்னனையே குற்றவாளி கூண்டிலும் ஏற்றி, தீர்ப்பு பெற்ற கதையெல்லாம் நாம் படிக்கவில்லையா?
படிக்க:
♦ நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை கண்டித்து போராட்டம் தோழர்கள் கைது | மகஇக
♦ திருப்பரங்குன்றம் விவகாரம்: நீதிபதியின் ஆர்.எஸ்.எஸ். சார்பு
திருவள்ளுவரோ ”எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு” என்று தானே நம்மை சிந்திக்க கற்றுத் தந்துள்ளார். அந்த மரபின் படி நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதனின் தீர்ப்பை நாம் சீர்தூக்கி பார்க்க வேண்டாமா? ”நோய் நாடி, நோய் முதல் நாடுவது” எப்படி குற்றமாகும்?
தமிழர்களின் இந்த மரபை வரித்துக் கொண்டு பதிப்புலகம் செயல்பட்டால், தமது சதிகள் அம்பலமாகி விடுமே என்று காவிக் கும்பல் பதறுகிறது. மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள் நீதிமன்ற தீர்ப்புகளையோ, தீர்ப்பு எழுதியவர்களின் வர்க்கசார்பு, சித்தாந்த சார்புகளையோ பரிசீலித்தால் சங்கிகளுக்கு குலைநடுங்குகிறது.
உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சிப்பது தவறு என்ற கோட்பாடுகள் ஒரு பக்கம் இருக்கட்டும்; உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியையே நேரடியாக குற்றம் சாட்டியதைக் கூட நாம் பார்த்துள்ளோம்தானே. அதையும் யார் செய்தார்கள்? சக நீதிபதிகளே தான் செய்தார்கள்.
பத்திரிக்கையாளரைக் கூட்டி வைத்து தலைமை நீதிபதியின் செயல்பாடுகளை முறைப்படுத்த தவறினால், நீதித்துறையே நாசமாகிவிடும், ஜனநாயகத்திற்கு பேராபத்து என்று உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகளே எச்சரிக்கவும் செய்தனர். நீதிபதிகள் ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை நிரூபணம் செய்தனர்.
பாசிசம் அடிமைத்தனத்தையே அனுமதிக்கும்!
பாஜக தலைமையிலான ஆர்எஸ்எஸ் சங்கிகள் தற்போதுள்ள நீதித்துறையையோ, சட்டங்களையோ, அரசியல் அமைப்பையோ புனிதமானது என்று போற்றுபவர்கள் அல்ல. சபரிமலை தீர்ப்பு வந்த போது இவர்கள் அதை எப்படி அணுகினார்கள் என்பதை நாடே அறியும். ‘நடைமுறைப்படுத்த முடியாத தீர்ப்புகளை வழங்கக்கூடாது’ என்று உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷா நீதிபதிகளுக்கு ஆலோசனை தந்தத்தையும் நாம் பார்த்தோம். தமிழக சங்கி எச்.ராஜா ”ஹை கோர்ட்டாவது மயிராவது” என்று கேட்டதையும் நாம் பார்த்துள்ளோம். அதாவது அமித்ஷாவும் எச் ராஜாவும் ஒரு நீதிபதியை அல்ல; நீதித்துறையை – நீதிமன்றத்தையே விமர்சித்துள்ளார்கள்.
எதையும் செய்வதற்கு காவிப் பாசிஸ்டுகளுக்கு மட்டுமே அனைத்து சிறப்பு உரிமைகளும் இருப்பது போலவும், நாமெல்லாம் விமர்சனத்தை கையில் எடுத்தால் அது குற்றம் என்பது போலவும், நம்மை ஒடுக்கவும், நம் கருத்து சுதந்திரத்தைப் பறிக்கவும் களமாடுகிறது சங்கிக் கூட்டம்.
அதாவது காவிகளுக்குக் குடிமக்கள் தேவையில்லை; சுய சிந்தனை உள்ளவர்கள் தேவையில்லை; கேள்வி ஞானம் உள்ளவர்கள் தேவையில்லை; அவர்களுக்குத் தேவைப்படுபவர்கள் எல்லாம் தமது உத்தரவுகளுக்கு கீழ்ப்படியும் அடிமைகள் மட்டுமே. இதற்கு மாறாக மக்களை, வாசகர்களை சிந்திக்க தூண்டும் படைப்புகள் வருவதைக் கண்டு பதறுகிறார்கள்.
RSS கும்பலும் நீதிமன்றமும் தம்மை அம்பலப்படுத்தும் நூல் சென்னைப் புத்தகக்காட்சியில் விற்பனைக்கு வந்து விடக்கூடாது எனப் பபாசிக்கு நெருக்கடி தந்து தடுத்திருப்பதன் மூலம் நடப்பது காவிப் பாசிச ஆட்சி என்பதை வாசகர்களுக்கு உணர்த்தி உள்ளது. இப்போக்கு ஒரு வெளியீட்டை தடுப்பதோடு நிற்குமா? கீழைக்காற்றுடன் மட்டும் நிற்குமா? என்பதை முற்போக்குப் பதிப்பகங்கள், இடதுசாரி பதிப்பகங்கள், பெரியாரிய, அம்பேத்கரிய பதிப்பகங்கள் கணக்கில் எடுத்துக் கொண்டு பரிசீலிக்க வேண்டியுள்ளது.
ஜனநாயகத்தை நேசிக்கும் அனைவரும், காவி பாசிசத்திடம் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என சிந்திக்கும் அனைவரும், பதிப்பு சுதந்திரத்தில் தலையிடும் சங்கிகளுக்கு எதிராக கண்டனங்களை தெரிவிப்போம். பதிப்பகங்களின் பதிப்புரிமைக்காகவும் சுதந்திரத்திற்காகவும், வாசகர்கள் தான் விரும்பியதை தேர்வு செய்து வாசிக்கும் உரிமைக்காகவும் குரல் கொடுப்போம்.
(அ)நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ள இருக்கும் பதிப்பகத்தாருக்கு துணை நிற்போம். பாசிஸ்டுகளின் இலக்காக உள்ள கீழைக்காற்றை ஆதரிப்போம்.
இளமாறன்.







நூலுக்கு தடை:
கழுத்தை நெரிக்கும் காவிகளும் நீதிமன்றமும் !
ஜி. ஆர் .சுவாமிநாதன் நீதிபதியா ஆர் எஸ் எஸ் இன் ரவுடியா
இந்த நூலின் அட்டை படத்தைக் கண்டு அரண்டு போய் உள்ள சங்கி கும்பல் கீழைகாற்று பதிப்பகத்திற்கு நூலை விற்க தடை விதித்துள்ளது
சிலப்பதிகாரம் திருக்குறள் மதுரை எரித்த கண்ணகி மண்ணனிடம் நீதி கேட்ட பசு போன்ற உதாரணங்கள் சிறப்பாக உள்ளது.
முற்போக்கு பதிப்பகங்கள் நீதிமன்ற செயலையும் காவி கும்பலின் அராஜகத்தையும் கண்டிக்க வேண்டும் என சுட்டிக்காட்டுவது சரியே .
கட்டுரை ஆசிரியர்
தோழர் இளமாறன்
அவர்களுக்கு நன்றி
கருத்து கூறும் சுதந்திரத்தை தடை செய்வதென்பது பாசிச சக்திகளின் கையாலாகத தனத்தை தான் காண்பிக்கிறது.
கருத்துக்கு பதில் எதிர் கருத்தாக தான் இருக்க முடியுமே தவிர அதனை அடாவடி தானமாக தடை செய்வது என்பது எப்படி.
அந்த நூலில்என்ன சொல்ல பட்டுள்ளது என்பதை படித்துக் கூட பார்க்கவில்லை இருப்பினும் இந்த நடவடிக்கை..
அதுவும் முற்போக்கு மாநிலம் பார்ப்பன எதிர்ப்பு மாநிலம் என்று மார்தட்டி கொள்ளும் தமிழ்நாட்டிலேயே இந்த நிலைமை எனில்..
வட மாநிலங்களில் சங்கிகளின் ஆட்டம் எவ்வாறு இருக்கும் என்பதை இளைஞர் சமூகம் படித்த சமூகம் தெரிந்து கொள்ள வேண்டும்