
சென்னை ஒரு நூற்றாண்டுக்கு முன்பு இயற்கை எழில் கொஞ்சும் அலையாத்தி காடுகள், ஆயிரக்கணக்கான ஏரிகள், மாசுபடியாத அடையாறு, சென்னையின் தனிச்சிறப்பான பள்ளிக்கரணை சதுப்பு நிலங்கள் உள்ளடங்கிய சூழலியல் மாசு ஏதும் ஏற்படாத சிறந்த கடலோர நகரமாக இருந்தது.
பிரிட்டன் காலனியாதிக்கத்தின்போது மதராஸபட்டணம் என்ற பெயரில் சென்னையை படிப்படியாக ஆக்கிரமித்து மைய ரீதியிலான அரசு அலுவலகங்கள், பெரும் பெரும் கட்டிடங்கள், பெரிய பெரிய வணிக வளாகங்கள், நீதிமன்றங்கள் ஆகியவை கட்டப்பட்டன.
1947-இல் சுதந்திரம் வாங்கியதாக கூறிய பிறகு தமிழகத்தின் தலைநகராக மெட்ராஸ் ஆனது. அதன் பிறகு அதன் பெயர் சென்னையாக மாற்றப்பட்ட பிறகு துறைமுகங்கள், சாலை போக்குவரத்து, விமான போக்குவரத்து ஆகிய வசதிகள் கொண்ட பெரும் தொழில் நகரமாக மாற்றப்பட்டது.
உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள் பல்வேறு துறைகளில் மூலதனத்தை குவித்து பெரிய தொழில் நகரமாக சென்னை உருவாக்கப்பட்டது. இதற்கு இணையாகவே நட்சத்திர மருத்துவமனைகள், நிகர் நிலை பல்கலைக்கழகங்கள் போன்றவையும் உருவாக்கப்பட்டன.
சென்னை ஒரு தொழில் நகரமாக மாறியதன் பின்னணியில் மேலே குறிப்பிட்ட இயற்கை எழில் கொஞ்சும் வளங்கள் அனைத்தும் படிப்படியாக ஒழித்துக் கட்டப்பட்டு கான்கிரீட் காடுகளில் தனது வாழ்க்கையை புதைத்துக் கொள்ளக்கூடிய அவல நிலையை சென்னை மக்களுக்கும், அங்கு குடியேறிய வெளி மாவட்ட மக்களுக்கும் உருவாக்கியது.
இதனால் பருவமழை காலங்களிலும், பிற காலங்களிலும் குறிப்பாக கோடை காலத்தில் அதிக வெப்பமும் மழைக்காலத்தில் அதிக மழை பொழிவும் பொழிகின்ற ஒரு மாநகராக மாறிவிட்டது.
தமிழகத்தை ஆளுகின்ற திராவிட கட்சிகள், அது திமுக ஆனாலும் சரி, அதிமுக ஆனாலும் சரி நகரங்களை உருவாக்குவதில் என்னென்ன சிக்கல்கள் இருக்கின்றது; இயற்கை சூழலை கெடுக்காமல் எப்படி நகரத்தை உருவாக்குவது; நீர் வடிகால் வசதி; பாசன வசதி; கழிவு நீர் போக்குவரத்து போன்றவற்றை திட்டமிட்டு நகரத்தை உருவாக்காமல் மானங்கேணியாக உருவாக்கியதன் விளைவாக இன்று சென்னை சாதாரண மழைக்காலத்தில் கூட கடுமையாக பாதிக்கப்பட்டு கொண்டுள்ளது.
இதில் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை பாதுகாப்பு அரணாக விளங்கும் பள்ளிக்கரணை படிப்படியாக ஆக்கிரமிக்கப்பட்டு தற்போது மிகச்சிறிய பகுதியாக சுருங்கி விட்டது.
“30 ஆண்டுகளுக்கு முன்பு 50 ச.கி.மீ. ஆக இருந்த பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 2007ஆம் ஆண்டில் 5.99 ச.கி.மீ. ஆகவும் இப்போது 3.17 ச.கி.மீ. ஆகவும் சுருங்கியுள்ளது. தனியார் கட்டுமானங்கள் மற்றும் NIOT, NIWE, ELCOT, குப்பைக் கிடங்கு, ரயில் நிலையம் என ஒன்றிய மற்றும் மாநில அரசுகளும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்துள்ளன.
தமிழ்நாடு வனச்சட்டம், 1882-இன் கீழ் பள்ளிக்கரணை பகுதியில், சுமார் 698 ஹெக்டேர் பரப்பளவு, பள்ளிக்கரணை சதுப்பு நிலக் காப்புக் காடாக 2007-ஆம் அறிவிக்கப்பட்டது. இந்த இடத்தில் எவ்விதமான கட்டுமானங்களுக்கும் அனுமதி அளிக்கப்படுவதில்லை. இது வனத்துறைக்கு சொந்தமான பாதுகாக்கப்பட்ட பகுதியாகும் என்று கூறப்பட்டாலும் வேளச்சேரியிலிருந்து பள்ளிக்கரணை எல்லை வரை ஆயிரக்கணக்கான அடுக்குமாடி குடியிருப்புகள் வணிக வளாகங்கள் கல்லூரிகள் கட்டப்பட்டிருப்பது பளிச்சென்று சட்டத்தை மீறிய செயலாகும் என்பதை சொல்லாமலேயே விளக்க முடியும்.
அதுமட்டுமின்றி பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் “65 வகையான வலசைப் பறவைகள், 105 வகையான உள்ளூர்ப் பறவைகள். 50 வகை மீன் இனங்கள், 34 வகை வண்ணத்துப் பூச்சிகள், 20 வகை தட்டான்கள், 24 வகை ஒட்டுடலிகள், 15 வகை பாம்புகள், 8 வகை கரப்பான்கள், 10 வகை பல்லிகள், 78 வகை மிதவை உயிரினங்கள், 11 வகை இருவாழ்விகள், 10 வகை பாலூட்டிகள் மற்றும் 167 வகையானத் தாவரங்கள் பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்தனை உயிர்ப்பன்மைய வளங்களைக் கொண்ட இப்பகுதி சென்னையின் வெள்ள அபாயத்தைத் தணிப்பதிலும் முக்கியப் பங்காற்றுகிறது..” என்கிறது பூவுலகின் நண்பர்களின் அறிக்கை.
படிக்க:
♦ பள்ளிக்கரணை செக்யூரிட்டி தொழிலாளர்கள் போராட்டம்!
♦ நிக்கோபார் காடுகளை அழித்து கார்ப்பரேட்டுகளுக்கு விருந்தளிக்கும் மோடி அரசு!
1971-ஆம் ஆண்டு ஈரநிலங்கள் தொடர்பான மாநாட்டின் கீழ் நிறுவப்பட்ட ராம்சர் தல, சட்ட செயல்முறையின்படி, 2017-ஆம் ஆண்டு ஈரநிலங்கள் (பாதுகாப்பு மற்றும் மேலாண்மை) விதிகளின் கீழ் (i) சதுப்பு நிலம் /காப்பு காடு, (ii) ராம்சர் தலம் மற்றும் (iii) ஈரநிலம் ஆகியவை மூன்று தனித்தனி மற்றும் வேறுபட்ட வகைப்பாடுகள் “சதுப்பு நிலம்” என்று அறிவிக்கப்படும்.
இந்த நிலையில் சூழலியல் அறிவு சிறிதும் இல்லாத திமுக அரசனது பள்ளிக்கரணையில் புதிதாக கட்டுமானத்தை அதாவது சென்னை பெரும்பாக்கத்தில் ராம்சார் அங்கீகாரம் பெற்ற பள்ளிக்கரணை சதுப்பு நிலப்பகுதியில் அப்பகுதியின் இயல்பை அழிக்கும் வகையில் சட்டத்திற்குப் புறம்பாகப் பிரிகேட் மார்கன் ஹைட்ஸ் என்னும் நிறுவனத்திற்கு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையும், வனத்துறையும், சென்னை பெருநகர கட்டுமான குழுமமும் அனுமதி வழங்கியிருப்பது அயோக்கியத்தனமானதாகும்.
“ராம்சர் தலமாக அறிவிக்கப்பட்டுள்ள 1248 ஹெக்டேர் பரப்பளவில், பள்ளிக்கரணை சதுப்பு நில காப்புக்காட்டில் உள்ள 698 ஹெக்டேர் நிலமும், உரிய நடைமுறைகளுக்குப் பின்பு வரையறுக்கப்படவுள்ள 550 ஹெக்டேர் கூடுதல் நிலமும் அடங்கும். ஈர நில விதிகளின்படி பள்ளிக்கரணை சதுப்பு நில காப்புக்காடுகளுக்கு வெளியில் உள்ள நிலப்பகுதிகளை சர்வே எண்களுடன் கண்டறிந்து வரையறுப்பதற்கான நில உண்மை கண்டறிதல் (Ground Truthing) இதுவரை மேற்கொள்ளப்படவில்லை”என்று தமிழக அரசு போராடுபவர்களின் அறிக்கைகளை மறுத்து ஏய்க்கிறது.
கடந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் பள்ளிக்கரணை தனது சொந்த நிலங்களை இழந்து குறுகிய பகுதியாக மாறியுள்ளதை பல்வேறு ஆய்வுகளும், சூழலியல் போராளிகளும் முன் வைத்துள்ள போதிலும் சிறிது சிறிதாக ஆக்கிரமித்து பள்ளிக்கரணைக்கு முழுமையாக சமாதி கட்டுவதற்கு திமுக அரசு துடித்துக் கொண்டுள்ளது.
“கார்ப்பரேட் முதலாளிகளின் நலனை முன்னிறுத்தி செய்யப்படுகின்ற மேற்கண்ட கட்டுமான பணிகள் அனைத்தும் தடை செய்யப்பட வேண்டும்.” “பள்ளிக்கரணை சதுப்பு நிலம் இனியும் ஆக்கிரமிக்கப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும்.” என்று மக்களை திரட்டி போராடுவதற்கு புரட்சிகர, ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்.
- மருது பாண்டியன்.







நன்னீர் சதுப்புநிலம் பள்ளி கரையில் மட்டும் உள்ளது இதை பாதுகாக்க வேண்டிய நாம் அனைவரின் பொறுப்பு ஆகும்.
கார்ப்பரேட் நில புரோக்கர்கள் மாஃபியா கும்பல் மற்றும் இதை ஆதாரிக்கின்ற அரசுக்கு எதிராக ஒன்றுபட்ட போராட்டத்தின் முலமே இது சாத்தியம்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலக்காடு மேற்கண்ட கட்டுரை அடிப்படையில் தரவுகள் அடிப்படையில் சதுப்பு நிலம் பரப்பளவு குறைந்துள்ளது அதேபோல் பெருங்குடி குப்பை கிடங்கு ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது குப்பையின் துர்நாற்றம் சுற்றுப்புறத்தில் வசிக்கும் மக்களின் சுவாச சீர்கேட்டை உருவாக்குகிறது மற்றொருபுறம் மத்திய அரசின் கடல் ஆராய்ச்சி நிறுவனம் ரயில்வே நிர்வாகம் சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து உள்ளனர் அதேபோல் பல உயிரினங்கள் பறவைகள் பூச்சி இனங்கள் அரிய வகை உயிரினங்கள் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை நேற்று முன்தினம் காமாட்சி மருத்துவமனை முதல் துரைப்பாக்கம் செல்லும் வழியில் குப்பை கிடங்கில் இருந்து கருப்பு நிறத்தில் துர்நாற்றம் கலந்த குப்பையில் இருந்து கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும் சிற்றாறு போல ஓடியது இவ்வளவு சீரழிவை செய்துவிட்டு மீண்டும் அந்த இடத்தில் அடுக்குமாடி கட்டுவது என தமிழக அரசின் முடிவு சதுப்பு நிலத்தை சீரழிக்கும் முடிவு தான் இதற்கு மக்கள்தான் முடிவு கட்ட வேண்டும்