ந்தியாவில் நடக்கும் தேர்தல் தில்லுமுல்லுகள் குறித்த தரவுகள் அடுத்தடுத்து காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தியால் வெளியிடப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் பெங்களூரில் தொடங்கி பீகார் மாநிலத்தில் நடந்ததை அம்பலப்படுத்தி, தற்போது அரியானாவில் நடந்துள்ள தில்லுமுல்லுகளும் வெளிச்சத்திற்கு கொண்டுவரப் படுகின்றன.

வாக்காளர் பட்டியலில் தவறு என்றால் “ஏன் புகார் தெரிவிக்கக் கூடாது?”என்று உத்தமர்களைப் போல் பாஜகவினர் கேட்கின்றனர். எதிர்கட்சிகளோ, ஜனநாயகத்தின் மீது மதிப்பு கொண்டவர்களோ ஒரு மாநிலத்தில் நடந்த தேர்தலில் முறைகேடு உள்ளதாக கருதினால், சந்தேகப்பட்டால், நம்பினால் அவர்கள் என்ன செய்ய வேண்டும்? இந்திய தேர்தல் ஆணையத்திடமே தான் புகார் தரவேண்டும். புகார் தர “தேசிய குறைதீர்க்கும் சேவைகள் இணைப்பு (NGSP)” உள்ளது. அதில் இணையம் மூலம் பதிவு செய்யலாம். அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தின் டெல்லியில் உள்ள தலைமையகத்திற்கோ அல்லது மாநில அளவில் தலைமை தேர்தல் அதிகாரிக்கோ எழுத்துப்பூர்வமாகவும் புகாரை அனுப்பலாம். இதுதான் தற்போதுள்ள வாய்ப்புகள்.

இதற்கு என்ன அர்த்தம்? அதாவது யார் முறைகேடில், திருட்டுத்தனத்தில் ஈடுபட்டார்கள் என்று நாம் கருதுகிறோமோ, சந்தேகிக்கிறோமோ, குற்றம் சாட்டுகிறோமோ, அவர்களிடமே  “உனது நடத்தையை நான் விசாரணைக்குள்ளாக்க விரும்புகிறேன். உன்னை விசாரிக்க வேண்டும்” என்று மனு கொடுத்து அழைப்புக்கு காத்து நிற்க வேண்டும். ஞானேஷ்குமாரிடமே அவரின் ஆணையத்தை விசாரிக்க கோர வேண்டும்.

சட்டப்படியும் விசாரிக்க முடியாது!

தேர்தல் ஆணையர்களை விசாரிக்கவாவது முடியுமா? அதுவும் உத்தரவாதமில்லை. தேர்தல் ஆணையர்களை  அவர்கள் பதவியில் இருக்கும் போது மட்டுமல்ல; அவர்கள் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும் கூட, நாம் வழக்கு தொடுத்து விசாரிக்க வைக்க முடியாது எனும் அளவிற்கு அவர்கள் பாதுகாக்கப்பட்டு விட்டார்கள்.

மோடி ஞானேஷ்குமார் கூட்டணியின் தேர்தல் முறைகேட்டை தடுக்க விரும்புபவர்கள் நேரடியாக நீதிமன்றத்தை நாடினாலும் உடனே நடக்காது. ஒரு தனி நபரின் மீதுவழக்கு தொடுப்பது போல் தேர்தல் ஆணையர்களின் மீதெல்லாம் வழக்கை பதிவு செய்துவிட முடியாது. அந்த அளவிற்கு சட்டபூர்வ பாதுகாப்பை மோடி உத்திரவாதம் செய்துள்ளார். இதற்காகத்தான் 2023 இல் சட்டத்தையும் திருத்தினார்.

படிக்க: பாஜகவின் தேர்தல் பிரிவாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம்!

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் உச்ச நீதிமன்ற நீதிபதியைப் போலவே அதே பாதுகாப்பை அனுபவிக்கிறார். இவரை எளிதாக தேர்ந்தெடுத்துவிட முடியும். ஆனால் நீக்க வைக்க முடியாது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளாலும் பதவி நீக்கம் செய்ய ஒப்புதல் தேவை. இதற்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படுகிறது. அதற்குப் பிறகு ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் மட்டுமே பதவியில் இருந்து நீக்க முடியும்.

சட்டம் அனைவருக்கும் பொதுவானதல்ல!

“சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்பதெல்லாம் வெறும் ஏட்டுச்சுரைக்காய் தான். உண்மையில் சட்டத்தின் முன் அனைவரும் சமம் இல்லை. உதாரணத்திற்கு நீதிபதிகள் நம் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள். அதாவது நீதிமன்ற தீர்ப்பை விமர்சிக்கலாம்; ஆனால் தீர்ப்பளித்த நீதிபதியை நாம் விமர்சிக்கவோ குற்றவாளி கூண்டில் ஏற்றவோ முடியாது. கீழமை நீதிமன்றத்தில் மரண தண்டனை தரப்பட்டவரை மேல்முறையீட்டில் நிரபராதி என்று விடுவிக்கலாம். கீழமை நீதிமன்றத்தில் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டவரை உச்ச நீதிமன்றத்தில் குற்றவாளி என்று தூக்கிலும் ஏற்றலாம். முரண்பட்ட எதிரெதிரான தீர்ப்புகளை தந்த இரு நீதிபதிகளில் யாராவது ஒருவர் தான் சட்டத்தின்படி சரியாக நடந்து கொண்டவர். மற்றொருவர் தவறாக தீர்ப்பை அளித்தார் என்றால் அவரை நாம் கூண்டில் ஏற்றி விசாரிக்க முடியாது.

மோடி ஆட்சியை நீட்டிக்கவே இந்திய தேர்தல் ஆணையர்!
ராகுல் காந்தி

எத்தகைய கேடுகெட்ட தீர்ப்பை தந்தாலும் அவர்களுக்கு சட்டபூர்வ பாதுகாப்பை வழங்கி – சட்டத்தின் முன் அனைவரும் சமம் அல்ல என்று –  நீதிபதிகள் விசாரணைக்கு அப்பாற்பட்ட புனிதர்களாக்கப்பட்டு விட்டனர். நாட்டு நலனில் அக்கறைகொண்டு விமர்சிப்பவர்கள் மீது “நீதிமன்ற அவமதிப்பு” எனும் நடவடிக்கைதான் ஏவப்படுகிறது. நீதிபதிகள் புனிதமானவர்கள் எனும் அளவிற்கு சட்டபூர்வமாக சிறப்பு பாதுகாப்பு கவசத்திற்குள் நிறுத்தப்பட்டு விடுகிறார்கள்.

மணிப்பூரிலும், காஷ்மீரிலும் நடப்பதை போன்று ராணுவத்தினர் நம் ஊருக்குள் புகுந்து அத்துமீறல்களில் ஈடுபட்டால், அதை நம் நீதிமன்றங்களில் வழக்கு போட்டு விசாரிக்க வைக்க முடியாது. வல்லுறவு, படுகொலை குற்றம் சாட்டப்பட்ட படைப்பிரிவையோ, வீர்ர்களையோ ராணுவ நீதிமன்றம்தான் விசாரிக்கும். அதாவது அவர்களை அவர்களே  ‘விசாரித்துக்’ கொள்வார்கள். அதாவது நமது குற்றவியல் நடைமுறை சட்டம் படையினருக்கு பொருந்தாது. அதாவது சட்டம் அனைவருக்கும் பொதுவானதில்லை.

நீதிபதிகளை எப்படி தனிச்சிறப்பாக பாதுகாக்கப்படுகிறார்களோ, படையினர் எப்படி விசாரணையிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்களோ, அதே போலத்தான் தற்போது தேர்தல் ஆணையர்களும் தலைமை தேர்தல் ஆணையரும் கூட பாதுகாக்கப்படுகின்றனர். எத்தகைய கிரிமினல் வேலைகளில் ஈடுபட்டிருந்தாலும், அப்படி ஆதாரங்கள் கிடைத்து இருந்தாலும், அவர்கள் மீது நம்மால் நேரடியாக வழக்கு தொடுத்து விட முடியாது. அப்படி நடவடிக்கை வேண்டும் என்றால் உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதல் தேவை. உச்ச நீதிமன்றம் பெரிய மனதுடன் வழக்கை விசாரணைக்கு எடுத்தால் தான் உண்டு.

உள்நோக்கத்துடன் வந்த 2023 திருத்தம்!

இப்படி 2023 இல் சட்டத்தை திருத்தி தேர்தல் ஆணையர்களுக்கு தனிச்சிறப்பாக பாதுகாப்பு தர வேண்டிய அவசியம் என்ன? ஏனென்றால் மோடி தேர்தல் முறைகேட்டில் ஈடுபட முடிவெடுத்துவிட்டார். அதன் பின்விளைவுகள் தம்மை பாதிக்காது என்று சட்டபூர்வ பாதுகாப்பை பெறும்போதுதான் ஆணையர்கள் தேர்தல் மோசடிகளுக்கு துணை நிற்பார்கள். அதற்காகத்தான் சட்டத்தை திருத்தியுள்ளார் என்பதையே தற்போதைய ராகுலின் ஹைட்ரஜன் குண்டு அம்பலபடுத்தல்கள் நிரூபிக்கின்றன.

படிக்க:

 பீகார் சிறப்பு தீவிர திருத்தமும், தேர்தல் புறக்கணிப்பு அரசியலும்!

♦ தேர்தல் திருட்டு: எஞ்சியிருந்த… தேர்தல் ஆணையம் – மோடி, அமித்ஷாக்களின்… கோவணங்களையும் உருவி எடுத்து விட்டார் ராகுல்!

பாசிஸ்டுகளால் தொடர்ந்து மக்களை முட்டாளாக்கி ஓட்டை வாங்கிவிட முடியாது. ஜனநாயக முறைப்படி தேர்தலில் நேர்மையாக பங்கெடுத்து மக்களின் வாக்குகளை வாங்கி ஆட்சியில அமர முடியாது; மோடி என்றால் வளர்ச்சி, புல்வாமா தாக்குதல் என்று தொடர்ந்து மக்களை திசைதிருப்ப முடியாது என்று மோடி தலைமையிலான பாசிஸ்ட்டுகள் முடிவுக்கு வந்துவிட்டுள்ளனர். எனவேதான் குறுக்கு வழியில் ஆட்சியை தொடர்ந்து அனுபவிக்க, தக்க வைக்க, இத்தகைய தேர்தல் மோசடிகள் உள்ளிட்ட சட்டவிரோத கிரிமினல் வேலைகளையே சட்டபூர்வமானதாக மாற்றிவிட்டார்.

அதாவது இந்திய தேர்தல் ஆணையத்தை வைத்துக் கொண்டே, தேர்தல்கள் ஜனநாயகபூர்வமாக நடத்தப்படும் என்று மக்களிடம் புளுகிக்கொண்டே மோசடியான தேர்தல்களை நடத்தி வருகின்றனர். பாஜகவுக்கு பாசிச கும்பல்களுக்கு சாதகமான வகையில், வாக்குச்சீட்டு முறையை கொண்டுவராமல், அனைத்து தில்லுமுல்லுகளையும் செய்து கொள்ளும் வகையிலான தேர்தல்களையே திணிக்கின்றனர்.

ஹரியானா, பிஹார் என்று அடுத்தடுத்து ஒவ்வொரு மாநிலங்களிலும் இந்த தேர்தல் ஆணையத்தின் தில்லுமுல்லுகள் ஆதாரப்பூர்வமாக வெளிவந்தாலும் கூட, அவர்கள் மீது வழக்குப்பதியப்படவில்லை. அவர்கள் துளியும் அச்சப்படாமல் அடுத்தடுத்த மாநிலங்களிலும் வாக்காளர் சிறப்பு திருத்தத்தை சிறப்பாக முன்னெடுக்கிறார்கள். வாக்குப்பதிவு தொடர்பான அனைத்து எண்ம ஆவணங்களையும் விரைவில் அழித்து விடப்போவதாகவும் அறிவிக்கிறார்கள்.

ஜனநாயகத்தை காக்க நிற்பவர்களின் கடமை!

பாசிச பாஜகவின் மோடி அரசாங்கத்தின் கைத்தடியாக தேர்தல் ஆணையம் மாற்றப்பட்டு விட்டது. எனவே, நாம் மோடியை மட்டும் தனித்து எதிர்ப்பதோ, பாஜக அல்லது ஆர் எஸ் எஸ் ஐ மட்டும் மக்களின் அம்பலப்படுத்துவதோ போதுமானதா என்பதை எதிர்க்கட்சிகள் சிந்திக்க வேண்டும்.

மக்களிடம் இப்போதுள்ள அரசு இயந்திரத்தின் ஒவ்வொரு உறுப்பும் எப்படி பாசிஸ்டுகளால் மாற்றி அமைக்கப்படுகிறது; அதன் நடைமுறைகள் எப்படி ஜனநாயக விரோதமாக மாற்றியமைக்கப்படுகிறது; இந்தத் தில்லுமுல்லுகள் கிரிமினல் தனங்கள் எப்படி சட்டபூர்வமாக மாற்றம் பெற்று வருகிறது என்பதை புரிய வைத்தாக வேண்டும்.

மோடியை மட்டும் – பாஜக அரசாங்கத்தை மட்டும் வீழ்த்தினால் போதுமா? அல்லது இந்த பாஜக ஆர்எஸ்எஸ் கும்பல்களால் அரசின் பல்வேறு துறைகளில் பல்வேறு மட்டங்களிலும் நிரப்பப்பட்டுள்ள சங்கிகளையும் களைஎடுக்க வேண்டுமா? மோடி கும்பலால் முன்மொழிக்கப்பட்டுள்ள ஜனநாயக விரோத சட்ட திருத்தங்களையும் கிழித்தெறிய வேண்டி இருக்குமா? என்பது குறித்து எல்லாம் தெளிவாக மக்களிடம் கொண்டு போய் சேர்த்தாக வேண்டும்.

பாசிசத்தை வீழ்த்தும் வேலை எப்படி நடக்கிறது? முதலில் நடக்கிறதா என்றுதான் தேடவேண்டி உள்ளது. நாட்டில் என்ன நடக்கிறது என்பதை ஓட்டு போடும் ஒவ்வொருவரிடம் கொண்டு போய் சேர்க்கும் பிரதான வேலையை எதிர்க்கட்சிகள் இரண்டாம் பட்சமானதாக ஏனோ தானோ என்று தான் செய்கின்றன. இதன் விளைவு பாசிசம் சட்டபூர்வமாகவே ஒவ்வொரு துறையாக தனது கொடுங்க கரங்களை விரித்து வருகிறது.

படிக்க:

 சட்டமன்றத் தேர்தலில் மேட்ச் பிக்சிங்: ராகுல் காந்தியின் குற்றச்சாட்டும் மோடி தேர்தல் ஆணையத்தின் மழுப்பல் பதிலும்!

 வாக்குரிமைப் பாதுகாப்புக் கூட்டியக்கம் | ஊடகங்களுக்கான செய்திக் குறிப்பு!

காவி பாசிஸ்ட்டுகளை சரியாக எதிர்கொள்வதற்கான திட்டம் இல்லாமல், ராகுல் உள்ளிட்டவர்கள் இப்படியே தனது செயல்பாடுகளை தொடர்ந்தால் வரவிருக்கும் ஒவ்வொரு தேர்தலின் முடிவிலும் கையறு நிலையில் புலம்புவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாமல் போகும்.

தமிழகத்தில் ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்டோர் இது குறித்து தமது கவலைகளையும் அச்சத்தையும் தொடர்ந்து வெளிப்படுத்தியே வருகிறார்கள்.  “மின்னணு வாக்குப்பதிவு வேண்டாம். அவசர கதியிலான சிறப்பு வாக்காளர் திருத்தம் வேண்டாம்” என்கின்றனர். பாசிச எதிர்ப்பை முதன்மைப்படுத்தாத அரசியல் கட்சிகளால் பாசிசத்துக்கு எதிராக கீழிருந்து வரும் கண்டனங்களோ, எதிர்ப்புகளோ அனைத்தும் ஒன்றுகுவிக்கப்படாமல் வீணடிக்கப்படுகிறது.

எதிரி எஜமானனா? – அடியாளா?

நம் நாட்டில் உள்ள கார்ப்பரேட்டுகளை பொருத்தவரை வளமையான முறைகளில் இந்த நாட்டை சூறையாடுவதை சிரமமாக பார்க்கிறார்கள். எனவே தமது கொள்ளையை ஈவிரக்கமற்ற சுரண்டலை முன்னெடுக்க பாசிசத்தையே விரும்புகிறார்கள். எனவே பாசிச மோடி தலைமையிலான ஆட்சிக்கு அனைத்து வகையிலும் முட்டுக் கொடுக்கிறார்கள். அக்கட்சிக்கு பல்லாயிரம் கோடிகளை வாரி வழங்குகிறார்கள்.

எனவே நாம் பாசிச பாஜகவை மட்டுமல்ல; அதன் எஜமானனாக உள்ள கார்ப்பரேட்டுகளையும் சேர்த்து மோதி வீழ்த்த வேண்டும். இத்தகைய புரிதலோடு எதிர்க்கட்சிகள் செயல்படுத்த தவறினால், மோடியின் எஜமானர்களோடு இணக்கமாக இருந்து கொண்டு பாஜகவை மட்டும் ஆட்சியில் இருந்து இறக்கினால் போதும் என்று சிந்தித்தால், அது தோல்வியிலேயே முடியும்.

கார்ப்பரேட்டுகளின் நலன் விரும்பியாக செயல்படும் எந்த ஒரு கட்சியும், எந்த ஒரு அரசாங்கமும், படிப்படியாக ஜனநாயக விரோதமாக சீரழியும். எஜமான விசுவாசத்துடன் உழைக்கும் மக்களின் மீது சர்வாதிகாரமாக தாக்குதலைத் தொடுத்தே ஆக வேண்டும். இதற்கு திமுக அரசாங்கமே சான்று. சமீபத்தில் தமிழகத்தில் போராடிய துப்புரவு பணியாளர்கள் ஒடுக்கப்பட்டதும், பரந்தூர் விமான நிலையம் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி திணிக்கப்பட்டதும், சாம்சங் தொழிற்சாலையில் தொழிலாளர்கள் கட்டி எழுப்பிய தொழிற்சங்கம் முடக்கப்பட்டதும் கண் முன் உள்ள உதாரணங்கள்.

திமுக அரசாங்கமும் அதன் கூட்டணியில் உள்ள அரசியல் கட்சிகளும் மோடி தலைமையிலான பாசிச தாக்குதலை எதிர்த்து வீழ்த்த விரும்பினால் தெளிவான திட்டத்தை முன்வைக்க வேண்டும். மோடியுடன் சேர்ந்து மோடியின் எஜமானர்களாக உள்ள தேசங்கடந்த தரகு முதலாளிகளை – அதாவது தேசம் கடந்த கார்ப்பரேட்டுகளையும் ஏகாதிபத்திய கார்ப்பரேட்டுகளையும் – எச்சரிக்கையுடன் விலக்கி வைத்து களமாட வேண்டும்.

SIR மட்டுமே நமது இலக்கல்ல!

தற்போது SIR மட்டும் நமது இலக்கல்ல; இந்திய தேர்தல் ஆணையமுமே நமது இலக்குதான். பாசிஸ்டுகளால் ஆக்ரமிக்கப்பட்டுள்ள அரசுத்துறைகளும், திருத்தப்பட்ட சட்டங்களும் கூட நமது இலக்குதான். இந்த சூழலை பயன்படுத்தி நம் நாட்டை சூறையாடிவரும் கார்ப்பரேட்டுகள் தான் அபாயகரமானவர்கள். இதை திணித்துவரும் கார்பரேட் காவி பாசிசம்தான் அனைத்துக்குமான ஆணிவேர். இதை தேர்தல் கட்சிகள் தாமும் புரிந்துகொண்டு, தமது உறுப்பினர்களுக்கும் விளக்க வேண்டும்.

தேர்தலில் தோற்கடித்தாலும் பாசிசம் தனது அதிகாரத்தை எளிதில் விட்டுத்தராது. மக்களின் எழுச்சி இல்லாமல் தற்போதைய ஜனநாயகத்தைகூட மீட்க முடியாது. ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் இத்தகைய புரிதலுக்கு வரத் தவறினால், ஐக்கியப்பட்டு எதிர்த்தாக்குதலுக்கு முன் தயாரிப்புகளை செய்ய தவறினால்,   பாசிஸ்டுகளால் அனைவரும் நசுக்கப்படுவதுதான் நடக்கும். ஜனநாயகத்தை விரும்பும் கட்சிகள் விழித்துக் கொள்ளட்டும்; சங்கங்களும், இயக்கங்களும், அமைப்புகளும் மக்களை விழிப்படைய வைப்போம். மக்கள் முன்னணியை கட்டி பாசிஸ்டுகளை வீழ்த்தி ஒரு ஜனநாயக கூட்டரசை அமைப்போம்.

  • இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here