செப்டம்பர் 15 ஆம் தேதி, பிரதமர் நரேந்திர மோடி பீகார் மாநிலம் பூர்னியாவில் சுமார் ரூ.40,000 கோடி மதிப்புள்ள பல திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் பேசிய மோடி, அருகிலுள்ள பாகல்பூர் மாவட்டத்தில் உள்ள பிர்பைண்டியில் ரூ.25,000 கோடி மதிப்புள்ள, 2400 மெகாவாட் திறன் கொண்ட நிலக்கரி அடிப்படையிலான அனல்மின் நிலையம் அமைய உள்ளது. இது பீகாரை மின்சாரத் துறையில் தன்னிறைவு அடையச் செய்யும் என்று தெரிவித்தார். மேலும் “இந்த திட்டம் தேவையான மின்சாரத்தை வழங்கும் மற்றும் பீகாரின் எரிசக்தி பாதுகாப்பை வலுப்படுத்தும்” என்றும் கூறினார்.
மோடியின் உரைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, செப்டம்பர் 13 அன்று, அதானி பவர் நிறுவனம் பீகார் மாநில மின் உற்பத்தி நிறுவன லிமிடெட் (BSPGCL-Bihar State Power Generation Company Ltd) உடன் 25 ஆண்டு மின்சார விநியோக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, அதானி பவர் “வடிவமைப்பு, கட்டுமானம், நிதி, சொந்தமாக்குதல் மற்றும் இயக்குதல்” என்ற திட்டத்தின் கீழ், தலா 800 மெகாவாட் திறன் கொண்ட மூன்று அலகுகளைக் கொண்ட ஒரு புதிய அதி உயர்சிறப்பு மின் உற்பத்தி நிலையத்தை அமைக்கும் என்று குறிப்பிட்டிருந்தது.
கடந்த ஜூன் மாதத்தில், அதானி குழுமத்துடன் கூடுதலாக JSW எனர்ஜி, டோரண்ட் பவர் மற்றும் பஜாஜ் குழுமத்தின் லலித் பவர் ஆகியவை ஏலத்தில் பங்கேற்றன. இந்நிலையில் கடந்த மாதம், அதானி பவர் பீகார் மாநில பயன்பாட்டு நிறுவனத்திடமிருந்து இந்த திட்டத்திற்கான விருப்பக் கடிதத்தைப் பெற்றது. அதானி குழுமத்தின் செய்திக்குறிப்பின்படி, நியமிக்கப்பட்ட தேதியிலிருந்து 48 மாதங்களுக்குள் முதல் அலகு இயக்கப்படும் என்றும், கடைசி அலகு நியமிக்கப்பட்ட தேதியிலிருந்து 60 மாதங்களுக்குள் இயக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம், ஒரு கிலோவாட் மணி நேரத்திற்கு ரூ.6.075க்கு மாநில மின் நிறுவனங்களுக்கு விற்கப்படும்.
விவசாய நிலங்களைப் பறித்து அதானிக்குப் படையல்!
அது மட்டுமல்லாமல்,இந்த ஒப்பந்தம் முக்கிய கவனம் ஈர்க்க காரணம் என்னவென்றால், அதானி பவர் நிறுவனம் 25 ஆண்டுகளுக்கு இந்த திட்டத்திற்காக கையகப்படுத்தும் 1,020 ஏக்கர் நிலத்திற்கு ஆண்டுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 1 மட்டுமே செலுத்த வேண்டும் என்பது தான். அதானிக்கு ஏறத்தாழ இலவசமாக தாரைவார்க்கப்படும் நிலம் பெரும்பான்மையாக மா, லிச்சி போன்ற லட்சக்கணக்கான பழ மரங்களைக் கொண்டுள்ளன. மாம்பழம் மற்றும் லிச்சி இரண்டும் இம்மாநிலத்தின் முக்கியமான பணப்பயிராகும். இந்தியாவில் லிச்சி உற்பத்தியில் பீகார் முதலிடத்திலும், மாம்பழ உற்பத்தியில் மூன்றாவது பெரிய மாநிலமாக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
2014 ஆம் ஆண்டிலிருந்து 1,320 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட அதி உயர்சிறப்பு அனல் மின் நிலையமாக அமையும் என திட்டமிடப்பட்டதிலிருந்து கிராமவாசிகள் இந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். நிலம் கையகப்படுத்துதல் 2016 ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பட இருந்தது – ஆனால் அது நடக்கவில்லை.
நில பிரச்சினை கண்காணிப்பு அமைப்பின் கூற்றுப்படி, 2014 ஆம் ஆண்டு திட்டத்திற்காக தாங்கள் விட்டுக்கொடுத்த நிலத்திற்கு இழப்பீடு பெறுவதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, கிசான் சேத்னா மற்றும் உத்தன் சமிதி ஆகிய கட்சிகளின் கீழ் அப்பகுதியில் விவசாயிகள் பேரணி நடத்தினர். வருவாய் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட முயன்ற போதிலும், இழப்பீடு கிடைக்காததால், முன்மொழியப்பட்ட மின் உற்பத்தி நிலைய இடத்தில் எல்லைச் சுவர் கட்டுவதை கிராம மக்கள் தற்போது வரை தடுத்து வந்துள்ளனர்.
மேலும் படிக்க:
அதானி நிலக்கரி சுரங்கத்திற்கு எதிராக போராடும் சத்தீஸ்கர் பழங்குடிகள்!
2021 ஆம் ஆண்டு நிலவரப்படி, பீகாரில் 22 அனல் மின் நிலைய அலகுகள் இருந்தன, அவற்றில் பெரும்பாலானவை நான்கு பெரிய அனல் மின் நிலையங்களின் ஒரு பகுதியாகும்: பரானி, கஹல்கான், முசாபர்பூர் மற்றும் நபிநகர் நிலையங்கள். மொத்தம் 7,050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் இந்த அனைத்து மின் நிலையங்களும் மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்குச் சொந்தமானவை மற்றும் அவற்றால் இயக்கப்படுகின்றன.
2014 ஆம் ஆண்டில், இது ஒரு சூப்பர் கிரிட்டிகல் 1,320 மெகாவாட் அனல் மின் நிலையமாக முதன்முதலில் பரிசீலிக்கப்பட்டபோது, பிர்பைன்டி பிஜ்லீ நிறுவனம், பீகார் மாநில மின் உற்பத்தி நிறுவனம் லிமிடெட் மற்றும் NHPC-National Hydroelectric Power Corporation லிமிடெட் ஆகியவற்றுக்கு இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இன்று, பிர்பைன்டி அனல் மின் நிலையம் 25 ஆண்டுகளுக்கு கட்டமைக்கவும், சொந்தமாக வைத்திருக்கவும், இயக்கவும் அதானி பவர் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது – மேலும் இது மாநிலத்தின் முதல் மற்றும் மிகப்பெரிய தனியார் துறை அனல் மின் நிலையமாக இருக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.
பத்து வருடங்களுக்கும் மேலாக, மாநில அரசு அதை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைத்ததில் 2014 இல் அனல் மின் நிலையமாக முன்மொழியப்பட்டது, 2021 இல் சூரிய மின் நிலையமாகவும் (NHPC ஆல் உருவாக்கப்படும்) 2025 இல் மீண்டும் அனல் மின் நிலையமாகவும் மாறியுள்ளது.
உண்மையில் நில அளவை கண்காணிப்பு கூற்றுப்படி, 2021 ஆம் ஆண்டில், மாநில அரசு ஏற்கனவே 1,350 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியதாகவும், இன்னும் 25 ஏக்கர் மட்டுமே கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளதாகவும் அம்மாநில ஊடக அறிக்கைகள் குறிப்பிட்டன. மீண்டும் விவசாயிகளின் எதிர்ப்பால் இத்திட்டம் 2021 இல் கைவிடப்பட்டது.
அதானி கொள்ளைக்கு நாசமாக்கப்படும் சுற்றுச்சூழல்!
2,400 மெகாவாட் நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையம் கட்டப்படும் பிர்பைன்டி, பாகல்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த மாவட்டம் ஏற்கனவே ஒரு பெரிய அனல் மின் நிலையத்தைக் கொண்டுள்ளது – 2,340 மெகாவாட் கஹல்கான் சூப்பர் அனல் மின் நிலையம். அதே மாவட்டத்தில், சில கி.மீ. தொலைவில் மற்றொரு மின் உற்பத்தி நிலையத்தை தொடங்குவது அர்த்தமற்றது மட்டுமல்ல, அதானி கொள்ளைக்காக மாசுபடுத்தும் புதைபடிவ எரிபொருட்களிலிருந்து தூய்மையான எரிசக்தி ஆதாரங்களுக்கு மாறுவதற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீடு செய்வது என்ற உறுதிமொழியையும் மீறுகிறது இந்திய அரசாங்கம்.
நிலக்கரியில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களால் ஏராளமான உடல்நல பிரச்சினைகள் எழுகின்றன. நிலக்கரியில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள் உற்பத்தி செய்யும் பல மாசுபடுத்திகளில் ஆர்சனிக் ஒன்றாகும். நிலக்கரி வெளியேற்றம் இந்த மாசுபாட்டை காற்றில் வெளியிடுகிறது, அதே நேரத்தில் நிலக்கரி எரிப்பின் துணைப் பொருளான நுண்ணிய, தூள் போன்ற சாம்பல் தரையில் கசிந்து, மண்ணையும் நீரையும் மாசுபடுத்துகிறது.
மேலும் படிக்க:
அதிகரிக்கும் வெப்ப அலைத்தாக்குதலும் கூரையை கொளுத்தும் ’வளர்ச்சியும்’!
பீகாரில் ஆர்சனிக் விஷம் ஏற்கனவே ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது. 2021 ஆம் ஆண்டில், பாட்னாவில் உள்ள மகாவீர் புற்றுநோய் சன்ஸ்தான் மற்றும் ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் 2,000 புற்றுநோய் நோயாளிகளின் இரத்த மாதிரிகளை பரிசோதித்தனர். இரத்தத்தில் அதிக ஆர்சனிக் அளவுகளைக் கொண்ட பெரும்பாலான புற்றுநோய் நோயாளிகள் கங்கை நதிக்கு அருகிலுள்ள மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கண்டறிந்தனர். இந்த மாவட்டங்களில் பாகல்பூரும் ஒன்றாகும்.
புதிய நிலக்கரி அனல் மின் நிலையம் வரும் பிர்பைன்டியிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில், அதே மாவட்டத்தில் காளிபிரசாத் கிராமம் உள்ளது. 2023 ஆம் ஆண்டில், பாட்னாவில் உள்ள அதே புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 102 வீடுகளை ஆய்வு செய்து, இங்குள்ள மக்கள் தோல் பிரச்சினைகள் (ஹைப்பர்கெராடோசிஸ் மற்றும் உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்காலில் மெலனோசிஸ்), மூச்சுத் திணறல், பொது உடல் பலவீனம், மனநலக் கோளாறுகள், நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம், ஹார்மோன் சமநிலையின்மை, நரம்பியல் கோளாறுகள் மற்றும் புற்றுநோய்கள் போன்ற பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர்.
வீட்டு உபயோக கை பம்ப் தண்ணீரில் 77% ஆர்சனிக் அளவு WHO பரிந்துரைத்த 10 µg/L (லிட்டருக்கு மைக்ரோகிராம்) அளவை விட மிக அதிகமாக இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். அவர்கள் பதிவு செய்த அதிகபட்ச அளவு 523 µg/L ஆகும். இந்த 102 வீடுகளில் 60% மக்களின் சிறுநீரில் ஆர்சனிக் செறிவு மிக அதிகமாக இருந்தது. அவர்கள் பதிவு செய்த அதிகபட்ச செறிவு 374 µg/L ஆகும் – இது அனுமதிக்கப்பட்ட வரம்புகளை விட கிட்டத்தட்ட 7.5 மடங்கு அதிகம். அருகிலுள்ள மக்கள் ஏற்கனவே ஆர்சனிக் விஷத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இப்பகுதியில் ஒரு புதிய நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தி நிலையம் நோய் சுமையை மேலும் அதிகரிக்கும் என்பதே உண்மை.
நிலக்கரியில் இயங்கும் அனல் மின் நிலையங்களுக்கு அருகிலுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் எதிர்கொள்ள வேண்டிய மற்றொரு பிரச்சினை காற்று மாசுபாடு மற்றும் அதன் உடல்நல பாதிப்புகள் ஆகும். மேலும் நம் நாட்டிலேயே மிக உயர்ந்த காற்று மாசுபாட்டைக் கொண்டுள்ள மாநிலம் பீகார் ஆகும். 2018 மற்றும் 2022 க்கு இடையில், பீகார் – டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகியவற்றுடன் – தேசிய அனுமதிக்கப்பட்ட வரம்பான 60 μg/m3 (ஒரு கன மீட்டருக்கு மைக்ரோகிராம்) அல்லது PM2.5 (Particulate Matter – துகள் பொருள்) ஐ குறைந்தது 250 நாட்களுக்கு மீறியது.
PM2.5 என்பது அனல் மின் நிலையங்களில் நிலக்கரி எரிப்பு உட்பட புதைபடிவ எரிபொருட்களை எரிப்பதன் மூலம் வெளிப்படும் ஒரு முக்கிய காற்று மாசுபாடு ஆகும். 2021 முதல் 2024 வரை பீகாரில் சுற்றுப்புற காற்று மாசுபாடு, வானிலை தாக்கங்கள் மற்றும் சுகாதார ஆபத்து தாக்கங்களை ஆய்வு செய்த ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், அனைத்து ஆண்டுகளிலும் நுண்ணிய துகள்கள் “மிகவும் ஆபத்தான மாசுபாட்டாக தொடர்ந்து வெளிப்படுகின்றன” என்பதைக் கண்டறிந்தனர். இந்த ஆய்வு, மாநிலத்தில் PM2.5 மாசுபாட்டிற்கான நான்கு முக்கிய “ஹாட்ஸ்பாட்களில்” ஒன்றாக பாகல்பூரை அடையாளம் கண்டுள்ளது என்பது மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும்.
இப்படி மக்கள் நலனில் சிறிதளவு கூட அக்கறை கொள்ளாமல் ஒரு மாநிலமே சுற்றுச்சூழல் பாதிப்பால் அழிந்தாலும் பரவாயில்லை என செயல்படும் அதானி போன்ற கார்ப்பரேட்டுகளும் அவர்களுக்குச் சேவகம் செய்யும் காவிப் பாசிஸ்டுகளும் வீழ்த்தப்பட்டால்தான் மக்கள் வாழவே முடியும் என்பது நம் கண்முன் தெரிகிறது.
பரூக்
மூலக்கட்டுரைகள்:
https://thewire.in/government/adani-power-receives-1020-acres-for-lease-in-bihars-bhagalpur-at-rs-1-per-acre-per-year
https://www.landconflictwatch.org/conflicts/pirpainti-thermal-power-plant







