பெரும்பான்மை இல்லாமல், கூட்டணிக் கட்சிகளின் தயவில் பாஜக அரசு அமைக்கப்பட்டுள்ளதால் மோடி அமிதா கும்பலால் முன்பு போல பாசிச தாக்குதல்களை தொடுக்க முடியாது என்று அப்பாவித்தனமாக பலரும் கூறி வந்தனர்.

ஜூலை 1ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் இந்தியா கூட்டணியினர் பேசிய பேச்சை குறிப்பிட்டு “கடந்த பத்து வருடங்களாக இல்லாத வகையில், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயே, மோடி அமித்ஷாவின் முகத்திற்கு நேராகவே மோடி அமித்ஷா கும்பலை ‘ராகுல் காந்தி தெறிக்க விட்டுவிட்டார், ஆ. ராசா பொளந்து கட்டி விட்டார், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மொகுவா மொய்த்ரா கிழித்து தொங்க விட்டுவிட்டார் ‘ இனி இந்த பாசிஸ்டுகள் முன்பு போல ஆட்டம் போட முடியாது” என்றெல்லாம் சிலாகித்துக் கொண்டிருந்தவர்கள் பலர்.

ஆனால், இந்த காவி பாசிஸ்டுகள் கலவரம் செய்வதற்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை தேவை இல்லை; ஆட்சி அதிகாரம் கூட தேவையில்லை என்பதை ஏற்கனவே நிரூபித்து இருக்கிறார்கள். இவர்களுக்குத் தேவையானதெல்லாம் அவர்களின் அணிகளை வெறியூட்டி களத்தில் இறக்குவதற்கு தேவையான ஒரு சந்தர்ப்பம். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இவர்கள் செய்யும் கலவரத்தை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்ற அளவிற்கு மக்களை வெறியூட்டுவதற்கான பொய்கள்.

ஜூலை 1 ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல் காந்தியின் பேச்சை அப்பட்டமாக திரித்து “ராகுல்காந்தி இந்துக்களை அவமானப்படுத்தி விட்டார்” என்று மோடியும் அமித்சாவும் பிற பாஜகவினரும் அயோக்கியத்தனமாக பிரச்சாரம் செய்தனர். இதனை அடுத்து, ஜூலை 2 ஆம் தேதி அன்று குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாநில அலுவலகத்தில் பாஜகவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், குஜராத்தில் நடந்த இந்த தாக்குதலை அடுத்து ராகுல் காந்தியின் உயிருக்கு வலதுசாரி குழுக்களால் (அதாவது இந்து மதவெறி பாசிஸ்டுகளால்) ஆபத்து உள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து டெல்லியில் உள்ள ராகுல் காந்தியின் வீட்டிற்கு துணை ராணுவ படையினரும் ஏராளமான டெல்லி காவல் துறையினரும் பாதுகாப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளாக இஸ்லாமியர்கள், தலித்துகள், பழங்குடியினர் மீது பல்வேறு தாக்குதல்களை தொடுத்து வந்த ஆர்எஸ்எஸ் – பாஜக கும்பல் தற்பொழுது பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தால் கூட்டணி ஆட்சியை அமைத்துள்ள போதும் கூட இத்தகைய தாக்குதல்களை நிறுத்தவே இல்லை. ஜூன் 4ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்ததிலிந்து தற்போது வரை, இந்தியா முழுவதும் எடுத்துக் கொண்டால், பல்வேறு மாநிலங்களில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்கள் தொடுக்கப்பட்டுள்ளன; மாட்டுக் கறி வைத்திருந்ததாக பொய் கூறி சிலர் கொல்லப்பட்டும் உள்ளனர்.

மத்திய உளவுத்துறை, அமலாக்கத்துறை போன்ற எண்ணற்ற துறைகளில் காவி மூளை கொண்டவர்களை பணியமர்த்தியுள்ள பாஜக இனிமேலும் தங்களுக்கு எதிரானவர்கள் மீது இத்தகைய துறைகளை ஏவி விட்டு தாக்குதல் தொடுப்பது, கைது செய்து சிறையில் அடைப்பது என்பதை தொடரவே செய்யும்.

படிக்க:

 அரசியல் செயல்பாட்டாளர்கள் மீதான பாசிஸ்டுகளின் தொடர் தாக்குதல்கள்!

 ஒன்றிய அரசு இயற்றிய 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிராக தமிழகத்தில் வலுக்கும் போராட்டம்!

இதை உறுதி செய்யும் விதமாக நாடாளுமன்றத்தில் பாசிச மோடி பேசியுள்ளார். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பேசிய பேச்சுக்கு “நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த போக்கு தொடரக்கூடாது. இப்படியே போனால் நாடாளுமன்ற ஜனநாயகத்தை காப்பாற்ற முடியாது” (அதாவது சர்வாதிகாரத்தைக் கொண்டு வர வேண்டியது இருக்கும்) என்று மோடி திருவாய் மலர்ந்துள்ளார்.

காவி பாசிஸ்டுகள் எப்பொழுதும் ஜனநாயகத்தை மதிப்பதில்லை; ஜனநாயக உரிமைகளையும் மக்கள் நலனையும் காலில் போட்டு மிதிப்பதற்கு தயங்குவதில்லை என்பதை மீண்டும் மீண்டும் தங்களின் செயல்கள் மூலமாக நிரூபித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை; கூட்டணிக் கட்சியின் தயவில்தான் பாஜக ஆட்சி நடக்கிறது என்பதற்காக மக்கள் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது. நாடாளுமன்றத்தில் மோடி அமித்சா கும்பலுக்கு எதிராக பேசுவதுடன் இந்தியா கூட்டணியினர் தம்மை வரம்பிட்டுக் கொள்ளக் கூடாது.

காவிகளுக்கு ஆதரவான மனநிலையில் உள்ள மக்களை திருத்துவதற்காக இந்தியா கூட்டணிக் கட்சியினர் மக்கள் மத்தியில் வேலை செய்வது அவசியம் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். இந்தப் பணியில் புரட்சிகர, ஜனநாயக சக்திகளுடன் இணைந்து இந்தியா கூட்டணி கட்சியினர் செயல்பட வேண்டும். காவி பாசிஸ்டுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தி தனிமைப்படுத்தி முறியடிக்க வேண்டும் என்றால் இதைத் தவிர வேறு வழி இல்லை என்பதை உணர்ந்து அனைவரும் ஓரணியில் திரண்டு செயல்பட வேண்டும்.

குமரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here