ஜூன் 28 அன்று வெளியிடப்பட்ட தி வயர் கட்டுரையில், “ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலின் போது பாகிஸ்தான் ராணுவத்திடம், இந்தியாவின் போர் விமானங்கள் சில இழக்கப்பட்டன” என்ற கோணத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு அதன் மீதான விளக்கம் தெரிவித்திருந்த கட்டுரையை தேசத்துரோக குற்றம் என்று விமர்சித்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த ஜூலை 11, 2025 அன்று மோரிகானில் தி வயர் ஆசிரியர் சித்தார்த் வரதராஜனுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட இந்த எஃப்ஐஆர், ஜூன் 28, 2025 அன்று தி வயரில் வெளியிடப்பட்ட மேற்கண்ட செய்தி தொடர்பாக பாஜக அலுவலக அதிகாரி ஒருவர் அளித்த புகாருடன் தொடர்புடையது.
அந்த எஃப் ஐ ஆர் மீது இடைக்கால ஜாமீன் கொடுக்கப்பட்டிருந்த நிலையில் தி வயர் அலுவலகத்திற்கு அசாம் மாநிலத்தின் மோனிகாந்த் நகரத்தில் உள்ள காவல் நிலையத்திலிருந்து நேரில் ஆஜராகுமாறு சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஆகஸ்ட் 14 அன்று தி வயர் அலுவலகத்திற்கு அதன் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மீது சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதுபோலவே, இன்று (ஆகஸ்ட் 19), அதே எஃப்ஐஆருக்காக கரண் தாப்பரின் பெயரிலும் அதே போன்ற ஒரு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
அந்த சம்மனில் “தற்போதைய விசாரணை தொடர்பாக, உங்களிடமிருந்து உண்மைகள் மற்றும் தாங்கள் செய்தி வெளியிட்டதற்கான சூழ்நிலைகளை அறிய உங்களிடம் கேள்வி கேட்க நியாயமான காரணங்கள் இருப்பது தெரியவந்துள்ளது” என்று கூறி, வரதராஜன் மற்றும் தாப்பர் இருவரும் ஆகஸ்ட் 22 வெள்ளிக்கிழமை குவஹாத்தியின் பன்பஜாரில் உள்ள குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளனர். “இந்த அறிவிப்பின் விதிமுறைகளுக்கு ஆஜராகத் தவறினால் / இணங்கத் தவறினால் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள்” என்று சம்மனில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் தி வயர் ஊடக ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மற்றும் கரண் தாப்பர் ஆகிய இருவர்மீது தேசத் துரோக வழக்கை உறுதிப்படுத்தியுள்ளது அசாம் மாநில போலீசு.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தான் வெற்றிகரமாகவும், துல்லிய தாக்குதல் மூலமாகவும் நடத்தியதாக இந்திய ஒன்றிய பிரதமர் பாசிச மோடி குதூகலித்து கொண்டிருக்கும் போதே, அதற்கு நேர் எதிராக, “இந்த போரை நான் தான் நிறுத்தச் சொல்லி இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு உத்தரவிட்டேன்” என்று அமெரிக்க அதிபர் பாசிச டிரம்ப் தொடர்ச்சியாக அறிவித்துக் கொண்டிருந்தார்.
ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பாக பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய திருவாளர் மோடி டிரம்பின் இத்தகைய பேச்சு குறித்து எந்த விதமான கருத்தும் கூறவில்லை என்பதுடன் அது பற்றி வாயே திறக்கவில்லை.
ஆர்எஸ்எஸ் பாஜக மற்றும் சங்பரிவார கும்பலின் ‘ தேசபக்தி’ அன்றாடம் பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் நாறிக்கொண்டுள்ளது.
இந்தியாவின் இயற்கை வளங்கள், கனிம வளங்கள் துவங்கி இந்தியாவின் வர்த்தகம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட அனைத்து துறைகளையும் அமெரிக்க தலைமையிலான கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாரி கொடுத்தது மட்டுமின்றி, இந்திய பொருள்களை அந்த நாட்டிற்கு அனுப்பினால் அதன் மீது 50 சதவீத இறக்குமதி வரி போட்டு கழுத்தை நெரித்து வருகின்றனர்.
இந்த வரி விதிப்பு காரணமாக இந்தியாவில் உள்ள சிறு குறு தொழில்கள் மற்றும் முக்கியமான உற்பத்தி பொருள்கள் ஆகியவை கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது என்று செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகிக் கொண்டே உள்ளது.
அமெரிக்காவின் ஆணைக்கு அடிபணிந்து பாகிஸ்தான் மீதான போரை நிறுத்திக் கொண்ட ஆர்எஸ்எஸ் பாஜக மற்றும் சங் பரிவார கும்பல், அந்தப் போரில் நடந்த உண்மை விவரங்களை வெளியிடும்படி ஊடகவியலாளர்கள் எழுப்புகின்ற கேள்விகளையும், நாடாளுமன்றத்தில் காங்கிரசு உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்புகின்ற கேள்விகளுக்கும் எந்த விதமான நேர்மையான பதிலையும் இதுவரை அளிக்கவில்லை.
தகவல் தொழில்நுட்பம் வளராத காலத்தில் அரசாங்கம் வெளியிடுகின்ற அறிக்கையை தவிர வேறு எதுவும் உண்மை இல்லை என்று சத்தியம் அடித்து நியாயப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்றோ சமூக ஊடகங்கள் வந்த பிறகு அன்றாடம் உலகம் முழுவதும் நடக்கின்ற செய்திகளை ஒரு மூலையில் இருந்து மற்றொரு மூலைக்கு கொண்டு செல்வதற்கு இந்த தகவல் தொடர்பு சாதனங்கள் பயன்பட்டுக் கொண்டிருக்கிறது. துல்லியமாக நடந்த உண்மைகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது என்ற சூழலிலும் உண்மை விவரங்களை வெளியிடுவதற்கு இந்திய ஒன்றிய அரசாங்கம் இதுவரை துணிவாக முன் வரவில்லை என்பது மட்டும் இன்றி நாட்டுக்கும், மக்களுக்கும் ஆபரேஷன் சிந்தூரில் நடந்த உண்மை விவரங்களை தெரிவிக்காமல் மோசடியான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் என்பது தான் எதார்த்த உண்மையாகும்.
படிக்க: உத்திரப் பிரதேசத்தில் வேட்டையாடப்படும் பத்திரிக்கையாளர்கள்!
ஆபரேஷன் சிந்தூரில் மட்டுமல்ல, ஆபரேஷன் காகர் உள்ளிட்ட அனைத்து விதமான அரசு பயங்கரவாத ஒடுக்கு முறைகள், பாசிச நடவடிக்கைகள் ஆகியவற்றை கேள்விக்கு உள்ளாக்குகின்ற ஊடகவியலாளர்கள் மற்றும் தேசப்பற்றாளர்கள் மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு கடும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதும், குறிப்பிட்ட காலத்திற்கு எந்த விசாரணையும் இன்றி சிறையில் அடைக்கப்படுவதும் தொடர்ச்சியாக நடந்து கொண்டுள்ளது.
படிக்க: பத்திரிகையாளர்கள் மீது பாயும் பார்ப்பன பாசிச பயங்கரவாதிகள்!
ஆர் எஸ் எஸ் பாஜக ஆட்சிக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் THE WIRE பத்திரிகை, அதற்கு முன்பாக நியூஸ் கிளிக், அதன் பிறகு பல்வேறு ஊடகங்கள்; பிபிசி உள்ளிட்ட வெளிநாட்டு ஊடகங்கள் துவங்கி உள்நாட்டில் வெளி வருகின்ற இந்தியா டுடே வரை அனைத்து விதமான பத்திரிகைகளின் மீதும் பாசிச ஆர் எஸ் எஸ் பாஜக கும்பலின் தாக்குதல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
அரசாங்கம் முன்வைக்கின்ற செய்திகளை தவிர வேறு எதுவும் உண்மை இல்லை என்ற கோணத்தில் மக்கள் சிந்திக்க வேண்டும் என்பதும், எப்படிப்பட்ட பொய் பித்தலாட்டங்களையும், தேச துரோக நடவடிக்கைகளையும் தனது ஊடகத்தின் மீதான மிருக பலத்தை வைத்துக்கொண்டு உண்மையாக்குவதற்கு ஆர்எஸ்எஸ் பாஜக சங்பரிவார் கும்பல் தொடர்ச்சியாக முயற்சித்துக் கொண்டுள்ளது.
தேச துரோக வழக்கு, ஊபா சட்டத்தின் கீழ் அடைப்பது போன்ற அரசு பயங்கரவாத, பாசிச ஒடுக்கு முறைகளை எதிர்த்து போரிடாமல் இத்தகைய நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவர முடியாது.
நாட்டுப் பற்றுடன் உண்மையை வெளி கொண்டு வருவதால், ‘தேசத்துரோகிகள்’ என்று பட்டம் சூட்டப்படுவதும், வழக்குகள் பதியப் படுவதும் கௌரவமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது மட்டுமின்றி இத்தகைய அடக்குமுறைகளுக்கு பலியாகின்ற ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்களுக்கு உறுதுணையாக நின்று பாசிச அடக்குமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
◾மாசாணம்.
நன்றி: புதிய ஜனநாயகம் தினசரி