இந்தியாவில் வர்க்க ரீதியான போராட்டங்கள் கூர்மை அடையாமல் இருப்பதற்கு, இந்நாட்டின் பிரத்தியேகமாக உருவாகி இருக்கக்கூடிய சாதியப் படிநிலைகளும் அதனை உருவாக்கிய பார்ப்பன கட்டமைப்பும் முக்கியக் காரணியாக அமைந்துள்ளன என்பதை மறுக்க முடியாது.
குறிப்பாக, மிகவும் இழிவான பார்ப்பனிய இந்து மதம் மக்களை பிராமண – சத்திரிய – வைணவ – சூத்திர – பஞ்சமர்களாகப் பிரித்து அதற்கு கீழே பல நூற்றுக்கணக்கான ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட சாதியப்படி நிலைகளை உருவாக்கி விட்டார்கள். இது படிப்படியாக வளர்ந்து சாதியக் கலவரங்களாகவும், மதக்கலவரங்களாகவும் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கு ஆர்.எஸ். எஸ் – பிஜேபி, இந்துத்துவா மதவெறி பாசிச அமைப்புகள் துணை போகின்றன. ஏன், அவையே இயக்குகின்றன.
இந்த இழிவான இந்து மதத்தின் கசடுகளைத் தோலுரித்து வேரறுக்க, சீர்திருத்தவாதிகளாய் செயல்பட்ட ஐயா வைகுண்டர், ஜோதிராவ் பூலே, நாராயணகுரு, தந்தை பெரியார், அம்பேத்கர் – போன்றோரெல்லாம் தங்களால் இயன்ற அளவு தொடர்ச்சியான பிரச்சாரங்களையும், போராட்டங்களையும் நடத்தி இருக்கிறார்கள். இருப்பினும் அவை முற்றாக ஒழிக்கப்படவில்லை.
இப்படி இந்து மதம் வேரூன்றி நிற்பதற்கு இந்தியாவை சுரண்டுவதற்காகவே வந்த காலனியவாதிகள் – அவை கிழக்கு இந்தியக் கம்பெனியாக இருந்தாலும் சரி; பிரிட்டிஷ் ஆட்சியாளராக யிருந்தாலும் சரி; – அவர்களுமே துணை நின்றார்கள்! ஆதரித்து வளர்த்தார்கள்! காரணம், அவர்களின் அதீத சுரண்டலுக்கு அது ஒத்திசைவாய் அமைந்தது.
நம்மைப் பொருத்தமட்டில் சமூகம் மாறுதல் அடைய மார்க்சிய – லெனினிய சமூக விஞ்ஞானத் தத்துவ கோட்பாடுகளே முதன்மையானதாக வரையறுத்துக் கொண்டுள்ளோம். அது முற்றிலும் சரிதான். இருந்தாலும் தொழிலாளர் விவசாயிகள் போன்ற உழைக்கும் மக்களை, ஆளும் வர்க்கத்திற்கு எதிராகக் கூர்மையான போராட்டத்தை எடுத்துச் செல்ல பெரும் தடைக் கற்களாக இந்து மதமும், அதன் தொங்கு தசைகளான சாதியப் படிநிலைகளும், ஒரு காரணமாக உள்ளன என்பதனை மறுப்பதற்கு இல்லை.
மார்க்சிய-லெனினிய கண்ணோட்டத்தில், ஒவ்வொரு நாட்டின் சமூகப் பொருளாதாரப் படிவம், உற்பத்தி உறவுகள், உற்பத்தி சக்திகள், பிரதான முரண்பாடு – இவற்றை அடிப்படையாகக் கொண்டே தமது செயற்பாடுகளை வகுத்துக் கொள்ள வேண்டும் என்பது மிகச் சரியே!
ஆனால் ஆசான் மார்க்ஸ் கூட இந்தியாவைப் பற்றி வரையறுத்தது போல, இங்கே உள்ள பிரத்தியேகமான சமூக சூழலையும், நாம் கணக்கில் கொள்ள வேண்டும்.
அப்படிப்பட்ட வர்க்க ஒற்றுமையை – கார்ப்பரேட் முதலாளிகள் உட்பட ஒட்டு மொத்த சுரண்டும் கூட்டத்தை இல்லாதொழிக்க முனைந்து நிற்க வேண்டிய பாட்டாளி வர்க்க ஒற்றுமையைச் சீர்குலைக்கச் சாதியவாதத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ள படிநிலைகளை -குறிப்பாக பார்ப்பனியக் கொடுங்கோன்மைகளை, காவிப் பாசிசத்தையும் ஒழித்துக் கட்ட வேண்டிய பொறுப்பும், கடமையுங்கூட, இதே பாட்டாளி வர்க்கம் தன்னுடைய கரங்களில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது.
அந்த அடிப்படையில் இந்தியாவில் நிலவக்கூடிய மதம் சார்ந்த – சாதியம் சார்ந்த கொடுமைகளை வேரறுக்க வேண்டும் என்ற கண்ணோட்டத்தில், அறிஞரும் பேராசிரியருமான “ப்ரஜ் ரஞ்சன் மணி” அவர்கள் எழுதிய “வரலாற்றில் பிராமண நீக்கம்” – ‘இந்திய சமூகத்தில் ஆதிக்கமும் எதிர்ப்பும்’ – என்ற நூலில் இருந்து வாசகர்கள் கூர்மையாகப் புரிந்து கொள்வதற்காக அவரது எழுத்து வரிகளில் சிலவற்றைக் கீழ்க்கண்டவாறு தங்கள் முன் தேடலுக்காகவும், அறிவினைக் கூர்மைப்படுத்துவதற்காகவும் முன்வைக்கப்படுகிறது. அதன் மூலம் அப்புத்தகம் மிக அதிக அளவு பக்கங்களைக் கொண்டதாயினும், படித்துத் தெளிவு பெறுதல் அவசியம் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளப் படுகிறது!
- எழில்மாறன்.
000
கல்வித்துறை கூறும் நடுநிலைமை, புறவயத்தன்மை (எதையும் முடிவாகச் சொல்லாத கேவலமான நடுநிலைச் சமூக அறிவியல்) ஆகியவற்றை விடப் போலியானது வேறு எதுவும் இருக்க இயலாது. இதைத்தான் ‘ஒருதலைச் சார்பற்ற’ சமூக அறிவியல் ஆதரவாகக் கொள்கிறது. ஒவ்வொரு எழுத்துக்கும் பின்னால் ஓர் எழுத்தாளர் இருக்கிறார். எங்கிருந்து எழுதுகிறார், யாருக்கு எழுதுகிறார், என்ற நோக்கத்துடன், எந்த கோணத்தில் என்பவை முக்கியமானவை. நான் வேறொரிடத்தில் வாதிட்டிருப்பது போல, நீதியற்ற சமூகத்தில் நடுநிலையாக இருப்பது கூட ஊக்கத்துடன் அநீதிக்குத் துணை போவதாகும். நடுநிலையான எழுத்துக்கள், அவற்றின் பன்மைத் தன்மை, அறிவார்ந்த ஒளி எல்லாம் இருப்பினும் அவைதான் மனத்தின் சௌகரியங்களை, இன்னும் கேட்டால் சாதி – வகுப்பு சமமின்மைகளை மறு உற்பத்தி செய்வதன் இரத்த ஓட்டத்தையே அளிக்கின்றன.
இந்தியாவில் கீழிருந்து சில சவாலான முயற்சிகள் அண்மைக் காலத்தில் செய்யப்பட்டாலும், அறிவின் மீது பிராமணர்களின் நீடித்த கட்டுப்பாடு மிகக் குறிப்பாகப் பெரும் கேடு பயக்க வல்லதாக உள்ளது. கல்வி நிறுவனங்களின் உயர் அணிகளும் அறிவுக் கட்டமைப்பும் சுயநலக் கும்பல்களால் ஏகபோக ஆதிக்கம் செய்யப்படுகின்றன என்பது உண்மை- இந்த உண்மைதான் பிரச்சினையாக இருக்கிறது. இந்தியாவின் வரலாறு- கலாச்சாரம் ஆகிவற்றை பிராமண வார்ப்பில் பலவித வடிவங்களில் மறுஉற்பத்தி செய்யும் ஒட்டுமொத்த அறிவுசார் குழு முழுவதற்கும் இது பொருந்துவதாகும்.
மரபு சார்ந்த கட்டமைப்புகள் எதையும் கேள்விகேளாமை; சாதியையும் பார்ப்பனத் தன்மையையும் இயல்பாக்குதல்; இந்தியக் கலாச்சாரத்துடன் தனியுரிமை பெற்ற சாதிக் கலாச்சாரத்தை அடையாளப்படுத்துதல்; ‘மகாத்மா’வையும், பண்டித நேருவையும் நிறுவன மயப்படுத்திப் போற்றுதல்; ஆதிக்கக் (“இந்தியக்”) கருத்தியலை நியாயப் படுத்துகின்ற புதிய கதைகளை உருவாக்குதல் ஆகியவற்றை இது விளக்குகிறது.
படிக்க:
♦ சனாதனத்தை அமல்படுத்தும் பார்ப்பன பயங்கரவாதமே நாட்டின் எதிரி!
♦ இந்து மதம் பார்ப்பனீயம் | பகுதி 4
நீங்கள் சாதியையும் பார்ப்பனியத்தையும் விமர்சனம் செய்தால் நீங்கள் ஐரோப்பியவாதி. இந்தியாவின் பண்பு நலத்தை மாசுபடுத்தும் குற்றத்தைச் செய்தவர் ஆவீர்கள்.
சாதியும், இனமும், ‘பார்ப்பனியமும், காலனியமும் மிகக் கொடுமையான உறவை உடையவை’ என்று சொல்வது இன்னமும் எதிர்ப்புக் கருத்தாக உள்ளது. ஆழ்ந்த புலமையும் ஆவணப்படுத்தலும் கொண்ட மிக விசித்திரமான கொள்கைகள் நிலவுகின்றன.
உதாரணமாக, சாதி என்பது ஒரு காலனிய உருவாக்கம்; மக்கள் தொகை மேலாய்வுகள், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அறிக்கைகளிலிருந்து உருவாக்கப்பட்ட கட்டுக்கதை (இண்டென் 1990; டிர்க்ஸ் 2002); சாதிமதவாதம் என்பது ஒரு கீழையியச் சொல். காலனிய அறிவின் ஒரு வடிவமாக உருவாக்கப்பட்டது; மதச்சார்பின்மை என்பது ஒரு அந்நிய கலாச்சாரக் கருத்தியல், கிறித்துவத்தின் கொடை; மரபு சார்ந்த சமூகத்தில் அடிப்படைவாதிகளோ, மீட்புவாதிகளோ கிடையாது. இம்மாதிரிக் கொள்கைகள், நவீன மேற்கத்தியக்காலனியத்தை எதிர்கொண்ட அப்பழுக்கற்ற நேர்மையை நியாயப்படுத்தவும் அதற்குக் காப்புச் செய்யவும், சொந்த நாட்டுத் தன்மை கொண்ட பிற்காலனிய வாதத்தின் கொடிக்கீழ் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. இங்குச் சொல்லப்படும் அப்பழுக்கற்ற தன்மை, சாதி, வகுப்பு, ஆண் ஆதிக்கங்கள் பல நூற்றாண்டுகளாகச் செய்து வந்த வன்முறையை மறைத்து விடுகிறது. வேறு சொற்களில், “காலனிய துக்கம் இப்போது பிற்காலனியத்தின் வேடிக்கை நாடகமாக” (மார்க்சின் புகழ்பெற்ற தொடர் இது) பார்ப்பன மேட்டுக்குடியினரைத் தங்கள் சாதி-வகுப்புச் சுரண்டலை மையப்படுத்தி, ஒடுக்கியவர்களை ஒடுக்கப்பட்டவர்களாக ஊர்வலம் வரச் செய்கிறது.
இப்படிப்பட்ட ஆதிக்களங்க மின்மை, சமுதாயம் மற்றும் கலாச்சாரத்தின் பாதுகாவலர்களுக்கு எவ்வளவு ஆறுதல் அளிப்பதாக இருக்கும் என்பதை நாம் கற்பனை செய்து கொள்ள முடியும்.
ஏனெனில் ஏறத்தாழ 3000 ஆண்டுகளாக இந்திய மக்களின் 80 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ள தலித் வெகுஜனங்களைப் பலியாடாக்கி, அவமதித்து, தாழ்வானவர்கள் ஆக்கிய பார்ப்பனியத்தின் சாதி சார்ந்த குற்றங்களுடன் ஒப்பிடும்போது காலனியக் குற்றங்கள் மங்கி விடுகின்றன.
அதாவது, சமகால இந்தியாவின் எல்லா பிரச்சினைகளும் மேற்கத்திய காலனியத்தால் மட்டுமே உருவானவை என்ற மிக ஆழமான பிறழ்ச்சி கொண்ட, நவ பார்ப்பனிய மனப்பதிவு (மூல வளங்களை மிகுதியாக உடைய கல்வியாளர்களால்) உருவாக்கப்பட்டு வருகிறது. (முரண் நிலையில், இவர்கள் ஐரோப்பிய- அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பாதுகாப்பாக உள்ளவர்கள்) ஐஜால் அகமது கூறுவது போல, “இப்போது காலனியாதிக்கம் தனது சொந்தக் கொடுமைகளுக்கு மட்டுமல்லாமல், மிகவும் வசதியாக நமது கொடுமைகளுக்கும் பொறுப்பாளி ஆக்கப்படுகிறது…”
– ப்ரஜ் ரஞ்சன் மணி.
(தமிழில்: க. பூரணச்சந்திரன்)
***
(குறிப்பு:-இங்கே கௌதம புத்தரின் சொல்லாடல்களைக்கூட, நூலாசிரியர் தேவையெனக் கருதி இந்நூலில்
பதிவிட்டுள்ளார். அவற்றையும் கூட நாமும் ஆமோதித்துக் கீழே பதிவிட்டு உள்ளோம். …)
அவை இதோ:-
“காதால் கேட்டதால் மட்டுமே எதையும் நம்பி விடாதே.
பல தலைமுறைகளாகப் போற்றப்பட்டு வருபவை என்ற காரணத்தினாலேயே மரபுகளை நம்பாதே.
பல பேராலும் பேசிப் பரப்பப்படுகிறது என்ற காரணத்தினாலேயே எதையும் நம்பாதே.
உன் மத நூல்களில் எழுதப்பட்டிருக்கிறது என்ற காரணத்தினாலேயே எதையும் நம்பாதே.
உன் ஆசிரியர்களும் மூத்தோரும் சொல்கிறார்கள் என்பதனாலேயே எதையும் நம்பாதே.
வெளித் தோற்றத்திற்கு உண்மையாகத் தெரிகின்ற தர்க்கத்தையும், பழக்கத்தினால் உன்னிடம் சேர்ந்துவிட்ட மனச் சாய்வையும் நம்பாதே.
யாவருக்குமான நன்மைக்கும் ஆதாயத்திற்கும் ஏற்ற ஒன்றை ஏற்றுக் கொள்வதற்கு முறையான காரணத்தை நீ கண்டறியும் போது, ஆழ்ந்து சிந்தனை செய், ஆய்வு செய், பிறகு ஏற்றுக் கொண்டு அதன் படி வாழ்”.
–கௌதம புத்தர்.
குறிப்பு:-நூலாசிரியர் அண்மையில் வெளியாகி யுள்ள “அறிவும் ஆதிக்கமும்: மாற்றத்துக்கான சொல்லாடல்”
(2014) என்ற நூலின் ஆசிரியர். இந்தியாவின் மரபுசாரா அறிஞர்- செயல்பாட்டாளர்களில் ஒருவர். தி டைம்ஸ் ஆஃப் இந்தியா இதழின் முன்னாள் பத்திரிக்கையாளர். சிம்லாவில் உள்ள முன்னேறிய ஆய்வுக்கான இந்திய நிறுவனத்தின் அறிஞர். தனியாகப் பணி செய்ய முற்படுவதற்கு முன்னால் சில காலம் புவனேஸ்வரில் உள்ள நிஸ்வாஸில்
டாக்டர் அம்பேத்கர் இருக்கையில் பேராசிரியராக இருந்துள்ளார்.
*****************