கிரீஸ் முதல் இலங்கை வரை:
மறுகாலனியாக்கம் கொண்டு வரும் – மரணப் பொருளாதாரம்!
நமது அண்டை நாடான இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. அன்றாட உணவுக்கான அரிசி ஒரு கிலோ ரூ.450, பால் லிட்டர் ரூ.75, முட்டை ஒன்றுக்கு ரூ.36, பால், தேநீர் ரூ.100, உளுந்து வடை ரூ.80, சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.4200, ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் என உயர்ந்துள்ளது. கடும் விலை உயர்வு காரணமாக 90% ஹோட்டல்கள் மூடப்பட்டு விட்டன. சென்ற வாரத்துடன் ஒப்பிடும் போது 40 முதல் 50 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ளதாகக் கூறும் வணிகர்கள், அடுத்தடுத்த நாட்களில் இன்னும் கடுமையாக உயரும் என அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.
உணவுப் பொருட்களின் கடும் தட்டுப்பாட்டால், மக்கள் வரிசையில் நின்று பொருட்களை வாங்கிச் செல்கின்றனர். உள்நாட்டுக்கலகம் வெடிக்கும் அபாயம் உள்ள நிலையில் துப்பாக்கி ஏந்திய இராணுவத்தின் மேற்பார்வையில் ரேசன் முறையில் பொருட்கள் விநியோகிக்கப் படுகிறது.
இந்த கோர நிகழ்வுக்கு என்ன காரணம் என்பதை பல்வேறு பொருளாதார நிபுணர்கள் விளக்கிக் கொண்டிருந்தாலும், இதற்கான காரணத்தைக் கண்டறிந்து, தீர்வைத் தேடுவதில் சரியான வழியைச் சொல்லத் தவறுகிறார்கள்.
1970 களுக்குப் பிறகு உலகை புதிய வடிவில் சுரண்டவும், சூறையாடவும் கொண்டு வரப்பட்ட தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற புதிய தாராளவாதக் கொள்கைகள் காலனி, அரைக்காலனி நாடுகளை மறுகாலனியாக்கத் துவங்கியது. ஆசிய, ஆப்பிரிக்க, லத்தின் அமெரிக்க நாடுகள் மறுகாலனியாக்க பொருளாதாரக் கொள்கைகளுக்கு பலியாகத் துவங்கியது.
இதன் ஒரு பகுதியாக இலங்கையும் மறுகாலனிய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. உள்நாட்டில் நிலவிய சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையின் காரணமாக தனி ஈழத்திற்கான விடுதலைப் போராட்டம் முன்னுக்கு வந்து உள்நாட்டு போர் நடந்தது. இந்த இன அழிப்புப்போருக்கான விலையாகவும், இன அழிப்பை ஏகாதிபத்தியங்கள் எதிர்க்காமல் ஆதரிக்க வேண்டும் என்பதற்காகவும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் ஆதரவைப்பெற வேண்டி பல அடிமைத்தனமான கொள்கைகளை ஏற்றுக்கொண்டது. 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வரை நாட்டில் ஏகாதிபத்திய எதிர்ப்பு சுயசார்பு பொருளாதாரக் கொள்கை எதுவும் முன் வைக்கப்படவோ, கடைபிடிக்கப்படவோ இல்லை.உள்நாட்டுப்போர் முடிவுக்கு வந்த பின்னும் சர்வதேச விசாரணையை எதிர்கொள்வதில் ஏகாதிபத்தியங்களும் இந்தியாவும் தம்மை ஆதரிக்க வேண்டும் என்பதற்காக பல அடிமைச்சாசனங்களை இலங்கை ஏற்றுக்கொண்டது. அதன் விளைவுகளை அந்த நாடும் மக்களும் இன்று சந்திக்கின்றனர்.
அத்துடன் இலங்கையைப் பொறுத்தவரை, மூன்று டி எனப்படும் ஆடை உற்பத்தி, தேயிலை மற்றும் சுற்றுலா (Textile, Tea & Tourism) ஆகிய மூன்று துறைகள் மூலம் ஈட்டப்படும் பொருளாதாரமே, அந்நாட்டின் முக்கியமான மற்றும் முதுகெலும்பான வருவாயாக உள்ளது. இதில் ஆடை மற்றும் தேயிலை உற்பத்தி ஆகியன ஏற்றுமதி சார்ந்தும், சுற்றுலா வெளிநாட்டுப் பயணிகளைச் சார்ந்தும் உள்ளது.
இந்த மூன்று துறைகளின் வருவாய் மூலம் ஈட்டப்படும் அந்நிய செலாவணி மூலம், இலங்கையின் அத்தியாவசியப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. மொத்தத்தில், இலங்கையின் வருவாயும், மக்களின் வாழ்வும் பிற நாடுகளைச் சார்ந்தே உள்ளது.
உலகளாவிய அளவில் ஏற்பட்ட கொரோனா பொது முடக்கத்தால், சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு, ஆடை மற்றும் தேயிலை ஏற்றுமதிக்கு தடை ஏற்பட்டதுடன், வெளிநாட்டுப் பயணிகளின் வருகையும் இல்லாமல் போனது. அதனால், முக்கிய துறைகளின் ஏற்றுமதி நிறுத்தப்பட்டதுடன், உற்பத்தியும் நின்று போனது.
கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதாரம் திவால் நிலைக்கு சென்றுள்ளது. இலங்கையின் வெளிநாட்டுக்கடன் சுமார் 51 பில்லியன் டாலர்களாகும். இந்த ஆண்டு மட்டும் திருப்பித் தர வேண்டிய உள்நாட்டு, வெளிநாட்டு கடன் தொகை 7 பில்லியன் டாலராகும். இதில் வெறும் 2.3 பில்லியன் டாலர்தான் அந்நிய செலாவணி கையிருப்பு உள்ளதாக மதிப்பிடப்படுகிறது. அந்த அளவுக்குபொருளாதாரம் திவாலாகி விட்டது.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே, இலங்கையின் அந்நிய செலாவணி கையிருப்பு படிப்படியாகக் குறைந்து இன்று, கடனுக்கு வட்டி கட்டவே கடன் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பைச் சரி கட்ட, அமெரிக்க டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு படிப்படியாகக் குறைக்கப்பட்டு இன்று ஒரு டாலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு 280 ரூபாய் என்ற அளவில் அதல பாதாளத்திற்குச் சென்று விட்டது. இதன் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலை, இதுவரையிலும் இல்லாத அளவிற்கு வாரந்தோறும் பல மடங்கு உயர்ந்து வருகிறது.
மின் உற்பத்தி நிலையங்கள் டீசலில் இயங்குவதால், டீசல் இறக்குமதி நின்று போய் நாடே இருளில் தத்தளிக்கிறது. நீண்ட நெடிய மின்வெட்டுகள் அன்றாட வாடிக்கையாகி விட்டது. மருத்துவமனைகள் செயல்படவில்லை. மருந்துகளும் போதிய இருப்பு இல்லை. பெட்ரோல், டீசல் இல்லாததால், போக்குவரத்து முடங்கி விட்டது. அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாடு தீவிரமாகி வருவதால், மக்கள் உண்ண உணவின்றி கொதிநிலையில் உள்ளனர். அதனால், உணவுக் கலகம் வரலாம் என்பதால், அத்தியாவசிய பொருட்களுக்கான விநியோகம் இலங்கை ராணுவத்தின் நேரடி கண்காணிப்பில் நடக்கிறது.
நாட்டின் முக்கிய பொருளாதாரத் தூண்களாக விளங்கி வரும் ஆடை உற்பத்தி, தேயிலை உற்பத்தி ஏற்றுமதிக்கான வாய்ப்பின்றி நிறுத்தப்பட்டுள்ளதால், தொழிலாளர்கள் வேலை இழப்புக்களுக்கு ஆளாகி வருவதுடன், சம்பள வெட்டு போன்ற பிரச்சினைகளையும் எதிர்கொண்டுள்ளனர். தங்களது வேலை மற்றும் சம்பளத்திற்காகப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். காகித இறக்குமதி நிறுத்தப்பட்டதால், காகிதப் பற்றாக்குறை ஏற்பட்டு மாணவர்களின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் 30 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இது முழு ஆண்டுத் தேர்வு என்பதால் தங்களது ஒரு ஆண்டு உழைப்பு வீணாகி விடும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
இப்படிப்பட்ட கடும் சூழலிலும் சென்ற ஆண்டுக்கான இலங்கையின் நிதி ஒதுக்கீட்டில் ராணுவத்துக்கு 20,000 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு அவசியமான கல்வி, சுகாதாரம் போன்றவற்றுக்கு குறைவான தொகையே ஒதுக்கியுள்ளது. 1970-களின் இறுதியில் திறந்த நிலை பொருளாதாரக் கொள்கைகள் என்ற பெயரில், சில அத்தியாவசியப் பொருட்களைத் தவிர, மற்ற பெரும்பான்மையான பொருட்களுக்கு அரசாங்க விலை நிர்ணயக் கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்பட்டதைத் தொடர்ந்து, தனியார் முதலாளிகள் கொள்ளையடிப்பதை உறுதி செய்தது. தற்போதைய இந்த நெருக்கடியான சூழலில், ஏற்கனவே அரசின் விலை நிர்ணயக் கட்டுப்பாட்டில் இருந்த அரிசி, பருப்பு, பால்மாவு உள்ளிட்ட மிகவும் அத்தியாவசியமான பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளும் நீக்கப்பட்டதால், இன்று விலை உயர்வு கட்டுக்கடங்காமல் அதிகரித்த வண்ணம் உள்ளது.
எந்தவொரு நெருக்கடியையும் முதலாளித்துவம் தனது லாப நோக்கத்திற்காகவே பயன்படுத்தும் என்பது இலங்கையில் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது. இலங்கைக்கு நிரந்தர வருமானம் இல்லாததால், அந்நிய செலாவணி கையிருப்பிலிருந்து மக்களுக்கான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகிறது. எனவே கையிருப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. தற்போதைய இந்த நெருக்கடிக்கு ஏற்றுமதி சார்ந்த வருவாயை மட்டுமே நம்பி இருக்கும் வகையிலான பொருளாதாரத்தைக் கட்டியமைத்ததும், ஏகாதிபத்தியங்களுக்கு சேவை செய்யும் வகையில் வடிவமைத்ததும்தான் முக்கிய காரணமாகும்.
இந்த நெருக்கடியைச் சரிகட்ட மீண்டும் சீனா போன்ற ஏகாதிபத்தியங்களிடமும், இந்தியா போன்ற அண்டை நாடுகளிடமும் கடன் வாங்குவது என மீண்டும் அதே விஷச் சூழலில் நாட்டை தள்ளிக் கொண்டு போகிறது ராஜபக்சே கும்பல். இதன் ஒரு பகுதியாக கடந்த வாரத்தில் 7500 கோடி கடனுதவி அளிப்பதாக மோடி அறிவித்தார்.
இலங்கையின் இன்றைய நெருக்கடிகளுக்கு உதவுவதற்காக எந்தவொரு நாடும் கடன் தராது. மாறாக, அந்த நெருக்கடியைப் பயன்படுத்தி அந்த நாட்டில் தனது மேலாதிக்க நடவடிக்கைகளை நிறுவுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தவே கடன் தருகிறது. ஏற்கனவே கொழும்பு துறைமுக நகரம் அமைப்பது, அம்பந்தோட்டையில் துறைமுகம் அமைப்பது போன்ற நடவடிக்கைகளுக்கு சீனா, பல நூறு மில்லியன் டாலர்களை மூலதனமாகக் கொடுத்துள்ளது.
கடனுக்காகவும், கடனுக்கான வட்டிக்காகவும் அம்பந்தோட்டை துறைமுகப் பகுதியையும் சுற்றியுள்ள 15000 ஏக்கர் நிலத்தையும் 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்டுள்ளது இலங்கை அரசு. கொழும்பின் கடல் பகுதியில் 660 ஏக்கர் நிலத்தை தரையாக்கி, பெரும் நகரை நிர்மாணிப்பதுதான் துறைமுக நகரத் திட்டம். இது இலங்கையின் கனவுத் திட்டம் எனவும், இதனால் சுற்றுலாத் துறை மேம்பாடு அடைந்து அந்நிய செலாவணி வரத்து அதிகரிக்கும் எனவும் கூறுகிறது இலங்கை அரசு. ஆனால் சீனாவோ, துறைமுகங்களைக் கைப்பற்றுவதன் மூலம் இந்துமாக் கடலில், தனது பொருளாதார மற்றும் இராணுவ நடவடிக்கைகளுக்கான வழித்தடமாகவும் தனது மேலாதிக்க நோக்கங்களுக்காகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஏற்கெனவே, இலங்கையின் கடல் வளத்தையும் மீன்பிடித்தொழிலையும், கடல் அட்டை (sea cucumber) வளர்ப்பு மூலம் சீன கார்ப்பரேட்டுகள் சூறையாட தாரள அனுமதி வழங்கியுள்ள இலங்கை அரசு, தற்போது துறைமுகங்களையும் தாரைவார்த்துள்ளது.
அதே போல் சீனாவுக்குப் போட்டியாக, அமெரிக்க மேல்நிலை வல்லரசு, இலங்கையில் காலூன்ற தனது விசுவாசிகளான முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, அதிபர் மைத்ரிபால சிறிசேனா மூலம் முயன்றது. வரிச்சலுகைள் அளித்து தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயன்றது. ஜப்பான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சரக்கு பெட்டக முனையங்களை அமைக்க முயன்றது. ஆனால், சீன ஆதரவு ராஜபக்சே ஆட்சி மாறியதால், அந்தத் திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டன.
தற்போதைய நெருக்கடியை தீர்க்க, அமெரிக்க சார்பு, சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐ.எம்.எஃப்) கடன் பெற வழிகாட்டியது ரணில் கும்பல். முதலில் மறுத்து வந்த ராஜபக்சே கும்பல், அன்றாடம் நெருக்கடிகள் முற்றி வரும் நிலையில் தற்போது ஐ.எம்.எஃப் – யிடம் கடன் வாங்கத் தீர்மானித்து விட்டது. ஏற்கனவே ஐ.எம்.எஃப்-ன் கடன் திருப்பிச் செலுத்தும் விதிமுறைகள் அரசியல் சார்ந்ததாக இருப்பதாக, அதாவது அரசியல் ரீதியான தலையீடுகள் கொண்டிருக்குமென்று சொல்லி அக்கடனை நிராகரித்து வந்த ராஜபக்சே அரசு, இன்று இலவச மற்றும் குறைந்த விலை சமூக நலத் திட்டங்களுக்கான ஒதுக்கீடுகளைக் குறைப்பது, வருவாய் பெருக்கம், செலவு குறைப்பு – சிக்கன நடவடிக்கைகள் என்ற பெயரில் பல்வேறு வரி விதிப்புக்கள், மானிய வெட்டுக்களை மக்கள் மீது சுமத்த தயாராகி விட்டது.
அதே சமயம், மக்கள் தங்களது உணவு தேவைகளுக்காக தாங்களே வீட்டுத் தோட்டத்தின் மூலம் பயிர் செய்து உணவு நெருக்கடியை சமாளிக்குமாறு அறிவுறுத்துகிறது. ஆனால், அந்த நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு மீண்டும் கடன் வாங்குவது என்று சீனா, இந்தியா போன்ற அண்டை நாடுகளிடமும் சர்வதேச நாணய நிதியத்திடமும் கையேந்தி நிற்கிறது.
புவிசார் அரசியலில் மிகுந்த போர் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியான இந்துமாக் கடலில் இலங்கை அமைந்துள்ளதால், இலங்கையின் மீதான தனது ஆதிக்கத்தின் மூலம் இந்துமாக் கடல் பரப்பை தங்களது மேலாதிக்க நோக்கத்திற்குப் பயன்படுத்த முடியும் என்பதால், அமெரிக்க சீன வல்லரசுகள் இலங்கைக்கு கடன் கொடுத்து கபளீகரம் செய்யக் காத்திருக்கின்றன. அதற்கான நல்வாய்ப்பாக இலங்கையின் இப்போதைய நெருக்கடியைப் பயன்படுத்திக் கொள்வதில் முனைப்புடன் செயல்படுகின்றன. இதில் இந்தியாவும் தன் பங்குக்கு கடன் கொடுத்து தாஜா செய்வதன் மூலம் இந்திய தேசங்கடந்த தரகு முதலாளிகள் இலங்கையில் போட்டுள்ள மூலதனத்தையும் எதிர்கால கார்ப்பரேட் நலன்களையும் பாதுகாக்கத் துடிக்கிறது.
ஈழப்போர் முடிவுக்கு வந்த 2009-க்குப் பிறகு, பல்வேறு ஏகாதிபத்தியங்கள் சுரண்டுவதற்கான பின் நிலமாக இலங்கையை மாற்றியமைத்தார் ராஜபக்சே. மறுகாலனியாக்கப் பொருளாதாரத்தின் விளைவால் மெல்ல மெல்ல கடனில் சிக்கியது நாடு. நாடு தனக்கான இறையாண்மையைக் காத்துக் கொள்ளும் வகையிலான சுய சார்புப் பொருளாதாரத்தைக் கட்டியமைக்காமல், உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட்டுக்களைக் கொழுக்க வைப்பதற்கு ஏதுவான பொருளாதார நடவடிக்கைகளை, ஏகாதிபத்தியங்களைச் சார்ந்த பொருளாதார நடவடிக்கையை பின்பற்றியது அந்நாட்டின் ஆளும் கும்பல்.
இலங்கை பின்பற்றும் அதே பொருளாதாரம்தான் இந்தியாவும் பின்பற்றி வருகிறது. மக்கள் சொத்தாக இருந்த பொதுத்துறைகள், மின்சாரம், கல்வி, சுகாதாரம் என ஒவ்வொன்றும் தனியார் முதலாளிகளின் ஏகபோகமாக மாற்றப்பட்டு வருகிறது. நேற்று கிரீஸில் நடந்தது இன்று இலங்கையில் நடக்கிறது. நாளை நமது நாட்டிற்கும் அந்த நிலை வராது என்பதற்கு எந்த உத்திரவாதமும் கிடையாது. பக்கத்து வீட்டில் நெருப்பு பற்றி எரியும் போது, நமது வீட்டுக் கூரையில் தண்ணீர் ஊற்றி நெருப்பு பரவாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வதைப் போல், நாம் வருமுன் காத்துக் கொள்ள வேண்டும்.
அனுமன் எனும் குரங்கின் வாலில் தீயை வைத்ததால், அந்தக் குரங்கு சென்ற இடமெல்லாம் தீப்பிடித்து எரிந்தது என இலங்கையைப் பற்றி, இராமாயணம் எனும் புராணக் கதையில் சொல்லக் கேள்விப்பட்டிருப்போம்.
அமெரிக்கா எனும் குரங்கு, தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்க தீயைக் கொண்டு சென்ற கிரீஸ் முதல் இலங்கை வரையிலான நாடுகளெல்லாம் திவாலாகி நிற்கிறது. அந்நாட்டு மக்களின் வாழ்வு தீயில் வெந்த ரணமாக கருகிப் போயுள்ளது.
தற்போதைய சூழலில் இலங்கை மக்கள் தமிழர் – சிங்களர் என பிரிந்து கிடக்காமல் வர்க்க ரீதியாக ஒன்றிணைந்து பொது எதிரிகளான அமெரிக்க, சீனா, இந்தியா போன்ற நாட்டு அரசுகளுக்கு எதிராகவும் உள்நாட்டில் இராணுவ பாசிச சர்வாதிகாரியாக வளர்ந்து வரும் ராஜபட்சே கும்பலுக்கு எதிராகவும் போராட வேண்டும். மக்கள் நலன் காக்கும் கொள்கைகளை உயர்த்திப் பிடிக்கும் புதிய ஜனநாயக அரசை நிறுவுவதை நோக்கி முன்னேற வேண்டும்.
அண்டைநாடு என்ற முறையிலும் ஒடுக்கும் தேசத்தை சேர்ந்த பாட்டாளி வர்க்கம் என்ற முறையிலும் நாம் இலங்கை மக்களுக்கு உதவ வேண்டும். பிராந்திய துணை வல்லரசாகும் கனவுடன், தெற்காசியாவில் தனது மேலாதிக்கத்தை நிறுவ முயலும் ஆக்ரமிப்பு தன்மை கொண்ட இந்திய ஒன்றிய அரசுக்கு எதிரான போராட்டங்களைக் கட்டியமைப்பதும் அவசியம்.
- தயாளன்
அது என்ன மறுகாலனியம்? தோழர் மாவோ புதிய காலனியம் கேள்விப்பட்டுள்ளோம் இதற்கான விளக்கம் தர முடியுமா தோழமைகளே?