வினேஷ் போகத், அன்பு சகோதரியே! ஐந்தாம் ஜார்ஜ் மன்னனை வரவேற்று கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் பாடிய ”ஜன கன மன’ என்ற பாடல் இந்திய ஒன்றியத்தின் தேசிய கீதமாக ஒலிக்கப்படுகிறது என்பதை நீயும் அறிவாய், நாங்களும் அறிவோம்.

மல்யுத்த களத்தில் ஜப்பான் வீராங்கனை யு சுசாகியை வீழ்த்தி உன் வெற்றியை பதித்த கணத்திலிருந்து வினேஷ் போகத் என்ற உனது பெயர் புதிய தேசிய கீதமாக மாறி இந்தியாவின் மலைகளிலும், காடுகளிலும், நீண்ட தூரம் பயணிக்கும் நதிகளின் கரைகளிலும் ஒலித்து மீண்டும் மீண்டும் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றது என்பதை நீ அறிவாயா?

உனது வெற்றிக்கான போராட்டத்தில் எத்தனையோ தடைகளை கடந்து பயிற்சியாளர் வோலர் அகோஸ் கொடுத்த நம்பிக்கையை உன்னுடைய மனதிலும் நிலை நிறுத்தி அரையிறுதியில் வெற்றியை சாதித்த அந்த தருணத்தில் உனது உடல் மொழியும், மனவலிமையும் எதிரொலித்தது. அந்த சில நொடிகள் மீண்டும் மீண்டும் எமது கண் இமைகளைப் போல இமைத்துக் கொண்டே உள்ளது.

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரான திருவாளர் பிரிஜ் பூஷன் சரண் சிங் ஒரு பாலியல் வெறிபிடித்த பொறுக்கி என்பதை நீ அம்பலப்படுத்திய போது நாடெங்கிலும் உள்ள ஆணாதிக்கத்திற்கு எதிராக போராடுகின்ற அனைவரும் கொதித்துதான் போனோம்.

பிரிஜ் பூஷனுக்கு எதிராக ஜந்தர்மந்தர் மைதானத்திலும், டெல்லியின் பல்வேறு தெருக்களிலும் நீ போராடிய போது அதனை அலட்சியப்படுத்தி, அவமானப்படுத்திய பாசிச மோடியின் குண்டர் படை உன்னை ஒலிம்பிக்கிற்கு அனுப்புவார்களா என்று நாங்கள் சந்தேகித்துக் கொண்டே இருந்தோம்.  ”நான் ஒலிம்பிக்கில் விளையாடுவதை தடுக்கும் நோக்கில் பிரிஜ் பூஷன் மற்றும் அவரது ஆதரவாளர் சஞ்சய்சிங் இருவரும் இணைந்து அனைத்து வழிகளிலும் முயற்சித்து வருகிறார்கள்” என்ற உனது குற்றச்சாட்டு எமது இந்த சந்தேகத்தை உறுதி செய்தது. ஆனால் அங்கேயும் நடந்த சதித்தனங்களை எதிர்த்துப் போராடி ஒலிம்பிக் போட்டி களத்தில் குதித்து விட்டாய்.

கியூபாவின் வீரர் யூஸ்னிலிஸ்சுடன் நடந்த அரையிறுதிப் போட்டியில் யாரை மனதில் வைத்துக் கொண்டு ஆக்ரோஷமாக குத்துக்களை வீசி வெற்றி பெற்றாய் என்பதை இந்திய மக்கள் அனைவரும் அறிந்து கொண்டோம். எங்களாலேயே யூகிக்க முடிந்ததை அவர்களால் யூகிக்க முடியாதா என்ன?

வெற்றி பெற்று பதக்கத்துடன் நீ திரும்பும் போது உன்னை வரவேற்க வேண்டும்; அவர்களின் ஆணவத்தின் முகத்தில் ஓங்கி குத்திய உனது கைகளை குலுக்கி பாராட்டுதல்களை செலுத்த வேண்டும் என்பதெல்லாம் கொடும் கனவாக மாறி, அந்த சந்தர்ப்பத்தை தவிர்க்க குறுக்கு வழியில் தடுக்கின்ற அழுகுணி ஆட்டத்தில் இறங்கி விட்டார்கள். அவர்களின் முகத்தில் குத்தியதை பொறுத்துக் கொள்ள முடியாத கோழைகள், உனது முதுகில் குத்தி உனது வெற்றியை தடுத்து விட்டதாக இருமாந்து கொண்டிருக்கிறார்கள். சங்கி முட்டாள் கூட்டமோ உனது வெற்றி பறிக்கப்பட்டதை கர்மா என சமூக வலை தளங்களில் பிதற்றுகிறது.

புராண காலத்தில், ”துல்லியமாக குறி வைத்து தாக்கும் வில்வித்தையை என்னிடமிருந்து ரகசியமாய் கற்றுக் கொண்டாய் என்பதால் உனது கட்டைவிரலை காணிக்கையாக கொடு!” என்று கேட்டானாம் துரோணர். அதனை நாங்கள் கற்பனையில் ஒட்டிப் பார்த்திருந்தோமே ஒழிய, இன்று உனது வெற்றியின் பறிப்பை நேரில் கண்ட பின்னர் இப்படித்தான் இருந்திருக்கும் என்பதை புரிந்துக் கொண்டு இருக்கிறோம்.

மகாபாரதத்தில் அனைத்து வித்தைகளையும் கற்று நட்புக்காக கௌரவர்களுக்கு அரணாக நிற்பதற்கு தயாரான கர்ணனின் வீரத்தை பெற்ற தாயைக் கொண்டு பறித்துக் கொண்ட கிருஷ்ண பரமாத்மாக்களின் சதித்தனங்களை, நவீன யுகத்தில் உனது எடை நியூட்ரீசியன்களின் சதிகளால் 100 கிராம் கூடியது என்று கூறி தகுதி நீக்கம் செய்து, பதக்கத்தை பறித்துக் கொண்டதன் மூலம் நேரில் அறிந்து கொண்டோம்.

ராமாயண கதையோ வேறுவிதத்தில் எமக்கு புகட்டப்படுகிறது. எதிரில் நிற்பவனின் வீரத்தில் பாதியை பெற்றுக் கொண்டு தன்னுடைய வீரத்துடன் இணைத்து சமர் புரிகின்ற மாவீரன் வாலியின் வீரத்தை எதிர்த்து நேருக்கு நேர் நிற்க முடியாத கோழையான ராமன் மறைந்து நின்று அம்பெய்து கொன்ற கதையை இது எப்படி சாத்தியம் என்பதை உனது பதக்கத்தை பறித்ததன் மூலம் இப்படித்தான் சாத்தியம் என்று நிரூபித்துள்ளனர் புதிய இராமாயணத்தை எழுதுகின்ற ஆர்எஸ்எஸ்-சின் பாசிச குண்டர்கள்.

உனது பயிற்சியாளர் வோலர் அகோஸ் அவரது மனைவிக்கு பயிற்சி கொடுத்து பதக்கத்தைப் பெற்றுக் கொடுப்பாரே தவிர உனக்கு சரியான முறையில் பயிற்சி அளிக்க மாட்டார் என்று மல்யுத்த வாரியத்தின் பொறுப்பாளர்கள் அவரை நிராகரித்த போது நீ நம்பிக்கையுடன் அவரது வழிகாட்டுதல்களையும், பயிற்சிகளையும் பெற்றுக் கொண்டாய். யாரை தேர்ந்தெடுத்துக் கொண்டால் வெற்றி பெற முடியும் என்பதை உனது நடைமுறையின் மூலம் எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கின்றாய்.

தன்னிடம் பயிற்சி பெற்ற மாணவனின் வெற்றியையோ, தோல்வியையோ பயிற்சியாளர் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்பதை உனக்கு பயிற்சி கொடுத்த வோலர் அகோஸ் இறுதி நொடிகளில் உனது முகத்தில் வெளிவந்த பளிச்சிடும் நம்பிக்கையை கண்டு கண்ணீர் வடித்ததை காணும் போது இப்படிதான் தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என்ற புதிய அம்சத்தை நீயும், உனது பயிற்சியாளரும் எங்களுக்கு கற்றுக் கொடுத்திருக்கிறீர்கள்.

சகோதரியே! ”என்னுடைய சக்திகள் அனைத்தையும் ஒன்றுபடுத்தி போராடிவிட்டேன் இனியும் போராடுவதற்கு என்னிடம் பலமில்லை எனவே இந்த களத்தில் இருந்து வெளியேறுகிறேன்” என்று நீ அறிவித்து இருக்கின்றாய்.

உனது 29 வயதில் இத்தனை சோதனைகளை கடந்து இத்தனை தாக்குதல்களை எதிர்கொண்டு இந்திய ஒன்றியத்தின் மாபெரும் அரசு கட்டமைப்பு என்ற பயங்கரவாத மலையை உடைப்பதற்கு பொறுமையுடன், வலிமையுடன் எதிர்த்து நின்ற நீ இந்த தருணத்தில் சோர்ந்து போவது சரியல்ல.

ஒலிம்பிக் பதக்கங்களின் பட்டியலில் உனது பெயர் பொறிக்கப்படாமல் போகலாம். மல்யுத்த  போட்டியில் நீ வெற்றி பெறவில்லை என்று அறிவிக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த இந்தியர்களின் மனங்களை நீ வென்று விட்டாய்  சகோதரியே!.

ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்கள் அனைவரையும் ஸ்பான்சர் செய்வது நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்து கொழுத்து திரியும் அம்பானியின் குடும்பம் என்பதையும், அவரது மனைவி நீதா அம்பானிதான் அங்கு அனைத்தையும் தீர்மானிக்கின்றார் என்பதையும் இந்திய மக்களுக்கு எடுத்துச் செல்வதற்கு உனது தடுக்கப்பட்ட வெற்றியும், பறிக்கப்பட்ட வெற்றியும் எமக்கு உதவி புரிகின்றது.

143 கோடி மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய தேசத்தின் பதக்க கனவுகளை கருவிலேயே கருக்கிக் கொண்டிருக்கும் பார்ப்பனக் கும்பலின் பூணூல் கயிறு உனது கால்களிலும், உனது கரங்களிலும் மர்மமான முறையில் கட்டப்பட்டு உனது முன்னேற்றத்தை தடுப்பதற்கு சதி செய்து கொண்டிருப்பதை நாங்கள் புரிந்து கொண்டு விட்டோம்.

படிக்க:

 மல்யுத்த வீராங்கனைகள் மீதான அடக்குமுறை! பல்லிளிக்கும் ஜனநாயகம்!

 ஒலிம்பிக் பதக்கம் வெல்ல வேண்டிய வினேஷ்  தகுதிநீக்கம்: ‘சதி இல்லை’ நம்புங்கள்!

பார்ப்பன பாசிஸ்டுகள் அரசியல், பொருளாதாரத்தில் மட்டுமல்ல, பண்பாட்டுத் தளங்களிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள பூணூல்களின் விளையாட்டான கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதையும், உடலை வருத்தி விளையாட வேண்டிய அனைத்து விளையாட்டுகளையும் தவிர்ப்பதையும் இயல்பான ஒன்று என்று நாங்கள் கருதவில்லை.

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலை அனைத்து தளங்களிலும் துணிச்சலுடன் கொண்டு செல்ல வேண்டும் என்று இந்த நாட்டையும், மண்ணையும் நேசிக்கின்ற கம்யூனிஸ்டுகள் எப்போதும் உனது துணை நிற்கின்றோம். நாங்கள் யார் உனக்கு தெரியாது. ஆனால் நீ செய்த சாதனைகளை எடுத்துச் சொல்லி ஆயிரக்கணக்கான வீரர்களை உருவாக்குவதற்கு மிகச் சிறந்த முன்னுதாரணமாக எங்களுக்கு துணை நிற்கின்றாய் என்ற வகையில் உனது வெற்றிகளின் தருணத்திற்காக மட்டுமல்ல. பாசிஸ்டுகளால் நீ அவமானப்படுத்தப்பட்ட அந்த தருணத்தில் இருந்து இன்று வரை உனது தோளோடு தோள் நின்று போராடிக் கொண்டிருக்கின்றோம். இனியும் தொடர்ந்து போராடுவோம் என்பதை உனது நம்பிக்கைக்காக நாங்கள் வெளிப்படையாக அறிவிக்கின்றோம்.

”இந்தப் பெண் தன் சொந்த நாட்டிலேயே அடித்து நொறுக்கப்பட்டார். தன்னுடைய நாட்டின் தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டார். உலகையே வெல்லப்போகும் இந்த நாட்டின் அமைப்பிடம் தோற்றுப் போனார்” என்று இரண்டே வரிகளில் பாசிச கட்டமைப்பை தோலுரித்து தொங்க விட்டுள்ளார் மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா. அவரது போர்க்குரலுடன் நாங்களும் இணைகிறோம்.

இந்த முறை எமது போராளிகள் ஏகலைவன்களை இழந்ததைப் போல, கர்ணன்களை பலி கொடுத்ததைப் போல உன்னையும் இழந்து நிற்க மாட்டோம் என்பதை மட்டும் உறுதியுடன் சொல்கின்றோம். எழுந்து வா சகோதரியே! இணைந்து நின்று களமாடுவோம்.

  • மணிமாறன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here