பாகிஸ்தானைப் பாருங்கள் !

வீட்டின் மீதமிச்சத்தை மூட்டைகட்டிச் சுமந்துகொண்டு வீடிழந்த லட்சக்கணக்கான மக்கள் ஒதுங்க இடம்தேடி  திசைதெரியாது  அலைகிறார்கள்.

0
66

பாகிஸ்தானைப் பாருங்கள் !


பாகிஸ்தான் என்றதும் ஏதோ விவகாரம்  பேசப்போகிறேன் என்று எதிர்பார்க்கவேண்டாம்.  இது இயற்கைச் சீற்றம். பாகிஸ்தான் மழை வெள்ளத்தில் பாதி நாடு மூழ்கிக் கிடக்கிறது,தவித்துக் கொண்டிருக்கிறது. இதற்குள்ளேயும்  நியாய– அநியாயம் பற்றிய அறச் சீற்றம் உண்டு. கவனியுங்கள்.

ஆசியக் கோப்பைக்கான  கிரிக்கெட்  முதல் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றதை ,  ‘ இந்து தேசியவெறியர்கள் ‘ கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.  ஒளிபரப்பில் இந்தியக் கொடி × பாகிஸ்தான் கொடி,  இடையே பற்றிஎரியும் தீ. அருகருகே உள்ள ஏழை நாடுகளிடையே எதற்காக பகைத் தீ ? தேவையே இல்லை .ஆனால்  இன்றைய உண்மை நிலவரத்தில் பாகிஸ்தான் நாடு  வேறு ஒரு துன்பத்தில், வெள்ளத் துயரத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது.

இதுபற்றி நாம் கவனம் கொள்வது சர்வதேசக் கண்ணோட்டமாகும். மனித நேயப் பார்வையாகும்.  மற்றதும் கவனிக்க வேண்டியதே.  அதை  பிறகு ஒரு சந்தர்ப்பத்தில்  பார்ப்போம்.  இனி கள நிலவரங்கள்.

வெள்ள நிலவரம்:

இப்போது அங்கே பருவமழை, எட்டாவது சுற்று வந்துகொண்டிருக்கிறது. சாதாரணமாக செப்டம்பர் பருவமழை, 20, 30 ஆண்டுகளுக்கு முன் 3, 4 சுற்றுதான் இருக்கும். ஷெர்ரி ரெஹ்மான் ‘ காலநிலை மாற்றத் ‘துக்கான (climate change ) அமைச்சர். பேரிடர் மேலாண்மை/நிர்வாகப் பொறுப்பாளரும்கூட;  இவரது அறிக்கைப்படி பாகிஸ்தான் மக்களில் 15% பாதிக்கப்பட்டுள்ளனர்.மார்பில் கொஞ்சிய பிள்ளைகள் இப்போது   இடம் தேடி  வெள்ளத்தில் அலையும் தாய்– தந்தை  தோள்கள் மீது,அமர்ந்து தத்தளித்துக் கொண்டுள்ளனர். அமைச்சர் ஷெர்ரி திகைத்து நிற்கிறார்.” மக்களுக்கு எதிரான திட்டங்களின் ” ஆட்சியில், அவர்களோடு நிற்கும் அவர் வேறென்ன செய்வார் ?

தென்மேற்கு பலுச்சிஸ்தானில், ஜாஃபராபாத் வெள்ளத்தில் மிதக்கிறது. வீட்டின் மீதமிச்சத்தை மூட்டைகட்டிச் சுமந்துகொண்டு வீடிழந்த லட்சக்கணக்கான மக்கள் ஒதுங்க இடம்தேடி  திசைதெரியாது  அலைகிறார்கள்.

” 2010– ‘சூப்பர் ‘ வெள்ளத்தைவிட  இப்போது மோசம் என்று பாக். சொலவடை.வெள்ளத்துக்கும் ‘சூப்பர்’ ரேட்டிங் போடும் நவநாகரிகம் ! நாடுமுழுக்க 3 கோடிப்பேர் பாதிக்கப்பட்டு 1041 பேரின் உயிரையும் பறித்துவிட்டது இந்த மழை வெள்ளம்.

ஆகஸ்டு 28 காலைநிலவரம் இது. பருவங்கள் தாறுமாறாகிப் போனதே காரணம் என்பது அரசாங்கம் ஒப்புக்கொள்ளும் உண்மைவிவரம்.  வானிலை ஆய்வுத்துறை கணக்குப்படி  ‘ஜூலை 1  முதல் செப். 30 வரை 3 மாதத்தில் சுமார் 150 மி.மீ மழை பொழியும்’. கடந்த ஆண்டு 25 மி.மீ குறைவு. இந்த ஆண்டு 354 மி.மீ 21/4 பங்கு அதிகம். சதவீதக் கணக்கில் 251 %.  இதே மாதத்தில் 50 மி.மீ மட்டும்தான் பொழியவேண்டும்.

விடாது  பெய்துகொண்டேயிருக்கும் மழையைத் தாங்க பாக். உள்கட்டுமானங்கள் போதாது. நகரங்கள் தாக்குப்பிடிக்கவில்லை; கிராமப்புற எல்லைகளைத் தேடித்தான் பார்க்கவேண்டும்!. கில்கித் பல்சிஸ்தான் மழை வறண்ட பகுதி. இங்கே 12.4 மி.மீ தான் மழை வரும். அங்கு ஆகஸ்டுமாதம் 225 % கூடுதல் மழை. பாக்- கின் புகழ்பெற்ற மட்யான் பாலம் 2010  கனமழையில் நொறுங்கி ஆற்றோடு போனது. அடுத்த மழைக்கு பாதிப்பு வரக்கூடாதென்று திட்டமிட்டு 5 மீட்டர் உயர்த்தி எடுத்துக் கட்டினார்கள் ; அந்தப்பாலத்தின்மீது வெள்ளம் நிரம்பித் ததும்பி ஓடிக்கொண்டிருக்கிறது.

கால நிலை மாற்றம்  !

உலகம் முழுக்க முதலாளிகள்;  காடுகளை வெட்டுவதால், எரிப்பதால்,  நீர்வழிகளின் குறுக்கே கட்டிடம், சாலை அமைப்பதால் இயற்கை அழிந்து காலநிலை தாறுமாறாகிவிட்டது. உலகம் முழுக்க ஆய்வாளர்களும் மக்களும் எச்சரித்துப் போராடுகிறார்கள்.  வறட்சி–வெள்ளம் மாறிமாறி கோபத்தைக் காட்டுகிறது.ஐரோப்பாவில் கடந்த 500  ஆண்டுகளில்  இல்லாத அளவு இப்போது வறட்சி ; வெப்பக் கடுமையால் புதர்க்காடுகள்  ஏராளம்,  தாமாகத் தீப்பிடித்து எரிகின்றன ; ஐரோப்பா தவிர, சீனா–அமெரிக்கா கூட வறட்சியில் தவிக்கிறது ; இப்போது பாகிஸ்தானில் வெள்ளத்தில். மட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுகளில் உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு கடுமையான வெப்பக்காற்று வீசியது. காடுகள் எரிந்தன. என்ன? ஏன்? என்று நிதானிப்பதற்குள் திடீர் வெள்ளம்!, ஏரிகளில் உறைபனி மூடியது!. இயற்கை  ஷார்ட் சர்க்யூட்( short circuit) ஆகிவிட்டது.!!

 

உயிர் சேதம்:

திடீர்ப் பேரழிவுகளால் 1998 முதல் 2018– 20 ஆண்டுகளில் 10,000 பேர் சாவு ; சுமார் 32,000 கோடி ரூபாய் இழப்பு என்றொரு கணக்கு சொல்கிறது. ஆசிய நாடுகளில் பங்களாதேஷ், மியான்மர், ஃபிலிப்பைன்ஸ், பாகிஸ்தான் என்று பாதிப்பு வரிசையில் ஒவ்வோராண்டும்  4 நாடுகளில் ஏதாவது  ஒன்றிரண்டு  இடம் பிடித்து விடுகின்றன.  இப்போது தற்காலிக உதவிகளை சில உலக நாடுகள் செய்யலாம். அது போதுமா ?

பாகிஸ்தானின்  சமுதாய நிலவரங்கள்


புவியியல் நிலவரம்:

பாகிஸ்தான் நாட்டு கட்டமைப்பின்  நில நிலவரப்படி ;  பாகிஸ்தான்   –   மத்தியக் கிழக்கு, மத்திய ஆசியா, தெற்கு ஆசியா, கிழக்கு ஆசியா ஆகிய அனைத்துப் பகுதிகளுக்கும் பாலம். ஆனாலும் உற்பத்தி மாற்றமோ, வளர்ச்சியோ நடக்கவில்லை. தொழில்துறையில் முன்னேற்றமில்லை. நிலப்பிரபுத்துவ நாடுமில்லை, முதலாளித்துவ நாடுமில்லை. இசுலாம் அரச மதம். மதவாதக் கட்சிகள் உண்டு. பிற்போக்கு அலை பின்னுக்கு இழுக்கிறது. அரசியல் நிலவரத்தில் கொந்தளிப்பு இல்லாத ஆண்டுகளே இல்லை. ஜனநாயக, இடது கட்சிகள் போராடுகின்றன.

அரசியல் நிலவரம்:

அரசியல் நிலவரப்படி, நான்குமுறை தேர்ந்தெடுத்த பிரதிநிதித்துவ ஆட்சிகள், அரசியல் கொலைகள்,  மூன்று முறை ராணுவ ஆட்சிகள். உலக அரசியலை ஈர்க்கும் விதமாக, அணுஆயுதம்  ரகசியமாக அல்லாமல்  வெளிப்படையாகவே அலங்கரித்துக்கொண்டுள்ள நாடு. எது இருந்தாலென்ன,  ஜனநாயக அரசியல் நிலைப்பு இல்லை. காரணம்,  பாக். மட்டும் அல்ல, இந்தியாவும்தான், இரண்டுநாடுகளின் வரலாறும்தான்.

அயல்நாட்டு நிலவரம்:

பாகிஸ்தான் ஜின்னாவாலும், மறுதரப்பான இந்தியாவின் நேரு–மற்றும் ஆர்.எஸ்.எஸ்., இந்துமகாசபையின் மக்கள் விரோத துரோகங்களாலும்  வலுவந்தமாக ’47–ல் தனியே பிரிக்கப்பட்டது.  இந்தியா உட்பட  சம்பந்தப்பட்ட  எதிர்ப் பிரச்சாரங்களை முறியடித்தும்  பிற்போக்கைச் சமரசம் செய்தும் ஒரு நாடாக நிலை கொள்ளவே போராடுகிறது.

பாக் × இந்தியா என்ற சமன்பாட்டை வைத்து அமெரிக்கா, பிறகு ரசியா, பிறகு கூடுதலாக சீனா என்று பழைய, புதிய வளர்ந்துவரும் ஏகாதிபத்தியங்களின் போர்த் தந்திரங்கள் பாகிஸ்தானை மேலும் நெருக்கடிக்குள்ளாக்குகின்றன.

மக்களின் பார்வையிலிருந்து தேவையற்றது  தேசவெறி ;  ஆனால் பாகிஸ்தான், இந்திய ஆளும் வர்க்கங்களுக்கோ அது  தேவை. இந்திய, பாக். பொருளாதாரங்கள் இதன் காரணமாகவே ராணுவச் செலவுகளைக் கூட்டியுள்ளன.

தீர்வுதான் என்ன?

இந்தப்பின்னணியில் நாடு, மக்கள் பற்றி, கால நிலைச் சிக்கலில் விழுந்தது பற்றி பாக். ஆளும்வர்க்கம்சிந்திக்குமா?

இந்த ஒரேஒரு கேள்வியை மட்டும் நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள். இயற்கையை அழிக்கும் ஏகாதிபத்தியங்களின் லாபவெறி ஒழிக்கப்படவேண்டும்;   அவற்றோடு  சேர்ந்து கூடிக்குலாவும் பிற்போக்கு  சுரண்டல் அரசும் ஒழிக்கப்படவேண்டும்;  அதுவரை பலகோடி பாக். மக்கள் இப்படிப்பட்ட பேரிடர்களை மீண்டும் மீண்டும் சந்திக்கத்தான் போகிறார்கள்.

ஆதாரம்:

இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆகஸ்டு இறுதிவாரம், செய்திகள் கருவூலம் முகவர் அமைப்பு, இஸ்லாமாபாத்.

ஆக்கம்  : இராசவேல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here