நாம் தமிழர் சீமானின் சமீப கால செயல்பாடுகள் காரணமாக அவரது கூடாரத்தில் இருந்த பலர் வெளியேறி வருகின்றனர். பேச்சுக்கும் செயலுக்கும் பொருத்தம் இல்லாத இனவெறியரான சீமான் நேற்று (டிசம்பர் 11) ஆர்எஸ்எஸ் நடத்திய விழாவில் கலந்து கொண்டது அவரது கூடாரத்திலேயே சலசலப்பை உண்டாக்கியுள்ளது.

ஆர்.எஸ்.எஸ்-ன் VIGIL அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் ‘பாரதி கண்ட வந்தே மாதரம்’ தலைப்பில் பேசியுள்ளார் சீமான். அதில் பாரதியாரை புகழ்ந்ததை விட பார்ப்பானை புகழ்ந்து பேசியது தான் ஹைலைட்.

குறிப்பாக, பார்ப்பனியத்தை உயர்த்தியும், பெரியாரை தாழ்த்தியும் பேசிய சீமான் “எந்த பிராமண எதிர்ப்பை காட்டி திராவிட இருப்பை கட்டினியோ, அதே பிராமண கடப்பாரையை கொண்டு பாழடைந்த திராவிட சுவற்றை இடிப்பேன்” என பேசியதும் அங்கு கூடியிருந்த பார்ப்பனர்களிடம் பலத்த கரவோசை எழுந்தது. இதுதான் உண்மையான சீமான்.

நாம் தமிழர் அமைப்பை ஆரம்பித்தது முதல் சில ஆண்டுகள் வரை கருப்பு சட்டை சகிதமாக மேடையில் தோன்றிய நபர் தான் சீமான். தன்னை பெரியாரின் பேரனாக அறிவித்துக் கொண்டு பேச தொடங்கியவர், பிற்காலத்தில் பெரியாரை தூற்றிய கதையை அனைவரும் அறிவார்கள்.

ஆரம்பம் காலம் தொட்டு சீமானின் அரசியல் ஆபத்தானது என மக்கள் அதிகாரமும் அதன் தோழமை அமைப்புகளும் எச்சரித்தன. சவடால் பேச்சும், இளைஞர்களை கவர்ந்திழுக்கும் உடல் மொழிகளும் தமிழ்நாட்டில் திராவிட கட்சிகளுக்கு மாற்று என அறியப்பட்டவர் நாம் தமிழர் சீமான்.

கூட்டம் சேர ஆரம்பித்த பின்னர் மெதுவாக சீமானின் உண்மை முகம் வெளியில் தெரிய ஆரம்பித்தது. திரள் நிதிகளின் மூலம் தன்னையும் தன் குடும்பத்தையும் வளர்த்துக் கொண்டவர், நாளடைவில் ஆர்எஸ்எஸ் பாஜகவின் அஜண்டாக்களை செயல்படுத்த தொடங்கினார்.

திராவிட அரசியலையும், பாஜகவை போன்று பெரியாரையும் மோசமான விமர்சனங்கள் செய்யத் தொடங்கினார். நேற்று வரை பெரியாரின் பேரன் என சொல்லிக் கொண்டவர் இப்போது பக்தி பழமாக தான் வெளியில் வருகிறார். இஸ்லாமியர்களை தமிழர்களாக ஏற்றுக் கொள்ளாத சீமான், பார்ப்பனர்களை தமிழக தமிழர்களாக ஏற்றுக் கொள்வதும் அவரது அரசியல் வளர்ச்சியின் போக்கில் நிகழ்ந்தது.

படிக்க:

 சீமான் முன் வைப்பது தமிழ் தேசியமா?

 சீமான் & ஹிட்லர் : அதிசயப்படத்தக்க ஒற்றுமைகள் மீள்பதிவு

மக்களைப் பொருத்தமட்டில் மாற்றத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். ஆனால், சரியான மாற்று அரசியல் எது என புரிந்து கொள்ளாதவாறு தடுக்கவே புதிய சாகசவாதிகளையும், வாய்ச்சொல் வீரர்களையும் களமிறக்குகிறது ஆளும் வர்க்கம். அப்படி இறக்கப்பட்டவர் தான் சீமான்.

தற்போது சீமான் அதற்கு பொருத்தமில்லாத நபராக தெரிய தொடங்கியதும் விஜய் என்ற கோமாளியை களம் இறக்கி உள்ளார்கள். ஆனால், இன்னமும் சீமானின் இனவெறி அரசியலின் பின்னால் ஒரு இளைஞர் கூட்டம் உள்ளதை மறுக்க முடியாது.

ஆர்.எஸ்.எஸ்-இன் அடிவருடியான நடிகர் ரஜினியை சில மாதங்களுக்கு முன்னர் சந்தித்து விட்டு திரும்பிய சீமானை, ரஜினியை சங்கி என்கிறார்களே என பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “சங்கினா என்னனு தெரியுமா? சக தோழர் என்று அர்த்தம். உண்மையான சங்கி யார் என்றால் எங்களை எல்லாம் சங்கி என்கிறார்களே அவர்கள் தான் உண்மையான சங்கி. திமுகவை எதிர்த்தாலே சங்கி என்றால் பெருமையாக நாங்கள் சங்கி என்று ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். சங்கி என்றால் நண்பன் என்று பொருள் உண்டு. நீங்கள் எப்படியும் எடுத்துக் கொள்ளலாம்” என்று நீண்ட விளக்கம் கொடுத்தார்.

அதாவது தானும் சங்கி தான் என்பதற்கு தான் இப்படியான நீண்ட விளக்கம்.

தினம் தினம் புதுப்புது பொய்களை கூறி வந்த சீமான் ஒரு நேரத்தில் கேளிக்கும் கிண்டலுக்கும் ஆளாகி அம்பலப்பட தொடங்கினார். சீமானின் பொய் புளுகு மூட்டைகளை நம்ப ஒரு கூட்டம் இருந்தாலும், அதுவே பொதுவெளியில் அவரது மதிப்பையும் சிதைத்தது.

அருந்ததியர் மக்களை வந்தேறிகள் என்பது பார்ப்பனர்களை தமிழர்கள் என்றது, உழைக்கும் மக்களான வட மாநிலத்தவர்கள் மீது இனவெறி மோதலை உருவாக்கும் விதமாக பேசியது, பெரியார் குறித்து இழிவான கருத்துக்களை பேசியது, பெண்கள் குறித்த இழிவான கருத்துக்கள், பத்திரிகையாளர்களை தரை குறைவாக பேசியது, சொந்தக் கட்சியில் உள்ளவர்களையே தரம் தாழ்த்தி பேசியது என சீமான் சீமானின் அடாவடித்தனத்தை அடுக்கிக் கொண்டே போகலாம்.

சீமான் தன்னை சங்கியாக ஒத்துக் கொள்ளவில்லை என்றாலும் இதனால் வரை சங்கியாகவே வாழ்ந்து வருகிறார். ஆர்எஸ்எஸ் விழாவில் கலந்து கொண்டதும் அதன் அடிப்படையில் தான் விமர்சனம் எழுந்த உடன் பாரதியார் பற்றி பேச வேண்டுமானால் பாகிஸ்தானில் நடக்கும் விழாவில் கூட கலந்து கொள்வேன் என மொன்னையான விளக்கம் அளித்துள்ளார்.

பாஜக – ஆர்.எஸ்.எஸ் கொள்கையும் சீமானின் கொள்கையும் வேறல்ல. பாஜக இந்தியாவில் இந்துக்கள் தான் இருக்க வேண்டும் என்று மதவெறி அரசியலை செய்கிறது என்றால், சீமான் தமிழ்நாட்டில் தமிழர்கள் தான் இருக்க வேண்டும் மற்றவர்கள் விரட்டியடிக்கப்படுவார்கள் என்று இனவெறி அரசியலில் செய்கிறார். இந்தியாவில் பாசிச பாஜக ஆர்எஸ்எஸ் கும்பலின் பிளவுவாத அரசியலுக்கு துணை புரிகிறார்.

அதனால் சீமான் ஆர்.எஸ்.எஸ் கூட்டத்தில் கலந்து கொண்டது குறித்து ஆச்சரியப்பட தேவை இல்லை. தமிழ்நாட்டில் திருப்பரங்குன்றம் மூலம் கலவரத்தை உருவாக்க முனைந்து கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் உடன் கூட்டு சேர்ந்து பாரதி புராணம் பாடும் சீமானை மக்களிடத்தில் அம்பலப்படுத்த வேண்டியதும் நமது கடமை.

  • நந்தன்

1 COMMENT

  1. சீமானைப் பற்றிய சிறப்பான அம்பலப்படுத்தலை தோழர் செய்திருக்கிறார். உறுதியாக சங்கிக் கும்பல்
    தர்காவை தகர்க்க முனையும் பொழுது இவனும் நேசக்கரம் நீட்டுவான். இவன் ஆரம்பம் முதலில் பிழைப்பு வாத கண்ணோட்டத்தில் மட்டுமே அரசியலுக்கு வந்த இழிபிறவி. ஆனாலும் அவன் (கூத்தாடி விஜய்யைப் போல) BJP product தான் எனினும் பிஜேபி திட்டமிட்டு கொடுத்திருந்த படி தங்களை வேறு கொள்கை உள்ளவர்களாக காண்பித்துக் கொண்டு அவ்வப்பொழுது பாஜகவை சாடுவதாக படம் காண்பித்து வந்தான் (விஜய்யைப் போல).!
    தன்னை சங்கி என்று பலரும் விமர்சித்த காலகட்டத்தில் பொதுக் கூட்ட மேடைமீது நின்று ‘யாரடா சங்கி… நீங்க தான்டா சங்கி’
    என்று ‘வீர முழக்கம்’ மிட்டான். விஜயலட்சுமி பிரச்சனை உச்சநீதி மன்றம் வரை சென்று நிர்வாணமாக நின்ற சூழலில், அவனது சாதிக்காரன் ரவீந்திரன் துரைசாமி என்ற பிழைப்புவாதியை அழைத்துக் கொண்டு ‘சூப்பர் ஸ்டார்'(!) ரஜினியை கையைக் கட்டிக் கொண்டு நின்று சந்தித்து விட்டு வெளியே வந்தான் இந்த சீமான். வெளியே வந்த இடத்தில் ஊடகவியலாளர்கள் ‘சங்கி என்பது பற்றிய தங்களது முந்தைய கருத்து தான் இப்பொழுதும் உள்ளதா’ என்ற பாணியில் கேள்வியைக் கேட்டதும், பல்லிளித்துக் கொண்டு, ‘சங்கி என்றால் தோழன் நண்பன் என்று அர்த்தம்’ -இதைத் தவிர வேறு என்ன சொல்ல இருக்கிறது’ – என்று போட்டானே ஒரு போடு. துக்ளக் குருமூர்த்தி Product வேறு எப்படி இருப்பான்? கட்டுரையாளர் தோழர் அம்பலப்படுத்தி இருப்பது போல் இவனை முகத்திரை கிழித்து தோளுரித்துத் தொங்கவிட வேண்டிய பொறுப்பு அனைத்து முற்போக்கு சக்திகளுடையதாகும். நாடு சென்று கொண்டிருக்க கூடிய சூழலில் முற்போக்கு புரட்சிகர சக்திகள் அனைவரது முன்னிலையிலும் அளப்பெரிய கடமைகள் காத்துக் கிடக்கின்றன! கட்டுரையாளர் தோழருக்கு வாழ்த்துக்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here