ரு மதம் என்பது தமது மக்கள் அனைவரையும் சமமாக நடத்த வேண்டும். ஆனால் சாதிய படிநிலைகளை உருவாக்கி சூத்திர, பஞ்சம மக்கள் அடங்கி, ஒடுங்கி வாழ வேண்டும் என்பதையே விதிகளாக வைத்திருக்கிறது பார்ப்பனிய இந்து மதம். சமூக நீதிக்கு மாற்றாக மனு தர்மத்தின் கேவலமான சட்டங்களை கொண்டிருக்கும் இந்து மதமானது மக்கள் விரோதத் தன்மை கொண்டது என சாடியவர் அம்பேத்கர். எனவேதான் “நான் பிறப்பால் இந்துவாக பிறந்து விட்டேன். ஆனால் நிச்சயம் இந்துவாக சாகமாட்டேன்” என அறிவித்து, இலட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களோடு புத்த மதத்தை தழுவினார் அவர். இப்படியான இழிபுகழ் பெற்ற இந்து மதத்தில் மக்களை இருத்திவைக்க, மதமாற்ற தடைச் சட்டங்களை பாஜக ஆளும் மாநிலங்களில் நிறைவேற்றி வருகின்றனர். அதை அம்பலப்படுத்துகிறது இக்கட்டுரை.

****

 

இந்தியாவில் வசிக்கக்கூடிய அனைத்து தரப்பு மக்களுக்கும் தங்களது மதத்தை தேர்வு செய்யும் உரிமை, தொழில் செய்யும் உரிமை மற்றும் தாங்கள் சார்ந்த மதத்தை பரப்புவதற்கான உரிமை போன்றவற்றை அரசியலமைப்பின் 25 ஆவது பிரிவு உறுதி செய்கிறது. ஆனால் சமீபத்தில் பாசிச மோடி அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், மதச் சுதந்திரத்திற்கான உரிமை என்பது பிற மக்களை ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மாற்றுவதற்கான உரிமையை உள்ளடக்கியது அல்ல என்று தெரிவித்துள்ளது. இந்த வாதம் அறிவுப்பூர்வமானதாக இல்லை.

இப்போது பிஜேபி ஆளும் பல மாநிலங்களில், மாநில அரசின் அனுமதி பெறாத எந்த ஒரு மதமாற்றத்தையும், அதிலும் குறிப்பாக மதக்கலப்பு திருமணம் தொடர்பான மத மாற்றத்தை குற்றமாக்கும் வகையில் கடுமையான சட்டங்களை இயற்றியுள்ளன. இது போதாது என்று பாஜக-வைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் உச்ச நீதிமன்றத்தில், மோசடியான மதமாற்றத்தை தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மத்திய மற்றும் அனைத்து மாநில அரசுகளுக்கும் உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கில் தான் மேலே கூறியபடி தமது கருத்தை மோடி அரசு முன் வைத்துள்ளது.

இந்த வாதத்தில் உள்ள அடிப்படை குறைபாடு என்னவென்றால் X – எனும் நபரின் ஒரு குறிப்பிட்ட மதத்தை தேர்வு செய்யும் உரிமை அல்லது எந்த மதத்தையும் சாராத உரிமை, தனது விருப்பத்துக்கு ஏற்ப மதம் மாறிக்கொள்ளும் உரிமை என்பவை அவரது தனிப்பட்ட மதச் சுதந்திரத்தில் அடங்கியுள்ளது. இதற்கும் Y – என்பவரின் மதத்தை பிரச்சாரம் செய்யும் உரிமையில் பிறரை மதம் மாற்றும் உரிமை உள்ளதா, இல்லையா என்ற கேள்விக்கும் சம்பந்தமே இல்லை.

இதையும் படியுங்கள்: கல்வி கொடுக்க துப்பில்லை! சுயமரியாதைக்கு இடமில்லை! மதம் மாறுவது குற்றமா?

ஒருவரது மனசாட்சியின் சுதந்திரம் என்பது அரசியல் உள்ளிட்ட ஒவ்வொரு விதமான நம்பிக்கையையும் உள்ளடக்கியது. உதாரணமாக X என்பவரின் அரசியல் கண்ணோட்டத்தின்படி, அவர் ஒரு கட்சியில் தன்னை இணைத்துக் கொள்கிறார். அவரை தங்களது கட்சியில் சேர்ப்பதற்கு முயற்சி செய்து சமாதானப்படுத்த Y என்பவருக்கு முழு உரிமை உள்ளது. அதே சமயம் X – ஐ அவரது விருப்பத்துக்கு மாறாக தனது கட்சியில் உறுப்பினராக இணைத்துக் கொள்ள Y – க்கு உரிமையில்லை.

X – எனும் நபருக்கு, தான் எந்தக் கட்சியில் சேருவது, எந்த மதத்தைப் பின்பற்றுவது என்பதைத் தீர்மானிக்கும் உரிமை அரசியலமைப்பு சட்டத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவர் ஒரு குறிப்பிட்ட கட்சியில் சேருவது அல்லது ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு மாறுவது என முடிவெடுத்தவுடன், அந்தக் கட்சி அல்லது அந்த மதத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் தேவையான நடைமுறைகளை மேற்கொள்வர். மதம் மாறியவர் ஞானஸ்நானம் பெறுவது, கட்சி மாறியவர் மாலை அணிவித்து லட்டு வழங்குவது போன்றவை நிகழலாம். ஆனால் தான் கட்சி மாறப்போவதையோ, வேறு மதத்துக்கு மாறப் போவதையோ அவர் எந்த அரசு அதிகாரிக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. இது ஒன்றும் அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக நெறிமுறைகளுக்கு எதிரான செயல் அல்ல.

இதற்கு முன்பும் 1968 ஆம் ஆண்டு மத்தியப் பிரதேச அரசு, மத மாற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் சட்டம் இயற்றியது. அதாவது மதமாற்ற செயலை செய்பவர் முன்கூட்டியே அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தியது. ஆனால் தற்போதைய குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசத்தின் புதிய சட்டங்கள் ஒரு படி மேலே சென்று மதம் மாறும் நபர் முதலில் அரசாங்கத்தின் அனுமதியைப் பெற வேண்டும் என வலியுறுத்துகின்றன. கடந்த மாதம் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், இந்த சட்டமானது 2017 – ல் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட தனிமனித அடிப்படை உரிமைக்கு எதிரானது எனக்கூறி இந்தப் புதிய ‘மத சுதந்திர’ சட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது.

மேலும் இது குறித்து நீதிபதி தீபக் குப்தா 2011 இல் இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தபோது அளித்த சிறப்பான தீர்ப்பையும் மேற்கோள் காட்டியுள்ளது. அத்தீர்ப்பில், “ஒரு நபருக்கு நம்பிக்கை அடிப்படையிலான உரிமை, மதம் குறித்து முடிவெடுக்கும் உரிமை, தனது நம்பிக்கையை மாற்றிக் கொள்வதற்கான உரிமை ஆகியவை இருப்பதோடு மட்டுமல்லாமல் அத்தகைய நம்பிக்கைகளை ரகசியமாக வைத்திருக்கும் உரிமையும் உள்ளது. பெரும்பான்மை நலன் என்பது நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றுமை மற்றும் இறையாண்மை, சட்டம் ஒழுங்கைப் பேணுதல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. பெரும்பான்மையினரின் கருத்து வேறு மாதிரி இருப்பதால் சிறுபான்மையினரின் கருத்தை நசுக்க வேண்டும் என்பது அர்த்தமற்றது”.

“ஒரு மனிதனின் வீடு என்பது அவனைப் பொறுத்தவரை அவனது கோட்டையாகும். அரசியலமைப்பு அடிப்படையில் நியாயப்படுத்தப்பட்டாலன்றி, அவனது வீட்டிற்குள் அத்துமீறி நுழைய யாருக்கும் அனுமதி கிடையாது. ஒரு மனிதனின் மனம் சிந்திக்கும் திறன் வாய்ந்தது. அந்த நபர் தனது எண்ணங்களை வெளிப்படுத்தவோ அல்லது பிரச்சாரம் செய்யும் போதோ, அது பொதுச் சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையிலோ அல்லது நாட்டின் ஒற்றுமையை, இறையாண்மையை பாதிக்கும் வகையிலோ இருக்கக் கூடாது. அதுவரை அவரது சிந்தனை உரிமை மீது எவ்வித கட்டுப்பாடும் விதிக்க முடியாது”.

“எந்த மனிதனும் தன் மதம் என்ன என்பதை ஏன் தெரிவிக்க வேண்டும்? ஒரு மனிதன் தனது நம்பிக்கையை மாற்றிக் கொள்வதை அதிகாரிகளிடம் எதற்காக தெரிவிக்க வேண்டும்?  மதம் மாறுபவர் எதன் அடிப்படையில் மாவட்ட நீதிபதியிடம் தனது கலக சிந்தனையை முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என அரசு வலியுறுத்த முடியும்? ஒரு நபரின் நம்பிக்கை அல்லது மதம் என்பது அவரது தனிப்பட்ட விஷயம். தனிப்பட்ட நம்பிக்கையை வெளிப்படுத்தும் படி கேட்க அரசுக்கு எந்த உரிமையும் இல்லை”.

11 ஆண்டுகளுக்கு முன்பு நீதிபதி குப்தா கூறியது இப்போது நீதிபதி புட்டுசாமியால் மேலும் வலுப்பெற்றுள்ளது. பாஜக மாநில அரசுகள் மேற்கொள்ளும் ஆபத்தான இத்தகைய போக்குகளும், மோடி அரசானது அரசியலமைப்புப் பிரிவு 25 – ஐ பலவீனமாக்கும் முயற்சிகளும் உறுதியாக எதிர்க்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

சித்தார்த் வரதராஜன்.

( இவர் “தி ஹிந்து” பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர். அங்கு நிலவிய ஜனநாயக மறுப்பு சூழலுடன் இவர் முரண்பட்டதால் வெளியேற்றப்பட்டார். அதன் பிறகு The wire இணைய பத்திரிக்கையை நண்பர்களோடு சேர்ந்து நடத்தி வருகிறார். மோடி அரசின் மக்கள் விரோத செயல்களை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருவதால், சமீபத்தில் டெல்லி போலீசார் இவரது வீடு, அலுவலகம் போன்றவற்றில் ரெய்டு நடத்தினர். ஜனநாயக சக்திகள் இவருக்கு துணை நிற்க வேண்டும். துணை நிற்போம்)

கட்டுரை மூலம்:

https://m.thewire.in/article/government/modi-governments-stand-on-right-to-convert-is-an-attack-on-the-freedom-of-conscience

தமிழில் ஆக்கம்: குரு.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here