தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தத்தில் கடந்த 10 ஆம் தேதி அன்று பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த மாணவியின் கொலைக்குக் காரணமான கொலையாளியைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் கிராம மக்களும் பல்வேறு அமைப்புகளும் கட்சியினரும் மறியல் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து இந்த வழக்கை விசாரிப்பதற்கு என்று 10 தனிப் படைகளை அமைத்து தேடுதல் வேட்டை நடத்தியது காவல்துறை.
இப்படி தேடியதில் பத்து நாளைக்குப் பிறகு கொலைகாரனைக் காவல்துறை கண்டறிந்துள்ளது. இந்தக் கொலையைச் செய்த தர்ம முனீஸ்வரன் என்பவன் டூவீலர் திருடுவது, பெண்களிடம் நகை பறிப்பது, பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவது போன்ற வேலைகளை வழக்கமாக செய்து வந்த மிருகம். மேலும் இந்த மிருகம் சில பெண்களை பாலியல் ரீதியாக சித்தரவதை செய்துவிட்டு அவர்களை கொலையும் செய்திருக்கிறான். இந்த மிருகத்தின் மீது ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 32 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவன் ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி என்பது மிக மிக குறிப்பிடத்தக்கது.
இந்த தர்ம முனீஸ்வரன் கடந்த 2020 ஆம் ஆண்டு 65 வயது மூதாட்டியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்துவிட்டு அவரது நகைகளை எடுத்துச் சென்றிக்கிறான். இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டு இவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து கடந்த டிசம்பர் 18ஆம் தேதி அன்று ஜாமீன் பெற்று சுதந்திரமாக சுற்றித் திரிந்து கொண்டு இருந்திருக்கிறான். இந்த நிலையில்தான் தனியாக வந்த பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவியை பாலியல் வல்லுறவு செய்து கொலை செய்திருக்கிறான்.
சரித்திர பதிவேடு குற்றவாளியான தர்ம முனீஸ்வரன் ஏற்கனவே பாலியல் வல்லுறவு மற்றும் கொலையில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அவனை ஜாமீனில் வெளியில் விட்டதுதான் இந்த மாணவியின் கொலைக்கு முதன்மையான காரணமாக அமைந்துள்ளது.
மேலும் இவன் மீது 32 வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது நீதித்துறையின் தோல்வியையே காட்டுகிறது. வழக்கை விரைந்து விசாரித்து ஆதாரங்களின் அடிப்படையில் வழக்கை நடத்தி குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற வகையில் இங்கு நீதித்துறையின் செயல்பாடு இல்லை என்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஒரு வழக்கை, வழக்கில் சம்பந்தப்பட்டவரின் பணபலம் மற்றும் ஆள்பலத்திற்கு ஏற்ப, எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் இழுத்துக் கொண்டே இருக்கலாம் என்ற நிலைதான் இப்பொழுது இந்திய நீதித்துறையில் இருக்கிறது.
குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருப்பது என்பது அந்த குற்றவாளியை அருகில் இருந்து பார்க்கும் அல்லது அந்த குற்றவாளிகளுடன் பழகிக் கொண்டிருக்கும் கிரிமினல் புத்தி கொண்ட பிறருக்கு இம்மாதிரியான குற்றச் செயல்களில் ஈடுபடுவது குறித்து ஒரு தைரியத்தை கொடுக்கும் என்பது மறுக்க முடியாத உண்மை.
இந்த வகையில் வழக்குகளை உரிய நேரத்தில், நியாயமான முறையில் விசாரித்து தீர்ப்பை வழங்காத நீதித்துறையின் செயல்பாடும் இந்தியாவில் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.
ஒரு சிறிய உதாரணத்தைப் பார்ப்போம். இந்திய பாராளுமன்றத்தின் மாநிலங்களவையில் மொத்தம் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 233. இதில் 33% பேர், அதாவது 73 உறுப்பினர்கள் மீது கிரிமினல் குற்ற வழக்குகள் உள்ளன. இவர்கள் கொலை, கொலை முயற்சி, பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டது போன்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள்.
படிக்க:
♦ பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் ஒழிக்கப்படுவது எப்போது? எங்கிருந்து தொடங்குவது?
♦ மோடியின் ‘இராம ராஜ்ஜியத்தில்’ பாலியல் பொறுக்கிகள் செங்கார்களுக்கு கொண்டாட்டமே!
பாராளுமன்றத்தின் மக்களவையில் உள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 534. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டில் தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது பதவியில் உள்ள உறுப்பினர்களில் 251 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர்களில் 27 பேர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்கள்.
அதேபோல 2019-ல் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 233 பேர் மீதும் 2014ல் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 185 பேர் மீதும் 2009ல் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில்162 பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் இருந்தன.
இந்த வழக்குகள் விசாரணையில் இருக்கும் நிலையிலேயே இவர்களால் பாராளுமன்ற உறுப்பினர்களாகி அரசின் சன்மானங்களை பொறுக்கி தின்ன முடிகிறது. இதற்கு வழக்குகளை விரைந்து விசாரித்து தீர்ப்பு சொல்லாத நமது நாட்டு நீதித்துறையின் தோல்வியே காரணமாக உள்ளது.
தற்போது இந்தியாவில் சுமார் 3.5 கோடி கிரிமினல் வழக்குகளும் 1.5 கோடி சிவில் வழக்குகளும் விசாரித்து தீர்ப்பு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளன. இதில் விசாரணையில் உள்ள கிரிமினல் வழக்குகளில் தண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளிகள் எத்தனை கோடிப் பேர் சுதந்திரமாக நாட்டுக்குள் உலாவிக் கொண்டிருப்பார்கள் என்பதையும் அவர்கள் எப்படிப்பட்ட கிரிமினல் தனங்களில் மீண்டும் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள்; அந்தக் கிரிமினல் புத்தியை மற்றவர்களுக்கு எப்படி எல்லாம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருப்பார்கள் என்பதை நினைக்கும் பொழுது நெஞ்சம் கணக்கிறது.
இந்த நிலை மாற வேண்டுமெனில் நீதிமன்றத்தின் வழக்கு நடைமுறைகள் நியாயமான முறையில் மாற்றி அமைக்கப்பட வேண்டும். மிக முக்கியமாக நீதிபதிகள் உட்பட நீதித்துறை காவல்துறை சார்ந்த நபர்களின் செயல்பாடுகள் மக்களின் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்படும் வகையில் சட்டங்கள் மாற்றப்பட வேண்டும்.
– குமரன்






