மனித நேயத்தை பரப்பும் சுத்த சன்மார்க்க நெறி!
தனி வழிபாட்டு முறையாக அங்கீகரிப்பதே சரி!

 

பொதுக்கூட்டம்- கலை நிகழ்ச்சி – ம.க.இ.க கலைக்குழு

ஜனவரி 22, 2022 சனிக்கிழமை, மாலை 5 மணி
வடலூர் பேருந்து நிலையம் அருகில், வடலூர்.

“சதுர்வர்ணம் மயா சிருஷ்டம்” என்று நான்கு வர்ணங்களையும் சாதி ரீதியான அடக்குமுறைகளையும் நியாயப்படுத்தும் கீதை, மனுநீதி வழிவந்தவர்களுக்கு எதிராக “சாதியும் மதமும் தவிர்ந்தேன் சாத்திரக்குப்பையும் தணர்ந்தேன்” என்று சாதியும் மதமும் தவிர்த்து  தனி வழியைக் கண்டவர் வள்ளலார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பெரும்பான்மை உழைக்கும் மக்களை அடிமைப்படுத்தி வரும் கொடூரமான, மனித தன்மையற்ற சனாதன பிடியிலிருந்து பெரும்பான்மை மக்களை விடுவிப்பதற்காக  பல்வேறு தத்துவஞானிகள் போராடியுள்ளனர். அந்த பார்ப்பன சனாதன எதிர்ப்பு மரபில் மிக முக்கியமானவர் வள்ளலார்.

சாதி இழிவை சுமத்தும் வைதீகஇந்து நெறி!
அதை ஒழிக்கும் வேத மறுப்பே வள்ளலாரின் வழி!

“சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே
சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரசண் டையிலே
       ஆதியிலே அபிமானத்து அலைகின்ற உலகீர்”    (திருவருட்பா – 5566)

“நாம் முன் பார்த்தும் கேட்டும் லட்சியம் வைத்துக் கொண்டிருந்த
வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய
கலைகள் எதனினும் லட்சியம் வைக்க வேண்டாம்.
ஏனென்றால் அவைகளில் ஒன்றிலாவது
குழுஉக்குறி யன்றித்தெய்வத்தை இன்னது என்றும்
தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும்
கொஞ்சமேனும் புறங்கவியச்சொல்லாமல்
மண்ணை போட்டு மறைத்துவிட்டார்கள்”
                                                  (பேருபதேசத்தில்)

சாதிய, சடங்கு. ஆச்சார முறைகளை கடைபிடிப்பவர்களை  வள்ளலார், தனது திருவருட்பாவிலும்  பேருபதேசத்திலும் கடுமையாக விமர்சித்தார். பார்ப்பனர்கள் மட்டுமே கடவுளுக்கு அர்ச்சனை செய்ய முடியும் என்ற பார்ப்பன இந்து மத கோயில் நடைமுறைக்கு மாற்றாக, சாதி வேறுபாடின்றி பூசை செய்யும் முறையை கொண்டு வந்தார்.

சக மனிதனை நேசிக்கின்ற பண்பு சமூகத்தில் குறைந்துகொண்டே போகிறது. வறுமையில் வாடுகிறவர்கள், ஏழைகள், நோயாளிகள் அனைவரையும் வெறுக்கின்ற அளவிற்கு சமூகம் தனிமனித சுகத்தில் மேலோங்கி நிற்கிறது. ஆனால் வள்ளலார் “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்” என்று தாவரங்களை நேசித்தார். உயிர் பலிகள் கூடாது என்பதற்காக “கொல்லா விரதம் குவலயம் ஓங்குக” என்று போதனை செய்தார். மனிதர்களை நேசிக்க மறந்த சமூகத்தில் விலங்குகளையும், தாவரங்களையும் நேசித்த வள்ளலாரின் வழி இன்று நமக்கு தேவையாக உள்ளது.

சக மனிதர்களையே வெறுப்புடன் அணுகுகின்ற மனிதர்கள், மதத்தின் வழியாக வெறுப்புணர்ச்சியை உருவாக்குகின்ற பார்ப்பன பாசிச ஆதிக்க சக்திகள் ஆட்சி புரியும் “கருணையிலா ஆட்சி களிநடம் புரியும்” காலத்தில் வள்ளலாரின்  வழி போதிக்கும் மனிதநேயத்தை, சுத்த சன்மார்க்க நெறியை உயர்த்திப் பிடிக்க வேண்டியுள்ளது.

பசிப்பிணி போக்க அணையா அடுப்பு!
சமத்துவம் போதிக்க சன்மார்க்க சபை!

பிரிட்டன் காலனியாதிக்கத்தின்போது அதுவரை கொடுங்கோல் மன்னர்களின் ஆட்சியில்கூட பராமரிக்கப்பட்டு வந்த ஏரிகள், குளங்கள், குட்டைகள், ஆற்றுப் பாசன வாய்க்கால்கள் அனைத்தும் மராமத்து இன்றி நிர்மூலமாக்கப்பட்டது. அதன்விளைவாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் கொடும் பஞ்சங்கள் தோன்றின. தமிழகத்திலும்  இவ்வாறு பஞ்சம் தலைவிரித்தாடிய போது அதற்குத் தீர்வாக அன்னதானங்கள் செய்வதை ஒரு வழிமுறையாக மாற்றியவர் வள்ளலார். அதற்காக அமைக்கப்பட்டதே “அணையா அடுப்பு”. அந்த அடுப்பு இன்று

பசிப்பிணியை போக்கும் அதே நேரத்தில் மற்றொரு புறம், சைவ, வைணவ (இந்து) கோயில்களில் உச்சரிக்கப்படும் சமஸ்கிருத மந்திரங்களுக்கு மாற்றாக “அருட்பெரும் ஜோதி! தனிப் பெரும் கருணை!” என்ற மகா மந்திரத்தை உருவாக்கினார். பெரும்பான்மை மக்களை ஒதுக்கி வைக்கும் பார்ப்பன சாதி ஏற்றத்தாழ்வுகளை நிலைநிறுத்தும் கோவில்-சிலைவழிபாடு-கருவறை வடிவத்துக்கு மாற்றாக அனைவரையும் சமமாக மதிக்கும் சத்திய ஞான ‘சபையை’ அமைத்தார். உருவ வழிபாட்டுக்கு பதிலாக, ஒளி வழிபாட்டை முன்வைத்தார். ஆதிசங்கரன் தூக்கி திரிந்த காவிக் கொடிக்கு பதிலாக சன்மார்க்க சங்கக் கொடியை வெள்ளை நிறத்தில் அமைத்தார். தீண்டாமை உள்ளிட்ட சமூக கொடுமைகளுக்கு எதிரான கலகமாக சுத்த சன்மார்க்க சமயத்தை உருவாக்கினார்.

இந்து மத வழிபாட்டுமுறை அல்ல!
தனித்துவமான வழிபாட்டுமுறை!

ஆங்கிலேய ஆட்சியாளர்கள் “இது ஒரு சாதாரண கோவில் அல்ல! ஏனெனில் அதன் வழிபாட்டு முறைகள் வழக்கமான வழிபாட்டு முறைக்கு அப்பாற்பட்டது” என்று வள்ளலார் உருவாக்கிய வழிபாட்டுமுறையின் தனித்தன்மையை அங்கீகரித்தனர்.

ஆனால், வள்ளலார் வாழ்ந்த காலத்தில் இருந்தே சத்திய ஞான சபையை தன்வசம் கொண்டுவர பார்ப்பன கும்பல் முயற்சித்து வந்தது. அடூர் சபாபதி குருக்கள் தொடங்கி சபாநாத ஒளி வரை பலர் பார்ப்பன இந்து மத பூஜைமுறையை திணிக்க முயற்சி செய்தனர். அது 2007ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற தீர்ப்பு மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது. வள்ளலார் உருவாக்கியது  தனி வழிபாட்டுமுறை என்பது அங்கீகரிக்கப்பட்டு சபாநாத ஒளி வெளியேற்றப்பட்டார்.

Vallalar – A6

தற்போது, தமிழக அரசு வள்ளலார் பிறந்த நாளை “தனிப்பெருங்கருணை நாளாக” அறிவித்தது மட்டுமின்றி, வடலூர் சத்திய ஞான சபை சர்வதேச மையமாக அமைக்கும் திட்டத்தையும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புகள் வரவேற்புக்குரியவை.

அதே வேளை, சுத்த சன்மார்க்க வழியை தனி வழிபாட்டு முறையாக அங்கீகரிக்க வேண்டும். வள்ளலார் வழியை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலிருந்து நீக்க வேண்டும். அதற்கென தனி அறநிலையத்துறை உருவாக்கி அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்.  மோசடி பேர்வழிகள் அபகரித்து வைத்திருக்கும் சுத்த சன்மார்க்க சபையின் சொத்துக்களை  மீட்க வேண்டும். வள்ளலாரின் சுத்த சன்மார்க்க நெறியை பரப்ப அவை பயன்படுத்தப்பட வேண்டும்.

புரட்சிகர மாணவர்- இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம்
9788808110

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here