கிறிஸ்துமஸ் பிரார்த்தனைக் கூட்டங்களைக் குறிவைத்துத் தாக்கும் இந்துத்துவக் கும்பல்!
டெல்லியில் பொது இடத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்திருந்த கிறிஸ்தவப் பெண்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாகக் கூறி பஜ்ரங் தள் அமைப்பினர் அவர்களை வெளியேற வற்புறுத்தினர்.

மேற்கு வங்கத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு விழாவில் பேசிய மோகன் பகவத், “இந்தியா ஒரு இந்து தேசம், அதற்கு அரசியலமைப்பு அங்கீகாரம் தேவையில்லை. மதச்சார்பற்ற என்ற வார்த்தை அரசியலமைப்பின் முகவுரையில் முதலில் இடம்பெறவில்லை. முன்னாள் பிரதமர் இந்திரா அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட போது, 1976ல் அரசியலமைப்பு சட்ட திருத்தத்தின் வாயிலாக சோசலிசம் மற்றும் மதச்சார்பின்மை என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டன” என்றும் பேசியிருந்தார்.

மோகன் பகவத் பேசியதற்கும் இந்தியாவில் சமீப காலங்களில் மதச் சிறுபான்மையினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என யாரும் கூறிவிட முடியாது.

இவர்கள் இப்படி அழுத்தம் திருத்தமாக பேசுவதன் மூலம் சங்பரிவார் கும்பலின் மதவெறியை தூண்டிவிடுகிறார்கள். இதற்கு சமீபத்திய கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதலே உதாரணம்.

உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகின்ற சூழ்நிலையில் இந்தியாவிலுள்ள கிறிஸ்தவர்கள் பதட்டத்திலே கிறிஸ்துமஸை கடந்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்களில் மதவெறி கும்பலால் அச்சுறுத்தப் படுகிறார்கள்.

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள சக்தி நகர் பகுதியில் திங்கள்கிழமை (டிசம்பர் 22) இந்து மதவெறி கும்பல் ஒன்று கத்தோலிக்க பிரார்த்தனைக் கூட்டத்தை சீர்குலைத்து, மத மாற்றம் செய்ததாகக் கூறி பிரச்சினை ஈடுபட்டிருக்கிறது.

சனிக்கிழமை (டிசம்பர் 20) கோரக்பூர் பகுதியில் நடைபெற்ற தாக்குதலை தொடர்ந்து இந்த சம்பவம் நடந்துள்ளது. சமூக ஊடகங்களில் பரவி வரும் ஒரு காணொளியில், ஒரு தேவாலயத்தில் பிரார்த்தனைக் கூட்டத்தில் இருந்த பார்வையற்ற பெண்ணை, குழந்தைகள் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியின் நகரத் துணைத் தலைவராக அடையாளம் காணப்பட்ட அஞ்சு பார்கவா என்பவர் பகிரங்கமாகத் திட்டுவதும், உடல் ரீதியாகத் துன்புறுத்துவதும் பதிவாகியுள்ளது.

இதனை கண்டித்து இந்திய கத்தோலிக்க பிஷப்ஸ் கான்ப்ரன்ஸ் (CBCI) அறிக்கை வெளியிட்டதோடு வேதனையும் வெளிப்படுத்தி உள்ளது.

பாஜக தலைவர் பார்கவா அந்த பெண்ணின் கையை முறுக்கி முகத்தை பிடித்துக் கொண்டிருப்பதை காணொளியில் பார்க்கலாம். தன்னை தாக்காமல் தன்னிடம் பேச சொன்ன அந்த பார்வையற்ற பெண்ணிடம் பார்கவா, “அடுத்த பிறவியிலும் பார்வையற்றவளாக ஆகிவிடுவாள்” என்று கூறுவதையும் கேட்க முடிந்தது. இந்த சம்பவம் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு காவல்துறை அதிகாரி அவர்களுக்கு அருகில் நின்று அவர்களை அமைதியாக இருக்கச் சொல்கிறார்.

அதே நேரத்தில் கட்டாய மதமாற்றம் நிகழ்ந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று போலீஸ் அதிகாரி கூறியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது ஆனால் இந்துத்துவ கும்பல் அரசு விடுதியில் இருந்த மாணவர்கள் எப்படி ஒரு மத இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்ற கேள்வி எழுப்பி போலீசில் புகார் அளித்துள்ளனர்.

குறிப்பாக, பாஜக ஆளும் மாநிலங்களில் அதிகார வர்க்கத்தின் துணையுடனே சிறுபான்மையினர் மீது இந்துத்துவ கும்பல் தாக்குதல் நடத்துகின்றன. தங்கள் கும்பல் தாக்குதலை நியாயப்படுத்த கட்டாய மதமாற்றம் நிகழ்வதாக கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகின்றன.

இஸ்லாமியர்கள் மீது ஆரம்பித்த தாக்குதல் தற்போது கிறிஸ்தவர்கள் மீதும் தொடர்கிறது. ஏற்கனவே மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடந்து கொண்டிருந்தாலும் பண்டிகை காலங்களில் அவர்களை குறி வைப்பது கிறிஸ்தவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மட்டுமல்லாமல் பாஜக ஆளும் மாநிலங்களில் கிறிஸ்தவர்கள் மிரட்டப்படுகிறார்கள். ஒடிசாவில் கிறிஸ்மஸ் பொம்மை உள்ளிட்ட பொருட்களை விற்கும் வியாபாரிகளிடம் பிரச்சனை செய்த மதவெறி கும்பல், “இது இந்து ராஸ்டிரம் எங்கு கிறிஸ்தவ பொருட்களை விற்கக் கூடாது” என மிரட்டுவதை வீடியோவாகவும் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றியுள்ளார்கள்.

“உத்திரபிரதேசம் ஷாஜகான்பூர் மதமாற்ற மையமாக மாறி வருகிறதா” என தமிழ்நாட்டுடன் தொடர்புபடுத்தி Opindia என்ற சங்பரிவார் இணையதளம் செய்தி வெளியிட்டு அங்கு மதப் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

கேரளாவின் பாலக்காட்டில் குழந்தைகள் கரோல் பாடகர் குழுவை, ஆர்எஸ்எஸ்காரர்கள் தாக்கியுள்ளனர் அஸ்வின்ராஜ் என்ற சங்கி இரண்டு குழந்தைகளை தாக்கியதோடு அந்த குழுவை பயமுறுத்தி அவர்கள் பயன்படுத்திய இசைக்கருவிகளை சேதப்படுத்தியுள்ளார்.

ராஜஸ்தானில் டிசம்பர் 14 அன்று, ஆர்.எஸ்.எஸ் (RSS) மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் புனித ஜோசப் கத்தோலிக்க ஆலயத்திற்குள் புகுந்து, கட்டாய மதமாற்றம் நடப்பதாகக் கூறி ஆராதனையைத் தடுத்து பாதிரியார்களுடன் மோதலில் ஈடுபட்டனர்.

படிக்க:

 மதமாற்றங்கள்: பெரும்பான்மை சிறுபான்மை ஆகிவிடுவார்களாம்! அப்படீங்களா ஜட்ஜ் ஐயா?

 பள்ளி சிறுவர்களுக்கு மதவெறியூட்டும் கர்நாடக பாஜக || பாபர் மசூதியை இடிப்பது போன்று ஒத்திகை

உத்தரகாண்டில் கங்கை கரையில் ஒரு ஹோட்டலில் திட்டமிடப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டது.

“புனித நகரத்தில்” இத்தகைய நிகழ்வுகள் மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததால் ரத்துசெய்யப்பட்டுள்ளது.

டெல்லியில் பொது இடத்தில் கிறிஸ்துமஸ் தாத்தா தொப்பி அணிந்திருந்த கிறிஸ்தவப் பெண்கள் மதமாற்றத்தில் ஈடுபடுவதாகக் கூறி பஜ்ரங் தள் அமைப்பினர் அவர்களை வெளியேற வற்புறுத்தினர்.

உத்திரபிரதேசத்தில் மதபோதகர் ராஜு சதாசிவம் மற்றும் அவரது மனைவி பொது இடத்தில் ஸ்ரீ சத்யநிஷ்ட் ஆர்யா என்பவரால் மத ரீதியாகத் துன்புறுத்தப்பட்டனர்.

சத்தீஸ்கரில் கிறிஸ்தவ நபர் ஒருவரின் அடக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த வன்முறையில், ஒரு கிறிஸ்தவரின் வீடு எரிக்கப்பட்டதுடன் தேவாலயங்களும் சேதப்படுத்தப்பட்டன.

2024 ஆம் ஆண்டில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் 834 நிகழ்ந்துள்ளது என ஐக்கிய கிறிஸ்தவ மன்றம் தெரிவித்துள்ளது 2023 உடன் ஒப்பிடுகையில் கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகிறது.

இந்தியா மதசார்பற்ற நாடு என்பதை இந்து மதவெறி ஆர்எஸ்எஸ் பாஜக கும்பல் ஏற்றுக்கொள்வதில்லை. அரசியல் அமைப்பு சட்டப்படி மதச்சார்பற்ற, சோசலிச என்ற வார்த்தைகளை அருவருப்பாக பார்க்கின்றன இந்துத்துவ கும்பல்.

மதச் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதலை இந்து மதவெறி அமைப்புகள் நிறுத்தப் போவதில்லை. இந்தியாவில் மதச்சிறுபான்மையினர் மட்டுமல்லாமல் பூர்வ குடிகளான பழங்குடி மக்கள், தலித்துகள் இந்தியாவின் ஆளும் வர்க்கத்தாலும் அதிகார வர்க்கத்தாலும் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள்.

மத உரிமை, கல்வி உரிமை, தொழிற்சங்க உரிமை என அனைத்தையும் பறித்து கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்து கொண்டிருக்கும் காவிப் பாசிச மதவெறி கும்பலை எதிர்த்து அனைவரும் ஓரணியில் திரண்டு போராடுவதன் மூலமே இப்பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும்.

  • நந்தன்

1 COMMENT

  1. கிறிஸ்மஸ் பிரார்த்தனை கூட்டங்களை குறிவைத்து தாக்கும் இந்துத்துவா மதவெறி பாசிச கும்பல் !

    கிறிஸ்மஸ் விழா உலகம் முழுவதும் கொண்டாடப்படும் இன்றைய தினத்தில் இந்தியாவில் கிறிஸ்மஸ் விழாவை மக்கள் கொண்டாடும் இன்றைய தினத்தில்
    பல இடங்களில் இந்து மத வெறி பாசிச கும்பல் ! கிறிஸ்தவர்கள் மதமாற்றம் செய்கிறார்கள் என்ற ஒரு பொய்யான காரணத்தை சொல்லி அவர்களை தாக்குவது கிறிஸ்மஸ் பொருட்களை சேதப்படுத்துவது வியாபாரிகளை அச்சுறுத்துவது போன்ற அராஜக அட்டூழியத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் ஊடகங்களில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது இதோடு மட்டுமில்லாமல் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பாஜக கும்பல் குறிப்பாக பசுந்தோல் போற்றிய புலியை போல கிறிஸ்த்துவ மக்களை குறிவைத்து தாக்குதல் நடத்துகிறது என்பதை ஆதாரப்பூர்வமாக கட்டுரையாக எழுதிய

    கட்டுரை ஆசிரியர்:
    தோழர்: நந்தன் அவர்களுக்கு நன்றி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here