2017 ஆம் ஆண்டு கேரள திரைப்பட உலகில் முன்னணி நடிகை ஒருவரை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்முறை செய்தது தொடர்பாக, ’உமன் இன் சினிமா கலெக்டிவ்’ என்ற அமைப்பு முன்வைத்த புகாரின் அடிப்படையில் ஓய்வு பெற்ற நீதியரசர் கே.ஹேமா மற்றும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கே.பி. வல்சலா குமாரி, திரைப்பட முன்னணி நடிகை சாரதா ஆகிய மூவர் கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவானது கேரள திரையுலகில் செயல்படுகின்ற பல்வேறு பெண்களின் மத்தியில் விசாரணை செய்து தனது விசாரணை அறிக்கையை 2019 ஆம் ஆண்டு கேரளா அரசாங்கத்திடம் சமர்ப்பித்தது. அவ்வாறு பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்ட போது அவர்களிடம், ”உங்களது தனி உரிமையை பத்திரமாக பாதுகாப்போம்” என்று வாக்குறுதி கொடுத்து ஒவ்வொருவரின் வாக்கு மூலமும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாகவே அவர்களின் தனி உரிமைகளை பாதுகாக்கின்ற வகையில் 65 பக்கங்களில் திருத்தங்களை போடுவதற்கு கேரள அரசு கடந்த ஐந்து ஆண்டுகளை எடுத்துக் கொண்டதாக தாமத்திற்கான காரணமாக முன் வைத்துள்ளது.
தற்போது கொல்கத்தா RGகர் மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவர் கூட்டுப் பாலியல் வன்கொடுமையினால் கொடூரமாக குதறப்பட்டு கொலை செய்யப்பட்டதை ஒட்டி நாடு முழுவதும் கொந்தளிப்பான சூழல் உருவாகியுள்ள நிலையில் இந்த அறிக்கை மேலும் முக்கியத்துவம் பெற்றதாக மாறியுள்ளது.
அந்த அறிக்கையில் வாக்குமூலம் கொடுத்த நடிகை ரஞ்சனி, ” இந்த அறிக்கை வெளியிடப்படுவதன் மூலம் தனது தனி உரிமை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த அறிக்கையை வெளியிடக்கூடாது” என்று கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
எனினும் இந்த மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பாகவே நேற்று 235 பக்கம் கொண்ட ஹேமா அறிக்கை பல்வேறு ஊடகவியலாளர்கள், முக்கிய பிரமுகர்கள் கையில் ஒப்படைக்கப் பட்டது
ஐந்தாண்டுகளுக்கு முன்பு கேரள இடது முன்னணி அரசாங்கத்திடம் கொடுக்கப்பட்ட இந்த அறிக்கை இதுவரை வெளி வராததற்கான காரணங்கள் குறித்து கேரளா அரசாங்கத்திடமிருந்து நேர்மையான பதில் எதுவும் கூறப்படவில்லை. அப்போதைய கலாச்சார மந்திரியான பாலன் இதுகுறித்து மழுப்பலாகவே கூறியுள்ளார். பிரபல எழுத்தாளர் சாரா ஜோசப், ”கேரள அரசாங்கத்தின் மெத்தனப் போக்கையும், இந்த அறிக்கை முக்கிய குற்றவாளிகளின் பெயர் குறிப்பிடப்படாமல் வெளிவந்துள்ளதால் போதிய பயன் இல்லை என்றும், அரசாங்கத்தின் கடமை இந்த சிக்கலை தீர்ப்பது, ஆனால் கேரள அரசு இதில் தவறிழைத்துள்ளது என்றும்” விமர்சித்துள்ளார்..
கேரளா திரைப்பட உலகில் 30க்கும் மேற்பட்ட பிரிவுகளில் பணியாற்றுகின்ற பெண்களுக்கு 17 வகையான பாலியல் தொந்தரவுகள் கொடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையின் சுருக்கம் தெரிவிக்கின்றது.
அது மட்டுமின்றி கேரள திரைப்பட உலகம் குறிப்பிட்ட சில தயாரிப்பாளர்கள், சில முன்னணி நடிகர்கள், சில இயக்குனர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளதாகவும், கேரள திரைப்பட உலகத்தை மாஃபியாக்களைப் போல இவர்களே கட்டுப்படுத்தி வருவதாகவும் பகிரங்கமாக அந்த அறிக்கை குற்றம் சுமத்தியுள்ளது.
குறிப்பாக திரைப்படத்துறையில் வேலை செய்யும் பெண்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்களுக்கு பாலியல் ரீதியாக ஒத்துழைப்பு கொடுத்தால் மட்டுமே அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்ற குற்றச்சாட்டு கேரளாவில் மிகப்பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
நாட்டிலேயே மிகவும் முன்னேறிய மாநிலமாக கருதப்படும் கேரளாவில் திரைப்படத்துறையில் உள்ள பெண்களின் நிலைமையை பற்றி பட்டவர்தனமாக அம்பலப் படுத்தியுள்ள இந்த அறிக்கையை அமுக்குவதற்கு பல்வேறு தரப்பினரும் முயற்சித்துள்ளனர் என்பதால் தான் 2019 ஆம் ஆண்டிலிருந்து ஐந்தாண்டுகளாக இந்த அறிக்கை வெளிவராமல் தாமதமாகியுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.
பொதுவாகவே விசாரணை அறிக்கைகள், கமிசன்களின் தொகுப்பறிக்கைகள் போன்றவற்றை சமர்ப்பிப்பதற்கு காலதாமதம் ஆவதற்கு காரணம் எதார்த்த உண்மைகளை மறைத்து புனைவு செய்யப்பட்ட கருத்துக்களை எழுதுவதற்கு அதை தயாரிப்பவர்களுக்கு குறிப்பிட்ட காலம் ஆகும் என்பதுதான். ஆனால் மூன்று நபர் கொண்ட குழுவினர் ஒரளவு விரைவாக இரண்டு ஆண்டுகளில் கொடுத்த அறிக்கையை வெளியிடுவதை ஐந்து ஆண்டுகளாக கேரள இடது முன்னணி மறுத்ததற்கு போதிய காரணங்கள் உள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.
திரைப்படத் துறையில் உள்ள பெண்கள் மட்டுமல்ல, நாட்டில் பல்வேறு துறைகளில் பணியாற்றுகின்ற பெண்கள் அனைவரின் மீதும் பாலியல் ரீதியிலான தாக்குதல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
பெண்களை சமமாக கருதாத போகப் பொருளாகவும், உணர்ச்சியற்ற சதைப் பிண்டமாகவும் கருதுகின்ற ஆணாதிக்க வக்கிர வெறி பிடித்த சமூகத்தில், சில பாலியல் மிருகங்கள் மத்தியில் வேலை செய்வதற்கு பணிக்கப்படும் பெண்கள் தனது குடும்ப சூழ்நிலை கருதி பல்வேறு துறையில் இதை சகித்துக் கொண்டு பணியாற்றி வருகின்றனர் என்பதுதான் இந்திய நிலைமையாக உள்ளது.
பொதுவாகவே அடிமைச் சமுதாயத்திலும், அதன்பிறகு நிலவுடமை சமுதாயத்திலும் தோன்றிய மதங்கள் அனைத்தும் பெண்களை மொத்த சமூகத்தின் அடிமைகளாகவே கருதி ஒடுக்குமுறை செலுத்தி வருவதால் அதிலிருந்து முன்னேறிய முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மாறிச் செல்லும் போது பெண்கள் பல நூற்றாண்டுகளாக அனுபவித்து வந்த அடுப்படி எனும் சிறையில் இருந்து வெளி வருகின்றனர்.
நிலப்பிரபுத்துவ உற்பத்தி முறையில் இருந்து முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மாறி செல்கின்ற காலகட்டங்களில் இது போன்ற பெண்களின் உழைப்பு சக்தி மலிவான விலையில் சுரண்டப்படுகின்ற கொடூரம் இயல்பாகவே நடப்பதால், பெண்கள் பணியிடங்களில் கடுமையாக வேலை வாங்கப்படுகின்றனர். இன்னொருபுறம் அவர்களின் மீது பாலியல் ரீதியிலான வன்கொடுமைகள் நிகழ்த்தப்படுகிறது.
வேலைக்குச் செல்லும் பெண்களில் இத்தகைய கொடூரமான பாலியல் வன்கொடுமைகள் நடத்தப்படுவதால் கடுமையான மன உளைச்சல்களுக்கு ஆளாகி நடைப்பிணமாகவே வாழ்ந்து வருகின்றனர் என்பதும், இவற்றையெல்லாம் அனுசரித்துக் கொண்டு சென்றால் மட்டுமே வேலையில் தொடர முடியும் என்ற கேடான நிலைமை இந்திய சமூக அமைப்பில் மிகப்பெரும் அவமானகரமான சூழலாக உள்ளது. நவீன டிஜிட்டல் பயன்பாடுகளின் மூலம் பெண்களின் மீதான தாக்குதல்கள் சைபர் குற்றங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது.
படிக்க:
♦ கொல்கத்தா மருத்துவர் பாலியல் வல்லுறவு கொலை! நீதிக்கான மருத்துவர்களின் போராட்டம்!
அதிலும் குறிப்பாக பாசிச மோடி 2014 முதல் ஆட்சிக்கு வந்த கடந்த பத்தாண்டுகளில் பெண்களின் மீதான தாக்குதல்கள், பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ளது என்பதால்தான் இந்தியாவில் பெண்கள் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நிலை தொடர்வதாக பல்வேறு அறிக்கைகள் சுட்டிக்காட்டி உள்ளது.
’பெண் கல்வி, பெண் முன்னேற்றம், பெண்களுக்கான சமூக பாதுகாப்பு, பெண்களுக்கு சம உரிமை’ என்பதெல்லாம் ஏட்டளவில் பேசப்பட்டு வந்தாலும், குடும்பத்தில் துவங்கி சமூகத்தின் ஒவ்வொரு மூலை முடுக்கிலும் ஆணாதிக்க வக்கிரம் படித்த வெறியர்களின் மத்தியிலேயே வாழ வேண்டிய அவல நிலை பெண்களுக்கு இழைக்கப்படுகின்றது.
இத்தகைய கொடூரமான சூழலை மாற்றுவதற்கு ஆணாதிக்கத்தின் மீதும், அதை கட்டிக் காக்கின்ற உற்பத்தி முறையின் மீதும் தாக்குதலை நடத்தி, அதாவது போர் தொடுத்து அதிலிருந்து உற்பத்தி உறவுகளை விடுவிப்பதன் மூலம் சமத்துவமான உற்பத்தி உறவை உருவாக்க முடியும் என்பது தான் பெண்களின் மீதான பாலியல் வன்கொடுமைகள் மற்றும் உழைப்பு சுரண்டலுக்கு எதிரான முதல் கட்ட விடுதலையை தரும்.
பெண்களின் விடுதலை சமூகத்தின் விடுதலையுடன் தொடர்புடையது என்பதால் தான் ’சமூக விடுதலையே பெண் விடுதலை’ என்ற முழக்கத்தை பெண் உரிமையை முன்னிறுத்திப் போராடும் மார்க்சிய லெனினிய அமைப்புகள் முன்வைக்கின்றன.
குறிப்பாக தற்போதைய கார்ப்பரேட் காவி பாசிச தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில் பார்ப்பன (இந்து) மதக் கொடுங்கோன்மையின் கீழ் ஆகக் கேடாக ஒடுக்கப்பட்டு வரும் பெண்கள் தனது ஒடுக்கு முறைகளில் இருந்து வெளி வருவதற்கு ஆணாதிக்க வக்கிர சமூகத்திற்கு எதிராக போராடுவது மட்டுமின்றி, புதிய சமத்துவ உற்பத்தி உறவை உருவாக்குகின்ற சமூகத்தை படைப்பதிலும் முன்னிலையில் நின்று போராட வேண்டும் என்பதுதான் இன்றைய காலகட்டத்தில் தேவையாக மாறி உள்ளது.
அதேசமயம் முழுவதும் பாதுகாப்பான சூழல் உருவாகும் வரை தற்காப்புக்கு பொருத்தமான ஆயுதங்களை எந்தவும், தனக்கு அநீதி இழைக்கப்பட்டால் திருப்பித் தாக்குவதற்கும் பெண்களுக்கு பயிற்சியளிப்பது முதல் வேலையாக கொள்ளப்பட வேண்டும். சட்டநீதியான தீர்வுகள் கிடைக்கும் வரை காத்திருக்கும் கொடுமை பாலியல் வன்கொடுமையைக் காட்டிலும் கொடூரமானது எனபதை நாம் அங்கீகரித்தே ஆக வேண்டும்.
இந்த கண்ணோட்டத்தில் கேரளாவில் வெளியிடப்பட்டுள்ள நீதியரசர் ஹேமா அறிக்கையை விவாதத்திற்கு உட்படுத்துவோம். திரைப்படத் துறை மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் பாதிக்கப்படும் பெண்களின் உரிமைகளுக்காக போராடுவதில் ஆண்கள் முன்னிற்போம்..
- பா.மதிவதனி.
கட்டுரை சிறப்பு….