லகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு தான் மட்டுமே என பீற்றிக் கொன்டிருக்கும் அமெரிக்கா தனது உலக மேலாதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கு அரசியல், பொருளாதார ரீதியிலான தாக்குதல்களை தொடுப்பது மட்டுமின்றி, பண்பாட்டு ரீதியாக தனது அடியாள் படையான ஹாலிவுட் மற்றும் WWF போன்ற பல்வேறு கேடான விளையாட்டுகள் மூலம் ஆதிக்கம் செய்து வருகிறது. அதனை எதிர்த்து போராடக்கூடிய அல்லது பேசக்கூடிய ஊடகவியலாளர்களை கைது செய்வது சிறையில் அடைப்பது, பிற நாடுகளில் தஞ்சைமடைய விடாமல் தடுப்பது போன்ற பயங்கரவாத நடவடிக்கைகள் மூலம் தனது ’ஜனநாயக கடமையை’ ஆற்றி வருகிறது.

ஊடகங்களின் கழுத்தை நெரித்துக் கொண்டே ஜனநாயகத்தைப் பற்றி பேசுவதற்கு துணிச்சல் வேண்டும். அத்தகைய துணிச்சல் அமெரிக்க பயங்கரவாதிகளிடம் உள்ளது என்பதுதான் ஜூலியன் அசாஜ்சேவின் கைது மற்றும் விடுதலை விவகாரத்தில் இருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும்.

விக்கிலீக்ஸ்-சும், ஜூலியன் அசாஜ்சேவும்!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜூலியன் அசாஞ்சே கடந்த 2006ஆம் ஆண்டில் விக்கி லீக்ஸ் என்ற இணையதளத்தை தொடங்கினார். கடந்த 2010ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான், ஈராக் போரில் அமெரிக்கா மேற்கொண்ட போர்க் குற்றங்கள், ஊழல் தொடர்பான ரகசிய ஆவணங்கள் விக்கி லீக்ஸ் இணையதளத்தில் வெளியாகின. இதில் அமெரிக்க ராணுவத்தின் பல்வேறு ரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்டன. இதனால் அமெரிக்க தேசிய ஆவணங்களை ரகசியமாக பெற்று, அதனை வெளியிட சதி செய்ததாக அசாஞ்சே மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் நடைபெற்ற போர்கள் தொடர்பாக, விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் மூலம் பலரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதாக பல ஆண்டுகளாக அமெரிக்கா வாதாடியது.

2006-இல் அசாஞ்சசே நிறுவிய விக்கி லீக்ஸ் நிறுவனம் சுமார் ஒரு கோடி ஆவணங்களை வெளியிட்டதாக தெரிவித்தது. இதுகுறித்து பின்னர், “அமெரிக்க வரலாற்றில் பாதுகாக்கப்பட வேண்டிய தகவல்கள் மீது பெரியளவில் நடைபெற்ற தாக்குதல்,” என அமெரிக்க அரசு கூறியது.

ஆப்கானிஸ்தான் மற்றும் இராக்கில் நடைபெற்ற போர்கள் தொடர்பான அமெரிக்காவின் ரகசிய ராணுவ ஆவணங்கள் மற்றும் ராஜதந்திர செய்திகளை வெளியிட்டதற்காக, உளவுச் சட்டத்தின் கீழ் 18 வழக்குகளில் அசாஞ்சே-ஐ விசாரிக்கவே அமெரிக்க அரசின் வழக்கறிஞர்கள் விரும்பினர்.

கடந்த 2010-ம் ஆண்டு விக்கிலீக்ஸ் இணையதளம் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டரில் ராய்ட்டர் செய்தி முகமையின் நிருபர்கள் இரண்டு பேர் உட்பட பத்துக்கும் மேற்பட்ட இராக் மக்கள் பாக்தாத்தில் கொல்லப்பட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டது போன்ற குற்றங்கள் அவர் மீது சுமத்தப்பட்டு 2019 வரை பல நாடுகளில் தலைமறைவாக இருந்தார். 

கடைசியில் கைது செய்யப்பட்டு பெல்மார்ஷ் சிறையிலடைக்கப்பட்டார். பெல்மார்ஷ் சிறையின் சிறிய அறையில் 1,901 நாட்கள் கழித்தநிலையில், திங்கட்கிழமை அங்கிருந்து அவர் வெளியேறியதாக, எக்ஸ் சமூக ஊடகத்தில் விக்கிலீக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது

விக்கிலீக்ஸ் என்ற இணையதளத்தை ஜூலியன் அசாஞ்சே துவங்கினாலும் உலகம் முழுவதும் உள்ள அரசு எதிர்ப்பாளர்கள், அரசாங்கத்திலேயே இருந்து கொண்டு அரசாங்கத்தை கவிழ்க்க நினைப்பவர்கள், புதிதாக அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் அதிகார வெறியர்கள், சுதந்திரமான ஊடகவியலாளர்கள், ஜனநாயகவாதிகள் போன்ற அனைவரும் தங்களுக்கு கிடைத்த தரவுகளை விக்கிலீக்ஸ் மூலம் தெரியப்படுத்தி வந்தனர்.

இவ்வாறு அனுப்பப்படும் தகவல்கள் உண்மைத்தன்மை கொண்டதுதானா என்பதை சோதித்தறிவதற்கு விக்கிலீக்ஸ் ஒரு குழுவை அமைத்து, வெளியிடப்படும் செய்திகளின் உண்மைத் தன்மையை சோதித்து வெளியிடுகிறது, என்று அறிவித்துக் கொள்கிறது. விக்கிலீக்ஸ் செய்திகளின் உண்மை தன்மை பற்றி பல்வேறு பொய் செய்திகளை பரப்பி வந்தன அமெரிக்க ஊடகங்கள். 

ஜூலியன் அசாஞ்சே மீது வழக்கு தொடுக்கப்பட்டு ஏறக்குறைய 5 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டார். பல்வேறு நாடுகளுக்கு நாடு கடத்தப்பட்டார். கொலை மிரட்டல்களும் விடப்பட்டது. அத்தனையையும் மீறி தற்போது அமெரிக்க அரசாங்கத்தின் இராணுவ ரகசியங்களை தான் வெளியிட்டதாக ஒப்புக்கொண்டதால் அவருக்கு ஐந்தாண்டு இரண்டு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் விசாரணை காலத்திலேயே அந்த தண்டனையை அனுபவித்து விட்டதால் தற்போது விடுவிக்கப்பட்டார்.

படிக்க:

♦ அரசியல் நடவடிக்கையால் மட்டுமே பெகாஸஸ் உளவுச்செயலியின் விளைவுகளை மட்டுப்படுத்த முடியும்

♦ ஜூலியன் அசாஞ்சேவை கொலைகார அமெரிக்காவிடம் ஒப்படைக்காதே!

அசாஞ்சே வின் வழக்கிலிருந்து அமெரிக்க பயங்கரவாதிகளின் உண்மை முகத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது. அமெரிக்கா பேசும் ஜனநாயகம் போன்ற பசப்பல்கள் மோசடியானது என்பதையும், தனது ஆதிக்கத்திற்கு துணை புரிகின்ற வகையில் ’ஜனநாயகத்தை’ வளைக்கின்ற ஆற்றல் அமெரிக்க மேல்நிலை வல்லரசுக்கு எப்போதும் உண்டு என்பதை ஜூலியன் அசாஞ்சேவின்  கைது மற்றும் விடுதலை நமக்கு உணர்த்துகிறது.

அமெரிக்க மேல்நிலை வல்லரசின் ஜனநாயக பித்தலாட்டங்களை அம்பலப்படுத்துவதற்கு ஜூலியன் அசாஞ்சேவை நிரந்தரமாக விடுதலை செய் என்ற கோரிக்கையை முன்னெடுத்து செல்வதும், இதன் மூலம் ஏகாதிபத்திய எதிர்ப்பு, பாசிச எதிர்ப்பு எண்ணம் கொண்டவர்களை சிறையில் அடைத்து சித்திரவதை செய்து படுகொலை செய்ய நினைக்கும் அரசு பயங்கரவாதிகளுக்கும், சர்வதேச பயங்கரவாதிகளுக்கும் எதிரான போராட்ட உணர்வை உருவாக்குவோம்.

  • மருது பாண்டியன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here