பூலே – கடந்த காலத்தின் சங்கடமான வரலாறு

பூலே - கடந்த காலத்தின் சங்கடமான வரலாறு
பூலே படம், பகுஜன் vs பிராமிண் என்கிற பைனரியை உருவாக்கும்போது பதற்றமடைகிறது.

பூலே சினிமா விமர்சனம்

‘ஒரு கண்ணில் வெண்ணெய், ஒரு கண்ணில் சுண்ணாம்பு.’ என்றொரு பழமொழி உண்டு. இந்தியாவின் CBFC ( Central Board of Film Certification) அப்படிதான் நடந்து கொள்கிறது.

CBFC அமைப்பு சுயேச்சையான, வெளிப்படையான,நேர்மையான அமைப்பாக இருக்க வேண்டும். ஆனால் பா.ச.க ஆட்சியில் இது சாத்தியமில்லை. அரசின் சுயேச்சையான நிறுவனங்கள் பலவற்றில் இந்துத்துவா ஊடுருவியிருப்பதை காண்கிறோம்.

CBFC இன் இந்துத்துவா சாய்வின் வெளிப்பாட்டை கடந்த ஆண்டுகளில் வெளியான காஷ்மீர் ஃபைல்ஸ், கேரளா ஸ்டோரி, 72 ஹூரைன், சபர்மதி ரிப்போர்ட் போன்ற படங்கள் வாயிலாக உணரமுடிந்தது. சமீபத்தில் CBFC சாவ்வா பட விசயத்திலும் இந்தக் கருணையைக் காட்டியது.

சாவ்வா படம் உண்மையான வரலாறு. ஆனால் படத்தில் வரலாற்றைத் திரித்திருந்தார்கள். ஔரங்சீப்பை கொடுமைக்கார பேரரசராக சித்தரித்து இருந்தார்கள். வரலாற்றை இப்படி ஒற்றைமயப்படுத்துவது தவறு. ஔரங்கசீப்பின் பல பரிணாமங்கள் இப்படத்தில் விடுபட்டிருக்கின்றன. அவர் எளிமையானவர். மாற்று மதங்களுக்கு மதிப்பளித்தவர். கருணையாளர். இவைகுறித்த சிறிய பதிவுகளும் இப்படத்தில் இல்லை. சபர்மதி ரிப்போர்ட் சமகால வரலாறு. அப்படத்திலும் உண்மை திரிக்கப்பட்டிருந்தது.

சமகால அரசியலுக்கு சேவகம் செய்ய வரலாற்றை வளைக்கின்றன இந்துத்துவா சக்திகள். இதற்குத் துணைபோகிறது CBFC. இப்போது பூலே (phule) படம் வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் CBFC, 12 இடங்களில் வெட்டியுள்ளது.

பல இடங்களில் மாற்றங்களைக் கோரியிருந்தது. இப்படம் மகாத்மா ஜோதிராவ் பூலே மற்றும் அவரது துணைவியார் சாவித்ரி பாய் பூலே இருவரின் வாழ்க்கை வரலாற்றுப் படம்.

இந்தியாவின் பலவீனம் அதன் மறதி.

ஒரு மகாத்மாவை ஞாபகமிருக்கும் அளவு, அது இன்னொரு மகாத்மாவை நினைவில் வைத்திருக்கவில்லை. காந்தி கஸ்தூரிபாயைக் கொண்டாடியதைவிட இன்னொரு மகாத்மாவான ஜோதிராவ் பூலே தனது மனைவி சாவித்திரி பாய் பூலேவை அதிகம் கொண்டாடினார். அவருக்கு திருமணமானபோது மனைவி சாவித்திரி பாய் பூலேவுக்கு வயது 9.

ஆனால் சாவித்திரியை தன்னுடனேயே படிக்க அழைத்துச் சென்றார் ஜோதிராவ்.பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டிருந்த காலமில்லையா? சாணிப்பாலை முகத்தில் வீசினார்கள். அவமானங்களைத் துணிந்து எதிர்கொண்டு பயின்றார் சாவித்திரி. துணையாக பலம் தந்தார் கணவர். தனது பள்ளியிலேயே மனைவி சாவித்திரிபாயை, தலைமையாசிரியர் ஆக்கினார் ஜோதிராவ். அவரே இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர்.

இளம் விதவைகளின் அழகைப் பாழாக்க மோட்டையடித்து கைம்பெண் நோன்புக்கு பெண்ணைத் தள்ளிய கொடுங்காலம். முடிதிருத்தும் கலைஞர்களை ஒருங்கிணைத்து விதவைகளுக்கு மொட்டையடிக்க மாட்டோம் என உறுதியேற்கவைத்த கலகக்காரர் சாவித்திரிபாய்.

தாழ்த்தப்பட்ட மக்கள் குடிக்க, இவ்விணையர் தம் இல்லத்தில் கிணறு வெட்டினர். அவர்களது நோய் போக்க மருத்துவமனை கட்டினார்கள்.

நேரு இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் போலவே சாவித்திரிபாய் ஜோதிராவ் பூலேவுக்கு எழுதிய கடிதங்கள் முக்கியமானவை. அவை அன்றைய மராட்டியத்தில் நிலவிய தீண்டாமையின் இழிவை, வறுமையைப் பேசுபவை. பஞ்சத்தில், குடிக்கத் தண்ணீரின்றி, மக்கள் தம் சிறுநீரையே அருந்தியதாக எழுதுகிறார்.

படிக்க:

ஜோதி ராவ் பூலே வாழ்விலிருந்து சமூக நீதிப் போராட்டத்தை கற்றுக் கொள்வோம்!

சினிமா: பாசிசத்தின் கீழ் கலைஞன் சோதிக்கப்படுகிறான் !

வாழ்வின் அந்திமம்வரை ஒடுக்கப்பட்டோர் நலன், அவரது கல்வி, மருத்துவம் எனும் திசைவழியில் அயராது போராடிய வீரப்பெண்மணி சாவித்திரி பாய் பூலே. மராட்டியத்தில் ப்ளேக் பரவியபோது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தனது டாக்டர் மருமகனோடு சேர்ந்து சேவைசெய்தார். நோய்த் தொற்றுக்கு ஆளாகி உயிர் துறந்தார். ஜோதிராவ் பூலே மற்றும் சாவித்திரிபாய் பூலே இவர்களுடைய வாழ்வின் சுருக்கம் இது.

இவர்களுடைய உண்மைக்கதைதான் பூலே படம். இப்படத்தை ஆனந்த் மகாதேவன் இயக்கியிருக்கிறார். இப்படத்தில், பிராமண சிறுவன் ஒருவன் சாவித்ரிபாய் மீது கல் எறிவது போன்ற ஒரு காட்சி. இக்காட்சியை பிராமண சமூகத்தின் பிரதிநிதிபோல CBFC ஆட்சேபித்தது. இக்காட்சி பகுஜன்களிடம் (தலித்துகளிடம்) பிராமணர்கள் மீது வெறுப்பை வளர்க்கும், என பார்ப்பன சமுகமும் CBFCயும் கருதுகிறது. திரைப்படங்கள் மூலம் இந்து vs முஸ்லீம், பகுஜன் vs ஓபிசி , போன்ற பைனரி உருவாகும்போது அதை CBFC உடன் சேர்ந்து பிராமண சமூகமும் ரசிக்கிறது.

அதேவேளை பூலே படம், பகுஜன் vs பிராமிண் என்கிற பைனரியை உருவாக்கும்போது பதற்றமடைகிறது. பார்ப்பனர்கள் கடந்தாலத்தின் சங்கடமான தங்கள் வரலாற்றை எதில் மூடி மறைக்கலாம்! என அவஸ்தைப்படுவது தெரிகிறது. கடந்த காலம் தோண்டி எடுக்கப்பட்டு வெளியே கொண்டு வரப்படும்போது, அதை எதிர்கொள்வதைத் தவிர்த்து அவர்களுக்கு வேறுவழியில்லை.

இனி வெகுநாட்கள் இசுலாம் எதிர்ப்பைக் காட்டி இந்துத்துவாவை நிலைநிறுத்த முடியாது. இந்துத்துவாவுக்குள் இருக்கும் முரண்களை உரையாடும் கலைப்படைப்புகள் நிகழ்காலத்தின் அவசியமாக வெளிப்படவே செய்யும்.

நன்றி

முகநூல் பதிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here