பத்திரிக்கைச் செய்தி

சென்னை ஆர்.ஏ புரம் வீடுகள் இடிப்பு! வன்மையாக கண்டிக்கிறோம்.!


கார்ப்பரேட் மருத்துவமனைகளும், செல்வந்தர்களின் பங்களாக்களும் நீர்நிலை ஆக்கிரமிப்பில் இருக்கலாம்,
பறவைகள் கூடு போல் உள்ள ஏழை மக்களின் பத்துக்குபத்து வீடுதான் உனக்கு ஆக்கிரமிப்பா!
சிங்காரச் சென்னையை உருவாக்கிய உழைக்கும் மக்களா ஆக்கிரமிப்பாளர்கள்.!
தமிழக அரசின் செயலை வன்மையாக கண்டிப்போம், போராடும் மக்களுக்கு துணை நிற்போம்!

சென்னை ராஜா அண்ணாமலை புரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள பக்கிங்காம் கால்வாயை ஒட்டிய பகுதிகளான இளங்கோ நகர், கோவிந்தசாமி நகர், கட்டபொம்மன் தெரு ஆகிய பகுதியில் சுமார் 259 வீடுகளில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் 60 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்கள் நீர்நிலை ஆக்கிரமித்து வீடு கட்டுவதாக கூறி உயர்நீதிமன்றமும் தமிழக அரசும் கூட்டாக இணைந்து அம்மக்களின் வீடுகளை இடித்து தள்ளி நடுத்தெருவில் நிறுத்தி உள்ளது.

வீடுகளை இடிக்கும் முன்பே மக்கள் அதிகாரிகளிடம் எவ்வளவோ கெஞ்சியும், முதலமைச்சர் தனி பிரிவுக்கு மனு கொடுத்தும், முறையிட்டும் கேட்டுள்ளனர். குறிப்பாக 10,12-வது தேர்வெழுதும் மாணவர்கள் இருக்கிறார்கள்.பொதுத்தேர்வு அறிவிக்கப் பட்டுள்ளதால் இரண்டு நாள் அவகாசம் கேட்டும் இவைகளை சிறிதும் பொருட்படுத்தாமல் அதிகாரத் திமிரோடு வீட்டை இடித்துத் தள்ளியுள்ளது தமிழக அரசின் போலீசு.

கஷ்டப்பட்டு தாங்கள் கடன் உடன்பட்டு, கட்டிய வீட்டை இடிக்கும் அரசின் இந்த அதிகாரக திமிரை பார்த்தும் தமது மக்களின் வாழ்விடத்தை பாதுகாக்க முடியாத கையறு நிலையில் அப்பகுதியை சேர்ந்த 60 வயது முதியவர் வி.ஜி கண்ணையா என்பவர் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு வீடுகளை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீ வைத்து கொண்டார்.உடல்கள் தீயில் கருகி எரியும் சூழலிலும் மக்களை காப்பாற்றுங்கள், மக்களை காப்பாற்றுங்கள் என்று அவர் எழுப்பிய முழக்கம் மக்களின் செவிப்பறையில அறைந்தாலும் செவிடுகளாய் நிற்கும் ஆளும்வர்க்கத்தின், நீதிமன்றத்தின் காதிலும் தமிழக அரசின் காதிலும் விழவேவில்லை.

வீடுகளை இடித்துத் தரை மட்டமாக்கி, மின்சார வசதி இல்லாமல், தண்ணீர் வசதி இல்லாமல் பொதுத்தேர்விற்கு படிக்க முடியாமல், அரசு தங்களை நடுத் தெருவிற்கு கொண்டு வந்துவிட்டதாக அம்மாணவர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்
மாற்று இடம் ஒதுக்கப்பட்டு இருப்பதாக அரசு தெரிவிக்கிறது.

அது மக்கள் தற்போது வசிக்கும் பகுதியில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்குள்ள ஆண்கள் – பெண்கள் என அனைவரும் தினமும் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்துபவர்கள். இப்பொழுது அரசு ஒதுக்கி உள்ள இடத்திலிருந்து தினமும் அவர்கள் வந்து செல்வது என்பது போக்குவரத்திற்கும் அலைச்சலுக்குமே அவர்கள் கூலி சரியாகும். மேலும் குழந்தைகளின் பள்ளி, கல்லூரிகளும் அப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால், அரசு ஒதுக்கிய இடத்தில் இருந்து தினமும் அவர்களது குழந்தைகள் பள்ளி கல்லூரிகளுக்கு வந்து போவதும் தற்போதைய நிலையில் கூடுதல் சுமையே.

உழைக்கும் மக்களின் வீடுகளை இடித்தது நீர்நிலைகளை பாதுகாப்பதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றால் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
சென்னையில் வசிக்கும் பணக்கார மேட்டுக்குடிகளின் பார்வையில் குடிசை வீடுகள் மறைக்கப்பட வேண்டும், அகற்றப்பட வேண்டும் அப்போதுதான் சிங்காரச் சென்னையாக மாற்ற முடியும் என்பதற்காகவே இந்த வீடுகள் இடிக்கப்பட்டு உள்ளன.

இளங்கோ நகரில் ராஜிவ் ராய் என்கிற கட்டுமான தொழிலதிபர், அடுக்குமாடி குடியிருப்பு கட்டியுள்ளார். அவரது குடியிருப்புக்கு அருகே குடிசை பகுதிகள் நிறைந்துள்ளதால், அதனை அகற்ற வேண்டும் என்பதற்காகவே பக்கிங்காம் கால்வாயை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் 2008ஆம் ஆண்டு வழக்கு தொடுத்த அதன் விளைவே அப்பகுதி மக்களின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு காரணங்களுக்காக சென்னையில் இருந்து வெளியேற்றப்படும் உழைக்கும் மக்கள் 40 முதல் 50 கிலோ மீட்டர் தாண்டியே ஒதுக்கி வைக்கப்படுகின்றனர். இது ஆக்கிரமிப்பு காக அகற்றப்படுவது கூறுவதில் ஏற்கமுடியாது திட்டமிட்டே உழைக்கும் மக்களை வெளியேற்றிவிட்டு பணக்காரர்களின் நகரமாக சென்னை மாற்றுவதில் முயற்சியே. இதற்கு எதிராக உழைக்கும் மக்கள் அணிதிரள வேண்டும்.

நமது உழைப்பில் உருவான நாம் உருவாக்கிய நகரத்தில நாமே வசிக்க வேண்டும். ஆகவே ராஜா அண்ணாமலைபுரம் மக்களுக்கு தோள் கொடுப்போம்! போராட்டத்திற்கு துணை நிற்போம்!

தோழமையுடன்
வழக்கறிஞர் சி.ராஜு
மாநிலப் பொதுச்செயலாளர்
மக்கள் அதிகாரம் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here