பஞ்சாப்;

விவசாயிகளின் வீறுகொண்ட போராட்டத்தின் வெற்றிக்கு பெண்கள் முக்கியமான மையமான பங்காற்றியுள்ளார்கள்.

20 11 2021 தி டிரிப்யூன், சண்டிகர்.

எழுதியவர்: ருசிகா. M.கண்ணா

பஞ்சாபின் கிராமப்புற பின் நிலத்துப் பெண்களின் செயல்பாடுகள் விவசாயிகள் போராட்ட வெற்றிக்கு ஆண்களைப் போலவே பங்காற்றின. அவை பாராட்டப்பட வேண்டியவை. பஞ்சாப் மாநிலத்தில் சமூக – அரசியல் களத்தில் பெண்களின் மாபெரும் பங்கேற்பு இதுவே முதல் முறை.

விவசாயிகள் வீட்டுப் பெண்கள் வீட்டுக்குள்ளேயே கிடப்பார்கள். போராட்டம் அவர்களை வெளியே அழைத்து வந்தது; சிங்கு திக்ரி எல்லைகளுக்கு அவர்கள் வந்தார்கள் அல்லது கிராமங்களிலேயே நின்று விவசாய வேலைகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டார்கள்; அல்லது பஞ்சாபின் குறுக்கு நெடுக்காக நடந்த சுமார் 108 ஆர்ப்பாட்டங்களில் பங்கெடுத்தார்.

டெல்லிக்கு நெடும் பயணம் சென்ற ஆயிரக்கணக்கான பெண்களில் 35 பேர் உயிரைக் கொடுத்தவர்கள். இன்று ‘பஞ்சாப் பெண்கள் கூட்டமைப்பின்’ சார்பாக (சம்யுக்த நாரீ மஞ்ச்) பெண்களின் பங்கேற்பையும் தியாகத்தையும் கவுரவிக்கும் கருத்தரங்கு நடந்தது.

அக்கருத்தரங்கில் பல விவசாயப் பெண்கள் பேசினார்கள்; வந்தனா சிவா, மேதாபட்கர் போன்ற ஆய்வாளர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள்; பாரதிய கிசான் யூனியனின் (BKU) (உக்ரகன்) தலைவர்களில் ஒருவரான ஹரீந்தர் பிந்து போராட்டம் ஆரம்பித்த கட்டத்திலேயே ஆர்ப்பாட்டங்களில் பெண்களின் பங்கு முக்கியமாக அமையுமென எதிர்பார்த்ததாக பேசினார்: “சட்ட மேலானைகள் வீசப்பட்டபோதே போராட்டம் வெகுநாள் நடக்கும் என்றும், பெண்கள் பங்கேற்பு இல்லாமல் இது சாத்தியமில்லை என்றும் முடிவு செய்தோம். பெண்கள் உடனே ஏற்றார்கள்.

ஜமீன் பிராப்தி சங்கர்ஷ் கமிட்டியின் பொதுச் செயலாளர் பரம்ஜித் லாங்கோவால் பேசியபோது: கிராமப்புறங்களில் உள்ள ஆண் பெண் பாகுபாடுகள் மற்றும் பெண்கள் மீதான ஒடுக்குமுறைகளை இந்த போராட்டத்தில் பெண்களின் பங்கேற்பு முறியடித்துவிடும் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்டார். “கிராமங்களுக்கு போனேன். கார்ப்பரேட்டுகள் கிராமப் பொது நிலங்களைப் பறித்து கொள்வது தலித்துகளின் வயிற்றிலடிக்கும் என்று சொன்னேன். அவர்கள் புரிந்துகொண்டார்கள், பல ஆயிரம் பேர் திரண்டு வந்தார்கள்” என்றார் அவர்.

பிரபலமான பெண் தலைவரான ஜஸ்பீர் கவுர்நட் (பஞ்சாப் விவசாய சங்கம்) டிரிப்யூனிடம் பேசும் போது, “அது சுலபமாக ஒன்றுமில்லை. ஆனால் நெடிய போராட்டம் என்பது சாதாரணமானது அல்ல. ஆளுக்கு ஆள் கொஞ்சம் கொஞ்சம் காரியம் செய்ய வேண்டியிருந்தது. ஆர்ப்பாட்டக் காலங்களில் பால்வேறுபாடு எங்குமே இல்லை. மத வேறுபாடு கடந்து இந்த ஒற்றுமை, சாதி வேறுபாடு கடந்த இந்த ஒற்றுமை, செல்வ தோரணை கடந்து போராட்டம் வெள்ளம் போலப் பெருக்கெடுத்ததைப் பார்த்த மோடி அரசு நடுங்கிப் போய்விட்டது. மக்களின் முன்னால், மக்கள் எண்ணத்தின் முன்னால் மண்டியிட்டது.” என்று பட்டென்று உடைத்து பேசினார்.

72 வயது நிரம்பிய முதிய  ஜகதீஷ் கவுரின் முகம் கடந்த 10 மாதங்களிலும் நீங்கள் எங்கும் போராட்டக்களத்தில் திரும்பத் திரும்பச் சந்தித்த முகமாக இருந்திருக்கும். ஓடியாடித் திரிய முடியாத உடல்நிலை. ஜனவரி 1 முதல் எல்லா காலங்களிலும் உடனிருந்தார். “என்னால் டெல்லிக்கு போக முடியவில்லை. கிலா ராய்ப்பூரில் (அதானி திட்ட பூங்காவில்) என் தோழி மொகிந்தர் கவுரோடு ஒவ்வொரு நாளும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டேன்.  ஆர்ப்பாட்ட நாளிலேயே அவள் ஒருநாள் இறந்துபோனாள். இதையும் மனசில் வைத்து சட்டங்கள் வாபசாகும் வரை போராட கடமைப்பட்டவள் என்று வைராக்கியத்துடன் நின்றேன். நாம் கொடுத்த விலை மிக மிகப் பெரிசு. அடுத்த தலைமுறைகள் இதை மறக்காது அவர்கள் அமைதியாக வாழ்வார்கள் என்று நம்புவோம்” என்று கணீரென்று பேசினார்.

நன்றி:

20 11 2021 தி டிரிப்யூன், சண்டிகர்.
எழுதியவர்: ருசிகா. M.கண்ணா

தமிழில்: இராசவேல்

https://www.tribuneindia.com/news/punjab/women-played-pivotal-role-in-stirs-success-340778

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here