மீபத்தில் நீட் தேர்வுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வழக்கம் போலவே இந்த ஆண்டும் விடைத்தாள்களிலும், மதிப்பெண் மற்றும் சதவீத கணக்குகளிலும் பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்துள்ளன. இந்த நீட் தேர்வு கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு முறைகேடுகள் தொடர்வதும், புதிது புதிதாக மோசடிகள் அரங்கேறுவதும் நடந்து கொண்டுதான் உள்ளன.

 ஆள் மாறாட்டம், விடைத்தாள் திருத்துவதில் மோசடி, வினாத்தாள் பல லட்சங்களுக்கு முன்கூட்டியே விற்பனை, விடைத்தாளையே மாற்றுவது என பல்வேறு மோசடிகள் ஏற்கனவே அம்பலமாயின. சிபிஎஸ்சி கல்வி, கோச்சிங் சென்டரில் பல லட்சங்களை கொட்டிப் பயிற்சி, அதனோடு சேர்த்து இது போன்ற பல்வேறு முறைகேடுகள், மோசடிகளில் ஈடுபடும் பண முதலைகளுடன் சாதாரண ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் மோதி வெல்ல முடியுமா? நீட் வணிக வர்த்தகம் 2015 இல் 45 ஆயிரம் கோடியாக இருந்தது. இப்போது கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்துள்ளது.

 இந்த லட்சணத்தில்தான் அரசுப் பள்ளியிலும் நீட் தேர்வுக்கான பயிற்சியை நடத்த வேண்டும் என எடப்பாடி, அண்ணாமலை போன்ற அரைவேக்காடுகள், அறிவாளிகள் போல பேசுகின்றனர் – இந்த நீட் எனும் தேவை இல்லாத ஆணிக்காக! இந்தியாவிலேயே அதிக எண்ணிக்கையிலான மருத்துவக்கல்லூரிகளைக் கொண்டிருக்கும் தமிழகம், நீட் தேர்வானது மாநில உரிமையைப் பறிக்கிறது என்பதால் எங்கள் மாநிலத்துக்கு  தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. ஆண்டுதோறும் பல மாணவர்களின் உயிரை பறித்து வரும் இத்தேர்வு வேண்டாம் என சட்டமன்றத்தில் இருமுறை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பியும், ஆளுநரும், ஒன்றிய அரசும் கள்ள மௌனம் காக்கின்றன(ர்).

 காசு உள்ளவனுக்கே மருத்துவக் கல்வி – நீட் எனும் நவீன தீண்டாமை!

 இந்த ஆண்டு இந்திய அளவில் முதலிடம் பிடித்த ஹரியானாவைச் சேர்ந்த மாணவி தனிஷ்கா, கடந்த இரண்டு ஆண்டுகளாக மூன்று வெவ்வேறு கோச்சிங் சென்டர்களில் சேர்ந்து படித்துள்ளார். நீட் தேர்வு அறிமுகமானதிலிருந்தே அதில் அதிக மதிப்பெண்கள் பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேருவது பெரும்பாலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களும், லட்சங்களை செலவழித்து நீட் தேர்வுக்காக தனியார் பயிற்சி பள்ளிகளில் சேர்ந்து படிப்பவர்களும்தான். 

 மெட்ரிக், ஸ்டேட் போர்டு, சிபிஎஸ்இ இப்படி வெவ்வேறு வகையான பாடத்திட்டங்கள் உள்ள நிலையில் அனைவருக்கும் பொதுவான ஒரே தேர்வு என்பது மாபெரும் மோசடி அல்லவா? இந்த மோசடிதான் ஏழு ஆண்டுகளாக அரங்கேறிக் கொண்டு உள்ளது அப்படிப் பணத்தைக் கொட்டிப் படிக்க முடியாதவர்களின் மருத்துவக் கனவுகளை பொசுக்குவதுதான் நீட் தேர்வின் தீய விளைவாக உள்ளது.

தகுதியானவர்களை மருத்துவர் ஆக்குவது தான் நீட் தேர்வின் நோக்கமா?

 நீட் தேர்வை புகுத்தும் போது அதை நியாயப்படுத்த பல்வேறு விஷயங்களை கூறினார்கள். அதில்  தனியார் கல்லூரிகளின் கொள்ளையை தடுப்பது மற்றும் தகுதி, திறமை வாய்ந்த மாணவர்களை மருத்துவர் ஆக்குவது என்பவைதான்  முக்கியமானவை. நன்கொடை என்ற பெயரில் வாங்கியதற்கு பதிலாக இப்போது கட்டணம் என்ற வகையிலேயே அதை ஈடுகட்டிக் கொள்கிறார்கள்.  மேலும் நீட் தேர்வில் ஜஸ்ட் பாஸ் செய்த மாணவர்களையும் சேர்த்துக் கொள்ள மறைமுக கொள்ளையும் நடக்கிறது.

 மருத்துவக் கல்லூரிகளில் சேருவதற்கு, + 2 – வில் குறைந்தபட்சம் 60% மதிப்பெண் பெற வேண்டும் என்ற நிலை முன்பு இருந்தது. இப்போது நீட் தேர்ச்சி மட்டும் போதும். நீட் தேர்வில் 720 க்கு 120 (20 % க்கும் குறைவான மதிப்பெண்) பெற்றிருந்தாலே தேர்ச்சி எனும் போது இதுதான் இவர்கள் சொல்லும் தகுதியா?  மாபெரும் பித்தலாட்டம்தானே இது.

 தேர்வெழுத வருபவர்கள் தீவிரவாதிகளா?

 உலகில் வேறு எங்கும் நடக்காத கொடுமையாக நீட் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகளிடம் – அதிலும் குறிப்பாக தென்னிந்திய மாநிலங்களில் – மெட்டல் டிடக்டரை வைத்து தலை முதல் பாதம் வரை தீவிரவாதிகளை சோதனையிடுவது போல சோதிப்பதும், முழுக்கை சட்டையை வெட்டி எறிவதும், பெண்கள் கழுத்தில் அணிந்து வரும் நகைகளை (தாலி உட்பட) கழட்டச் சொல்வதும், தலை முடியை பிரித்து மேய்வதும், உச்சபட்ச கொடுமையாக உள்ளாடையை கூட உருவி சோதனை நடத்துவதும் என மாணவர்களுக்கு பல்வேறு வகையில் மன உளைச்சலை ஏற்படுத்துகிறார்கள். இப்படி எல்லாம் தேர்வை கெடுபிடியாக நடத்திவிட்டு விடைத்தாள்களில் பல்வேறு பித்தலாட்டங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

 இந்த ஆண்டு தேர்வெழுதிய சென்னையை சேர்ந்த பவமிர்தினி எனும் மாணவி “எனக்கு 600 க்கு மேல் வர வேண்டும். ஆனால் 132 மதிப்பெண்தான் வந்துள்ளது. நான் 13 கேள்விகளுக்குதான் விடையளிக்கவில்லை. ஆனால் எனக்கு வந்துள்ள இந்த விடைத்தாளில் 60 கேள்விகள் விடை அளிக்கப்படாமல் உள்ளது. எனவே இந்த விடைத்தாள் என்னுடையதே அல்ல” என்று குற்றம் சாட்டுகிறார்.

 மதுரையைச் சேர்ந்த ஜெயசித்ரா “நான் வினாக் குறிப்புகளின் அடிப்படையில் 500 மதிப்பெண்களுக்கு மேல் எதிர்பார்த்தேன். ஆனால் 114 மதிப்பெண்கள்தான் வந்துள்ளது. 48% எனக் குறிப்பிட்டுள்ளார்கள். அப்படி என்றால் கூட எனக்கு 300 மார்க்குக்கு மேலாவது வந்திருக்க வேண்டும்” என்று இதற்காக அவர் வழக்கு தொடர்ந்ததில் டெல்லி சென்று நேரடியாக விடைத்தாளை பார்க்க, அதை சோதிக்க அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது நீதிமன்றம்.

 நீட் தேர்வு 2022 முடிவுகள் – பல்வேறு அதிர்ச்சிகள்!

 இந்த ஆண்டு நீட் தேர்வை 18.72 லட்சம் பேர் எழுதினர். இதில் தேர்வானவர்கள் 9,93,069. தேர்வான சுமார் பத்து லட்சம் பேரில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் ( OBC) 74,458 பேர் ( 10%  கூட இல்லை) SC பிரிவில் 26,087 பேர். ST பிரிவில் 10,565. மீதி உள்ள 8,81,402 ( கிட்டத்தட்ட 90 %) பேர் முற்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள். இது பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

 இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரப்பிரதேசம் மொத்தம் 67 மருத்துவ கல்லூரிகளையும் 9023 மருத்துவ இடங்களையும் கொண்டுள்ளது. அம்மாநிலத்தில் தேர்ச்சி பெற்றோர்  1,17, 316 பேர். அதே வேளையில் 70 மருத்துவ கல்லூரிகளையும் 10,725 மருத்துவ இடங்களையும் கொண்டுள்ள தமிழகத்தில் தேர்ச்சி பெற்றோர் வெறும் 67,787 பேர்தான். இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் வெறும் 4005 இடங்களை மட்டுமே கொண்டுள்ள ராஜஸ்தானில் 82,548 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதையெல்லாம் பார்க்கும் போது இந்த தேர்வு முடிவுகளிலும் ஏராளமான குளறுபடிகள், பித்தலாட்டங்கள் பிராடுத்தனங்கள் நடந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆக பணம் படைத்தவர்களும், முற்பட்ட சாதிப் பிரிவினரும் மட்டுமே பயன்பெறும் வகையில் தான் நீட் தேர்வு நடத்தப்படுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.

 முன்பெல்லாம் மருத்துவ மேல் படிப்பு (PG) சேர்க்கைக்கு, கிராமப்புறங்களில் பணிபுரிந்தால் சிறப்பு மதிப்பெண் வழங்கப்பட்டது. ஆனால் நீட் தேர்வு முறை வந்த பிறகு பயிற்சி நிறுவனங்களில் பணத்தைக் கொட்டிப் படித்து தேர்வில் வெற்றி பெற்றால் போதும் என்ற நிலை உருவாகி உள்ளது. இனி கிராமப்புறப் பணிக்கு யார் செல்வார்கள்? ஆக இந்த நீட் தேர்வு மாணவர்களின் மருத்துவ கனவை மட்டுமல்ல ஒட்டுமொத்த மருத்துவ துறையையுமே சீர்குலைக்கும் வேலையைத்தான் செய்து கொண்டுள்ளது. வெகு மக்களின் போராட்டங்கள் மூலம் மட்டுமே இந்த நீட் எனும் கொடுமையை வேரறுக்க முடியும்!

 ஆக்கம்: குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here