ந்து முஸ்லீம் மக்களிடையே பிளவை ஏற்படுத்துவதற்கு கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் இந்து மத வெறி பாசிஸ்டுகள் பயன்படுத்திக் கொள்ள தவறுவதே இல்லை. அதற்கும் மேலாக, வாய்ப்பு எதுவும் கிடைக்காத போதும், இந்து முஸ்லிம் மக்களை மதரீதியாக பிளப்பதற்கான முன்னெடுப்புகளை இந்து மத வெறியர்கள் எப்பொழுதும் செய்து கொண்டே வருகிறார்கள். அதன் சமீபத்திய உதாரணம்தான் கன்வார் யாத்திரை.

டெல்லி, உத்திரபிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள இந்துக்கள் கால் நடையாக சென்று கங்கை நதியில் இருந்து நீரை எடுத்து வந்து  தங்கள் பகுதியில் உள்ள கோவிலில் சிவன் சிலையின் மீது ஊற்றி வழிபடும் நிகழ்வுக்கு பெயர் தான் கன்வார் யாத்திரை. இந்த யாத்திரை இந்த மாதம் ஜூலை 11 இல் இருந்து ஜூலை 23ஆம் தேதி வரை நடைபெறுகிறது. சமீப காலமாக கோடிக்கணக்கான மக்கள் இந்த யாத்திரையில் ஈடுபடுகின்றனர்.

இப்படி யாத்திரை செல்லும் இந்துக்களுக்கும் இவர்கள் செல்லும் வழித்தடத்தில், ஊர்களில், உணவகம் வைத்துள்ள இஸ்லாமியர்களுக்கும் இடையில் பிளவை ஏற்படுத்த வேண்டும்; இஸ்லாமியர்களின் கடைகளை இந்துக்கள் புறக்கணிக்கும்படி செய்ய வேண்டும்; இதன் மூலம் இந்து முஸ்லிம் மக்களிடையே மதரீதியான பிளவையும் வெறுப்பையும் ஏற்படுத்தி வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் பாஜக ஆளும் மாநில அரசுகள் முயற்சி செய்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்டை ஆளும் பாஜக அரசுகள் ஒரு உத்தரவை வெளியிட்டுள்ளன. கன்வார் யாத்திரை மேற்கொள்ளும் வழித்தடத்தில் உள்ள உணவகங்கள், பழக்கடைகள், காய்கறி கடைகளின் பேனர்களில் கியூ ஆர் கோடு (QR code) அச்சிடப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அந்த கியூ ஆர் கோடு உடன்  உணவக உரிமையாளரின் பெயர் மற்றும் அவரது மதம் குறித்த விவரங்கள் இணைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்தக் கியூ ஆர் கோடை  ஸ்கேன் செய்து இஸ்லாமியர்கள் நடத்தும் கடைகளை கண்டறிந்து இந்துக்கள் அவற்றை புறக்கணிக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் நடத்தும் உணவகங்கள் என்பது தெரியாமல் பக்தர்கள் உணவருந்தி விட்டு பிறகு வருத்தப்படுவதாகவும் அதேபோல இஸ்லாமியர்களின் கடைகள் என்பது தெரியாமல் பழங்கள், காய்கறிகள் வாங்கிவிட்டு பக்தர்கள் வருத்தப்படுவதாகவும் அதை தவிர்க்கும் பொருட்டே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக காவி வெறியர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

படிக்க:

 எங்க வந்து நடத்துற ரத யாத்திரை | மகஇக பாடல் | மீள்பதிவு

கன்வார் யாத்திரைப்  பாதையில் உள்ள உணவகங்களின் பெயர் பலகைகளில் உணவக உரிமையாளரின் பெயரையும் அங்கு வேலை செய்யக்கூடிய பணியாளர்களின் பெயரையும் சேர்த்து எழுதி வைக்க வேண்டும் என்று உத்தரவிடுட்டு சென்ற ஆண்டும் இதே போன்ற ஒரு பிரச்சனையை பாஜக ஆளும் மாநில அரசுகள் கிளப்பின. அதேபோன்று இப்பொழுதும் பிரச்சனையை பாசிச பாஜக அரசுகள் கிளப்பி வருகின்றன.

ஆனால் கன்வார் யாத்திரையில் ஈடுபடும் பக்தர்கள் இஸ்லாமியர்களின் கடைகளை புறக்கணிக்க வேண்டும் என்று நினைப்பது இல்லை. இந்துக்களின் கடைகளுக்குச் செல்வதைப் போன்று இஸ்லாமியர்களின் கடைகளுக்கும் செல்கின்றனர் என்பதுதான் உண்மை.

இதற்கு ஒரு சிறந்த உதாரணமாக இருப்பது முசாபர் நகர். இந்த நகரத்தில் தான் 2013 ஆம் ஆண்டு நடந்த கலவரத்தில் 62 பேர் கொல்லப்பட்டனர்; 50,000க்கும் மேற்பட்டோர் தங்கள் இடங்களை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகினர். இப்படிப்பட்ட நகரத்தில், கன்வார் யாத்திரை வழித்தடத்தில், இஸ்லாமியர்கள் அன்னதான முகாம்களை அமைத்து இந்து பக்தர்களுக்கு இலவசமாக விருந்தளித்து வருகின்றனர்; இந்து பக்தர்கள் இந்த உணவை மகிழ்ச்சியுடன் உண்டு செல்கின்றனர் என்ற செய்தி சென்ற ஆண்டு கன்வார் யாத்திரையின் போது இணையதளங்களில் காணக் கிடைத்தது. ( சென்ற ஆண்டு கன்வார் யாத்திரை குறித்து நமது தளத்தில் வந்த ஒரு கட்டுரையில் அது குறித்து எழுதியிருந்தோம்.)

இது போன்ற அன்னதான நிகழ்வுகள் ஆங்காங்கே முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வருவதும், கன்வார் யாத்திரை செல்லும் பக்தர்கள் அவற்றில் உணவருந்திச் செல்வதும் மக்களிடையே மத நல்லிணக்க உணர்வு இருப்பதை, அதாவது இஸ்லாமியர்கள் மீது இந்துக்களுக்கு வெறுப்பு இல்லை என்பதை எடுத்துக்காட்டும் நிகழ்வாக சென்ற ஆண்டு பேசப்பட்டது.

ஆனால் இது போன்ற செய்திகளை இப்பொழுது இணையதளத்தில் தேடினாலும் கிடைக்கவில்லை. இந்த அன்னதான முகாமையே பாஜக மதவெறி அரசுகள் தடை செய்து விட்டனவா? அல்லது இந்த அன்னதான முகாம்கள் நடக்கும் செய்திகளை வெளியே வராமல் தடுத்து விட்டனவா? என்பது நமக்கு இன்னும் தெரியவில்லை. இந்த அன்னதான முகாம் பற்றிய செய்திகள் வெளியில் வந்தால் தங்களது மதவெறிப் பிரச்சாரத்திற்கு இடைஞ்சலாக இருக்கும் என்பதால் அன்னதான முகாமை தடை செய்திருப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் உள்ளதாக கருதுகிறோம்.

காசியாபாத் நகரின்  இந்திரபுரா பகுதியில் உள்ள  கேஎஃப்சி (KFC) கடைக்குள் புகுந்து, சைவ உணவுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று “ஜெய் ஸ்ரீ ராம்” என்று முழக்கமிட்டபடி, இந்து மத வெறியர்கள் பிரச்சனை செய்துள்ளனர். இந்த கேஎஃப்சி கடை என்பது கேஎஃப்சி சிக்கன் என்ற பெயரில் கோழிக்கறி உணவுகளை மட்டுமே விற்பனை செய்யும் ஒரு உணவகம் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே கன்வார் யாத்திரை செல்லும் எந்த பக்தரும் இந்த கடைக்குள் சென்று உணவருந்த போவதில்லை. இந்த நிலையில், இந்தக் கடைகளுக்குள் புகுந்து சைவ உணவு மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று கூறுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்.

படிக்க:

கன்வார் யாத்திரை மூலம் இஸ்லாமிய மத வெறுப்பை தூண்ட முயலும் பாஜக அரசுகள்! தடை விதித்த உச்ச நீதிமன்றம்!!

பசுவளைய மாநிலங்கள் என்று கூறப்படும் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் பாஜகவின் செல்வாக்கு சரிந்து வருகிறது. பாபர் மசூதியை இடித்து ராமர் கோவில் கட்டப்பட்ட அயோத்தி பாராளுமன்ற தொகுதியிலேயே பாஜக தோற்றுவிட்டது. இந்த நிலையில், சரிந்து வரும் தங்களது செல்வாக்கை தூக்கி நிறுத்துவதற்காகவும் இந்திராஷ்டத்தை அமைக்கும் வேலையை துரிதப்படுத்துவதற்காகவும் பாஜக ஆளும் மாநில அரசுகள் இஸ்லாமியர்கள் நடத்தும் கடைகளை இந்துக்களை புறக்கணிக்கச் செய்ய வேண்டும் என்று வெறிகொண்டு வேலை செய்து வருகின்றன.

இத்தகைய மோசமான, படுபாவி செயலை தடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளனர். உச்சநீதிமன்றமோ இந்த ஆண்டு கன்வார் யாத்திரை முடிந்தபிறகு வழக்கு விசாரிக்க முடிவெடுத்துள்ளது. இதுதான்‌ நாட்டு மக்களுக்கு குறிப்பாக, சிறுபான்மை மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை தடுக்க நீதித்துறை காட்டும் அக்கறையாக உள்ளது.

தமிழகத்தில் ஆர் எஸ் எஸ் – பாஜகவினரை காலூன்ற விட்டால் தமிழகத்தில் நடக்கும் முருக பக்தர்களின் பாதயாத்திரை, சபரிமலை செல்லும் பக்தர்களின் பயணம் போன்றவற்றிலும் இதேபோன்ற அயோக்கியத்தனமான வேலைகளை முன்னெடுத்து தமிழக மக்களை மதரீதியாக பிளந்திடுவர் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டியது புரட்சிகர – முற்போக்கு –  ஜனநாயக சக்திகளின் கடமை என்பதை உணர்ந்து செயல்படுவோம்.

  • குமரன்

1 COMMENT

  1. இந்து மதம் என்ற பெயரில் – ஆன்மீக வழிபாடு என்ற பெயரில் என்னென்ன யாத்திரைகளையோ தொடர்ச்சியாக செய்து வருகின்றனர் சங் பரிவார் காவிக் கூட்டம்.
    அந்த ‘எழவுகளை’ தனிமனித மத நம்பிக்கை தனி மனித ஆன்மீக நம்பிக்கை என்ற அளவோடு அதை நடைமுறைப் படுத்துவார்களேயானால் எவரும் கண்டு கொள்ளப் போவதில்லை. ஆனால் இதன் மூலம் இந்து மத வெறியை ஊட்டி சிறுபான்மை இஸ்லாமிய வெறுப்பு உணர்வை புகுத்தி திட்டமிட்ட கலவரங்களை உண்டாக்குவதும், ரத்தக்களறியை ஏற்படுத்துவதும், அருதிப் பெரும்பான்மை இந்து மக்களின் வாழ்வாதார பிரச்சனையை மடை மாற்றி மத வெறியில் குளிர் காய்வது மே இந்த பார்ப்பனப் பாசிச பயங்கரவாதிகளின் திட்டமிட்ட சதி செயலாக உள்ளது. மதம் மக்களுக்கு அபின் என்றார் ஆசான் காரல் மார்க்ஸ். அவ்வித மதப் போதையிலிருந்து விடுபட்டு குறைந்த பட்சம் பாசிச பார்ப்பன பாசிஸ்ட்டுகளிடமிருந்து விடுதலை பெற்று தற்காத்துக் கொள்வதே அருதிப் பெரும்பான்மை ‘இந்து’ மக்களின் கடமையாக இருக்க முடியும் என்பதனை தோழர் குமரனின் கட்டுரை உணர்த்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here