ஈரானில் நிலக்கரி சுரங்கத்தில் நேற்று சனிக்கிழமை இரவு 9 மணி அளவில் (உள்ளூர் நேரப்படி) ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 51 பேர் பலி. மேலும் பலர் இறந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரானுக்கான நிலக்கரி தேவையில் 76% பூர்த்தி செய்யும் தாபாஸில் தான் இந்த வெடி விபத்து நடந்துள்ளது. இது தலைநகரில் இருந்து தென்கிழக்கு சுமார் 500 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
மதன் ஜூ என்ற நிறுவனத்தால் தப்பாசியில் நிலக்கரி சுரங்கம் இயங்கி வருகிறது இதுதான் மீத்தேன் வாயு கசிவு ஏற்பட்டு வெடி விபத்து நடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இங்குள்ள சுரங்கத்தின் பி மற்றும் சி ஆகிய இரண்டு தொகுதிகளில் தான் விபத்து நடந்துள்ளது. இவற்றில் மட்டும் சுமார் 69 பேர் வேலை செய்து கொண்டிருந்ததாக விவரங்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பற்ற நிலக்கரி அகழ்வு!
உலகம் முழுவதுமே கார்ப்பரேட் நிறுவனங்கள் சுரங்கங்களில் போதிய பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து கனிமங்களை வெட்டி எடுக்க ஆர்வம் காட்டுவதில்லை. உழைக்கும் மக்களை உயிரை பணயம் வைத்து மண்ணுக்குள் இறக்கிவிட்டு வேலை செய்ய நிர்பந்திக்கிறார்கள். இதனால் ஏற்படும் விபத்துகளில் தொழிலாளர்கள் அநியாயமாக கொல்லப்படுவது உலகெங்கும் தொடரவே செய்கிறது. அதில் ஈரான் விதிவிலக்கானது அல்ல.
அல்ஜசீரா வெளியிட்டுள்ள செய்தியில் இருந்து, ஈரானில் கடந்த 2017 இல் நடந்த நிலக்கரி சுரங்கத்தின் வெடி விபத்தில் 42 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 2013ஆம் ஆண்டில் மட்டும் இரண்டு விபத்துகளில் 11 தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாகவும், 2009 ஆம் ஆண்டில் குறைந்தது 20 தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
அமெரிக்க வல்லரசை துணிந்து எதிர்க்கும் நாடுகளில் ஈரானும் ஒன்று. இதனால் வல்லரசு நாடுகளின் பொருளாதாரத் தடைகளை எதிர் கொண்டு போராடிவரும் நாடாகவும், உலக அளவில் பிற நாடுகள் வாங்கி பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை பெற முடியாத நிலையில் திட்டமிட்டு தள்ளப்பட்ட ஒரு நாடாகவும் இருந்து வருகிறது.
வல்லரசு நாடுகளே தமது தொழிலாளர்களை காக்க அக்கறையின்றி, பல்வேறு உற்பத்தி துறைகளில் பலி கொடுத்து வரும் சூழலில், பின்தங்கியுள்ள ஈரான் நாடு தனது சுரங்கத்தை சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு இயக்குவதற்கு போதிய வாய்ப்புகள் இருக்காது தான்.
பெயரளவிலான ஜனநாயகம் இருக்கும் நாட்டின் ஆட்சியாளர்களையே ஊழல்படுத்தி கார்ப்பரேட்டுகள் தமது விருப்பம் போல் சூறையாடும்போது, மதவாதிகளின் பிடியின் கீழ் உள்ள ஒரு நாட்டில், கார்ப்பரேட்டுகள் ஆதிக்கம் செய்ய மேலும் அதிக வாய்ப்புகள் உள்ளன.
இஸ்லாத்தின் பெயரால், ஜிகாத்தின் பெயரால், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் மத குருமார்கள், தமது நாட்டின் உழைக்கும் மக்களை நரபலி தரும் கார்ப்பரேட்டுகளை எதிர்ப்பதும் இல்லை; தெருவில் வைத்து தண்டிப்பதும் இல்லை. சுரங்க விபத்துகள் ஈரானில் மட்டுமே நடக்கும் விஷயங்களும் அல்ல, உலகெங்கும் நடக்கிறது; கொலையாளிகள் சட்டத்தை ஏமாற்றி தப்பித்துக் கொள்வது இந்தியாவிலும் நடக்கிறது.
இந்தியாவின் எலிவளை சுரங்கங்கள்!
அரசின் அனுமதி பெறாமல் ஒன்று இரண்டு நபர்களைக் கொண்ட குழுக்கள் மூலம் சட்டவிரோதமாக மண்ணுக்குள் இறங்கி கனிமங்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்களை எலிவளை சுரங்கங்கள் என்று அழைக்கின்றனர்.
தன்னம்பிக்கையை மட்டுமே தனக்கான பலமாக கொண்டு, எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், துணிந்து தான் இலக்கு வைத்த திசையில், இலக்கு வைத்த ஆழத்தில் மண்ணை வெட்டிக் கொண்டே எலி தனக்கான வளையை தூண்டுவது போல் தோண்டிக் கொண்டு செல்வர்.
இதில் மண் சரிந்தாலோ அல்லது மீத்தேன் போன்ற வாயு கசிந்து வெடிவிபத்து ஏற்பட்டாலோ வெளியில் யாருக்கும் எதுவும் தெரியப் போவதில்லை. தந்தை இறந்தால் மூத்த மகன் வருவான்; மூத்த மகன் இறந்தால் இளைய மகன் வருவான் என இந்தியாவின் வட மாநிலங்களில் தலைமுறை தலைமுறையாக எலிவளை சுரங்கத்திற்குள் இறங்கும் அவலம் தொடரவே செய்கிறது.
படிக்க:
♦ 41 தொழிலாளர்கள் உயிருடன் மீட்பு! மோடியின் தொண்டையில் சிக்கிய முள்ளாக எலி வளை சுரங்க தொழிலாளர்கள்!
♦ நிலக்கரிச் சுரங்கம்; கருப்பில் தோய்த்த நெல்; கருப்பு நுரையீரல்
உத்தரகாண்டின் சில்கியாரா சுரங்க பாதை அமைப்பதில் மண் சரிவு ஏற்பட்டு தொழிலாளிகள் சிக்கிக்கொண்ட போது, மீட்பு குழுக்கள் அவர்களின் உபகரணங்கள் எல்லாம் பயனற்று ஸ்தம்பித்து நின்று விட்ட போது, இந்த எலிவளை சுரங்க தொழிலாளர்கள் தான் துணிந்து உள்ளே நுழைந்து, வழி ஏற்படுத்தி, தொழிலாளர்களை உயிரோடு மீட்டுக் கொண்டு வந்தனர்.
எனவே மண்ணுக்குள் இறக்கப்படும் தொழிலாளர்கள் அநியாயமாக கொல்லப்படுவது உலகெங்கும் நடக்கிறது; இந்தியாவிலும் நடக்கிறது; ஈரானிலும் தொடர்கிறது.
படுகொலைகளை தடுக்க வழி உள்ளதா?
உண்மையான மக்கள் நல அரசுகள் உருவெடுக்கும் போது, உழைக்கும் வர்க்கம் ஆட்சி அதிகாரத்தில் அமரும்போது, உலகை சூறையாடி வரும் கார்ப்பரேட்டுகள் அடித்து விரட்டப்படும் போது, இத்தகைய சுரங்க விபத்துகளின் எண்ணிக்கையும், அதில் உயிர்பலிகளின் அளவும் குறைக்கப்படும். இதற்கு மாறாக, லாப வெறி பிடித்தலையும் கார்ப்பரேட்டுகளும், கனிம கொள்ளையர்களும் அதிகாரத்தில் இருக்கும் வரை படுகொலைகள் தொடரவே செய்யும்.
- இளமாறன்