ஆந்திர மாநிலம் இந்திய அரசியலில் எப்போதுமே அடிபடுகின்ற பெயரைக் கொண்டது. இந்திய அரசியலில் இடதுசாரி என்ற பெயரில் வலது, சந்தர்ப்பவாத போக்குகளுக்கு பலியான போலிக் கம்யூனிஸ்டுகளின் முகத்திரையை கிழித்தெறிந்த நக்சல்பரி இயக்கத்தின் இதயப்பகுதி எப்போதுமே ஆந்திராவை மையப்படுத்தியே இருக்கிறது.
70களில் உருவான நக்சல்பரி இயக்கம் ஆந்திராவில் 15 மாவட்டங்களில் வெடித்து பரவியது. வீரத் தெலுங்கானா போராட்டக்காலம் முதல் விவசாயிகளின் எழுச்சிக்கு முன்னோடியாக போராடி வந்த ஆந்திராவில் நக்சல்பரி இயக்கம் பரவியது அதிசயம் அல்ல.
ஹைதராபாத் நிஜாம் ஆதிக்கத்திற்கு அடுத்தபடியாக பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை வளைத்து போட்டு பட்டியலின, பழங்குடி விவசாயிகளின் நிலங்களை பறித்தெடுத்து வைத்திருந்த நாயுடு, ரெட்டி நிலப்பிரபுகளின் ஆதிக்கத்திற்கு எதிராக வெடித்து கிளம்பியது ஸ்ரீகாகுளம் எழுச்சி.
இதன் போக்கில் 300க்கும் மேற்பட்ட நிலப்பிரபுக்களை அழித்தொழிப்பு செய்தது நக்சல்பரி இயக்கம். இதன் எதிர் விளைவாக நாடு முழுவதும் உள்ள ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஆந்திராவில் விவசாயிகள், பழங்குடிகளின் எழுச்சி அடக்கி ஒடுக்கப்பட்டது, நாடு முழுவதும் கைது செய்யப்பட்ட 32,000 க்கும் மேற்பட்ட நக்சல்பரி போராளிகளில் பெரும்பான்மையானவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.
அந்த ஒடுக்குமுறை நிகழ்த்த 1970 காலகட்டத்தில் ஆந்திராவை தனது அதிகாரத்தின் கீழ் ஆட்சி செய்து வந்த காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றியவர் தான், இன்று இந்திய அரசியலின் ’கிங்மேக்கர்’ என்றெல்லாம் வர்ணிக்கப்படும் சந்திரபாபு நாயுடு.
காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு செயலாற்றிய போது அவரது மாமனாரான பாசிச சன்னியாசி என்டி ராமராவ் உருவாக்கிய தெலுங்கு தேசத்திற்கு (TDP) எதிராகவும், அவரது ஆட்சிக்கு எதிராகவும் போராடி வந்தவர், பின்பு காங்கிரஸிலிருந்து வெளியேறி மாமனாருடன் இணைந்துக் கொண்டார்.
இவரது மாமனார் என்.டி.ராமாராவ் தெலுங்கு தேசம் கட்சியை உருவாக்கிய போது அது எந்த சித்தாந்தமுமற்ற, பதவி வெறியை அடிப்படையாகக் கொண்டு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது ஒன்றே நோக்கமாகக் கொண்டு செயல்பட்டது.
படிப்படியான சதித்தனங்களின் மூலம் தெலுங்கு தேசத்தின் பொதுச்செயலாளராக மாறி ஒரு கட்டத்தில் என் டி ராமராவ் கட்சியை விட்டு தூக்கி எறிந்தார். அதன் பிறகு தெலுங்கு தேச கட்சியின் மூலம் ஆந்திராவின் ஆட்சியைப் பிடித்து 13 ஆண்டுகள் ஆட்சி நடத்தி வந்த காலகட்டத்தில் இந்தியாவிலேயே தனியார்மயம், தாராளமயம், உலகமயம் உள்ளிட்ட மறுகாலனியாக்க கொள்கைகளுக்கு ரத்தின கம்பளம் விரித்து, ஆந்திராவின் தலைநகரான ஹைதராபாத் நகரத்தை தொழில் நுட்ப பூங்காக்கள் அடங்கிய ஹைடெக் சிட்டியாக மாற்றியமைத்தார்.
வெறும் அரசியல்வாதியாக மட்டுமல்லாமல் ஹெரிடேஜ் ஃபுட்ஸ் லிமிடெட் என்ற நிறுவனத்தின் மூலம் பால் பண்ணை முதல் உணவு பொருட்கள் வரை அனைத்தையும் உற்பத்தி செய்து சந்தையில் விற்று கொள்ளை லாபமடித்து வந்த முதலாளியான சந்திரபாபு நாயுடு வளர்ந்த கதை இதுதான்.
ஹெரிடேஜ் ஃபுட்ஸ் லிமிடெட் 1992 ஆம் ஆண்டில் நாரா சந்திரபாபு நாயுடுவால் நிறுவப்பட்டது, இது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நிறுவனங்களில் ஒன்றாகும், இந்நிறுவனத்தில் இரண்டு வணிகப் பிரிவுகள் – பால் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி. இதை தொடர்ந்து அமர ராஜா எனர்ஜி மற்றும் மொபிலிட்டி நிறுவனம் பல்வேறு வகையான சேவைகளையும், தயாரிப்புகளையும் வழங்கி வருகிறது.
அமர ராஜா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ஜெய் தேவ் கல்லா, தெலுங்கு தேசம் கட்சியின் முன்னாள் எம்.பி.யாக இருந்தவர், ஹெரிடேஜ் ஃபுட்ஸ் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் ப்ரோமேட்டராக உள்ளார். இதன் வாயிலாகவே தெலுங்கு தேசம் கட்சியின் வெற்றி இவ்விரு நிறுவனப் பங்குகளும் உயர முக்கிய காரணமாக உள்ளது. ஹெரிடேஜ் ஃபுட்ஸின் பங்குதாரர் விபரங்கள் படி, மார்ச் 31, 2024 முடிவில் என்.சந்திரபாபு நாயுடுவின் மனைவி நாரா புவனேஷ்வரி 2,26,11,525 பங்குகள் அதாவது 24.37% பங்குகளையும், அவரது மகன் நாரா லோகேஷ் சுமார் 1,00,37,453 ஈக்விட்டி பங்குகள் அதாவது 10.82% பங்குகளையும் வைத்துள்ளனர்.
படிக்க:
♦ ஆந்திரா, தெலுங்கானாவில் நக்சல்பரி ஆதரவாளர்கள் தேடுதல் வேட்டை?
♦ 2024 நாடாளுமன்ற தேர்தல்: மக்கள் சக்தி வென்றது! பாசிச பாஜக வின் ’ஒற்றை சர்வாதிகார’ கனவு வீழ்ந்தது!
ஹெரிடேஜில் 5.59% பங்குகளை வைத்திருக்கும் மற்றொரு ப்ரோமோட்டர் நிறுவனமான மெகாபிட் ஃபைனான்ஸ் அண்ட் இன்வெஸ்ட்மென்ட், இதன் இயக்குநர்களாக சந்திரபாபு நாயுடு மனைவியும் மகனும் உள்ளனர். இதன் மூலம் நிறுவனத்தில் நாரா புவனேஷ்வரி மற்றும் நாரா லோகேஷ் ஆகியோர் இணைந்து சுமார் 41% பங்குகளை வைத்துள்ளனர்.
இந்நிறுவனத்தின் முக்கியமான சேவைகளில் எனர்ஜி ஸ்டோரேஜ் சேவை, லித்தியம்-அயன் செல் உற்பத்தி, EV சார்ஜர்கள், Li-ion பேட்டரி பேக் அசெம்பிளி, வாகன மற்றும் தொழில்துறைக்குத் தேவையான லூப்ரிகண்டுகள் என பல சேவைகளை வழங்கி வருகிறது. அமர ராஜா எனர்ஜி மற்றும் மொபிலிட்டி நிறுவனம் இந்தியாவின் மிகப்பெரிய எனர்ஜி ஸ்டோரேஜ் சேவை அளிக்கும் நிறுவனமாகும். இது இந்தியாவின் முன்னணி ஆட்டோமோட்டிவ் பேட்டரி பிராண்டுகளான அமரான் மற்றும் பவர்ஜோன் போன்ற பிராண்டுகளை கொண்டுள்ளது.
000
அரைக்காலனிய நாடுகளில், முதலாளித்துவ சீர்திருத்தங்களை கொண்டு வரும் போது முதல் பலி கொடுக்கப்படுவது விவசாய நிலங்கள் மற்றும் விவசாயிகள் தான். ஆந்திராவின் தொழில் வளர்ச்சி என்ற பெயரில் விவசாய நிலங்களை பறிப்பதும், பஸ்தார் காடுகளில், தண்ட காரண்யா மலைகளில் வசிக்கும் விவசாயிகள், பழங்குடிகளை வெளியேற்றுவதுதான் கொடூரமான நிலைமையாகும்.
இந்தியாவின் நெல் உற்பத்தியில் 5வது இடத்தை வகித்து வருகின்ற ஆந்திராவின் விவசாய நிலங்கள் படிப்படியாக பறித்தெடுக்கப்பட்டது. இதற்கு தடையாக நக்சல்பரி இயக்கத்தின் தொடர்ச்சியாக ஆந்திராவில் ஆயுதமேந்தி போராடி வந்த மக்கள் யுத்தக் குழுவினர், பின்னர் மாவோயிஸ்டுகள் அமைப்பினராக ஒன்றிணைந்த பிறகு ஆந்திரா, ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய நான்கு மாநிலங்கள் ஒன்றிணைகின்ற காடு, மலைகள் கொண்ட பகுதிகளிலிருந்து அவர்களை வெளியேற்றுவதற்கு பல்வேறு அரசு பயங்கரவாத நடவடிக்கைகளை ஏவி கொடூரமான கொலைகளை புரிந்தவர் தான் இந்த சந்திரபாபு நாயுடு.
1986 ஆம் ஆண்டு ஆந்திர மாநில நக்சல்பரி இயக்கத்தை அழித்தொழிக்க கிரேஹவுண்ட் படைகளை கொண்டு துவங்கப்பட்ட நக்சல் ஒழிப்பு முயற்சிகள் சந்திரபாபு நாயுடு காலத்தில் (1995-2004) (2009-2014) தலைவிரித்தாடியது.
பன்னாட்டு கம்பெனிகள் (MNC), தேசங்கடந்த தொழிற்கழகங்களின் (TNC) கொள்ளையை தடுத்து நிறுத்தி காடுகளையும், மலைகளையும் பாதுகாக்கின்ற நக்சல்பரிகளை நரவேட்டையாடிய சந்திரபாபு நாயுடு அரசாங்கம், அவர் இன்று இஸ்லாமியர்களை படுகொலை செய்த பாசிச மோடியுடன் இரண்டாம் முறையாக இணைந்திருப்பது பொருத்தமான இணைவுதான்.
பாசிச எதிர்ப்பு என்ற அரசியல், பொருளாதாரக் கொள்கைகளை அடிப்படையாக கொள்ளாமல், பாஜகவை தேர்தலில் வீழ்த்துவது என்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுகின்ற இந்தியா கூட்டணி, சந்திரபாபு நாயுடு உடன் கூட்டு சேருவதற்கு முயற்சித்தது என்பதெல்லாம் அவர்களின் அரசியல், சித்தாந்தமற்ற சந்தர்ப்பவாத போக்குகளை தோலுரித்துக் காட்டுகிறது.
பாசிச பாஜக ஆட்சிக்கு வரக்கூடாது என்றால் என்ன விலை கொடுத்தாலும் பரவாயில்லை; எந்த பதவியை சந்திரபாபு நாயுடு மற்றும் நிதிஷ்குமார் கேட்டாலும் பரவாயில்லை; அவர்களுக்கு கொடுத்து இந்தியா கூட்டணி ஆட்சியமைக்க வேண்டும் என்றெல்லாம் வாய்க்கு வந்தபடி எழுதிக் குவிக்கின்றனர் முதலாளித்துவ, குட்டி முதலாளித்துவ அறிவு ஜீவிகள்.
தெலுங்கு தேசம் கட்சியின் வர்க்க தன்மையும் சரி! சந்திரபாபு நாயுடுவின் வர்க்கத் தன்மையும் சரி! ஒருபோதும் பாசிசத்திற்கு எதிராக களமாடக்கூடிய மனநிலை கொண்டது அல்ல. சில சமயங்களில் சந்தர்ப்பவாதமாக பதவியை தக்க வைத்துக் கொள்வதற்கு பாஜக எதிர்ப்பு என்று பேசிக் கொண்டிருந்தாலும் வர்க்க ரீதியாக அவர்கள் எப்போதும் பாஜகவுடன் இணக்கமாக செல்பவர்கள் தான்.
NDA இந்திய ஒன்றிய ஆட்சியை அமைக்க பாஜகவுடன் இணைந்து சந்திரபாபு நாயுடு ஒப்புக் கொண்டவுடன் பங்கு சந்தை எகிறியதால் சந்திரபாபு நாயுடு மற்றும் அவர் குடும்பத்திற்குத் தொடர்புடைய ஹெரிடேஜ் ஃபுட்ஸ் மற்றும் அமர ராஜா எனர்ஜியின் பங்குகள் கடந்த 5 நாட்களில் 46% வரை உயர்ந்துள்ளது. வியாழக்கிழமை வர்த்தகத்தில், ஹெரிடேஜ் ஃபுட்ஸ் 10% உயர்ந்து ரூ. 601 ஆகவும், அமர ராஜா 9% உயர்ந்து ரூ. 1,325 ஆகவும் இருந்தது. கடந்த 5 நாட்களில் அமர ராஜா பங்குகள் 4.56 சதவீதம் அதிகரித்துள்ளது.
சந்திரபாபு நாயுடு மற்றும் அவர் குடும்பத்திற்குத் தொடர்புடைய ஹெரிடேஜ் ஃபுட்ஸ் மற்றும் அமர ராஜா எனர்ஜியின் பங்குகள் கடந்த 5 நாட்களில் 46% வரை உயர்ந்துள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) உள்ளாட்சித் தேர்தலில் சிறப்பான வெற்றியைப் பெற்று அம்மாநிலத்தில் ஆட்சியை பெற்ற நிலையில் சந்திரபாபு நாயுடு தொடர்புடைய நிறுவனப் பங்குகள் இன்று அதிகளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. இதனால் 5 நாட்களில் 800 கோடி லாபமடைந்துள்ளது. இதுதான் பாசிச பாஜக ஆதரவாளர் சந்திரபாபு நாயுடுவின் வர்க்கத் தன்மை.
பதவி வெறி, துரோகத்தனம், நரித்தனம், அதிகார கும்பல்களை கொண்டு அதிகாரத்தை கைப்பற்றுவது என்பதெல்லாம் சந்திரபாபு நாயுடுவுடன் பிறந்த குணங்களாகும். பதவிக்காக சொந்த மாமனாரையே கட்சியை விட்டு தூக்கி எறிந்த சந்திரபாபு நாயுடு, இந்தியாவில் ஜனநாயகத்தை ஒழித்துக் கட்டி, பாசிச சர்வாதிகாரத்தை நிலை நிறுத்த வேண்டும் என்று செயல்படுகின்ற பாஜகவுடன் கூட்டு சேர்ந்திருப்பது, மேலும் ஒருங்கிணைந்த முறையில் எதிர்க்கட்சிகளையும், ஆந்திராவில் போராடுகின்ற நக்சல்பரி போராளிகளையும் ஒருங்கிணைந்த முறையில் ஒழித்துக் கட்டுவதற்கு தானே ஒழிய மோடியை திருத்தி நல்வழிப்படுத்தி, ஜனநாயகவாதியாக மாற்றுவதற்கு அல்ல.
சந்திரபாபு நாயுடு போன்ற பாசிச வேடதாரிகளை நாம் இனம் கண்டு கொள்வோம். நாடாளுமன்ற வெற்றி, தோல்வி என்பதற்கு அப்பால் பாசிசத்தை வீழ்த்துவதற்கு உண்மையான நோக்கம் கொண்ட புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் ஐக்கியம் மட்டுமே பாசிசத்தை வீழ்த்தும்.
தனது சொந்த லாபத்திற்காக பாஜகவை எதிர்த்து போராடுகின்ற கட்சிகளை நம்பி பாசிசத்தை வீழ்த்துவதற்கு அல்லது தோற்கடிப்பதற்கு அணி சேருவதும் அல்லது அவர்களை நிபந்தனையின்றி ஆதரிப்பதும் தற்கொலைப் பாதையாகும்.
- முகம்மது அலி.






