டிசம்பர் 2 ஆம் தேதி பெஞ்சால் புயலின் காரணமாக அதீத மழை பெய்ததாலும் சாத்தனூர் அணை முறையான முன்னறிவிப்பின்றி திறந்து விடப்பட்டதாலும் சாத்தனூர் அணைக்கு கிழக்கே தென்பெண்ணையாறு மற்றும் மலட்டாறு பாயக்கூடிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது.
இந்த வெள்ளத்தின் காரணமாக திருவெண்ணெய்நல்லூர் வட்டம் காரப்பட்டு, இருவேல்பட்டு உள்ளிட்ட பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளன. அந்த பகுதிகளில் உள்ள கிராம சாலைகள் பல இடங்களில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு சில இடங்கள் தொடர்பற்ற தனித்தீவாக மாறியுள்ளது. காரப்பட்டில் உள்ள சிறிய பாலமும் வெள்ளத்தில் உடைந்து விழுந்துள்ளது.
02 டிசம்பர் அதிகாலை 2 மணிக்கு சாத்தனூர் அணையில் 1 லட்சத்து 30 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. திறந்து விடப்பட தண்ணீர் அரசூர், காரப்பட்டு பகுதியை அடைய காலை 10 மணிக்கு மேல் ஆனது அதுவரை அதாவது 8 மணி நேரம் இடைவெளி இருந்தும், அந்த ஊருக்கு அருகாமையில் தான் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் இருந்தும் கிராமங்களுக்கு அறிவிப்பு கொடுக்கப்படவில்லை. வெள்ளத்தில் சிக்கியவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வீட்டின் மேல் பகுதிக்கு சென்றதால் தற்காத்துக் கொள்ள முடிந்தது. இல்லையென்றால் உயிர் சேதங்கள் ஏற்பட்டிருக்கும். ஆனால் உடைமைகளும் ஆடு, மாடு, கோழி போன்ற கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்வதை காப்பாற்ற முடியவில்லை என்கிறார்கள் மக்கள்.
வெள்ள சேதத்தை பார்வையிட வரும் அதிகாரிகள் திருச்சி – விழுப்புரம் பைபாஸ் சாலை அருகேயே பார்வையிட்டுவிட்டு சென்று விடுவதாக குற்றஞ்சாட்டி காரப்பட்டு மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன் பின்னரே வெள்ளம் பாதிக்கப்பட்ட காரப்பட்டு கிராமத்திற்குள் வந்து பார்வையிட்டு சென்றுள்ளார் கலெக்டர்.
காரப்பட்டு பகுதியில் வெள்ளம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது மக்கள் அதிகாரம் ஊடகக்குழு நேரில் சென்று பார்க்கையில் தெரிந்துக் கொள்ள முடிந்தது. வெள்ளத்தினால் உடைமைகள் இழந்து கிராம மக்கள் தவித்து வருகின்றனர். அரசின் நேரடி உதவி இதுவரை கிடைக்கவில்லை. தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், இளைஞர்களும், சில அமைப்புகளும் செய்யும் உதவிகளை கொண்டே மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
விவசாய நிலங்கள் ஆறு போல மணல்களால் மூடப்பட்டுள்ளது. இரண்டு மூன்று அடி உயரத்திற்கு நிலக்கடலை, மரவள்ளி பயிரிடப்பட்ட நிலங்கள் மணல்களால் மூடப்பட்டுள்ளன. லட்சக்கணக்கில் செலவிடப்பட்ட விவசாய நிலங்கள் பாழ்பட்டு போயுள்ளன. 50 வருடங்களாக பண்படுத்திய நிலங்கள் தான் அந்த விவசாயிகளுக்கு வாழ்வாதாரமாய் இருந்தது. இன்று அதனை பறித்துள்ளது இந்த ‘திடீர்’ வெள்ளம்.
இது பற்றி காரப்பட்டு விவசாயி பேசுகையில் “நீங்கள் பார்க்கும் இந்த ஆறு போல் தெரியலாம். ஆனால் இது ஆறு இல்லை. மல்லாட்டை பயிர் வைத்த வைத்த விவசாய நிலம். 2 அடிக்கு மேல் மணல் மூடியுள்ளது. எங்களது உழைப்பை சேர்க்காமல் 2 லட்ச ரூபாய்க்கு மேல் செலவிட்டுள்ளேன். எல்லாம் ஒன்றும் இல்லாமல் போய் விட்டது. அரசு தான் ஏதாவது செய்ய வேண்டும்” என்றார்.
சில வீடுகள் முற்றிலும் இடிந்த நிலையிலும், வீட்டின் அடிப்பகுதி அரித்து செல்லப்பட்டு தொங்கிக் கொண்டிருக்கும் நிலையில் சில வீடுகளும் உள்ளன. வாழ்வதற்கு தகுதியற்ற நிலையில் இந்த வீடுகள் உள்ளது. இதற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டிய அரசு அதிகாரிகள் பார்வையிட்ட போது இடிந்த் நிலையில் உள்ள வீடுகளுக்கே இழப்பீடு என கூறியதாக மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். பட்டா இல்லாத பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு வீடுகள் இடிந்திருந்தாலும் இழப்பீடு இல்லை என்கிறார்களாம் அரசு அதிகாரிகள்.
வீட்டை இழந்த காரப்பட்டு கிராமத்தை சேர்ந்த பெண் ஒருவர் கூறுகையில் “எந்த முன் அறிவிப்பும் கொடுக்காததால் வெள்ளம் வந்த பிறகே ஆபத்தை உணர்ந்தோம். எங்கள் கிராமத்தில் உள்ள இளைஞர்கள் இல்லை என்றால் நாங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருப்போம்” என்கிறார். மேலும் பேசிய அவர் இது எங்கள் வீடு தான் மொத்தமாக இடிந்து விட்டது. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். எத்தணை நாட்கள் வீடு இல்லாமல் வேறு ஒருவர் வீட்டில் சென்று தங்க முடியும்” என்று கண்ணீர் மல்க கூறுகிறார்.
விவசாயிகள் விடுதலை முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் அம்பேத்கர் கூறுகையில் “1972 இல் இதற்கு முன் வெள்ளம் வந்தது. அதில் இந்த அளவு பாதிப்பு கிடையாது. சாத்தனூர் அணை திறப்பதற்கு முன்னர் ஒவ்வொரு கிராமத்திலும் தண்டோரா போடப்பட்டு முன்னறிவிப்பு கொடுக்கப்படும். ஆனால் இந்த முறை அப்படியான அறிவிப்புகள் ஏதும் வழங்கவில்லை. அரசு அதிகாரிகளின் இந்த அலட்சியத்தால் தான் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. புயல் காரணத்தினால் மின்சாரமும் தடைப்பட்டிருந்தது. அதனால் டிவி, செல்போன் வழியாகவும் செய்தியை அறிந்துக் கொள்ள முடியவில்லை” என்கிறார்.
2015 ஆம் ஆண்டு ஜெ ஆட்சியில் எந்த முன்னறிவிப்பும் இன்றி செம்பரப்பாக்கம் அணை திறந்துவிடப்பட்டது. இதனால் 100க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியானது. இன்று அதுபோல் உயிரிழப்புகள் இல்லாவிட்டாலும் மக்கள் தங்கள் வாழ்வாதரத்தை இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் அதிகாரம்
ஊடகக்குழு
07.12.2024 (கள ரிப்போர்ட்)