சென்னையின் மீனம்பாக்கம் விமான நிலையம் மேற்கொண்டு விரிவாக்கம் செய்வதற்கு வாய்ப்பு இல்லாமல் அதன் வளர்ச்சி தேங்கி விட்டதாம். அதனால் பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து வளர்ச்சி குறைந்து இந்திய அளவில் பின்னுக்கு செல்கிறதாம். இதற்காக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூரை ஒட்டியுள்ள பகுதியில் புதிதாக’ கிரீன் பீல்ட் ‘

பசுமை விமான நிலையம் அமைக்க ஏற்பாடுகள் நடக்கிறது. எதிர்காலத் தேவையும் கருத்தில் கொண்டு இப்பொழுதே அதிக பரப்பளவை கையகப்படுத்த முடிவெடுத்துள்ளது தமிழக அரசு.

விளைநிலத்தை பறித்து புதிய விமான நிலையம்!

அரசு நம் நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்காகவும், தமிழகத்தை மேலும் முன்னேற்றுவதற்காகவும்தான் இந்த விமான நிலையத்தை அமைப்பதாக சொல்லிக் கொள்கிறது.

விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட இருப்பதாகக் கருதப்படும், ஏகனாபுரம் கிராமத்தில் மக்களோ 60 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இப்படி ஒரு நல்ல திட்டத்திற்காக நிலத்தை கையகப்படுத்த, அங்குள்ள பகுதி மக்களை கூட்டி, விளக்கம் அளித்து ஒப்புதல் பெற்று சிறப்பாக செய்யலாமே! எந்த எல்லை வரை, எத்தனை சதுர கிலோமீட்டர்களை எடுப்பது என துல்லியமாக திட்டம் வகுக்கும் அரசுக்கு,அதனால் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களிடம் மாற்றுத்திட்டத்தையும் விளக்க வேண்டிய கடமை உள்ளதல்லவா?

வீடுகளை இழப்போருக்கு “பிடியுங்கள் பட்டாவை “ என்று மாற்று இடத்தை காட்டி, வீட்டை கட்டி கொடுக்க முதலில் அக்கறை காட்டுவதுதானே மக்கள் நல அரசின் கடமை. விளை நிலங்களை இழப்போருக்கு மாற்றாக அவர்களின் வாழ்வாதாரத்திற்கு எத்தகைய வேலை வாய்ப்பை தர உள்ளீர்கள்? என்பதற்கான உத்தரவாதத்தையும் முன்கூட்டி தர வேண்டுமே.

போலீசை குவித்து மிரட்டுவது சரியா?

பொறுப்பாக எதையும் செய்யாமல் போலீஸை மட்டும் குவித்து ஊருக்குள் யாரையும் விடாமல் அச்சுறுத்துவது எப்படி சரியானதாகும்?

செய்தி சேகரிக்க செல்லும் நிருபர்களை நெருக்கடி கொடுத்து தடுப்பதும், மக்கள் பேட்டி தரும் பொழுது மப்டியில் சூழ்ந்து நின்று செல்போனில் பதிவு செய்வதும், சாதாரண ஏழை ,எளிய கிராம மக்களை எதுவும் மனம் திறந்து சொல்ல விடாமல் அச்சுறுத்துவதும் ஏன்?

கண் முன் உள்ள உதாரணம்!

திருவள்ளூர் மாவட்டத்தில் மேல்நல்லாத்தூரில், இந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் கார் தொழிற்சாலையை தொடங்குவதற்காக ‌அதிகத்தூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள 8 கிராமங்களில் இருந்து விவசாய நிலம் கையகப்படுத்தப்பட்டது. அரசை நம்பி, விளை நிலத்தை தொழிற்சாலை அமைக்க மனமுவந்து கொடுத்து விட்டு, அந்த ஆலையில் தரப்பட்ட வேலை வாய்ப்பை பெற்றும் உள்ளனர்.

ஆனால் அரசின் வாக்கை நம்பி அப்படி வாழ நினைத்தது தவறு என அரசே நிரூபித்து காட்டிவிட்டது.

அந்த நிறுவனத்தை வெளிநாட்டு கார்ப்பரேட்டுகள் கைப்பற்றி உள்ளூர்காரர்களை வேலையிலிருந்து விரட்டி விட்டது. வெளியூரிலிருந்து காண்ட்ராக்ட்டில் ஆட்களை அழைத்து வந்து உற்பத்தியையும் நடத்துகிறது. நிலம் கேட்கும்பொழுது அரசு தரப்பில் தரப்பட்ட வாக்குறுதி காற்றில் கரைந்து விட்டது.

“கார்ப்பரேட் சேவையே முக்கியம்!”

இந்துஸ்தான் மோட்டாரை வாங்கிய பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கார்ப்பரேட் நிறுவனம் வேலை வழங்காததால், நிறுவனத்துக்காக வழங்கிய நிலத்தைத் திரும்பத் தரக்கோரி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் மக்கள். அவர்களை காவல்துறை கைது செய்ததற்காக திருவள்ளூர் மாவட்ட காவல்துறைக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கண்டனமும் தெரிவித்துள்ளார்.


இதையும் படியுங்கள் : ஏர் இந்தியாவும் ! ஏழை இந்தியாவும்!


இதுதானே நாளை நமக்கும் நடக்கும் என்ற அச்சம் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட உள்ள கிராம மக்களிடம் எழுவது நியாயம்தானே! உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறை கொண்ட அரசாக இருந்தால், முதலில் ஒரு திட்டத்தால் பாதிக்கப்பட உள்ள மக்களுக்கான மாற்றை செயல்படுத்துவதை முதன்மையாக கொள்ள வேண்டும். பின்னர் தான் கையகப்படுத்துவதை செய்ய வேண்டும்.

மாறாக தற்போது தமிழக அரசு காவல்துறையைக்கொண்டு அச்சுறுத்துவதை கைவிட வேண்டும்.

மழுப்பும் காக்கிகள்!

காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எம். சுதாகரிடம் கேட்டபோது, “சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதற்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. நானும் இந்தப் பகுதிகளை நேரடியாக ஆய்வு செய்கிறேன். ஊடகத்தினரிடம் மக்கள் பேசும் போது காவலர்கள் அருகே நிற்கக்கூடாது என அறிவுறுத்திவிடுகிறோம்” என்றதாக BBC செய்தி கூறுகிறது.

அவதூறு செய்வது சரியா?

மக்கள் நலனில் அக்கறை கொண்ட அமைப்புகள், யூ டியூபர்கள், கட்சிகளை உள்ளே விடாமல் அவர்களை சமூக விரோதிகளைப்போல் அவதூறு செய்கிறார்கள். விவசாய சங்கத் தலைவர்களை பாதிக்கப்பட உள்ள விவசாயிகளை சந்திக்க, அப்பகுதிக்குள் நுழைய தடை விதிப்பது எந்த வகையில் நியாயம்?.

போராடும் உரிமை உள்ளதா?

இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய பி ஆர். பாண்டியன் “13 கிராம மக்களும் ஒன்றிணைந்து போராடுவதற்கு காவல்துறை தடைபோடுகிறது. இதற்கு முன்பு ஏகனாபுரம் கிராமத்துக்கு செல்ல முயன்றபோது இரண்டு கிலோ மீட்டர் தொலைவிலேயே காவல்துறையினர் தடுத்துவிட்டார்கள்” என்று கண்டனம் செய்துள்ளார்.


இதையும் படியுங்கள் : குற்றவாளிகளை ஆதரித்த காவல்துறை! கொதித்து எழுந்த மக்கள்!


திமுக அரசு உழைக்கும் மக்களுக்கானதா? அல்லது கார்ப்பரேட்டுகளின் சேவகனா? என்பதை அந்த அரசு அமல்படுத்தும் நடைமுறையில் இருந்து தான் முடிவுக்கு வர முடியும். பரந்தூரை சுற்றியுள்ள கிராமங்களில் நடக்கும் காவல்துறை கெடுபிடிகளை ஜனநாயகத்தை விரும்பும் யாரும் அனுமதிக்க மாட்டார்கள்.

தூத்துக்குடி பாணியில் அணுகும் அரசு!

2018 இல் தூத்துக்குடியில் குமரெட்டியாபுரம் கிராமத்தில் போராட்டம் தொடங்கிய போது ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாகவும், போராடும் மக்களை அச்சுறுத்துவதற்காகவும் போலீசை ஏவியது, அன்றைய எடப்பாடி அரசு. இன்று ஸ்டாலின் அரசும் அதே பாணியில் பிரச்சனைகளை கையாள்வது எத்தகைய பலனை தரும்?

ஆட்சியாளர்கள் உணர்ந்து தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும். அல்லது தூத்துக்குடி பாணியில் மக்கள் திமிறி எழுந்து தங்கள் உரிமைகளை நிலைநாட்டி காட்டுவார்கள்.

பரந்தூரை சுற்றியுள்ள பகுதிகள் போராட்டக் களமாக வேண்டுமா அல்லது வளர்ச்சிக்கு முன்னோடியாக மாற வேண்டுமா என்பது அரசின் அணுகுமுறையை பொறுத்து உள்ளது. இது மக்கள் நல விடியல் அரசா? அல்லது கார்ப்பரேட்டுகளின் அடியாள் அரசா? என்பதை இதன் மூலம் திமுக நிரூபிக்க வேண்டியுள்ளது.

எது நடந்தாலும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட அமைப்புகளும், கட்சிகளும், சமூக ஊடகங்களும் உழைக்கும் மக்கள் தரப்பில் நிற்பது தங்களது கடமை. நாம் நமது கடமையை செய்வோம்!

இளமாறன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here