நாட்டின் வட மேற்கே இருக்கக்கூடிய சீக்கிய மதத்தினரை பெரும்பான்மையாகக் கொண்ட மாநிலம் பஞ்சாப். பஞ்சாப் என்றால், ஐந்து நதிகள் பாயும் நிலம் என்று அர்த்தம். இந்தியாவில் உள்ள பஞ்சாபில் சட்லெஜ், ராவி, பியாஸ் ஆகிய 3 நதிகள் பாய்கின்றன. செனாப் மற்றும் ஜீலம் நதிகள் பாகிஸ்தான் பஞ்சாபில் ஓடுகின்றன.

2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பஞ்சாபில் 2 கோடியே 77 லட்சத்து 43 ஆயிரத்து 338 பேர் வசிக்கிறார்கள். இவர்களில் சீக்கியர்கள் 57.69%, இந்துக்கள் 38.49% இருக்கிறார்கள். இஸ்லாமியர்கள் 1.93, கிறிஸ்தவர்கள் 1.26%, பவுத்தர்கள் 0.12%, சமணர்கள் 0.16% வாழ்கிறார்கள். பாலின விகிதத்தை எடுத்துக்கொண்டால், ஆயிரம் ஆண்களுக்கு 938 பெண்கள் இருக்கிறார்கள்.

பஞ்சாபில் மூன்றில் இரண்டு பங்கு விவசாயம் நடைபெற்று வருவதால் நாட்டின் முக்கிய உணவு தேவைகளான கோதுமை மற்றும் நெல் உற்பத்தியில் பஞ்சாப் நாட்டிற்கு தேவையான அளவிற்கு உற்பத்தி செய்து கொடுக்கின்றது.

பால் மற்றும் பால் பொருட்களை உற்பத்தி செய்வதிலும் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் பஞ்சாப் உள்ளது. பஞ்சாப் மற்றும் ஹரியானா ஆகிய இரு மாநிலங்கள் ஒன்றாக இருந்த காலத்திலும், அதன் பிறகு தனித்தனியாக உள்ள காலத்திலும் தொழில் துறையில் ஓரளவுக்கு முன்னேறி இந்தியாவிற்கு தேவையான மின்னணு சாதனங்களை உற்பத்தி செய்வதிலும், ஆயத்த ஆடைகள் உற்பத்தியிலும் முன்னிலையில் இருக்கின்றது.

இத்தகைய பின்னணி கொண்ட பஞ்சாபில் நிலவுகின்ற அரசியல் அதன் வளங்களை பயன்படுத்திக்கொண்டு பஞ்சாப் மாநிலத்தையும், பஞ்சாப் மக்களின் வாழ்க்கை தரத்தையும் முன்னணிக்கு கொண்டு செல்வதற்கு பதில் பிற்போக்குத்தனமான மதவாத கருத்துக்களை ஊக்குவிக்கின்ற அரசியல்தான் அங்கு ஆதிக்கம் செலுத்துகிறது.

பஞ்சாபில் 50க்கும் மேற்பட்ட கட்சிகள் இருந்தாலும் அதில் நான்கு கட்சிகள்தான் முக்கியமான பங்கை வகிக்கின்றன. அதில் காங்கிரசு, ஆம் ஆத்மி, மற்றும் சிரோமணி அகாலிதள், பாரதிய ஜனதா போன்ற கட்சிகள் தான் அவை. அகாலிதள் கட்சியானது பாதல் பிரிவு, சன்யுக்த் பிரிவு, சிம்ரன்ரஞ்ஜித் சிங் மான் பிரிவு என்று மூன்று முக்கிய பிரிவுகளாக பிரிந்துள்ளனர்.

பஞ்சாபில் தனது அடித்தளத்தை நிறுவிக் கொள்வதற்காக பாசிச பாஜக 2014 நாடாளுமன்ற தேர்தலிருந்து முயற்சி செய்து வருகிறது. அதன் அடிப்படையில் காங்கிரசுக்கு எதிராக அகாலிதள் பிரிவில் ஓரளவு செல்வாக்கு படைத்துள்ள பாதல் பிரிவுடன் கூட்டு சேர்ந்து தேர்தலில் போட்டியிடுகிறது.

இந்த அடிப்படையில் தான் 2014 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகியவை தனித்துப் போட்டியிட்டன. சிரோமணி அகாலிதளமும், பாஜகவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. சிரோமணி அகாலி தளம் 10 தொகுதிகளிலும், பாஜக 3 தொகுதிகளிலும், போட்டியிட்டன. சிரோமணி அகாலிதள் 26.37% வாக்குகளுடன் 4 தொகுதிகளிலும், பாஜக 8.77% வாக்குகளுடன் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. ஆம் ஆத்மி கட்சி 24.40% வாக்குகளுடன் 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 33.10% வாக்குகளுடன் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

அடுத்து வந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி ஆகியவை தனித்துப் போட்டியிட்டன. சிரோமணி அகாலி தளமும் பாஜவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. சிரோமணி அகாலி தளம் 10 தொகுதிகளிலும், பாஜக 3 தொகுதிகளிலும் போட்டியிட்டன. இந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி 40.57% வாக்குகளுடன் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சி 7.46% வாக்குகளுடன் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றது. சிரோமணி அகாலி தள் 27.76% வாக்குகளுடன் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக, 9.74% வாக்குகளுடன் 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது.

தற்போதைய 2024 நாடாளுமன்ற தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் மொத்தம் உள்ள 13 தொகுதிகளில் காங்கிரஸ் 7 இடங்களில் வென்றது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மிக்கு 3 இடங்கள்தான் கிடைத்தன. அகாலி தளம் 1 இடத்திலும் சுயேட்சைகள் 2 இடத்திலும் வெற்றி பெற்றனர். வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சிக்கு 26.30%; ஆம் ஆத்மி கட்சிக்கு 26.02% ; பாஜகவுக்கு 18.56% ;அகாலிதளம் கட்சிக்கு 13.42% வாக்குகள் கிடைத்து உள்ளன. 2014 தேர்தலில் 26.37% வாக்குகள் பெற்ற சிரோமணி அகாலிதள் 2024 தேர்தலில் வெறும் 13.42% வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளது கவனிக்கத்தக்கதாகும்.

கூட்டணி வைத்த கட்சிகளை உடைப்பது, அதில் உள்ள பதவி வெறியர்கள் விலை போகும் தேர்தல் வியாபாரிகள் ஆகியவர்களை குறி வைத்து தூக்குவது, அவர்களை தனது கட்சிக்கு இழுப்பதில் கடந்த பத்தாண்டு கால அனுபவத்தை மீண்டும் துவங்கியுள்ளது பாசிச பாஜக.

2024 தேர்தலுக்குப் பின் சிரோமணி அகாலிதள் பாதல் பிரிவை உடைப்பதற்கான முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதிலுள்ள இரண்டாம் கட்ட தலைவர்களை சுக்பீர் சிங் பாதலுக்கு எதிராக தூண்டிவிட்டு, ஜூலை ஒன்றாம் தேதி முதல் பஞ்சாப் முழுவதும் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு ஏற்பாடு செய்துள்ளது.

இந்த லட்சணத்தில் தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணி கட்சிகளுடன் இணைந்து நேர்மையாக ஆட்சி நடத்துவார்கள்; அவர்களின் அபிலாசைகளை புரிந்து கொண்டு நடப்பார்கள்: முன்பு போல மூர்க்கத்தனமாக செயல்பட மாட்டார்கள் என்றெல்லாம் கோடி மீடியாக்கள் குதித்து வருகின்ற சூழலில், இந்த முன்னாள் கூட்டணி கட்சியான சிரோமணி அகாலிதள் கட்சியை பிளக்கும் கேடுகெட்ட செயல் துவங்கியுள்ளது.

இது ஒரு ஆரம்பம்தான் தொடர்ச்சியாக பல்வேறு கட்சிகளை பாசிச பாஜக தூண்டில் போட்டு விழுங்கும், பணியாதவர்களுக்கு பழைய பாணியில் ஈடி, ஐடி, சிபிஐ போன்ற ஏவல் நாய்களை ஏவிவிட்டு அடக்குமுறை செலுத்தும், பிறகு படிப்படியாக தனது கட்டுப்பாட்டின் கீழ கொண்டு வரும் என்பது நிரூபணமாகியுள்ளது.

படிக்க:

♦ ஐந்து மாநில தேர்தல்கள்: தேவை கவர்ச்சி திட்டமா? குறைந்தபட்ச செயல்திட்டமா?

♦ பாசிச பாஜக ஆட்சிக்கு விசுவாசமாக குரைக்கும் ’பல்டி மாமா’ நிதிஷ்குமார்!

பிரிட்டன் காலனியாதிக்கத்தின் போது அதற்கு எதிராக வீரம்செறிந்த முறையில் போராடிய மரபு பஞ்சாப் மக்களுடையது. சுதந்திரப் போராட்டத்தில் பிரிட்டனுக்கு எதிராக ஆயுதமேந்தி போராடுவதன் மூலமே காலனியாதிக்கத்தை வீழ்த்த முடியும் என்று இளைஞர்களை ஒன்று திரட்டிப் போராடிய பகத்சிங் இந்திய விடுதலைப் போராட்டத்தின் குறியீடாகவும், பாட்டாளி வர்க்கத்தின் முன்னோடியாகவும் உள்ளார்.

தற்போதைய மறுகாலனியாக்கக் கட்டத்தில், விவசாயத்தை கார்ப்பரேட்டுகள் கொள்ளையடிக்க மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்த பாசிச மோடியின் ஆட்சிக்கு எதிராக போர்க்குணமிக்க முறையில் ஓராண்டிற்கும் மேலாக போராடி உலக மக்களுக்கே போராட்ட வடிவத்தை கற்றுக் கொடுத்தது பஞ்சாப். 700க்கும் மேற்பட்ட விவசாய, தொழிலாளர் சங்கங்கள் ஒன்றிணைந்து ஒரே தலைமையின் கீழ் பதவிப் போட்டிகள் இன்றி, குறிக்கோள் ஒன்றையே நோக்கமாகக் கொண்டு வெற்றிகரமாக அந்த போராட்டத்தை நடத்தி இந்திய அரசியலுக்கு பொருத்தமான முன்னோட்ட பாதையை உருவாக்கியுள்ளது.

இத்தகைய பஞ்சாபில் அடிப்படை வர்க்கமான விவசாயிகளும், தொழிற்துறை வளர்ச்சியின் மூலம் படிப்படியாக தொழிலாளர்களும் அதிகரித்து வருகின்றனர். தொழிலாளர்கள் விவசாயிகளை ஒன்று திரட்டுவதற்கு தற்போதுள்ள இடதுசாரி அமைப்புகள் ஒரு சில மார்க்சிய லெனினிய குழுக்கள் வேலை செய்து வந்தாலும் அவர்களின் செயல்பாடு மத ரீதியிலான அகாலி குழுக்களின் செயல்பாடுகளுக்கு பதில் அளிப்பதாக இல்லை என்பதுதான் தற்போதைய நிலவரமாகும்.

இவை அனைத்தையும் கணக்கில் கொண்டு பாசிச பாஜகவை அரசியலில் இருந்து வீழ்த்துவதற்கு பொருத்தமான பாட்டாளி வர்க்க கட்சி ஒன்றை பஞ்சாப் மக்கள் கட்டியமைப்பார்கள் என்பது திண்ணம்.

முகம்மது அலி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here