ஆர்எஸ்எஸ், பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட பார்ப்பன பாசிச பயங்கரவாத கும்பல் ஜனநாயகத்தை ஒருபோதும் மதிப்பதில்லை. மாறாக நேரடியாக களத்தில் இறங்கி வன்முறை செய்வது துவங்கி எதிர் கருத்து உள்ளவர்களை சுட்டு தள்ளுவது என்பது வரை பல்வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது நாடறிந்த உண்மை.
வடமாநிலங்களில் இத்தகைய குண்டர்படை தாக்குதல்களை நடத்தி வந்த ஆர்எஸ்எஸ் மற்றும் சங் பரிவார அமைப்புகள் தற்போது அதனை தமிழகத்திற்கும் விரிவுபடுத்தியுள்ளது என்பதை தான் ஊடகவியலாளரும், சமூக செயற்பாட்டாளருமான தோழர் செந்தில்வேல் மீதான தாக்குதல் மூலம் நிரூபித்துள்ளனர்.
எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவை முற்றாக ஒழித்துக் கட்டிவிட்டு தமிழகத்தில் தனது கைக்கூலி ஆட்சி ஒன்றை நிறுவுவதற்கு துடித்துக் கொண்டுள்ள ஆர்எஸ்எஸ், மோடி, அமித்ஷா கும்பல் அதற்காக எந்த எல்லைக்கும் சென்று செயல்பட துவங்கி விட்டனர்.
“நேற்று மாலை எழும்பூரில் உள்ள அரங்கில் மக்கள் சபை நிகழ்ச்சி ஒளிப்பதிவு நடைபெற்றது. எனக்கு முன்பாக திரு. நாஞ்சில் சம்பத் , இடும்பவனம் கார்த்தி , எஸ்.ஜி. சூர்யா ஆகியோர் பேசினார்கள். பல முனை போட்டியால் பலன் யாருக்கு என்பதே தலைப்பு… அவர்கள் பேசும் போது யாரும் எந்த இடையூறும் செய்யவில்லை. நான்காவதாக நான் அழைக்கப்பட்டேன். மைக் முன் வந்து நின்ற அடுத்த வினாடியே சங்கிகள் கூச்சலிடத் தொடங்கி விட்டனர். முதலில் Paytm என்று கத்தினர் அனைவரும் சத்தமாக சிரித்து மிக அநாகரீகமாக நடந்துகொண்டனர். நான் மிகுந்த பொறுமையோடும் கண்ணியத்தோடும் அதைக் கடந்து சென்று பொங்கல் வாழ்த்துகளோடு என் உரையைத் தொடங்கினேன். கூட்டத்தில் இருந்து இடியாப்பம் என்று கத்தினார்கள். நெறியாளர் பாலவேல் அவர்கள் குறுக்கிடும்போதெல்லாம் அதை கண்டித்தார். என்னை பேச விடும்படி அவர்களிடம் வலியுறுத்தினார். அந்த கும்பல் அதைக் கேட்கும் மனநிலையில் இல்லை.” என்கிறார் தோழர் செந்தில் வேல்.
“நான் திரு. சூர்யாவிடம் தோழர் நான் எந்த விவாதத்திலும் யாரையும் கண்ணியக்குறைவாக பேசியதில்லை. ஆயினும் உங்கள் தோழர்கள் இவ்வாறு நடப்பது முறையல்ல. நீங்கள் உள்ளேதான் கண்டிக்கவில்லை. குறைந்தபட்சம் ஒரு வருத்தமாவது தெரிவிப்பதே அறம் என்றேன்… அவர் உள்ளே யாரும் உங்களை எதுவுமே பேசவே இல்லையே என்றார். உள்ளே நடந்தவற்றை வெளியில் அமர்ந்து திரையில் பார்த்த நம் தோழர்கள் நாங்கள் பார்த்தோம் என்று சொல்ல சூர்யாவோடு வந்தவர்கள் கத்தத் தொடங்கினார்கள். பாஜகவினருக்கு போன் செய்து அங்கே வரும்படி அழைக்கத் தொடங்கினார்கள். என் அருகில் இருந்த தோழர்கள் , அவர்கள் உங்களை தாக்குவதற்கு பெரும் திட்டத்தோடு காத்திருக்கிறார்கள். நீங்கள் இங்கே நிற்க வேண்டாம் என்று சொல்லி என்னை காத்திருப்போர் அறைக்குள் அழைத்துச் சென்று விட்டனர்.”
“இது முதன் முறையல்ல , தங்கை மதிவதனி கலந்து கொண்ட விவாதத்திலும் இதே போன்ற வார்த்தைகளால்தான் அரங்கின் அமைதியைக் கெடுத்தனர். காஞ்சிபுரத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்று அடிதடியில் முடிந்தது.. தோழர் வன்னியரசு கலந்து கொண்ட நிகழ்ச்சியில் இதே போல் அரங்கில் கலவரம் செய்தனர்… மேற்சொன்ன நிகழ்ச்சிகள் பெரும்பாலும் பாஜகவின் சூர்யா பங்கெடுத்தவை… பாஜக வினர் இதை நிகழ்ச்சிகளில் மட்டும் செய்வதில்லை. சமீபத்தில் அமைச்சர்கள் பங்கெடுக்கும் நிகழ்ச்சிகளில் கூட இதே போல் கூச்சலிட்டு கலவரத்தை ஏற்படுத்துகின்றனர்”. என்று செய்தி வெளியிட்டுள்ளார் தோழர் செந்தில் வேல்.
இத்தகைய பாசிச சக்திகளை வெறும் கருத்துப் பிரச்சாரத்தால் மட்டுமே முறியடித்துவிட முடியாது. 90-களில் பாபர் மசூதி இடிப்பு சம்பவத்தை ஒட்டி நாடு முழுவதும் கலவரங்களை உருவாக்கி சாதாரண கடவுள் நம்பிக்கை கொண்ட ‘இந்துக்களை’ கூட பார்ப்பன மதத்தை கடைபிடிக்கின்ற மதவெறி கொண்டவர்களாக மாற்றிய நிகழ்வைப் போலவே தற்போதும் அவர்கள் முயற்சிக்க தொடங்கியுள்ளனர்.
பாபர் மசூதி இடிப்பை ஒட்டி தமிழகத்தில் கலவரம் செய்வதற்கு முயற்சித்த போது எமது அமைப்பைச் சேர்ந்த தோழர்கள் நெய்வேலி பகுதியில் மதவெறி எதிர்ப்பு கூட்டமைப்பு என்ற ஒன்றை உருவாக்கி அதன் சார்பில் ஆர்எஸ்எஸ் குண்டர்களை நேருக்கு நேர் களத்தில் எதிர்கொண்டனர்.
முதல் சுற்றில் எமது தோழர்கள் ஆர்எஸ்எஸ் நடத்திய ஷாகாவை கலைத்து அதில் கலந்து கொண்டவர்களை துரத்தியடித்தனர். இரண்டாவது சுற்றில் ஷாகாவை கலைக்க சென்ற எமது தோழர்கள் மீது கையில் ஆயுதங்களோடு தாக்குதல் நடத்திய ஆர்எஸ்எஸ் குண்டர் படையினர், எமது தொழிற்சங்கத்தின் முன்னணி தோழர் ஒருவரை குற்றுயிரும், கொலையுயிருமாக போட்டுவிட்டு ஓடிவிட்டது. அதன் பிறகு தோழரை மீட்டதுடன் சட்ட ரீதியான வழக்குகளையும் எதிர் கொண்டோம். இந்த எதிர் தாக்குதல் நடவடிக்கைக்கு பின்னர் குறிப்பிட்ட காலம் ஷாகா அங்கு நடக்கவில்லை.
அதேபோன்றதொரு நடவடிக்கையை தான் நேற்று (09.01.2026) நியூஸ் 18 சேனல் விவாதத்தை ஒட்டி செய்தியாளர் தோழர் செந்தில் வேல் மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த தாக்குதல் என்றே அவதானிக்க முடிகிறது. அதற்கு எதிராக எமது அமைப்பு தோழர்களைப் போலவே பொருத்தமான வகையில் திருப்பி அடித்துள்ளனர்.
படிக்க:
♦ ஆர்.எஸ்.எஸ்க்குக் கட்டுப்பாடா? கர்நாடக அரசை மிரட்டும் சங்கிகள்!
♦ கோயில் சொத்து கல்விக்கு ஆகாது: நான் முழு சங்கியே தான்! நிர்வாணமாக நிற்கிறார் எடப்பாடி!
பாசிச எதிர்ப்பு என்று பேசிக்கொண்டு வாய்க்கிழிய வக்கனை காட்டும் அமைப்புகளில் இருந்து இத்தகைய எதிர் தாக்குதல் எதுவும் சமீபத்தில் நடந்ததாக நமக்கு செய்தி வரவில்லை. மாறாக இத்தகைய பாசிச எதிர்ப்பு பேசும் சிலரால் கடுமையாக தூற்றப்படுகின்ற; பாசிச எதிர்ப்பில் சமரசமாக அணுகுகின்ற சக்தியான திமுக மற்றும் அதன் தொண்டர்கள் தான் நேற்று களத்தில் நின்று திருப்பி அடித்துள்ளனர்.
பாசிச எதிர்ப்பில் ஒவ்வொரு துரும்பையும் பயன்படுத்திக் கொண்டு எதிரிகளுக்கு எதிராக ஒரு எழுச்சியை உருவாக்குவது; வீதியில் அவர்களை நேருக்கு நேர் சந்திப்பது என்ற நடைமுறைகளுக்கு பதிலாக சமூக வலைதளங்களில் சவடால் அடிப்பது; கூட்டங்களில் வாய் கிழிய பேசுவது என்பதன் மூலமாக பாசிச சக்திகளை வீழ்த்த முடியாது.
புதிய ஜனநாயகம் அதன் தோழமை அமைப்புகள் பாசிச எதிர்ப்பில் ஊசலாடுகின்ற சமரச சக்திகளை சரியாக கையாள்வது என்ற கண்ணோட்டத்தில் அவர்களுடன் கூட்டு நடவடிக்கைக்கு செல்வது என்பதின் மூலமாகவே அவர்களை சரியான திசை வழிக்கு கொண்டுவர முடியும் என்பதை ஆணித்தரமாக நம்புகிறது. மேலும் பாசிசத்தை முறியடிப்பது என்பது கம்யூனிஸ்டுகள் மட்டும் செய்கின்ற, ’சாகச நடவடிக்கை’ அல்ல என்பது தான் உலகில் பல்வேறு நாடுகளில் பாசிசத்தை வீழ்த்திய வரலாறு கற்றுத் தருகிறது.
நேற்று செய்தியாளர் சந்திப்பில் தோழர் செந்தில் வேல் மீது நடத்தப்பட்ட கருத்து தாக்குதல் மற்றும் கள தாக்குதல்களுக்கு எதிராக திருப்பி அடித்ததன் மூலம் இதுதான் சரியான பாசிச எதிர்ப்பு நடவடிக்கை என்பதை புரிய வைத்த அனைவருக்கும் நமது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வோம். பாசிச எதிர்ப்பு போராட்டக் களத்தில் எதிரிக்கு எதிராக அனைவரையும் ஒன்று திரட்டி தமிழகம் இந்தியாவிலேயே முன்னணியாக நிற்கிறது என்பதை நிலைநாட்டுவோம்!.
- மருது பாண்டியன்






