
“அவர்கள் என்னை வதைப்பார்கள், என் உடலை முறியடிப்பார்கள்; ஆனால் என் ஆன்மாவை முறியடிக்க முடியாது” – ஜூலியஸ் பூசிக். 1943 செப்டம்பர் 8ஆம் தேதி ஜெர்மனியின் பெர்லின் நகரில் உள்ள பிளாட்சென்சே சிறையில் பாசிச ஹிட்லரின் படையால் தூக்கிலிடப்பட்டார். கடைசி ஒரு ஆண்டு முழுவதும் நாஜிக்களால் சிறையில் கொடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்.
யார் இவர்? ஏன் இவரைப் பற்றி நாம் பேச வேண்டும்?
ஜூலியஸ் பூசிக் செக் நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளர், எழுத்தாளர் இதையெல்லாம் விட அவருக்கு பெருமையான விஷயம் தான் ஒரு கம்யூனிஸ்ட் என்பதே. இரண்டாம் உலகப் போரின் போது நாஜி ஜெர்மனி செக்கோஸ்லோவாகியாவை கைப்பற்றிய போது அவர் உழைக்கும் மக்களின் தனது நாட்டை பாசிச கும்பலிடமிருந்து காப்பாற்ற கம்யூனிஸ்ட் கொள்கையை உயிர்மூச்சாக பற்றிக்கொண்டு போராடினார்.
கட்டுரையாளனான எனக்கு ஜூலியஸ் பூசிக் அறிமுகமானது அவருடைய சிறை குறிப்புகளால் செதுக்கப்பட்ட தூக்கு மேடை குறிப்பு நூலின் மூலம் தான். படிப்பவர்களை உணர்ச்சி வெள்ளப்பெருக்கில் மூழ்கடிக்கும் அந்நூல் என்னை கம்யூனிஸ்ட் ஆக வளர புடம் போட்டது. துவண்ட போதெல்லாம் தட்டியெழுப்பியது என்றே கூற வேண்டும். உழைக்கும் மக்களின் விடுதலைக்காக போராடும் கம்யூனிஸ்டுகளுக்கு ஜூலியஸ் பூசிக் மிகச் சிறந்த உதாரணம். எந்த சூழ்நிலையிலும், சாவின் விளிம்பில் நின்று கொண்டிருக்கும் போதும், சிறையில் சித்திரவதைகளை அனுபவித்த போதும் சிறிதும் மனம் தளராமல் சிறைசாலைக்குள்ளும் கம்யூனிஸ்டாக தன் வேலையை செய்து கொண்டிருந்தார். ஜூலியஸ் பூசிக் எழுதிய தூக்கு மேடை குறிப்பு அவர் இறப்பிற்கு பின் அவரது துணைவியார் அகுஸ்தினா பூசிக்கால் தொகுக்கப்பட்டு நூலாக்கப்பட்டது. உலக இலக்கியங்களில் இன்றுவரை மிகச் சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
தன் வாழ்நாளை மக்களுக்காக மட்டுமே வாழ்ந்து தியாகியானவர்கள் சிலரே. அவர்களில் ஜூலியஸ் பூசிக்கும் ஒருவர். இன்றைய இளம் தலைமுறையினருக்கு தோழர் ஜூலியஸ் பூசிக்கை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முதலாளித்துவ உலகம் சாகசவாதிகளை பிரபலப்படுத்தும் அதே நேரத்தில் உண்மையான மார்க்சிய லெனினிய கொள்கை உறுதி கொண்ட கம்யூனிஸ்டுகளை ஒழித்துக் கட்டவே பார்க்கிறது.
இளைஞர்களே, சினிமாவில் ரீல் ஹீரோக்களை, தங்கள் ஆஸ்தான நாயகனை பின்தொடரும் நீங்கள் நிஜ வாழ்வில் மக்கள் நலனுக்காக தங்கள் உயிரை துச்சம் என நினைத்த ஜூலியஸ் பூசிக் போன்ற ரியல் ஹீரோக்களின் கொள்கைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். அவர்கள் யாருக்காக போராடினார்கள், எதற்காக தூக்கிலிடப்பட்டார்கள் என்பதை பற்றிய தேடலும் அவசியம். அபபடியில்லாமல் அரசியல் அறிவற்ற நடிகர்களின் பின்னாலும் குறளை உயர்த்தி வாய் சாலால் பேசும் தரங்கெட்ட அரசியல்வாதிகளின் பின்னால் சென்று தங்களுடைய வரலாற்றுக் கடமையை மறந்துவிடாதீர்கள். மேற்குறிப்பிட்ட பிழைப்புவாதிகள் உழைக்கும் மக்களுக்கான நிரந்தர தீர்வு பற்றி யோசிக்கவே மாட்டார்கள். அவர்களுக்கான அரசியலையும் பேசமாட்டார்கள்.
படிக்க: உலகை விழுங்கவும், நசுக்கவும் பரவும் பாசிசம்! தீர்வு கம்யூனிசம் மட்டுமே!
ஜூலியஸ் பூசிக்கின் காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் அதாவது பாசிச ஜெர்மனியுடன் ஒப்பிடுகையில் இந்தியா காவி மதவெறியர்களாலும், கார்ப்பரேட் பாசிச கும்பலின் நவீன சுரண்டராலும் மக்களை சொல்லொணா துன்பத்தில் தள்ளியுள்ளார்கள். படித்த இளைஞர்களின் வேலையில்லா ரிசர்வ் பட்டாளமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விலைவாசி உயர்வு வேலையின்மையால் ஏற்படும் வறுமை என இந்திய மக்கள் பாசிசத்தின் சிறைக்கூண்டில் பேச்சுரிமை, கருத்துரிமை அற்றவர்களாகவும், மீறி பேசினால் அல்லது போராடினால் எந்த வித விசாரணையும் இன்றி பல வருடம் சிறையில் தள்ளி துன்புறுத்தும் நடவடிக்கையிலும் நாட்டை ஆளும் பாசிச மோடி கும்பல் செய்து வருகிறது.
“கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் மனிதனை நேசிக்கிறோம். மனிதத் தன்மையுள்ள எதுவும் எங்களுக்குப் புறம்பானதல்ல. மிகச் சாதாரண மனித இன்பங்களின் மதிப்பை நாங்கள் அறிவோம். அவற்றிலும் நாங்கள் மகிழ்ச்சி காண முடியும். எனவேதான், மனிதன் உழைப்பை மனிதன் பறிக்கும் அராஜக அமைப்பின் கொடுமை யிலிருந்து – அதாவது பயங்கரப் போரின் துன்ப துயரங்கள், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகிய கொடுமைகளிலிருந்து – விடுவிக்கப்பட்டு மகிழ்ச்சியும், நிறைவும், ஆரோக்கியமும், சுதந்திரமும் உள்ள மனிதனுக்கு இந்தப் பரந்த உலகில் ஒரு இடம் அளிப்பதற்காக எங்கள் சுக போகங்களைத் தியாகம் செய்ய நாங்கள் ஒரு போதும் தயங்குவதில்லை.”
ஜூலியஸ் பூசிக்கின் இந்த உணர்வை நாம் வரித்து கொள்ள வேண்டாமா? குறைந்த கூலிக்கு நம்மை சுரண்டுவதோடு நின்றுவிடாமல். முதலாளித்துவம் உருவாக்கி இருக்கும் நுகர்வுவெறியும் அரசு கார்ப்பரேட்களுக்காக உருவாக்கிய பொருளாதார கொள்கையும் நம்மை ஒட்டச்சுரண்டி கடனாளியாக்கியுள்ளது. நாட்டின் பொருளாதார சமமின்மை அதிகரித்து ஒரு சில முதலாளிகளிடம் சொத்துக்கள் குவிந்துள்ளது. அரசுக்கு நெருக்கமான முதலாளிகள் ஆசிய முதலாளிகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்கள். நாமோ வாழ வழியின்றி வறுமையின் பட்டியலில் உள்ளோம்.
இந்த வேறுபாட்டை களைய வேண்டாமா? அதிகாரம் மக்களின் கைகளுக்கு வருவதற்கு நாம் ஒவ்வொருவரும் ஜூலியஸ் பூசிக்கை போல் உழைக்கும் மக்களின் நலனை முன்னிறுத்தி போராட வேண்டும். நமது அடுத்த தலைமுறைக்கான பாதையை செப்பனிட வேண்டிய கடமை நம்முன் உள்ளது என்பதை மறந்து விடக்கூடாது.
“இன்றைய இருள் என்றென்றும் நிலைக்காது. விடியற்காலை வரும் மக்களின் சுதந்திரம் பிறக்கும்” ஜூலியஸ் பூசிக்கின் இந்த எதிர்கால நம்பிக்கையை உண்மையாக்குவோம்.
- சுவாதி