பாஜகவின் "தேர்தல் பிரிவாக" செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம்!
பெங்களூர் மகாதேவ்புரா சட்டமன்றத் தொகுதியில் 40 ஆயிரம் பேருக்கு வீட்டு எண் 0 என்று போடப்பட்டுள்ளது. அதேபோல பீகாரிலும் வாக்காளர்களின் வீட்டு எண்கள் 0 என்று போடப்பட்டுள்ளது

டந்த ஆகஸ்ட் 17ஆம் தேதி அன்று இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்  பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தினார். இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு  மூலம் ஆர் எஸ் எஸ் இன் அரசியல் பிரிவாக பாஜக செயல்படுவதைப் போலவே பாஜகவின் தேர்தல் பிரிவாக இந்திய தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவதை அனைவருக்கும்  பட்டவர்த்தனமாக உணர்த்தி இருக்கிறார்.

ராகுல் காந்தி நேரடியாக வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்தாமல் எல்லாம் சரியாக உள்ளது என்ற தோற்றத்தை உருவாக்கும் நோக்கில் இப்பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியுள்ளனர். “வாக்கு திருட்டு” என்று கூறுவது என்பது பொதுமக்களை தவறாக வழிநடத்துவதாகும் என்றும் இது இந்திய அரசியலமைப்பை அவமதிப்பதைக் காட்டுகிறது என்றும் திருவாய் மலர்ந்துள்ளார் ஞானேஷ் குமார்.

“மேலும், பிராமன பத்திரம் தாக்கல் செய்யுங்கள் அல்லது தேசத்திடம் மன்னிப்பு கேளுங்கள். மூன்றாவது வழி இல்லை. ஏழு நாட்களுக்குள் எங்களுக்கு பிரமாண பத்திரம் கிடைக்கவில்லை என்றால் இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றும் ‘நமது வாக்காளர்கள் மோசடி செய்பவர்கள்’ என்று சொல்பவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும்” என்றும் ராகுல் காந்தியின் பெயரை குறிப்பிடாமல் சண்டமாருதம் செய்துள்ளார்.

தேர்தல் ஆணையத்தின் அயோக்கியத்தனங்களைப் பற்றி கேள்வி எழுப்பினால் அது அரசியல் அமைப்பை அவமதிப்பதாகும் என்கிறார், இந்த சங்கித் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார்.

பாஜகவினர் இந்துக்கள் என்ற போர்வையில் இஸ்லாமியர்களை கொலை செய்வது, துன்புறுத்துவது பற்றி கேள்வி எழுப்பினால் “இந்துக்கள் அனைவரையும் அவமதிக்கிறார்கள்” என்று பாஜகவினர் கூறுவதைப் போலவே இந்தத் தேர்தல் ஆணையரும் கூறுகிறார்.

பஹல்காம் தாக்குதல், புல்வாமா தாக்குதல் போன்றவை ஒன்றிய பாஜக அரசின் உள்நோக்கம் கொண்ட அலட்சியத்தால் நடந்ததாக விமர்சித்தால், ஆப்ரேஷன் சிந்தூரில் ஒன்றிய அரசின் செயல்பாடு குறித்து விமர்சித்தால் “இந்திய ராணுவத்தை அவமதிக்கிறார்கள், நாட்டை அவமதிக்கிறார்கள்” என்று பாஜகவினர் கூறுவதைப் போலவே தேர்தல் ஆணையத்தின் மீதான விமர்சனத்தை இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அவமதிப்பதாக தேர்தல் ஆணையரும் திசை திருப்புகிறார்.

வாக்களிக்க வந்த வாக்காளர்களின் காணொளி காட்சிகளை வெளியிடுவது குறித்த பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு ‘வாக்கு சாவடியின் காணொளி காட்சியை வெளியிட்டால் பெண்களின் அந்தரங்க தனி உரிமை பாதிக்கும் என்றும் உங்களின் தாய், சகோதரி, மனைவி, மகள்களின் காணொளி காட்சிகளை வெளியிடுமாறு நீங்கள் கூறுவீர்களா’ என்கிறார் சங்கி ஞானேஷ் குமார்.

“மக்கள் வரிசையில் நிற்கும் காட்சிகளை வெளியிடுமாறு கூறினால் எப்படி பெண்களின் அந்தரங்க உரிமை பாதிக்கப்படும்? அவர்களின் புகைப்படங்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் பொழுது அவர்களின் அந்தரங்க உரிமை பாதிக்கப்படாதா?” என்ற கேள்விகள் எழும் என்பதை பற்றி இவர் சிறிதும் கவலைப்படவில்லை. இவர் முழு சங்கியேதான் என்பதை நிரூபிக்கும் வகையில் எப்படி பேசுகிறார் பாருங்கள்.

இதற்கு சமூக வலைத்தளங்களில் “நாங்கள் ஒன்றும் பாத்ரூம் காட்சிகளை வெளியிடுமாறு கூறவில்லை; வாக்குச்சாவடிகளில் வாக்களிக்க வரும் காட்சிகளைத் தான் வெளியிடக் கூறுகிறோம்” என்று மக்கள் பரவலாக பதிலடி கொடுத்துள்ளனர்.

ராகுல் காந்தி பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி ஓட்டு திருட்டு பற்றி அம்பலப்படுத்திவிட்ட நிலையில் பாஜகவின் முன்னாள் ஒன்றிய அமைச்சர், இன்றைய எம்பி அனுராக் தாக்கூர் ‘ரேபரேலி, வயநாடு, டைமண்ட் ஹார்பர் மற்றும் கண்ணோச் ஆகிய பாராளுமன்ற தொகுதிகளிலும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதியான கொளத்தூர் தொகுதியிலும் வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக (பல்லாயிரக்கணக்கான, லட்சக்கணக்கான சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக) குற்றம் சாட்டினார்.

மேலும் இந்தத் தொகுதிகளில் வெற்றி பெற்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, அபிஷேக் பானர்ஜி மற்றும் அகிலேஷ் யாதவ் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் அனுராக்தாக்கூர் கூறினார்.

இதைக் குறிப்பிட்டு “ராகுல் காந்தியிடம் பிரமாண பத்திரம் கேட்ட நீங்கள் ஏன் பாஜக எம்பியான அனுராக் தாக்கூரிடம் பிரமாண பத்திரம் கேட்கவில்லை” என்று பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். இந்தக் கேள்விக்கு சங்கி தேர்தல் ஆணையர் பதில் சொல்லவில்லை.

பெங்களூர் மகாதேவ்புரா சட்டமன்றத் தொகுதியில் 40 ஆயிரம் பேருக்கு வீட்டு எண் 0 என்று போடப்பட்டுள்ளது. அதேபோல பீகாரிலும் வாக்காளர்களின் வீட்டு எண்கள் 0 என்று போடப்பட்டுள்ளது.

இது குறித்து பத்திரிக்கையாளர் எழுப்பிய கேள்விக்கு ‘வீடுகள் இன்றி சாலையோரத்தில், பாலத்தின் கீழ், விளக்கு கம்பத்தின் அடியில் தூங்கும் நபர்களுக்கு வாக்குரிமை கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர்களை போலி வாக்காளர்கள் என்று கூறினால் அது  ஏழைகளை பார்த்து நகைப்பதற்கு சமம் என்றும் சங்கி ஆணையர் பதில் கூறுகிறார்.

வீடுகளே இல்லாத நபர்களுக்கு தேர்தல் ஆணையம் கோரும் 11 ஆவணங்களில் எந்த ஒரு ஆவணமும் இருப்பதற்கான வாய்ப்பே இல்லை. இந்த நிலையில் எப்படி இவர்களுக்கு வாக்குரிமை கொடுக்கப்பட்டது என்ற கேள்வி எழுகிறது.

பீகாரில் நடத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்தில் (SIR)ல் வாக்காளர்களாக சேர்க்கப்பட்ட  7.24  கோடி பேரும் நீங்கள் கூறிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கொடுத்து விட்டார்களா? எந்த ஆவணங்களை கொடுத்தனர் என்று பத்திரிக்கையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு இந்த சங்கி பதில் அளிக்கவில்லை.

அடுத்து, வாக்காளர்களின் பெயருக்கு அடுத்து தந்தை பெயர் கணவர் பெயர் இடம் பெறும் இடங்களில் xyz; hfgd என்பன போன்று குறிப்பிடப்பட்டுள்ளது குறித்து பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கும் எந்த பதிலும் சொல்லவில்லை.

வாக்காளர் பட்டியலை கணினி மூலம் சோதித்தறியும் வகையில்  வெளியிட்டால் என்ன பிரச்சனை? என்ற பத்திரிக்கையாளர்களின் கேள்விக்கு ஒரு அற்புதமான விளக்கத்தை சங்கி தேர்தல் ஆணையர் கொடுத்திருக்கிறார். ‘பியூஸ் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் இருக்கிறார்கள். இதை எடுத்து வைத்துக்கொண்டு இவர்கள் எல்லோரும் போலி வாக்காளர்கள் என்று கூறுவார்கள். அதனால் தான் வெளியிடவில்லை’ என்கிறார்.

“தந்தை பெயர், வீட்டு முகவரி போன்றவை மாறிமாறி இருக்குமே?  அதை வைத்து உண்மையைத் தன்மையை நிரூபித்து விடலாமே?” என்று இதற்கு பலரும் வலைதளங்களில் பதில் கூறி சங்கி தேர்தல் ஆணையரை உரித்தெடுத்து விட்டனர். சாதாரண பொது மக்களுக்கு தெரிந்த வழிமுறை கூட இந்த ஐஏஎஸ் படித்த ஆணையருக்கு தெரியவில்லை என்று நம்புவதற்கு வாய்ப்பே இல்லை. இவர் முழு சங்கியாக இருப்பதால்தான் இப்படிப்பட்ட அயோக்கியத்தனமான பதிலை இவரால் சொல்ல முடிகிறது என்பது தான் உண்மை.

‘மகாராஷ்டிராவில் அரசாங்கப் புள்ளிவிவரப்படி 18 வயதிற்கு மேல் வாக்களிக்கும் தகுதியில் உள்ளவர்களின் மக்கள் தொகையை விட வாக்காளர் பட்டியலில் அதிக மக்கள் வாக்காளர்களாக உள்ளனரே, இது எப்படி சாத்தியம்?’ என்று பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கும் அவர் பதில் சொல்லவில்லை.

மகாராஷ்டிரா மாநிலத்தில் ‘ஐந்து வருடங்களில் புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையை விட அதிகமான வாக்காளர்கள் ஐந்து மாதத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது எப்படி சாத்தியம்?’ என்ற கேள்விக்கும் அவர் பதில் சொல்லவில்லை.

“இப்படி எந்த கேள்விகளுக்கும் பதில் சொல்ல முடியாது என்பது தெரிந்தே எதற்காக ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை நடத்தி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னைத்தானே அம்பலப்படுத்தி அசிங்கப்பட வேண்டும்?” என்ற கேள்வி வாசகர்கள் மனதில் எழலாம்.

பாஜகவினருக்கு – சங்கிகளுக்கு அவமானப்படுவது, அசிங்கப்படுவது என்பதெல்லாம் ஒரு பொருட்டே அல்ல. பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் ஆப்ரேஷன் சிந்தூர் குறித்தான எதிர்க்கட்சிகளின் கேள்விகள் எதற்கும் பதிலளிக்க வக்கற்ற பாஜகவினர் பாராளுமன்றத்திற்கு வெளியில் வந்து “நாங்கள் எதிர்க்கட்சிகளின் வாதங்களை தூள் தூளாக்கி விட்டோம்” என்று பேசுகின்றனர்.

படிக்க: தேர்தல் திருட்டு: எஞ்சியிருந்த… தேர்தல் ஆணையம் – மோடி, அமித்ஷாக்களின்… கோவணங்களையும் உருவி எடுத்து விட்டார் ராகுல்!

பாராளுமன்ற விவாதத்தை நாட்டு மக்களில் எத்தனை பேர் பார்த்துவிடப் போகிறார்கள்? அல்லது ஊடகங்களின் வாயிலாக எத்தனை பேர் அறிந்து கொள்ளப் போகிறார்கள்? அதிலும் குறிப்பாக பாஜகவை நம்பி ஆதாரித்துக்கொண்டிருக்கும் அப்பாவி மக்கள் இதைப் பற்றி நிச்சயம் அறிந்து கொண்டிருக்கப் போவதில்லை. இப்படிப்பட்ட மக்களை தன்வசம் தொடர்ந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே பாஜகவினர் இப்படி பொய்களை பரப்பி வருகிறார்கள்.

அதேபோல இந்தியத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் நடந்தது பற்றியும் பாஜகவின் அப்பாவி ஆதரவாளர்கள் எதுவும்  அறிந்து கொள்ளப் போவதில்லை. அப்படிப்பட்ட மக்களிம் “ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு பொய் என்றும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் தேர்தல் ஆணையர் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி நிரூபித்து விட்டார்” என்று பாஜகவினர் பொய் பிரச்சாரம் செய்வதற்காகவே இப்படிப்பட்ட ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பை இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நடத்தி இருக்கிறார்.

ஞானேஷ் குமார் உள்ளிட்ட தேர்தல் ஆணையர்கள் சங்கிகளாக இருக்கிறார்கள் என்பதற்கும் இந்திய தேர்தல் ஆணையமே பாஜகவின் தேர்தல் பிரிவாக செயல்படுகிறது என்பதற்கும் ஞானேஷ் குமார் நடத்தி உள்ள பத்திரிகையாளர் சந்திப்பு மிகச்சிறந்த ஆதாரமாக உள்ளது.

படிக்க: இந்திய தேர்தல் ஆணையத்தின் தேர்தல் மோசடிகளை முறியடிப்பது  எப்படி?

இப்படிப்பட்ட தேர்தல் ஆணையர்களை வைத்துக் கொண்டு பாஜகவால் நடத்தப்பட்ட தேர்தல் என்பது எவ்வளவு பெரிய ஜனநாயக கேலிக்கூத்து? இந்த தேர்தல் ஆணையர்களின் நடவடிக்கை ஜனநாயக விரோதமானது என்பது மட்டுமல்ல. இவர்கள் நியமனமே ஜனநாயக விரோதமாகவே நடந்தது.

அமைச்சரவையில் யாருக்கு இடம் அளிப்பது என்பதை மோடியும் அமித்சாவும் இணைந்து முடிவெடுப்பதை தடுக்கவோ வேறு ஒரு நபரை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கவோ மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ராகுல் காந்தியால் முடியவே முடியாது. காரணம் அது பாஜக கட்சியின் உள்விவகாரம்.

அதேபோல யாரை தேர்தல் ஆணையராக நியமிக்கலாம் என்பதை பிரதமராக உள்ள மோடியும் அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் சேர்ந்து ஞானேஷ்குமாரையும் மற்றும் இரண்டு நபர்களையும் தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுப்பதையும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியால் தடுக்கவோ நபரை மாற்றித் தேர்ந்தெடுக்க வைக்கவோ முடியவே முடியாது.

ஆக, பாஜகவில் உள்ளவர்களை அமைச்சரவையில் சேர்த்துக் கொள்வதற்கும் பாஜக -வுக்கு ஆதரவான அதிகாரிகளை தேர்தல் ஆணையராக நியமிப்பதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதைத்தான் இது காட்டுகிறது. அதாவது ஜனநாயக வழிமுறைகள் மூலமாக தேர்தல் ஆணையர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை என்பது தான் தற்போதைய நடைமுறையாக உள்ளது.

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற நீதிபதி அங்கம் வகிப்பர் என்ற நடைமுறை இருந்தது. இது, ஆளுங்கட்சி விரும்பும் நபர்களை எந்தவித இடையூறும் இன்றி தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுப்பதை கட்டுப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட நடைமுறை.  இப்பொழுது, மோடியின் ஆட்சியில் அந்த பழைய நடைமுறையானது மாற்றப்பட்டுள்ளது. அதில் உச்ச நீதிமன்ற நீதிபதி இந்தக் குழுவில் இடம் பெறுவது மறுக்கப்பட்டு பிரதமர், பிரதமரால் தேர்ந்தெடுக்கப்படும் மத்திய அமைச்சர் ஒருவர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அடங்கிய குழு, தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுக்கும் என்று மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் மூலம் மோடி அல்லது ஆர்எஸ்எஸ் விரும்பும் நபர்கள் தான் தேர்தல் ஆணையராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பது உறுதி செய்யப்பட்டது.

இப்படி ஆர்எஸ்எஸ் – பாஜக காவி பாசிஸ்டுகாளால் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களை உறுப்பினர்களாக கொண்ட தேர்தல் ஆணையம் ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலின் நலங்களுக்காகவே, பாஜகவின் தேர்தல் பிரிவாக வேலை செய்யும் என்பது பல வழிகளில் இப்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாஜக தலைவர்களின் பாணியிலேயே பேசியது இதை உறுதி செய்வதாக உள்ளது.

“இந்தத் தேர்தல் ஆணையர்களை பதவியில் இருந்து துரத்திட வேண்டும். இந்த தேர்தல் ஆணையர்களால் நடத்தப்பட்ட தேர்தலில் வென்றதாக அறிவிக்கப்பட்டு, பாஜகவால் அமைக்கப்பட்டுள்ள ஒன்றிய அரசை கலைக்க வேண்டும். நியாயமான முறையில் வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்திற்கு மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து இந்திய மக்கள் அனைவரும் கிளர்தெழ வேண்டும்.

குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here