
டிசம்பர் 5 ஆம் தேதி பீகாரின் நவாடா மாவட்டத்தில் துணி வியாபாரி முகமது அத்தார் உசேன், ஒரு கும்பலால் கொடூரமாக தாக்கப்பட்டு அவரது பணம் திருடப்பட்டது. பின்னர் அவரது காதுகள் மற்றும் விரல் நுனிகளை இடுக்கியால் வெட்டி, சூடான இரும்பினால் கொடூரமாக குத்தப்பட்டவர் டிசம்பர் 12 ஆம் தேதி இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் (கொல்லப்பட்டார்).
காவல்துறையினரின் கூற்றுப்படி, இதுவரை எட்டு பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் கேரளாவில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜக சார்பில் போட்டியிட்டு முஸ்லீம் வேட்பாளர் வெற்றிப்பெற்றதை பாஜக ஊடகங்கள் விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் முன்பே இந்த படுகொலை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கேரளா, வடகிழக்கு மாநிலங்களில் சிறுபான்மை பழங்குடி இன மக்கள் அதிகமாக இருப்பதால் ஆர்.எஸ்எஸ் – பாஜகவின் இந்துத்துவ அரசியல் அங்கு எடுபடாது. ஆகையால் அந்த மாநிலங்களில் மக்களை பிரித்தாள வேறு வழிமுறைகளை கையாள்கிறார்கள். அதன் காரணமாகவே கேரளாவில் இஸ்லாமிய பெண் பாஜக சார்பாக வெற்றிப் பெற்றதை கோடி மீடியாக்கள் விளம்பரப்படுத்துகின்றன.
அதே நேரத்தில் பீகாரில் நடந்த இஸ்லாமிய உழைப்பாளியின் மீது மதவெறியர்கள் நடத்திய கும்பல் படுகொலை பல ஊடகங்களில் வெளியாகாமல் மூடி மறைக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 5 ஆம் தேதி இரவு, ஐம்பது வயதான ஹுசைன், நவாடா மாவட்டத்தில் உள்ள பாருய் கிராமத்தில் உள்ள தனது வீட்டிற்கு வேலையை முடித்து திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் தனது பொருட்களை விற்கும் தனது மிதிவண்டி பழுதானதால், வண்டி பழுதுப் பார்க்கும் கடையை தேடிக் கொண்டிருந்தார். பட்டாபர் கிராமத்திற்கு அருகில் (ரோஹ் காவல் நிலைய எல்லைக்குள் வருகிறது) இருந்ததால், அருகிலுள்ள ஏதாவது பஞ்சர் பழுதுபார்க்கும் கடை இருக்கிறதா என ஹுசைன் ஒரு குழுவிடம் விசாரித்தார்.
அவர் உதவிக் கேட்டது மதவெறி கும்பல் என்று அறியாதவர் அந்த மிருகங்களிடம் சிக்கிக் கொண்டார். அவர்கள் அவரது பெயரையும் தொழிலையும் கேட்டு, பின்னர் அவரைத் தாக்கினர், காதுகளை அறுத்தனர், சூடான கம்பியால் அடித்தனர் என்று ஹுசைனின் சகோதரர் முகமது ஷாகிப் ஆலம் இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சம்பவத்திற்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஹூசைன் பேசிய வீடியோவில் தான் தாக்கப்பட்ட கொடூரத்தை விவரித்திருந்தார். தன்னைத் தாக்கியவர்கள் முதலில் தனது பெயரைக் கேட்டதாகவும், பின்னர் தனது சைக்கிளில் இருந்து இழுத்து பணத்தைக் கொள்ளையடித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். அந்தக் கும்பலில் 15-20 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது.
தாக்குதல் நடத்தியவர்கள் தனது கைகளையும் கால்களையும் கட்டி, ஒரு அறையில் அடைத்து வைத்து, தன்னை அடித்து உதைத்ததாக ஹுசைன் கூறினார்.
படிக்க:
♦ மாட்டுக்கறி பெயரில் முதியவரை தாக்கிய கும்பல்! சமூகமயமாகியுள்ள பாசிசத்தின் அறிகுறி!
♦ உத்திரப்பிரதேசம் சம்பல் பகுதியில் இஸ்லாமியர்கள் மீது நடத்தப்பட்டுள்ள கொலை வெறியாட்டம்!
“அவர்கள் என்னை செங்கற்கள் மற்றும் தடிகளால் அடித்து, என் விரல்களையும், கையையும் உடைத்தனர். அவர்கள் என் காதுகளையும் விரல் நுனிகளையும் கூட இடுக்கிகளால் (Cutting Plier) வெட்டினர்,” என்று ஹுசைன் கூறியதாக செய்தித்தாள் மேற்கோள் காட்டியது. அவரது மதத்தை உறுதி செய்ய அவரது ஆடைகளை கழற்றி, அந்தரங்க உறுப்பை சரிபார்த்துள்ளனர்.
அவரது உடலில் ஒரு சூடான இரும்பு கம்பியால் குத்தியதாகவும், அது “அவரது தோலை உரித்துவிட்டது” என்றும் அவர் குற்றம் சாட்டினார். ஒரு மதவெறியன் அவரது மார்பில் ஏறி அவரை நெரித்ததால், என் வாயிலிருந்து இரத்தம் வழிந்தது என்று ஹுசைன் கூறினார்.
அதிகாலை 2.30 மணியளவில் அவசரகால 112 அழைப்பு மூலம் ரோஹ் போலீசார் கிராமத்திற்கு வந்ததாக காவல்துறை தகவலை மேற்கோள் காட்டி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. படுகாயமடைந்த ஹுசைனை போலீசார் மீட்டு, சில சந்தேகத்திற்குரிய நபர்களுடன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
போலீசார் ஹுசைனை ரோஹ் ஆரம்ப சுகாதார மையத்திற்கு (PHC) அழைத்துச் சென்றனர், பின்னர் அவர்கள் அவரை நவாடா சதார் மருத்துவமனையிலும், இறுதியாக பவாபுரியில் உள்ள VIMS-க்கும் பரிந்துரைத்தனர். டிசம்பர் 13 ஆம் தேதி இரவு அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மதவெறியர்களின் கொடூர தாக்குதலால் கொல்லப்பட்டுள்ளார்.
ஹுசைன் தாக்கப்பட்ட பொழுது அவரது மனைவி பர்வீன் தனது மைத்துனர்களுடன் பட்டப்பரை அடைந்தபோது, கிராமவாசிகள் அவர்களையும் “துஷ்பிரயோகம் செய்து மிரட்டினர்” என்றும் குற்றம் சாட்டினார்.
“அவர் குடும்பத்தின் வருமானம் ஈட்டும் ஒரே நபர். கடந்த 20 ஆண்டுகளாக அவர் இந்தத் தொழிலில் ஈடுபட்டு வந்தார், ஆனால் அவர் எந்தப் பிரச்சினையையும் சந்திக்கவில்லை. என்ன தவறு நடந்தது, ஏன் அவர் குறிவைக்கப்பட்டார் என்பது காவல்துறையினரால் விசாரிக்கப்பட உள்ளது,” என்று பர்வீன் கூறியதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் மீது, FIR பிரிவுகள் 190, 191(2) மற்றும் 191(3) (சட்டவிரோதமாக ஒன்றுகூடுதல் மற்றும் கலவரம் செய்தல்), 126(2), 115(2), 117 மற்றும் 118 (கடுமையான காயம் மற்றும் ஆபத்தான வழிகளைப் பயன்படுத்துதல்), 109 மற்றும் 74 (துன்புறுத்தல் மற்றும் பொதுவான நோக்கம்), மற்றும் பாரதிய நியாய சன்ஹிதாவின் 303(2) ஆகிய பிரிவுகளைப் பயன்படுத்தி, ஹுசைன் இறந்த பிறகு கொலைக் குற்றச்சாட்டுகள் சேர்க்கப்பட்டன.
இந்தியாவில் கும்பல் படுகொலை நடப்பது முதல்முறை அல்ல. மதவெறியர்களால் பாஜக ஆளும் மாநிலங்களில் நடந்து வந்த கும்பல் படுகொலை தற்போது பாஜக கூட்டணி ஆளும் பீகாரிலும் தொடங்கிவிட்டது. இதனை உணராத மக்கள் தான் பாஜக கூட்டணியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தியுள்ளார்கள்.
இதனை சாதரணமாக திருட்டுக்காக நடந்த படுகொலை என்று கடந்துவிட முடியாது. இது சங்பரிவார் கும்பல் பாணியில் நடந்துள்ள கும்பல் படுகொலை. நீதிமன்றங்களில் நீதிக்காக போராடுவதன் மூலம் கும்பல் கொலைகளை தடுத்துவிட முடியாது.
மாறாக கும்பல் படுகொலைக்கு எதிராக ஒன்றிணைந்த மக்கள் போராட்டத்தின் மூலமும், புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் ஐக்கியத்தின் மூலமும் பாசிஸ்டுகளை இம்மண்ணில் இருந்து வேரறுப்போம்!
- நந்தன்






