விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் செயல்பட்டு வரும் வனஜா என்ற ஒரு தனியார் பட்டாசு ஆலையில் நேற்று (ஏப்ரல் 19 அன்று) ஏற்பட்ட வெடி விபத்தில் 25 பேர் மரணம் அடைந்துள்ளனர். பல தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகமாக கூடும் என்ற அச்சம் நிலவி வருகிறது.இந்த வெடிவிபத்துக்கான குறிப்பான காரணம் என்ன என்பது குறித்த செய்திகள் இனிமேல் தான் வெளிவரும்.
விருதுநகர் மாவட்டத்தில் இயங்கிவரும் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள் நிகழும் செய்திகள் அவ்வப்போது வந்து கொண்டு இருக்கின்றன. சட்ட விதிமுறைகளின் படி பாதுகாப்பான முறையில் பட்டாசு ஆலையை இயங்காததால் தான் பெரும்பான்மையான வெடி விபத்துகள் ஏற்படுகின்றன.
நீலகிரி மாவட்டத்தில் அருவங்காடு
அரசு வெடி மருந்து தொழிற்சாலை (Cordite Factory – Aruvankadu) நீண்ட காலமாக இயங்கி வருகிறது. இங்கு பாதுகாப்பு விதிமுறைகள் மிகக் கடுமையாக பின்பற்றப்படுகின்றன. எனவேதான் இந்த தொழிற்சாலையில் பெரும்பாலும் வெடி விபத்துக்கள் ஏற்படுவதில்லை. எப்பொழுதாவது ஏற்படும் வெடி விபத்துகள் பெரிய அளவிலான பாதிப்பைக் கொண்டு வருவதில்லை என்பதிலிருந்து பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படும் இடங்களில் பெரும்பாலான விபத்துக்கள் தவிர்க்கப்படுகின்றன என்பதை அனைவரும் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் சட்ட விதிமுறைகளின் படி ஆலைகளை இயக்கினால் லாபம் குறையும் என்பதற்காக பட்டாசு ஆலை முதலாளிகள் பாதுகாப்பு விதிமுறைகளை மீறி அபாயகரமான முறையில் தொழிலாளர்களை வேலையில் ஈடுபடுத்துகிறார்கள்.
அதை தடுத்து நிறுத்த வேண்டிய அதிகாரிகளோ தங்களுக்கு வேண்டியதை பெற்றுக் கொண்டு இந்த விதி மீறல்களை கண்டும் காணாமல் விட்டு விடுகிறார்கள். பட்டாசு ஆலை முதலாளிகளிடம் நிதி வாங்கும் அரசியல்வாதிகளும் மக்களிடம் வாங்கும் ஓட்டுக்கு விசுவாசமாக நடந்து கொள்ளாமல் அயோக்கியத்தனத்திற்கு துணை போகிறார்கள்.
இதனால்தான் அடிக்கடி விருதுநகர் மாவட்டத்தில் இருந்து பட்டாசு ஆலைகள் வெடித்து சிதறும் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
பட்டாசு ஆலைகள் வெடித்து மனித உயிர்கள் பலியாவதை விபத்து என்று சொல்வதே தவறானது. மாறாக, பட்டாசு ஆலை முதலாளியும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் இணைந்து செய்த கொலைகள் என்று கூறுவதே மிகவும் சரியானது.
இப்படி பட்டாசு ஆலை வெடித்துச் சிதறுவதும் அதனால் மனிதர்கள் பலியாவதும் அடுத்தடுத்து தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் பொழுதும் அதைக் குறித்து கொஞ்சம் கூட கவலைப்படாமல் தனது கடமையை புறக்கணித்து கல்லாக் கட்டிக் கொண்டிருக்கும் பட்டாசு ஆலை முதலாளிகள், அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு எவ்வித கோபமும் வருவதில்லை. அல்லது அந்தக் கோபத்தால் சமூகத்தில் எந்த விளைவும் ஏற்படுவதில்லை.
வெடிக்கும் பட்டாசுகளில் இருந்து காகிதங்கள் சிதறுவது போன்று பட்டாசு ஆலை வெடிவிபத்தில் மனிதர்களே வெடித்துச் சிதறுகிறார்கள் என்பது எவ்வளவு கொடுமையானது. தீயில் அடையாளம் தெரியாமல் கருகிப்போன மனித உடல்கள்… தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மனிதர்கள்…தங்கள் அன்புக்குரியவர்களின் இந்த நிலை கண்டு பதறி துடித்துக் கொண்டு இருக்கும் உற்றார் உறவினர்கள் என்பன போன்ற விசயங்கள் எதையும் அதாவது இந்த மனிதர்களின் வலி – வேதனையை உணராமல் ஒரு செய்தியாக மட்டுமே கடந்து செல்லும் மனநிலைக்கு பெரும்பான்மையான மக்கள் மெல்ல மெல்ல பழக்கப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அதேசமயம் இப்படிப்பட்ட கொடூரமான சாவு எதிர்நோக்கியுள்ள அந்த கொலைக்களத்தில் – பட்டாசு ஆலையில் வேலை செய்வதற்காக மக்கள் ஏன் செல்கிறார்கள்? என்ற கேள்வி எழுகிறது. அந்தப் பகுதியில் இதை விட்டால் வேறு வேலை வாய்ப்பு இல்லை என்ற நிலையில் தங்களது உயிரை பணயம் வைத்து இந்த வேலைக்கு மக்கள் சென்று கொண்டிருக்கிறார்கள்.
படிக்க:
♦ கசக்கும் தீபாவளி! கையேந்தும் உழைக்கும் வர்க்கம்!
♦ தொடரும் ஆலைச்சாவுகள் – ஆந்திரா ஆலை விபத்து!
தங்களது லட்சியத்திற்காக எந்த நேரமும் தனது உயிரைக் கொடுத்து எதிரியை வீழ்த்துவதற்கு தயார் நிலையில் இருக்கும் படையினரை தற்கொலை படையினர் என்று உலகம் அழைக்கிறது.
தங்களின் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்; தங்களது குழந்தைகளை வளர்த்து ஆளாக்க வேண்டும் என்பதற்காக எந்த நேரமும் தங்களின் உயிர் போய்விடும் என்பதை அறிந்தே வேலைக்கு செல்லும் தொழிலாளர்களை என்னவென்று சொல்வது – தற்கொலை தொழிலாளர்கள் என்பதை தவிர? தொழிலாளர்களை இப்படிப்பட்ட கொடூரமான நிலையில் வைத்திருக்கும் சமூகத்தை நாகரிக சமூகம் என்று கூறுவது பொருத்தமுடையதுதானா? என்ற கேள்வி எழுகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்து அவர்களின் வாழ்க்கை பாதுகாப்பை, வருமானத்தை உத்தரவாதம் செய்வதும் சட்டப்படியான பாதுகாப்பு விதிமுறைகளின் படி பட்டாசு ஆலைகள் இயக்கப்படுவதை உத்தரவாதம் செய்வதும் தமிழக அரசின் கடமை.
பட்டாசு ஆலைத் தொழிலாளர்களின் வாழ்க்கைப் பாதுகாப்பை உறுதி செய்திட அரசை நிர்பந்திக்கும் வகையில் போராட்டங்களை முன்னெடுப்பது நம் அனைவரின் கடமை.
– குமரன்







பட்டாசு ஆலை தொழிலாளர்கள் மனிதர்களாகவே மதிக்கப்படவில்லை என்பதுதான் தொடரும் மரணங்கள் நமக்குச் சொல்லும் செய்தியாக இருக்கின்றன.
எப்படி பட்டியல் சமூக மக்கள் தான் பாதாள சாக்கடையிலும் மனித கழிவுகளையும் எடுக்கும்போது மூச்சு முட்டி மாண்டு போகிறார்களோ.
அதைப்போன்று தான் இத்தகைய தொழிலாளர்கள் மரணங்களும் இருந்து வருகிறது.
விண்வெளிக்கு ராக்கெட் மூலமாக நிலாவிலும் செவ்வாய் கிரகத்தில் என்ன இருக்கிறது என்பதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்யும் கார்ப்பரேட் நல அரசுகள் மக்களின் மரணங்களை எப்படி தடுக்க வேண்டும்?
எந்த அறிவியல் கொண்டு தடுக்க வேண்டும்? என்பதில் எந்தவித கண்டுபிடிப்பும் முன்னேற்றமும் இல்லாமல் தினம் தினம் கொலை செய்து கொண்டிருக்கிறது.
விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி உட்பட பல்வேறு இடங்களில் வெடி உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்குகின்றன. வேறு வேலை கிடைக்காததால் குடும்பத்தை நகர்த்திச் செல்ல வேண்டுமே என்ற ஒரே காரணத்திற்காக பேராபத்து மிகுந்த இந்த தொழிற்சாலையில் தொழிலாளர்கள் ஆண் – பெண் இருபாலர்களும் வேலை செய்கிறார்கள். கட்டுரையாளர் குறிப்பிட்டு இருப்பது போல விதிமுறைகளை பின்பற்றி எந்த ஒரு தொழிற்சாலை முதலாளியும் தொழிலை மேற்கொள்வதில்லை. அதனால் தான் வாரம் தவறினாலும் பருவம் தவறாமல் அப்பகுதியில் அடிக்கடி இப்படி வெடி விபத்துக்கள் ஏற்படுவதும், அப்பாவி ஏழை எளிய மக்கள் செத்து மடிவதும் தொடர் கதையாக இருக்கிறது. இத்தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்கும் உரிமையும் கண்காணிப்பு செய்ய வேண்டிய பொறுப்புக்களும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களுக்கே உரியது. அப்படி என்றால் வருவாய்த்துறை சார்ந்த அலுவலர்கள், சம்பந்தப்பட்ட தொழிற்சாலைகளை அடிக்கடி உரிய முறையில் ஆய்வு செய்வதும், குறைகள் இருந்தால் தண்டிக்கத் தகுந்த நடவடிக்கைகள் மேற்கொள்வதும் இன்றியமையாது.
ஆனால் தொழிற்சாலை முதலாளிகள் உரிமம் வாங்குவது முதல் ஒவ்வொரு மாதமும் சம்பந்தப்பட்ட கண்காணிப்பு அதிகாரிகளுக்கு/காவல்துறை அதிகாரிகளுக்கு/அரசியல்வாதிகளுக்கு மாமூல் செலுத்துவது என்பது தொடர்கதையாக நீள்கிறது.
மாமூல் கொடுப்பது மட்டுமல்ல; தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் விதவிதமான உயர் ரக விலை உயர்ந்த வெடிகளை பன்டல் பன்டலாகக் கட்டி கீழ்நிலை அலுவலர்கள் முதல் மேல்நிலை அலுவலர்கள் வரை மட்டுமல்ல; மேற்சொன்ன சகலருக்கும் இனிப்பு பெட்டிகளுடன் சேர்த்தே இனாமாக உபச்சாரம் செய்கிறார்கள். அப்புறம் எங்கே ஆலை முதலாளிகள் பாதுகாப்பு உடைய உபகரணங்களுடன் தொழிற்சாலை நடத்துவார்கள்! எவ்வளவு செலவினை குறைக்க முடியுமோ அவ்வளவு செலவினைக் குறைத்து, தொழிலில் எவ்வளவு லாபத்தை ஈட்ட முடியுமோ அவ்வளவு லாபத்தை ஈட்டுவதற்கு சகல துறையினரையும் மாமூல் மூலமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். ஆனால் உழைக்கும் ஏழை எளிய மக்கள்தான் உழைப்பு சுரண்டலுக்கு உள்ளாக்கப் படுவதும், இப்படி அடிக்கடி வெடி விபத்து ஏற்பட்டு உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டுவதுமான கொடுமை நீடிக்கிறது.
இந்த உழைக்கும் மக்கள் நலன்களுக்காக அவர்களை அணி திரட்டி இடதுசாரி இயக்கங்கள் குறிப்பாக புரட்சிகர இயக்கங்கள் வீதிகளில் இறங்கி போராடி இப் பிரச்சனைக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அவசியமாகிறது.
அதனையே இக்கட்டுரை வலியுறுத்துகிறது. கட்டுரையாளருக்கு வாழ்த்துக்கள். மறைந்த தொழிலாளர் தோழர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்!