
இந்தியாவில் TCS-IT போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுகின்ற ஊழியர்களின் வாழ்க்கை உத்தரவாதம் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மேலும், மேலும் சிக்கலாகி கொண்டிருக்கிறது.
“என் மகன் ஐடி கம்பெனியில் வேலை செய்கிறான் சம்பளம் ஒரு லட்ச ரூபாய்” என்று பெற்றோர்கள் பெருமைப் பட்டுக்கொண்ட நிலைமை மாறி, “அவனுக்கு எப்போது வேலை போகும் என்று தெரியாது; இன்னமும் வாங்கிய கடனை முழுமையாக கட்டவில்லை; வேலை உத்திரவாதமாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு வீடு கட்ட துவங்கி விட்டோம்; திருமணத்திற்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறோம்; வேலை உத்தரவாதமின்மை என்ற நிலைமையால் திருமணம் முடியவில்லை” என்ற அங்கலாய்ப்புகள், புலம்பல்கள் ஐடி தொழிலாளர்களின் குடும்பங்களில் எதிரொலிக்கத் துவங்கி விட்டது.
இந்தியாவிலேயே ஐடி தொழிலாளர்கள் மத்தியில் சங்கத்தை உருவாக்க வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்து பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் ஐடி தொழிலாளர் சங்கத்தை உருவாக்கியது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி. தங்களது சுயநலத்திற்காக சங்கத்தை ஒழித்துக் கட்டினார்கள் துரோகிகள்.
“லாபம், லாபம் மேலும் லாபம்” என்பதே ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் தாரக மந்திரம்.. இந்த லாபவெறிக்கு இடையூறாக இருக்கின்ற எந்த நடவடிக்கைகளையும் ஏகாதிபத்திய முதலாளித்துவ நிறுவனங்கள், அதாவது கார்ப்பரேட் நிறுவனங்கள் ஒருபோதும் அனுமதிக்காது என்பதன் ஒருவகை எடுத்துக்காட்டுதான் சமீபத்தில் டிசிஎஸ் நிறுவனத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் ஆகும்..
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் சுமார் ஆறு லட்சம் ஊழியர்கள் டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றுகிறார்கள். இந்த நிறுவனத்தில் உள்ள மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த ஊழியர்களை பணிநீக்கம் செய்வது என்று டிசிஎஸ் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதற்கு கிளவுட் (Cloud), ஏஐ (AI) தொழில்நுட்பம் மற்றும் நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதாக அந்த நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்ற 2024 ஆம் ஆண்டு மட்டும் சுமார் 46 ஆயிரத்து 100 கோடி லாபத்தை இந்த நிறுவனம் ஈட்டி உள்ளது.
சர்வதேச நிலைமையின் அடிப்படையில் மொத்த ஊழியர்களில் இரண்டு சதவீதம் பேர் அதாவது 12000 பேர் பணிநீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. ஆனால் டிசிஎஸ் இல் பணியாற்றுகின்ற நிர்வாக அதிகாரிகள் துவங்கி ஊழியர்கள் வரையில் சுமார் 30000 பேரை பணி நீக்கம் செய்யப் போகிறார்கள் என்கிறது UNITE என்ற ஐ டி ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் தொழிற்சங்கம்.
இந்த பணி நீக்க அபாயத்திற்கு எதிராக நாடு முழுவதும் உள்ள ஐடி தொழிலாளர் சங்கம் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. அகில இந்திய அளவில் இந்த ஐடி தொழிலாளர் சங்கத்தின் துணைச் செயலாளரான சந்திரசேகர ஆசாத், “ஐடி நிறுவனங்களில் நடக்கின்ற பல்வேறு பணி பாதுகாப்பின்மை மற்றும் திடீரென்று ஆயிரக்கணக்கானவர்களை வேலையை விட்டு துரத்துவது” ஆகியவற்றின் அபாயத்தை எடுத்துரைத்தார்.
இந்தப் போராட்டத்தை கண்டித்துள்ள டிசிஎஸ் நிர்வாகம் உலக அளவில் உள்ள நிலைமையை போன்றது தான் டிசிஎஸ் நிலைமை. ஆகவே 12000 தொழிலாளர்களை மட்டும்தான் பணி நீக்கம் செய்யப் போகிறோம் என்று அறிவித்துள்ளது. 30,000 கிடையாது, 12000 தான் என்று முன்வைப்பதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள்.
ஒரே ஒரு தொழிலாளியை பணிநீக்கம் செய்தால் கூட அதற்கு எதிராக போராடி அவரது பணி நிரந்தரம் மற்றும் வேலை வாய்ப்பு உத்திரவாதத்தை வழங்க வேண்டிய நிலையில்தான் இன்றைய வாழ்க்கை ஓடி கொண்டுள்ளது.
எண்ணிக்கை மாறுபாடு காரணமாக போராட்டத்தை கண்டிக்கின்ற டிசிஎஸ் நிர்வாகம் தற்போது கொடுக்கப்படும் சம்பளத்தில் 80 முதல் 85 சதவீத சம்பளத்திற்கு புதிய வேலையாட்களை எடுத்துக் கொள்வதற்கு மற்றொருபுறம் முயற்சித்துக் கொண்டுள்ளது என்ற செய்திகளும் வெளியாகி உள்ளது.
படிக்க:
♦ கொடூரமான சுரண்டல் பேர்வழியான டாடா மறைவும் –சமூக ஊடகங்களின் ஒப்பாரியும்!
♦ பரோபகாரி ரத்தன் டாடா: சுரண்டலில் அம்பானி, அதானிக்கு முன்னோடி! பாகம் 1
“அனுபவம் வாய்ந்த ஊழியர்களை மாற்றுவதற்காக 80% – 85% குறைந்த ஊதியத்தில் புதியவர்கள் பணியமர்த்தப்படுவதாக அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். “TCS மூத்த மற்றும் நிர்வாக மட்டங்களில் உள்ள ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதன் முடிவில், கிட்டத்தட்ட 30,000 முதல் 40,000 ஊழியர்கள் வேலை இழக்க நேரிடும்” என்று UNITE இன் ஜனனி கூறியுள்ளார்.
பாசிச மோடி ஆட்சிக்கு வந்தது முதல் இந்தியாவில் உள்ள தொழிலாளர் வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது. அன்றாடம் தினக்கூலி வேலை செய்கின்ற, வேலை உத்தரவாதமற்ற ஒப்பந்த தொழிலாளர்கள் முதல் ஓரளவுக்கு வாழ்க்கை உத்தரவாதம் கொண்ட வேலை என்று கருதப்படுகின்ற ஐ டி தொழிலாளர்கள் வரை அனைவரது வாழ்க்கையையும் கேள்விக்குள்ளாக்கி வருகிறது.
இந்தியாவின் மிகப்பெரிய தேசங்கடந்த தரகு முதலாளியான டாடா நிறுவனத்தைச் சார்ந்த டிசிஎஸ் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை பணி நீக்கம் செய்கின்ற போது அதைப்பற்றி எந்த கவலையும் இல்லாமல் தேர்தல் அரசியலில் மூழ்குவது; வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்வது; தனது ஆட்சியின் கொடுமைகளை அம்பலப்படுத்துகின்ற ஊடகவியலாளர்களை சிறையிலடைப்பது; உண்மையான நாட்டுப்பற்று கொண்ட கம்யூனிச புரட்சியாளர்களை சுட்டுப் படுகொலை செய்வது முதல் சிறைக் கொடுமை வரை பல்வேறு அடக்குமுறைகளை ஏவி விடுவது; மதச் சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் மீதான தாக்குதல்களை அதிகரித்துக் கொண்டே செல்வது போன்ற செயல்பாடுகளின் மூலம் தனது கையாலாக தனத்தை நிரூபித்துள்ளது ஆர்எஸ்எஸ் பாஜக.
பாசிச மோடி கும்பலின் சர்வாதிகார ஆட்சி வீழ்த்துவதற்கு அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் குறிப்பாக தொழிலாளி வர்க்கம் ஒன்று திரண்டு பாசிச எதிர்ப்பு போராட்டத்தில் முன்னிலையில் நிற்க வேண்டும் என்பதைத்தான் டிசிஎஸ் பணி நீக்கம் நமக்கு உணர்த்தி உள்ள பாடமாகும்.
- பார்த்தசாரதி
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி







தொழிலாளர் வர்க்கத்தின் ஒற்றுமையில்லா அவலநிலைமையை காட்டுகிறது தொடர் ஐடி ஊழியர்களின் பணிநீக்கம்…
தொழிலாளர் ஒற்றுமையை கட்டமைப்போம்.
முதலாளித்துவத்தை வீழ்த்துவோம்.