சிவகங்கை லாக்கப் படுகொலை! தமிழகத்தில் தலைவிரித்தாடும் போலீசு ராஜ்ஜியம்? கட்டுப்படுத்த கையாலாகாத திமுக அரசு!

2

சிவகங்கை லாக்கப் படுகொலை!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலுக்கு காரில் வந்த மதுரை திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா மற்றும் அவரது தாயார் 10 பவுன் நகை காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதைத் தொடர்ந்து, அந்தக் கோயிலில் காவலாளியாக பணிபுரிந்து வந்த அஜித்குமார் (வயது 27) மற்றும் அவரின் சகோதரர்கள் உள்ளிட்ட 5 பேரை காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரித்துள்ளனர். விசாரணையின் போது, போலீசார் இரண்டு நாள் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று அடித்து சித்திரவதை செய்ததன் காரணமாக வலி தாங்க முடியாமல் அஜித்குமார் உயிரிழந்துள்ளார்.

நடந்தது என்ன?

நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்த சிவகாமியும் அவர் மகள் மருத்துவர் நிகிதாவும் கோயிலுக்கு வந்துள்ளனர்.

காரில் வந்த சிவகாமிக்கு நடக்க முடியாததால், காவலாளி அஜித்குமார் சக்கர நாற்காலி எடுத்து வந்து உதவியுள்ளார். அப்போது நிகிதா, காரை ஓரமாக பார்க்கிங் செய்யும்படி அஜித்குமாரிடம் தெரிவிக்க, தனக்கு கார் ஓட்டத்தெரியாது என்று கூறி, அங்கிருந்த அவரது நண்பர்களிடம் காரை பார்க்கிங் செய்யச் சொல்லுங்கள் என்று அஜித்குமார் கூறியுள்ளார்.

காரை பார்க்கிங் செய்ய கொண்டு சென்ற அவரது நண்பர்கள் சிறிது நேரம் கழித்து தான் பார்க்கிங் செய்தார்கள் என்பதை வைத்துக் கொண்டு காரின் பின்பக்க சீட்டில் வைத்திருந்த 10 பவுன் நகையை அஜித்குமார் மற்றும் அவரது நண்பர்கள் தான் திருடி விட்டார்கள் என்று மருத்துவர் நிகிதா போலீசில் புகார் செய்துள்ளார்.

நகை திருடப்பட்டதாக புகார் கொடுத்துள்ள திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் நிகிதா சென்னையில் தலைமைச் செயலகத்தில் பணியாற்றுகின்ற உறவினர் ஒருவர் மூலமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு நெருக்கடி கொடுத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

கோவிலுக்கு சென்றவர்கள் 10 பவுன் நகையை ஏன் கொண்டு சென்றார்கள்? அதனை ஏன் பெட்டிக்குள் வைத்திருந்தார்கள்? 10 பவுன் நகை இருந்த நிலையில் கார் சாவியை முன் பின் அறிமுகம் இல்லாதவர்களிடம் கொடுத்து ஏன் பார்க்கிங் செய்ய சொன்னார்கள்? என்பது படிக்கும் போதே சந்தேகத்தை உருவாக்குகிறது என்ற போதிலும், போலீசுக்கும் இந்த சந்தேகம் வரவே மீண்டும் ஒருமுறை அவர்களிடம் போனில் பேசி உறுதி செய்து கொண்ட பின்னரே பலவந்தமாக தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர் என்கிறார் கொலை செய்யப்பட்ட அஜித்குமாரின் சகோதரர் நவீன்.

திருட்டு உள்ளிட்ட வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஒப்படைப்பது என்பதுதான் அவர்களே முன்வைக்கின்ற சட்டம் கூறுகின்ற வழிமுறை.

ஆனால் போலீசு வர்க்க ரீதியாக ஏழை, பணக்காரர்கள் என்பதை பார்த்து பணக்காரர்கள் முன்வைக்கின்ற குற்றச்சாட்டுகள் அத்தனையும் உண்மை என்பதைப் போலவே ஏற்றுக்கொள்கின்றனர்.

குற்றம் சுமத்தப்படுபவர்கள் ஏழையாகவும், கூலிகளாகவும் இருந்து விட்டால் கண்டிப்பாக அவர்கள் தவறு செய்வார்கள் என்பது போலீசின் பொதுப்புத்தியில் எப்போதும் நிரந்தரமாக பதிவாகியுள்ளது என்பதன் அடையாளம் தான் அஜித்குமார் மீது கொடூரமான மூன்றாம் தர வகையிலான தாக்குதல்கள் நடத்தி உண்மையை ஒத்துக் கொள்ள வைத்த கேடுகெட்ட வழிமுறையாகும். போலீசு அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு கொடூரமாக தாக்கியதன் விளைவு அஜித்குமார் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது மட்டுமல்ல! திமுக ஆட்சியில் கைது செய்யப்படுபவர்கள் மீது போலீசின் விதிகளில் உள்ளபடி சட்டத்தின் படி நடத்தப்படுவதில்லை. மாறாக தப்பியோட முயற்சித்தார்கள் எனவே குறைந்தபட்ச பலப்பிரயோகத்தை பயன்படுத்தினோம் என்று எஃப்ஐஆர் பதிவு செய்துவிட்டு, அதிகபட்சமாக இரும்புத் தடியை பயன்படுத்தி தாக்குதல்களை தொடுப்பது, கை, கால்களை முறித்து போட்டுவிட்டு பாத்ரூம்களில் வழுக்கி விழுந்தார்கள் என்று அப்பட்டமாக புளுகுவது போன்றவை அம்பலமாகி நாறிய பிறகும் போலீசு இன்னமும் திருந்த வில்லை. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு 24 பேர் லாக்கப் படுகொலையில் பலியாகியுள்ளனர்.

திமுக ஆட்சியில் போலீசு ராஜ்ஜியம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது என்பதற்கு மற்றொரு எடுத்துக்காட்டாக கடந்த சில ஆண்டுகளில் மட்டும் 19 என்கவுண்டரில் 21 பேர் கொல்லப்பட்டதாகவும், கைது செய்தபின்பு குற்றவாளிகளை காவல்துறையினர் சுட்டுக்கொல்வது அதிகரிப்பதாகவும்” பல்வேறு அமைப்புகள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள் 75 பேர் கையெழுத்திட்டு கூட்டறிக்கை வெளியிட்டனர்.

இந்த வகையில் கைது செய்வதற்காக சுட்டு பிடிப்பது; கைது செய்யப்பட்ட பிறகு சுட்டு பொசுக்குவது போன்ற வழிமுறைகளில் திமுக ஆட்சியின் கீழ் தமிழக போலீசு தறிக்கெட்டுப் போயுள்ளது.

படிக்க:

♦ லாக்கப் மரணம் – காவல்துறையின் அதிகாரத்திமிர்!

♦ திருப்புவனம் –காவலாளி அஜீத் குமார் அடித்துப் படுகொலை! தமிழ்நாடு போலிசு படு அட்டூழியம்!

பொதுவாக, “சட்டம் அதன் கடமையை செய்கிறது” என்பது தான் திமுகவின் தாரக மந்திரம். அது கிடைக்கட்டும். ஆனால் அந்த சட்டம் ஏழைகளின் மீது மட்டும் ஏன் மூர்க்கமாக, வெறி பிடித்த நாய் போல பாய்கிறது என்பதே கேள்வி.

சமீபத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவிலில் குத்தாட்டம் போட்ட பார்ப்பன அர்ச்சகர்கள் மீது இது போன்ற லத்திக்கம்புகள் பாயவில்லையே. பெண்களின் மீது விபூதி அடிப்பதும், ஆபாச நடனமாக ஆடி அதையும் வீடியோ எடுத்து வெளியில் போட்டதையும் கண்ட பிறகும் போலீசின் சட்டம், அங்கு ஒழுங்கு செய்ய ஒரு கூந்தலையும் புடுங்கவில்லையே ஏன்?

இதுதான் தமிழகத்தில் திமுக ஆட்சியின் கீழ் உள்ள போலீசின் தற்போதைய அராஜகமான செயல்பாடுகளின் சுருக்கமான நிலைமை.

பொதுவாக இது போன்ற லாக்கப் மரணங்களை நிகழ்த்திவிட்டு அம்பலமானவுடன் அந்த குடும்பத்துடன் பேச்சு வார்த்தை நடத்தி சில ஆயிரங்கள் அல்லது லட்சங்கள் நஷ்ட ஈடாக வழங்குவது; வீட்டில் ஒருவருக்கு வேலை தருகிறோம் என்று ஆசை காட்டுவது போன்ற வழிமுறைகள் மேல் மூலம் ஏழ்மையின் மீது வேறொரு வகையிலான கொடூரமான தாக்குதலை நடத்தி போலீசு தப்பித்துக் கொள்கிறது.

தொடர்ச்சியாக அன்றாடம் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் இதுபோன்ற சம்பவங்கள், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கிறோம் என்ற பெயரில் நடத்துகின்ற போலீஸ் நடத்துகின்ற அடாவடித்தனங்கள், அதிக்கிரமங்கள் ஆகியவை வெளியே தெரிவதில்லை.

அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம் போல திமுக ஆட்சியில் 24 பேர் லாக்கப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பது தற்போது அம்பலமாகி திமுகவின் முகத்திரையை கிழித்தெறிந்து உள்ளது.

சிவகங்கை லாக்கப் படுகொலைக்கு காரணமான அனைத்து போலீஸ் துறையினரையும் கைது செய்! பணிநீக்கம் செய்! கொலையான அஜித் குமார் குடும்பத்திற்கு உரிய நஷ்ட ஈடு தொகையை போலீஸ் துறையிடம் அதிலும் குறிப்பாக இந்த கொடூரமான தாக்குதல்களை நடத்திய போலீசாரிடம் வசூல் செய்து கொடு என்று போராடுவோம்.

கணேசன்.

நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி

2 COMMENTS

  1. ஆம். கட்டுரையாளர் தோழர் கணேசன் குறிப்பிட்டுள்ளது போல இவ்விதம் சாதாரண எளிய மக்கள் பொய் குற்றச்சாட்டுகளின் மீது தாக்குதல்களுக்கு உள்ளாகி கொலை செய்யப்படுவதும், காலை உடைத்து கையை உடைத்து இடுப்பை உடைத்து மாவு கட்டு போட வைப்பதும், காரணம் கேட்டால் பாத்ரூமில் விழுந்து விட்டார்கள்; கக்கூஸில் விழுந்துவிட்டார்கள்; தப்பி ஓடும் போது விழுந்து விட்டார்கள் என்று அப்பட்டமாக புளுகுவதை போலீஸ் வழக்கமாக கொண்டிருப்பதையும் போலி என்கவுண்டர்ள் மூலமாக காக்காய் குருவிகளைச் சுட்டுத் தள்ளுவது போல மனிதர்களை சுட்டுக் கொள்வதை நாம் கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.

    இப்படிப்பட்ட தாக்குதல்களுக்கு மேட்டுக்குடி மக்கள் மீதோ அல்லது மதக் கலவரங்களை தூண்டுகின்ற – வன்முறைகளுக்கு வித்திடுகின்ற உயர் சாதி எச் ராஜா & கோ போன்றோர் மீதோ- திரு வில்லிபுத்தூர் பெரிய முத்து மாரியம்மன் கோவிலில் அரை நிர்வாண கோலத்தில் ஆபாச குத்தாட்டம் போட்ட அர்ச்சகர் பார்ப்பனர்கள் போன்றோர்
    மீதோ காவல்துறை மயிரளவும் நடவடிக்கைகள் மேற்கொள்வதில்லை. ஆள் கடத்தல் போன்ற அருவருக்கத் தகுந்த செயல்களில் பணத்துக்காக ஈடுபடுகின்ற ஏடிஜிபி ஜெயராம், புரட்சி பாரதம் ஜெகன் மூர்த்தி போன்றோர் மீதெல்லாம் கூட பெயரளவுக்கு வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன; அவர்களோ தத்தம் உயர் செல்வாக்குகளை பயன்படுத்தி தப்பித்துக் கொள்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் மீதெல்லாம் போலீசின் விரல் நுனி கூட பட்டதில்லை. அப்படிப்பட்ட குற்றவாளிகள் வழக்கறிஞர்கள் புடைசூழ நீதிமன்றங்களையும் நீதிபதிகளின் வீடுகளையும் முற்றுகையிட்டு தங்களது பராக்கிரமங்களை காண்பித்துக் கொள்கிறார்கள். குற்றவாளிகளா இருந்தும் அப்பாவி ஏழை மடப்புரம் அஜித் குமாரைப் போல மேற்கண்டோர் எள்ளின் முனை அளவும் தாக்குதலுக்கு உண்டாக்கப்பட்டதாக சரித்திரம் இல்லை. இதைவிட கொடுமை சமூக செயற்பாட்டாளர்கள் சங்கீகளால் கொலை செய்யப்படுகின்ற பொழுதும், பழங்குடியின மக்கள் ஆண்டாண்டு காலமாக தான் வாழ்ந்து வரும் மலைகளில் இருந்து வனங்களில் இருந்து பலவந்தமாக அப்புறப்படுத்த முயற்சி கையில் அவர்கள் எதிர்த்து நின்று போராடுகையில் இந்திய ராணுவம் துப்பாக்கியால் சுட்டு பொசுக்குவதும் அந்த அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பளிக்க முற்படும் புரட்சிகர மாவோயிஸ்டுகளையும் கொத்துக்கொத்தாய் சூட்டு பொதுக்குவதும், மலைகளில் குவிந்து கிடக்கும் கனிம வளங்கள் அனைத்தையும் அதானி அம்பானி மிட்டல் அகர்வால் போன்றோருக்கு தாரை பார்க்க துடிப்பதும் ஒன்றிய அரசும் அதன் அடியாள் பட்டாளமான ராணுவமும் ஈவிரக்கமின்றி செல்களில் ஈடுபடுகின்ற அனைத்தையும் இந்திய நாட்டு உழைக்கும் மக்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். உழைக்கும் மக்களின் மௌனம் எதிரிகளுக்கு சாதகமாக அமைந்து விடுகின்றன. ஆனால் காலம் தொடர்ந்து இப்படியே நீடித்துக் கொண்டு போகும் என்பது மட்டும் மனப்பால் குடிப்பார்களேயானால் அத்தனைக்கும் மொத்தமாக ஹிட்லர் முசோலினி பாணியில் அழிந்து போவார்கள் என்பது மட்டும் திண்ணம்.

    இதில் மேற்கொண்டு கொடுமை என்னவெனில் இந்த அக்கிரமங்களை எல்லாம் வெளியிடுகின்ற அச்சு ஊடகங்களாக இருந்தாலும் சரி youtube மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களாக இருந்தாலும் சரி இவை எல்லாம் ஒரு சேர நின்று கொண்டு பாசிச மோடியை ஆதரிப்பதும், மோடிக்கு எதிரான ஆட்சி நிலையை கொண்டவர் என்பதனால் ஸ்டாலினின் ஆட்சியை மட்டும் எதிர் நிலை எடுத்து நிமிடம் தவறாமல் ஒளிபரப்புவதும்
    பிரச்சனைகளின் தன்மையை பொறுத்து இளைஞர் அஜித்குமார் கொலை விடயத்தில் திமுக அரசு குறிப்பாக மு க ஸ்டாலின் குறைந்தபட்ச நியாயமான நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தும் அதை பாராட்ட விட்டாலும் தொடர்ச்சியாக அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக கரிச்சுக் கொட்டுவதும் என்ற ‘உயர்ந்த பணி’யை
    காசுக்காகவும் பிழைப்புவாதத்திற்காகவும் மேற்கொண்டு வருகின்றனர்.

    இளைஞன் அஜித்குமார் படுகொலையில் அதிமுகவின் எடப்பாடி அண்ட் கோ, பாஜகவின் நயினார், எச்ச ராஜா& கோ, பாமகவின் திலகவதி பாமா போன்றோர் மிகப்பெரிய ஜனநாயக வாதிகள் போல் எந்நாளும் மக்கள் நலன் பேணும் யோக்கியவான்கள் போல் வேடம் தரித்து வீதிகளில் மக்களை சந்திக்க முற்படுவது அதன் மூலமாக அரசியல் அறுவடை செய்து கொள்ள எத்தனிப்பது அசிங்கம் மட்டுமல்ல ; படு ஆபாசமான செயலும் கூட என்பதனை தமிழ்நாட்டு மக்கள் புரிந்தே வைத்துள்ளார்கள். ஆர் எஸ் எஸ் பாஜக தலைமையிலான மோடி அமித்ஷா கூட்டம் இந்திய நாடு முழுமைக்கும் மக்கள் விரோதமான அழித்தொழிப்பு நடவடிக்கைகளை கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக மேற்கொண்டு
    வருவதையும், கடந்த எடப்பாடி ஆட்சிக் காலத்தில் நடந்த அடக்குமுறைகளையும் மக்கள் மறப்பதற்கு இல்லை. இன்று இவர்கள் அரசியல் செய்வதற்காக நாடகம் ஆடுகின்ற போக்குகள் அனைத்தும் மக்கள் அம்பலப்பட்டே தீரும். இவர்களை மக்கள் ஓரங்கட்டுவார்கள் என்பது திண்ணம்.

    அதே நேரத்தில் அஜித் குமார் படுகொலையில் உள்ளூர் ஆளுங்கட்சியினர் காவல் துறையினருடன் இணைந்து சமரசம் பேச எத்தனைத்தது மிகவும் இழிவான செயல். அப்படிப்பட்டவர்கள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மொத்தத்தில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் ஒப்பந்த காவலாளி அப்பாவி ஏழை அஜித் குமார் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான அம்பலப்படுத்தும் கட்டுரை படைத்திட்ட தோழர் கணேசன் அவர்களுக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்!

  2. சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை குறித்த கட்டுரை இன்னும் விரிவாக எழுதியிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் கூடுதலாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணை கைதியின் மர்மமான முறையில் இறந்தது கோடநாடு எஸ்டேட்டில் கொலை வழக்கில் விசாரணையில் மர்மமாக இறந்தது சாத்தான்குளம் அப்பன் மகன் லாக்கப்பில் கொலை செய்யப்பட்டது ஸ்டெர்லைட் போராட்டத்தில் முன்னறிவிப்பு இல்லாமல் துப்பாக்கியால் 13 பேரை காவலர்கள் சுட்டது இப்படி எண்ணற்ற காவல்துறையின் அட்டூழியங்களை அத்துமீறல்களை இன்னும் கூடுதலாக அம்பலப்படுத்தினால் சிறப்பாக இருக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here