பொதுமருத்துவமனையின் கோவிட் வார்டிலிருந்து எப்படி அரிதாக உயிர்பிழைத்தேன்?

கொரோனா பரவலின் மூன்றாம் ஆண்டில் நுழையும் இந்த நேரத்தில், மனிதகுலமானது கோவிட் 19 எனும் இத்தொற்றுடன் வாழப்பழகிக் கொள்ள வேண்டும் என்பதை விஞ்ஞானிகள் ஒப்புக் கொள்கின்றனர். எனது வாழ்வின் மிகவும் கடினமான காலகட்டமாக இருந்த, கொரோனா தொற்றுடன் ஒரு பொது மருத்துவமனையின் பொதுவார்டில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பதிவுசெய்ய விரும்புகிறேன்.

இந்த நாட்டின் இலட்சக்கணக்கான பெண்களும், ஆண்களும் அனுபவித்த துன்பங்களை ஒப்பிடுகையில் எனது துயரம் அளவில் குறைவானதாக இருக்கலாம். ஆனாலும் இதைப் பதிவு செய்யக் காரணம், நாட்டின் மிகச்சிறந்த பொது மருத்துவமனையில் நான் சந்தித்த மனிதநேயமற்ற கவனிப்பை உணர்த்துவதற்காகத்தான்.

கொரோனா வார்டில் டானிஷ் சித்திக் எடுத்த புகைப்படம்

நான் வசிக்கும் டெல்லியில் ஒரே இரவில் திணிக்கப்பட்ட பொது முடக்கத்தால் வீடற்ற மற்றும் நகர்ப்புற ஏழைகளின் பசியை தீர்க்க வேண்டிய நிர்பந்தம், என்னை அடுத்த நாளிலிருந்தே தெருக்களில் இறங்க வைத்தது. எனவே கொரோனா தொற்றை வெகுநாள் முன்பே எதிர்பார்த்தேன்.

அந்த மக்களின் மத்தியில் 20 ஆண்டுகளாக வேலை செய்த அனுபவத்தின் அடிப்படையில் அவர்களின் பசியைப் போக்க அவர்கள் நம்பியிருப்பது நிச்சயமற்ற, பாதுகாப்பில்லாத வேலை நிலைமையைத்தான் என்பதும் இதைத்தவிர அவர்களது உணவுக்கு உத்தரவாதம் அளிப்பது குருத்வாரா, சர்ச், தர்கா மற்றும் கோவில்கள் போன்ற மத நிறுவனங்கள் மூலம் அளிக்கப்படும் உணவுகள்தான் என்பதும் எனக்குத் தெரியும்.

பிரதமரால் கருணையற்ற முறையில் வெறும் 4 மணி நேர அவகாசத்தில் அமலாக்கப்பட்ட லாக்டவுன், மேற்சொன்ன அத்தனை வாய்ப்புகளையும் அவர்களுக்கு கிடைக்காமல் செய்தது. எனது வாழ்நாளில் பார்த்திராத வெகுஜனங்களின் பசி வெள்ளம் குறித்து எனது ” லாக்கிங் டவுன் தி புவர்” புத்தகத்தில் விரிவாக எழுதியுள்ளேன்.

லாக்கிங் டவுன் தி புவர் ஹர்ஸ் மந்தர் எழுதிய புத்தகம்

இந்த சூழலில், எந்தக் கேள்வியுமின்றி நான் தெருக்களில் இறங்க வேண்டியிருந்தது. வீடற்றவர்களுக்கும், சில மாதங்களுக்கு முன்பு டெல்லி கலவரத்தில் உயிர் பிழைத்தவர்களுக்கும் கண்ணியத்தோடும், அக்கறையோடும் உணவு ஏற்பாடு செய்ய முயற்சித்தேன்.அவர்களுக்கு உணவு மற்றும் ரேஷன் பொருட்களை விநியோகிக்க உதவினேன். இது கதாநாயகத்தன்மை இல்லாத இதயப்பூர்வமான செயலாகும். அரசாங்கம் மற்றும் முதலாளிகளால் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து உணவளிப்பதில் என்னுடன் எனது இளம் சகாக்கள் பலரும் துணை நின்றனர்.

இதனோடு புலம்பெயர்ந்த மக்கள் தங்கள் சொந்த ஊர் திரும்ப பேருந்துகள் ஏற்பாடு செய்தல், சில தங்குமிடங்களில் அவர்களை பாதுகாத்தல், நீதிமன்றத்தில் புகாரளித்தல் போன்ற வேலைகளையும் சிறப்பாக நிறைவேற்றினர். தங்களுக்கான அபாயங்களை அறிந்தே அவசியம் கருதி இதில் ஈடுபட்டனர். இது குறித்து ஒருவரிடம், நீங்கள் பயப்பட வில்லையா? என வினவியபோது, ” ஆம். நான் பயப்படுகிறேன். ஆனால் என் பயத்தை விட அவர்களின் பசி மிகப்பெரியது” என பதிலளித்தார்.

நாங்கள் இதுவரை நோய்த்தொற்று இல்லாமல் இருந்தது இத்தகைய பாதுகாப்பான மக்களுடன் பழகியதால்தான் என பின்னர் நோய் தொற்றியல் நிபுணத்துவ நண்பர்கள் விளக்கினர். இந்த வைரஸ் விமானத்தில் பயணிக்க தகுதியுள்ள நபர்களால்தான் பரவுகிறது. அவர்களுடன் பழகுபவர்களுக்கே தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. லாக் டவுன் தளர்வுகளுக்குப் பிறகுதான் நகரின் ஏழைகளுக்கும் தொற்று பரவியது. ஆனாலும் இவர்களுக்கு சோதனை, தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை மறுக்கப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தோம். எனவே யமுனை நதிக்கரையில் எங்களது தங்குமிடத்தில் அவர்களுக்காக கோவிட் மையத்தை திறக்க முடிவு செய்தோம்.

அக்டோபர் 2020 ல் எனக்கும், சக பணியாளர்கள் சிலருக்கும் கோவிட் தொற்றியது. எனது மனைவி, மாமியார், வீட்டுப்பணி பெண்கள் ஆகியோருக்கும் தொற்று உறுதியானது. எனக்கு ஏற்கனவே இதய வால்வு பிரச்சினை இருந்ததாலும், உனது உடல்நிலை மோசமடைந்ததாலும், மருத்துவ நண்பர்களின் ஆலோசனையை ஏற்று அரசு மருத்துவமனையில் சேர்ந்தேன். எனக்கு மருத்துவக் காப்பீடு இருப்பதால் எளிதில் தனியார் மருத்துவமனையில் சேர்ந்திருக்கலாம். சமீபத்தில் கூட இருமுறை சிறு அறுவைக்காக சேர்ந்திருக்கிறேன். ஆனால் இன்றைய நிலை வித்தியாசமானது.

மத்திய, மாநில அமைச்சர்கள் எல்லோரும் விதிவிலக்கின்றி கோவிட் தொற்று உறுதியானவுடன், தங்களது நகரத்தில் உள்ள அதிக செலவாகும் சிறப்பான தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்த செய்தியை கோபத்தோடும், வேதனையோடும் வாசித்துக் கொண்டிருந்தேன். அவர்கள் உருவாக்கி நிர்வகிக்கிற பொது சேவைகளில் நம்பிக்கையில்லாமல் இப்படி செய்யும் போக்கினால் ஆத்திரம் ஏற்பட்டது. இத்தகைய தனியார் மருத்துவமனை வாசல்களில் நுழைய முடியாத ஏழைகளை கைவிடுவதில் அவர்களுக்கு எந்தக் கவலையும் இருப்பதில்லை.

இந்திய நிர்வாக சேவையில் நான் பணியாற்றிய போதிலிருந்தே எனக்கு மத்திய சுகாதார அமைச்சகத்தில் நண்பர்கள் இருந்தார்கள். ஒரு தொலைபேசி அழைப்பில் எய்ம்ஸ் அல்ல்லது சப்தர்ஜங் மருத்துவமனையில் தனி அறையைக்கூட பெற்றிருக்க முடியும். இருப்பினும் அதை நான் விரும்பவில்லை. ஏனெனில் இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சுகாதார அவசரநிலை நிலவும் சூழலில், இலட்சக்கணக்கான என் நாட்டு மக்களின் தலைவிதிகளிலிருந்து நான் மட்டும் எனது சிறப்புரிமையை பயன்படுத்தி தப்பிக்க வேண்டுமா? எனவேதான் பொது மருத்துவமனையின் கோவிட் வார்டில் சேர முடிவெடுத்தேன்.

தொடரும்…

ஹர்ஷ் மந்தேர்,
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்.

மூலக் கட்டுரை:

https://scroll.in/article/1012095/harsh-mander-how-i-barely-survived-covid-19-in-a-general-ward-of-a-public-hospital.

தமிழில் : குரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here