சம்யுக்தா கிசான் மோர்ச்சா
பத்திரிகை செய்தி
6 ஜனவரி 2022
ஜனவரி 5ஆம் தேதி பிரதமர் பஞ்சாப் பயணம் தொடர்பான நிகழ்வுகள் குறித்து, ஐக்கிய விவசாயிகள் முன்னணியின் (சம்யுக்த கிசான் மோர்ச்சாவின்) அறிக்கை
1. ஜனவரி 5ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் பஞ்சாப் பயணம் குறித்த செய்தி கிடைத்ததும், சம்யுக்த கிசான் மோர்ச்சாவைச் சேர்ந்த 10 விவசாய அமைப்புகள், அஜய் மிஸ்ரா டேனியைக் கைது செய்யக் கோரி, அடையாளப் போராட்டத்தை அறிவித்தன. இந்த நோக்கத்திற்காக, ஜனவரி 2 அன்று பஞ்சாப் முழுவதும் கிராம அளவிலும், ஜனவரி 5 அன்று மாவட்ட மற்றும் தாலுகா தலைமையகத்திலும் போராட்டங்கள் மற்றும் உருவ பொம்மை எரிப்பு நிகழ்ச்சிகள் அறிவிக்கப்பட்டன.
2. முன்னரே தீர்மானிக்கப்பட்ட அட்டவணையின்படி, ஜனவரி 5ஆம் தேதி பஞ்சாபின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மற்றும் தாலுகா தலைமையகத்திலும் அமைதியான போராட்டங்கள் நடத்தப்பட்டன. ஃபெரோஸ்பூர் மாவட்டத் தலைமையகத்திற்கு விவசாயிகளைச் செல்ல விடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியபோது, அவர்கள் பல இடங்களில் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதில், பிரதமரின் கார் அணிவகுப்பு வந்து நின்று திரும்பிய பைராயனா மேம்பாலமும் இருந்தது. அங்கு போராட்டம் நடத்திய விவசாயிகளுக்குப் பிரதமரின் வாகனம் அந்த வழியாகச் செல்லும் என்பது குறித்த உறுதியான தகவல் கிடைக்கவில்லை. பிரதமர் டெல்லி திரும்பிய பின்னர்தான், ஊடகங்கள் மூலம் இந்த தகவல் அவர்களுக்குக் கிடைத்துள்ளது.
3. போராட்டம் நடத்திய விவசாயிகள் பிரதமரின் வாகன அணிவகுப்பை நோக்கிச் செல்ல எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது, நிகழ்ச்சியின் காணொளியில் தெளிவாகத் தெரிகிறது. பாஜக கொடியுடன் “நரேந்திர மோடி ஜிந்தாபாத்” என்ற முழக்கத்தை எழுப்பியபடி ஒரு குழு மட்டுமே அந்த கார் அணிவகுப்பு அருகே சென்றது. எனவே, பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல் முற்றிலும் உருவாக்கப்பட்டதாக தெரிகிறது.
4. ஆள் வராத தன்னுடைய பேரணியின் தோல்வியை மறைக்க, பஞ்சாப் மாநில அரசு மற்றும் விவசாயிகள் இயக்கம் ஆகிய இரண்டின் மீதும், “எப்படியோ என்னுடைய உயிர் காப்பாற்றப்பட்டது” என்ற சொல்லாடலைப் பயன்படுத்தி, பிரதமர் அவதூறு சுமத்த முயன்றது மிகவும் வருத்தம் அளிக்கிறது.
விவசாயிகளின் உயிர்தான் இன்று ஆபத்தில் இருக்கிறது என்று உலகம் முழுவதும் அறிந்த உண்மை. அதுவும் அஜய் மிஸ்ரா டேனி போன்ற குற்றவாளிகளை அமைச்சராக்கி, சுதந்திரமாக உலவ விட்டதன் மூலம், விவசாயிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பிரதமர் தனது பதவியின் கண்ணியத்தை மனதில் கொண்டு இதுபோன்ற பொறுப்பற்ற அறிக்கைகளை வெளியிடக்கூடாது என்று சம்யுக்த கிசான் மோர்ச்சா எதிர்பார்க்கிறது.
அறிக்கையை வழங்கியவர்கள்
பல்பீர் சிங் ராஜேவால், டாக்டர். தர்ஷன் பால், குர்னம் சிங் சதுனி, ஹன்னன் மொல்லா, ஜக்ஜித் சிங் டல்வால், ஜோகிந்தர் சிங் உக்ரஹான், ஷிவ்குமார் சர்மா (காக்கா ஜி), யுத்வீர் சிங், யோகேந்திர யாதவ்.
சம்யுக்த கிசான் மோர்ச்சா
மின்னஞ்சல்: samyuktkisanmorcha@gmail.com
வெளியீடு : ஐக்கிய விவசாயிகள் முன்னணி, தமிழ்நாடு.