பாஜக 2014-ல் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற காலம் முதல் இந்துத்துவ பாசிச அராஜகக் கொள்கைகளை நடைமுறைப் படுத்துவதிலும், மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு கார்ப்பரேட் நலன் காக்கும் தொண்டூழியம் புரிவதிலும், தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதற்காக பல்வேறு விதமான தில்லுமுல்லு- மோசடிகளை செய்து வந்த பல கேவலங் களையும், பல்வேறு நேரங்களில் நாம் இதே தளத்தில் கட்டுரைகளாக கொண்டு வந்துள்ளோம்.
தேர்தல் ஆணையம் தேர்வு முறை:
ஆண்டாண்டு காலமாக தேர்தல் ஆணையத்தின் ஐஏஎஸ் ஆணையர்களை நியமனம் செய்வதற்கான குழுவில்,
1) பிரதமர்
2) எதிர்க்கட்சித் தலைவர்
3) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி… இவர்களே இருந்தனர்.
இந்நடைமுறை பாஜக சொல்வதை நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவானதாக இல்லாதிருந்தது. எனவே, எடுபிடி சங்கி தேர்தல் ஆணையர்களை உருவாக்கத் தடையாக இருப்பதாகக் கருதிய பாஜக, பாராளுமன்றத்தில் புதியதொரு சட்ட மசோதா மூலம் தேர்தல் ஆணையாளர்களை நியமனம் செய்வதற்கான மேற்கண்ட 3 பேர் கொண்ட குழுவில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு, அதற்குப் பதிலாக உள்துறை அமைச்சர் அக்குழுவில் இடம் பெறுவார் என திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. உடனடியாக நடைமுறைக்கும் கொண்டுவரப்பட்டது. அப்படியானால் குழுவின் மூவரில், எதிர்க்கட்சித் தலைவர் நீங்கலாக மற்ற இருவரும் பாஜகவை சேர்ந்தவர்கள் என்பதால் பெரும்பான்மை பெற்றுவிட்டதால், பாஜக விரும்புகின்ற நபர்களே தேர்தல் ஆணையாளர்களாக நியமனம் செய்து கொள்ளும் சதிகாரச் சூழலை உருவாக்கிக் கொண்டது காவிக் கூட்டம். அதன் மூலம் சரியான ஆர்எஸ்எஸ் இந்துத்துவா சங்கிகளாகப் பார்த்து அடாவடித்தனமானதேர்தல் ஆணையாளர்களை நியமித்துக் கொண்டது ஒன்றிய பாஜக அரசு.
இப்படித்தான் நீதித்துறை, அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை, ஐஏஎஸ், ஐபிஎஸ், ராணுவம், சென்ட்ரல் போலீஸ்… இப்படி முக்கியத்துறைகள் அனைத்திலும் ஆர் எஸ் எஸ் பாஜக இந்துத்துவ சிந்தனை ஓட்டம் உடைய சங்கிகளை உள்ளே நுழைத்து விட்டது இந்த ஒன்றிய பாசிச மோடி அரசு.
2024 நாடாளுமன்றத் தேர்தலில் நடந்தது என்ன?
2024 நாடாளுமன்றத் தேர்தலிலும், அரியானா, மகாராஷ்டிரா, உ.பி., ம.பி., பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல்களிலும் பொதுவான கருத்துக்கணிப்பு மக்கள் உணர்வு மட்டம் அனைத்திற்கும் மாறாக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி அடைந்தது பெரிய சந்தேகத்தை அனைவருக்கும் ஏற்படுத்தியது.
குறிப்பாக மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் பாஜக எப்படி தில்லுமுல்லுகள் மூலமாக வெற்றியை ஈட்டியது என்பதனை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்ட பொழுது, காவிமயமான தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இருந்து ‘காங்கிரஸுக்கு இப்படி குறை சொல்வதே வாடிக்கையாகி விட்டது அப்படியெல்லாம் எந்த ஒரு மோசடியும் நடைபெறவில்லை’- என யோக்கியவான் போல சத்தியம் செய்தது. இதற்கு உச்ச நீதிமன்றமும் பக்க வாத்திய வாசித்தது. ‘சரி; நீங்கள் யோக்கியவான்களாகவே இருந்து விட்டுப் போங்கள்; ஆனால் வாக்காளர் பட்டியலையும் மின்னணு எந்திரங்களையும் சோதனை செய்ய அனுமதியுங்கள்’ என்று காங்கிரஸ் கேட்ட பொழுது, தேர்தல் ஆணையம் பதில் சொல்வதற்கு முன்னாலேயே பாஜக காவிக் கூட்டம் போட்டி போட்டுக் கொண்டு ராகுலையும், காங்கிரசையும் வறுத்தெடுத்தது.
‘தேர்தல் ஆணையம் என்பது உச்சநீதிமன்றம் போல் தனித்த அதிகாரம் பெற்ற, தன்னுரிமை பெற்ற யோக்கியதாம்சம் பொருந்திய அமைப்பாகும். அதனை எதிர்க்கட்சியினர் சந்தேகிப்பதற்கும், குறை சொல்வதற்கும் எவ்வித தகுதியும் இல்லை’ என்று குய்யோ முறையோ என்று ஓலமிட்டனர்.
தற்போது 2025 ஆகஸ்ட் 7-ல் டெல்லி காங்கிரஸ் தலைமையகத்தில் ஊடகவியலாளர்களை கூட்டி வைத்துக்கொண்டு 2024 நாடாளுமன்ற தேர்தல் மோசடிகளுக்கு பெங்களூரு வாக்குப்பதிவு மோசடி புள்ளி விவரங்களை தேர்தல் ஆணையத்தின் ஆதாரத் தரவுகளிலிருந்தே ராகுல் காந்தி புட்டுப் புட்டு வைத்துள்ளார்.
இப்படிப்பட்ட தேர்தல் தில்லுமுல்லு மோசடிகள் வாக்காளர் பட்டியலில் மட்டுமல்ல;
EVM வாக்கு இயந்திர மோசடிகள் மூலமாகவும் பாஜக தனது வெற்றியினை தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு வருகிறது என்பதனையும், இந்த தில்லு முல்லு மோசடிகளை தடுத்து நிறுத்த அனைவரும் களம் கண்டு சமர் புரிய வேண்டும் என்றும் ஏற்கனவே அம்பலப்படுத்தி இருக்கிறோம்.
காங்கிரசுக்கும் நமக்கும் பல்வேறு விதமான அரசியல் ரீதியான கருத்து முரண்கள் இருப்பினும், ஆகஸ்ட் 7-ல், ராகுல் காந்தி தேர்தல் முறை கேடுகள் குறித்து அம்பலப்படுத்தி இருப்பதை வரவேற்போம்.
தேர்தல் மோசடி குறித்து ராகுல் விளக்கியிருப்பதுதான் என்ன?
- காங்கிரஸ் நடத்தி ஆய்வில் கர்நாடகாவில் 28 தொகுதிகளில் 16-ஐ காங்கிரஸ் வெற்றி பெறும் என உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால் 9-ல் மட்டுமே காங்கிரஸ் வென்றது.
- பெங்களூரு மத்திய தொகுதியில் உள்ள 7 சட்டப்பேரவை தொகுதியில் மகாதேவ்புரா சட்டப்பேரவை தொகுதி முடிவு மட்டுமே பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் தோல்விக்குக் காரணம் என கண்டுபிடிக்கப்பட்டது.
- இதனால் மக்களவைத் தேர்தலில் மகாதேவ்புரா சட்டப் பேரவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் மட்டும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில் முறைகேடுகள் வெகுவாக கண்டுபிடிக்கப்பட்டன.
- மின்னணு வாக்காளர் பட்டியல் தராததால் காகித அடிப்படையில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் சரிபார்க்கப்பட்டனர்.
- வாக்காளர் பட்டியலை இயந்திரங்கள் மூலம் சரிபார்க்கும் வசதியை தேர்தல் ஆணையம் செய்து தர மறுத்துவிட்டது.அதனால் 7 அடி உயரத்திற்கு வாக்காளர் பட்டியல் பிரித்து எடுக்கப்பட்டு, மறைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய உண்மை கண்டுபிடிக்கப்பட்டது.
- பெங்களூரு மத்திய மக்களவை தொகுதிக்கு உட்பட்ட மகாதேவ் புரா சட்டமன்றத் தொகுதி வாக்குப்பதிவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதில் இந்த தொகுதியில் காங்கிரஸ் 1,15,586 வாக்குகளை பெற்றுள்ளது. பாஜக 2,29,632 வாக்குகளை பெற்றுள்ளது.
- இதில் வேடிக்கை என்னவெனில் இந்த மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அனைத்து சட்டப் பேரவை தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. மகாதேவ்புரா சட்டப்பேரவைத் தொகுதியில் மட்டும் 1,00,250 வாக்குகள் திருடப்பட்டது(அதாவது போலி வாக்காளர்கள்) என்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
- இதில் 11, 965 வாக்காளர்களின் பெயர்கள் இரு முறை பதிவாகியுள்ளன; 40,009 வாக்காளர்களின் முகவரிகள் போலி; 10,452 வாக்காளர்கள் ஒரு குறிப்பிட்ட முகவரியில் மொத்தமாக பதிவு செய்துள்ளனர்; அத்தோடு 4132 பொருத்தம் இல்லா புகைப்படங்கள் ஒட்டப்பட்டுள்ளன.
- புதிய வாக்காளர்கள் பதிவு செய்வதற்கான ஃபார்ம் 6 (Form 6) ஆவணத்தை 33,962 பேர் தவறாகப் பயன்படுத்திப் உள்ளனர்.
- திட்டமிட்டரீதியில் தேர்தல் முடிவுகளை சீர்குலைக்கும் முயற்சி இது என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
- பல பதிவுகளில் வீட்டு எண் 0 என குறிப்பிடப்பட்டுள்ளது. முகவரிகளும் கூட 00 எனக் குறிப்பிடப்பட்டுள்ளன.
- ஒற்றைப் படுக்கறை கொண்ட முகவரியில் 80 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த இடத்தை பார்வையிட்டபோது அங்கு எவரும் வசிக்கவே இல்லை.
- கர்நாடகாவில் ஒரே நபர் பல பூத்களில் வாக்குகளை செலுத்தியுள்ளார். இப்படி எண்ணற்ற வாக்குகளை போலியாக செலுத்தியுள்ளனர்.
- தேர்தல் ஆணையம் மட்டும் மின்னணு தரவுகளை வழங்குமேயானால் 30 நிமிடங்களில் இந்த ஆய்வை முடித்து விட முடியும்.
- தேர்தல் ஆணையத்தின் ஒத்துழைப்பு இன்மையால் ஒரு குறிப்பிட்ட தொகுதியில் ஆய்வு மேற்கொள்ள எங்களுக்கு ஆறு மாதங்கள் தேவைப்பட்டு விட்டன என்கிறார் ராகுல்.
- தேர்தல் முடிவுகள் திருடப்படுகின்றன என நீண்ட கால சந்தேகத்தை மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்தின. வாக்காளர் பட்டியல் குறித்த தரவுகளை இயந்திரத்தின் மூலம் எளிதில் கண்டறிய முடியும். ஆனால் அத்தகைய தரவுகளை தேர்தல் ஆணையம் தருவதில்லை; அதற்கு பாஜக பலத்த முட்டுக்கட்டையாக இருக்கிறது.
- இதன் மூலம் தேர்தல் ஆணையமும் பாஜகவும் கூட்டணி அமைத்துக் கொண்டு தேர்தலை திருடுகின்றன என்பது வெட்ட வெளிச்சம் ஆகிறது.
எதுடா ஜனநாயகம்?
தேர்தல் செயல்முறையை சீர்குலைக்க ‘ஜனநாயக நிறுவனங்கள்’ தவறாக பயன்படுத்தப்படுகின்றன.
2014 மக்களவைத் தேர்தல் முதல் பல்வேறு மாநிலங்கள் தேர்தல்களில் பாஜகவுடன் தேர்தல் ஆணையம் கூட்டு வைத்துள்ளது என்பது கர்நாடகாவின் ஒரு சட்டமன்றத் தேர்தல் ஆய்வில் கண்டறியப்பட்ட மோசடிகள் மூலம் தெள்ளத் தெளிவான உண்மைகளை புரிந்து கொள்ள முடிகிறது.
படிக்க: பீகார் தேர்தல்: போலி ஜனநாயகத்தை கைவிட்டு பாசிச வழிமுறைக்கு மாறியுள்ள ’இந்திய ஜனநாயகம்’.
*பெங்களூருவில் ஒரு தொகுதியில் மட்டும் 1,00,250 வாக்குகள் திருட்டு எனில், நாடு முழுவதும் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். 5 வகைகளில் வாக்குகள் திருடப்பட்டுள்ளன என்பதாக ராகுல் பட்டியலிடுகிறார்.
1. போலி வாக்காளர்கள்
2. போலி முகவரி.
3. ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள்.
4. தவறான புகைப்படங்கள்.
5. படிவம் 6 தவறாகப்
பயன்படுத்துவது.
இதுதான் அந்த ஐந்து வகை. (இதில் EVM வாக்கு இயந்திர தில்லு முல்லு மோசடிகளையும் இணைத்துக் கொள்ள வேண்டும்) ஆக, நாட்டில் எண்ணிக்கை
யிலடங்கா இளைஞர்களின் வாக்குகள் திருடப்படுகின்றன.
ஆம்! வாக்குகளை பாஜக தான், காவித் தேர்தல் ஆணையத்தின்
ஒத்துழைப்புடன் திருடுகின்றன என்பதனை ராகுல் காந்தி ஆதாரப்பூர்வமாக மெய்ப்பித்திருக்கிறார்.
மேலும், இதுவரை எங்களிடம் ஆதாரம் இல்லாமல் இருந்தது; தற்போது 100 சதவீதம் ஆதாரம் உள்ளது; அனைத்து தரவுகளுமே கிடைத்துவிட்டன; அவை யாவும் ஆதாரப்பூர்வமான தேர்தல் ஆணையத்தின் தரவுகளே; இந்த வாக்கு திருட்டு நாடு முழுவதும் எண்ணற்ற தொகுதிகளில் அரங்கேறியுள்ளதாக ராகுல் காந்தி தெரிவிக்கிறார்.
மானம் கெட்ட தேர்தல் ஆணையம்!
மேற்கண்ட பட்டியலில் கண்டவாறு ராகுல் காந்தி இப்படிப் போட்டு உடைத்தவுடன்,
எதிர்த்து குரல் எழுப்பிய காலத்திலெல்லாம் கனமான சாக்குகளால் போர்த்திக் கொண்டு படுத்து கிடந்ததோடு, சவடால் அடித்த தேர்தல் ஆணையம், தற்போது, வேகவேகமாக ராகுலுக்கு பதில் கொடுக்கிறது. கேள்வி கேட்கிறது.
அதுவும் எப்போது? ‘நீங்கள் செய்துள்ள மோசடிகள் அனைத்தும் இப்பொழுது எங்கள் கரங்களில் உள்ளன. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தேர்தல் ஆணையாளர்கள் உட்பட ஒட்டுமொத்த தேர்தல் ஆணைய ஊழியர்களும் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட்டே தீருவீர்கள்; இது உறுதியாக நடக்கும்’ -என்று ராகுல் காந்தி மிரட்டியவுடன் தான், ‘வாக்காளர் மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை செய்வதற்கு ஏதுவாக, நீங்கள் சத்தியப் பிரமாண ஆவணத்தில் (Affidavit) கையெழுத்திட்டு அனுப்புமாறு ராகுல் காந்திக்கு ‘மிகச்சிறந்த நடுநிலையாளர்கள் – யோக்கிய சிகாமணிகள் போல்’ வேடம் தரித்த தேர்தல் ஆணையம் தற்போது கடிதம் அனுப்பி உள்ளது.
எனவே, இது விடயத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுப்பதும் எடுக்காததும் ராகுல் கைக்கு போய்ச் சேர்ந்துள்ளது என்பதே உண்மை.
அதே நேர்வில், ‘உன்னாலே நான் கெட்டேன்; என்னாலே நீ கெட்டாய்’ என்பது போல தேர்தல் ஆணையமும், பாஜகவும் முட்டிக் கொண்டு நிற்கின்றன.
போராட்டங்கள் சூடு பிடிக்கப் போகின்றன!
ஆகஸ்ட் 8 பெங்களூருவில் கர்நாடக மாநில காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த இது தொடர்பான – தேர்தல் ஆணையம் மற்றும் பாஜக-வுக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ராகுல் காந்தி தலைமையில் மிகவும் எழுச்சியாக நடைபெற்றது.
ஆகஸ்ட் 7ல் டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் 25க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்ற கூட்டத்தில் இப்பிரச்சினை தொடர்பாக அகில இந்திய அளவில் பெருமளவிலான வீதிப் போராட்டங்களை முன்னெடுப்பதென முடிவாற்றி இருக்கிறார்கள். குறிப்பாக அவசர அவசரமாக பீகாரில் வாக்காளர் வரைவு சிறப்பு திருத்தப் பட்டியல் (SIR) ஆகஸ்டு 1-ல் அனைத்து எதிர்ப்புகளையும் மீறி பாஜக துணையுடன் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள நிலையில், செப்டம்பர் 1-ல் முடிவான வாக்காளர் பட்டியல் வெளியிட விடாமல் தடுப்பதற்கு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
இப்படிப்பட்ட போராட்டங்களில் அனைத்து முற்போக்கு இயக்கங்களும், புரட்சிகர இயக்கங்களும் வெகு மக்களை திரட்டி பங்கேற்பது சாலச் சிறந்தது.
ஒப்பாரி வைக்கும் பாஜக!
இவ்வளவு காலமும் வெற்றுச் சவடால் அடித்துக் கொண்டிருந்த தேர்தல் ஆணையமும், பாஜகவும் முழுமையாக அம்பலப்பட்டுப் போய் நிற்கின்றன. வேறு வழியின்றி தேர்தல் ஆணையம், ராகுலிடம் சத்தியபிரமாணப் பத்திரம் கேட்கிறது.
ஆனால் பாஜக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ராகுல் காந்தியை கடுமையாகச் சாடி பேசுகிறார். பொது அமைப்பான தேர்தல் ஆணையத்தையே குறை சொல்கின்ற போக்கிலிருந்து ராகுல் காந்தியினுடைய தகுதியை மக்கள் எடை போட்டுக்கொள்ள வேண்டுமாம். இந்த உத்தமபுத்திரர் சொல்ல வந்து விட்டார்.
பாஜக சார்பில் பதில் அளித்துள்ள ரவிசங்கர் பிரசாத் இப்படிக் கூறுகிறார்:
‘எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி பொறுப்பற்ற மற்றும் வெட்கமற்ற கருத்துக்களை தெரிவித்துள்ளார்; தேர்தல் ஆணையத்தை ஒரு மோசடி அமைப்பு என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் மூலம் வெட்கமின்மையின் அனைத்து வரம்புகளையும் அவர் தாண்டிவிட்டார்; 2014 முதல் பிரதமர் மோடி தேர்தல்களில் மகத்தான வெற்றி பெற்று வருகிறார்; அதையும் ஒரு மோசடி என்று நீங்கள் அழைக்கின்றீர்கள்; மோடியின் பணி, நேர்மை, மற்றும் அவரது தலைமையில் நாட்டின் முன்னேற்றத்திற்காக அவருக்கு வாக்களித்த நாட்டு மக்களை நீங்கள் அவமதிக்கிறீர்கள்; நீங்கள் அவதூறு வழக்குகளில்(பழிவாங்குவதற்காக போடப்பட்டவை) ஜாமீன் பெற நாடு முழுவதும் சுற்றி திரிகிறீர்கள்; ராகுல் காந்தியின் பேச்சுக்களை நான் வன்மையாக கண்டிக்கிறேன்; அவர் பொறுப்பற்றவர்; அரசியலமைப்பை பற்றி என்ன பேசுவது என்று கூட அவருக்குத் தெரியவில்லை; காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் தங்கள் ஆணையை வழங்காததால் விரக்தி மற்றும் கோபத்தால் தேர்தல் ஆணையத்திற்கெதிராக அவர் இத்தகைய குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார்; உங்கள் இத்தகைய நடத்தை, குணம், காரணமாக மக்கள் உங்களுக்கு (காங்கிரசுக்கு)ஒருபோதும் வாக்களிக்க மாட்டார்கள்’ —என்று மோடி அமித்ஷா பாசிச காவிக் கும்பலுக்காக ரவிசங்கர் பிரசாத் கதறுகிறார்; ஒப்பாரி வைக்கிறார். அடேங்கப்பா…! ரவி சங்கர் பிரசாத்தின் ஒப்பாரி வார்த்தைகள் யாவும் அவருக்கும் அவர் சார்ந்த பாசிச பாஜக சங் பரிவார் கூட்டத்திற்கு மட்டுமே முற்றிலும் பொருத்தமானது. இவர்கள் உபதேசம் செய்ய புறப்பட்டது தான் விந்தையிலும் விந்தையாக என மக்கள் எள்ளி நகையாடுகின்றனர்.
இப்படி, போலி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, EVM வாக்கு இயந்திர தில்லு முல்லு மோசடிகள் மூலம் மட்டுமே பாஜக ஆர் எஸ் எஸ் இந்துத்துவா சங்பரிவார் பாசிச கலவரக் காவிக் கூட்டம் போலி தேர்தலில் போலியாக வெற்றியை தக்க வைத்துக் கொண்டு வருகின்றன. சொல்ல முடியாத அளவிற்கு நாடு முழுமைக்கும் உள்ள மக்களுக்கு கடும் துயரங்களை கொடுத்து விட்டன இந்தக் காவிக் கூட்டம். இவை அனைத்தும் இன்று நாடு முழுவதும் நாறுகிறது.
சுயேச்சையான தன்மையில் எவ்வித அழுத்தத்திற்கும் ஆளாகாமல் செயல்படுவதாக காண்பித்துக் கொண்ட மானம் கெட்ட தேர்தல் ஆணையத்தினதும், அதைவிட கேவலமான பாஜக சங் பரிவார் கூட்டத்தினதும் எஞ்சி இருந்த கோவணங்களையும் ஆகஸ்ட் 7ல் டெல்லியில் உருவிக் கொண்டு விட்டார் ராகுல் காந்தி. அதுவும் ஊடகவியலாளர்கள் மத்தியில். கார்ப்பரேட் ஊடகங்கள் எல்லாம் இனி எந்த முகத்தை வைத்துக்கொண்டு எந்த வகையில் களமாடுகின்றன என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம். வட மாநிலங்களை விட்டுத் தள்ளுங்கள்; தமிழகத்தில் நியூஸ் 18, பாலிமர், நியூஸ் 7, புதிய தலைமுறை, தந்தி டிவி, ஜெயா டிவி போன்ற சங் பரிவார் கூட்டத்தின் எடுபிடிகளாய்ப் போன தொலைக்காட்சி ஊடகங்கள் இனி என்னென்ன விவாதங்களை மேற்கொள்கின்றன என்பதையும் கூட சேர்த்துப் பார்ப்போம்.
அந்த வகையில் காங்கிரஸ் கட்சியினுடனான நமது கொள்கை ரீதியான முரண் ஒரு புறம் இருந்தாலும், பாசிச மோடியின் முகத்திரையை நன்றாக கிழிப்பதற்கு ராகுல் பயன் பட்டிருக்கிறார் என்ற அடிப்படையில், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி நாடெங்கும் பாஜக கும்பலுக்கு எதிரான போராட்டம் ‘தீ’ எனப் பரவட்டும்!
அடுத்த தேர்தல் வரை காத்திருக்காமல் ஒன்றிய பாசிச பாஜக அரசை பதவியை விட்டு விரட்டி அடிக்க இத்தக்க, தருணத்திலேயே களம் இறங்குவோம்! சமர் புரிவோம்! வெற்றியினை ஈட்டுவோம்!
- எழில்மாறன்
பாஜக என்ற கட்சி தன்னுடைய அதிகார லாபத்துக்கும் ஆதிக்க வெறிக்கும் ஆர் எஸ் எஸ் சித்தாந்தத்தை பரப்புவதற்கும் அதற்கான ஆட்களை உருவாக்குவதற்கும் எவ்வளவு கீழ்த்தரமான நிலைக்கும் போகும் என்பதை இந்திய தேர்தல் ஆணையர் வாக்காளர் பட்டியல் முறைகேடு அம்பலப்படுத்தி உள்ளது. மக்கள் யார் வேண்டுமென்பதை முடிவு செய்வார்கள், அப்படி பிஜேபி வேண்டாம் என முடிவு எடுத்தால் கூட? பாஜகவின் தேர்தல் ஆணைய அணி அதை அனுமதிக்காது? என்பதை தான் இந்த கட்டுரை பல்வேறு தரவுகளோடு விவரத்தை அளிக்கிறது.
தேர்தல் ஆணையத்தின் மோசடி நடவடிக்கைகளளையும், மக்கள் ஆதரவில்லாமல் தொடர்ந்து மத்தியில் ஆட்சி புரிவதற்கான திட்டங்களை திட்டமிட்டு சதி செய்து தேர்தல் ஆணையரை நியமிக்கும் நடைமுறையை மாற்றி செய்த சம்பவங்களும் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் மோசடி குறித்த பவர் பாயிண்ட் ப்ரோக்ராம் பாசிச பா. ஜ. க வின் முகமூடியை கிழித்தெரிந்துள்ளது. தங்களது கட்டுரையும் மிகவும் நேர்த்தியாகவும் தற்போதைய நிகழ்வுகளை தெளிவாக படம் பிடித்து காட்டியுள்ளது. கட்டுரை அருமை அருமை அருமை