இந்தியாவின் சொத்துக்களை சூறையாடிக் கொழுத்து வரும் அதானி குழுமத்தின் ரூ.2,200 கோடி (265 மில்லியன் டாலர்) லஞ்சப் புகார் தொடர்பாக, கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி ஆகியோருக்கு சம்மன் அனுப்ப அமெரிக்க நீதிமன்றத்தின் அனுமதியை அந்நாட்டுப் பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான எஸ்இசி கோரியுள்ளது.
கவுதம் அதானி மற்றும் சாகர் அதானிக்கு சம்மன் வழங்க இந்திய அதிகாரிகளிடம் இருந்து போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்று எஸ்இசி தெரிவித்துள்ளது. எனவே, அவர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக சம்மன் அனுப்ப நியூயார்க் நீதிமன்றத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக எஸ்இசி தெரிவித்துள்ளது. இந்தத் தகவலால் இந்தியப் பங்குச் சந்தைகளில் அதானி குழும நிறுவனங்களின் பங்குகள் நேற்றைய வர்த்தகத்தில் 13%வரை சரிவைச் சந்தித்தன.
சூரிய மின்சக்தி ஒப்பந்தங்களுக்கு சாதகமான விதிமுறைகளைப் பெற லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படும் இந்தக் குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்தது, அமெரிக்க வழக்கறிஞர்களின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும், கூட்டு நிறுவனம் அனைத்து சட்டங்களுக்கும் இணங்குவதாகவும் கூறியது. அது மட்டுமல்ல இந்த வழக்கை எதிர் கொள்ள சாத்தியமான அனைத்து வகையான சட்டப்பூர்வ உதவிகளும் கோரப்படும் என்றும் அந்த நிறுவனம், கூறியது.
இந்த வகையில்தான் “அதானி கிரீன் இயக்குநர்களுக்கு எதிராக அமெரிக்க நீதித்துறை மற்றும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையம் கூறிய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, எனவே எமது நிறுவனத்தினால் அவை மறுக்கப்படுகின்றன” என்று அதானிக் குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
நியூயார்க் நீதிமன்றத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக எஸ்இசி வெளியிட்டச் செய்தி வந்தவுடன், அதானி குழுமத்தின் முதன்மை நிறுவனமான அதானி எண்டர்பிரைசஸ் பங்கு விலை 10.76% சரிந்து ரூ.1,861.80-க்கும், அதானி கிரீன் எனர்ஜி 13.81% சரிந்து ரூ.779.40-க்கும் வர்த்தகமானது. இதன் எதிரொலியாக மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 769.67 புள்ளிகள் சரிந்து 81,537.70-ல் நிறைவடைந்தது. நிப்டி 241.25 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 25,048.65 புள்ளிகளில் நிலை பெற்றது.
அதானி, இந்தியாவில் தனது புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனம் சில ஒப்பந்தங்களை கைப்பற்ற இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்டதாகவும், அந்த ஒப்பந்தங்களுக்கான முதலீட்டை அமெரிக்க மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களிடம் பெற்றபோது லஞ்ச விவகாரத்தை மறைத்ததாக கூறி ‘மோசடி’ குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.
படிக்க:
♦ எல்.ஐ.சி யின் பணத்தை எடுத்து அதானிக்கு கறி விருந்து படைக்கும் பாஜக அரசு!
♦ நாட்டின் அபாயம் அம்பானி, அதானி, அகர்வால் சேர்த்துள்ள சொத்துக்களே!
தொழில்துறையில் ஒப்பந்தங்களை பெறுவதற்கு இது போன்று அதிகாரிகளுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய்களை லஞ்சமாக வாரிக் கொடுப்பது இத்தகைய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒரு வாடிக்கையாகவே மாறியுள்ளது.
இவ்வாறு இவர்கள் ஒப்பந்தங்களை பெறுவதற்கு வாரி வழங்குகின்ற கோடிக்கணக்கான ரூபாய்களை மக்களிடமிருந்து கொள்ளையடிக்கிறார்கள்; மற்றொருபுறம் அரசாங்கத்திடம் பிச்சை கேட்டு வரிச் சலுகை பெற்று அதன் மூலம் கொள்ளையடிக்கிறார்கள். இந்த வரிச்சலுகை மோசடியை அம்பலப்படுத்தி புதிய ஜனநாயகத்தில் கீழ்கண்டவாறு தலையங்கமாக எழுதியிருந்தோம்.
“கார்ப்பரேட் நிறுவனங்கள் ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டு வந்த 34.94 சதவீத வரியை 25.17 சதவீதமாகக் குறைத்தது உள்ளிட்டுப் பெருநிறுவன வரிவிதிப்பில் செய்திருக்கும் மாற்றங்களின் மூலம் அந்நிறுவனங்களுக்கு 1,45,000 கோடி ரூபாய் பெறுமான வெகுமதி; ஏற்றுமதி வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் நிறுவனங்களுக்கு 50,000 கோடி ரூபாய் அளவிற்கு வரிச் சலுகைகள்; ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தமது கட்டுமானத் திட்டங்களை முடிப்பதற்காக 10,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு; பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் அந்நிய நிதி முதலீட்டு நிறுவனங்கள் ஈட்டும் இலாபத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த கூடுதல் வரி நீக்கம்; தொழில் முனைவோர் மீது விதிக்கப்பட்டு வந்த ஏஞ்செல் வரி ரத்து எனச் சலுகைக்கு மேல் சலுகையாக அறிவித்து வருகிறது, மத்திய பா.ஜ.க. அரசு.
கார்ப்பரேட் வரிக்குறைப்பு மற்றும் வரித் தள்ளுபடிகளுக்கு அப்பால், வங்கிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி 5.15 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருக்கிறது. மேலும், கார்ப்பரேட் நிறுவனங்கள் வங்கிக் கடன் கிடைக்காமல் தவிக்கக்கூடாது என்பதற்காகவே, பொதுத்துறை வங்கிகளுக்கு அரசின் நிதியிலிருந்து 70,000 கோடி ரூபாய் வரை கூடுதல் மூலதனமும் வழங்கப்பட்டிருக்கிறது.” என்று 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாத புதிய ஜனநாயகத்தின் தலையங்கத்தில் முன் வைத்திருந்தோம்.
இரண்டாவது முறையாக மோடி தலைமையிலான ஆர்எஸ்எஸ் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் கார்ப்பரேட்டுகளுக்கு கொடுக்கப்படுகின்ற வரிச்சலுகை மேலும் அதிகரித்து உள்ளது. செப்டம்பர் 2019 இல், மோடி அரசாங்கம் உள்நாட்டு நிறுவனங்களுக்கான கார்ப்பரேட் வரியின் பயனுள்ள விகிதத்தை 25.17% ஆகவும், புதிய உற்பத்தி நிறுவனங்களுக்கு 17.16% ஆகவும் குறைத்தது.. மேற்கண்ட வரியில் சர்சார்ஜ் மற்றும் செஸ்வரி ஆகியவை போக வெறும் 22 சதவீதம் மட்டுமே கார்ப்பரேட் நிறுவனங்களின் மீதான வரியாக நீடிக்கிறது.
இந்த வரிச்சலுகைகளின் மூலம் அரசாங்கத்திற்கு ஆண்டுக்கு சுமார் 1.45 லட்சம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுகிறது என்றாலும் அந்த இழப்பீடு அரசாங்கத்திற்கு ‘நட்டமாகவும்’ கார்ப்பரேட் முதலாளிகளில் அதானி, அம்பானி உள்ளிட்ட ஒரு சில தேசங்கடந்த தரகு முதலாளிகளின் சொத்தாகவும் மாறுகிறது என்பதுதான் எதார்த்தமான உண்மை.
2008 உலகப் பொருளாதார நெருக்கடியின் போது ஏற்பட்ட மீள முடியாத நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இந்தியாவின் தரகு முதலாளிகள் பிரிட்டன் முதல் ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா போன்ற நாடுகளிலும் வேறு சில தீவுகளிலும் தனது முதலீட்டை செலுத்த துவங்கினர். இந்தியத் தரகு முதலாளிகளில் ஒரு பிரிவு தேசங்கடந்த தரகு முதலாளிகளாக உருமாற்றம் பெற்ற காலகட்டம் முதல் தான் இந்தியாவில் கார்ப்பரேட் காவி பாசிசத்தின் அடித்தளம் உருவாகத் துவங்கியது.
இந்தக் கார்ப்பரேட் காவி பாசிசமானது சட்டபூர்வமான ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய 2014 ஆம் ஆண்டு முதல் இந்திய மக்கள் மீது மிகப்பெரும் அச்சுறுத்தலாகவும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு பல லட்சம் கோடிகளை வாரி வழங்குகின்ற கார்ப்பரேட் நல அரசாங்கமாக மாறியுள்ளது.
இந்தச் சூழலில் அமெரிக்காவின் பங்கு சந்தை மோசடியில் அதானி குழுமம் ஈடுபட்டது என்பதை ஏற்கனவே அம்பலமான பிறகும் அதன் மீது எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாத சூழலில் தற்போது வெளியிடப்பட்டுள்ள அமெரிக்க பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிக்கையானது இந்தியப் பங்கு சந்தையில் மிகப்பெரும் தாக்கத்தை உருவாக்கியுள்ளது.
தொழிற்சாலையில் தொழில் மூலதனமிடுவதற்கு பதிலாக பங்கு சந்தையில் இடப்படுகின்ற இப்படிப்பட்ட மூலதனமானது குமிழிப் பொருளாதாரத்தை உருவாக்கி நாடு வளர்ச்சி அடைவதாக ஒரு மாயத் தோற்றத்தை மக்கள் முன்னே வைக்கின்றது.
இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏதாவது வங்கி மோசடிகள் மற்றும் நிதி நிறுவன மோசடிகள், மூலதனச் சூறையாடுதல் போன்றவை நடத்துகின்ற போது அந்த நிறுவனங்களின் பங்கானது பங்கு சந்தையில் வீழ்ச்சியடைந்து அதன் பாதிப்புகள் அனைத்தும் பங்குகளை வாங்கி வைத்துள்ள நடுத்தர வர்க்கத்தினர் தலையிலும், ஏமாளிகள் தலையிலும் கட்டப்படுகிறது.
இந்தக் குமிழிப் பொருளாதாரம் உருவாக்குகின்ற வளர்ச்சியை தான் பாசிச ஆர்எஸ்எஸ் மோடி கும்பல் இந்தியாவின் வளர்ச்சியாக முன்வைத்து வருகின்றனர். இந்தக் குமிழி பொருளாதாரத்தின் மூலம் உருவாக்கப்படுகின்ற வருவாய் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகள் தங்கள் மூலதனமாக மாற்றிக்கொண்டு தேவையான போது உருவி எடுத்துக்கொண்டு நாட்டை விட்டு ஓடுகின்றனர் அல்லது இங்கேயே அமர்ந்து கொண்டு ஒப்பாரி வைக்கின்றனர். பாதிப்புகளை மக்களின் தலையில் கட்டுகின்றனர்.
அதானி குழுமத்தின் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கைகளை அமெரிக்க வாரியம் தீவிரமாக எடுக்கத் துவங்கியதன் எதிர் விளைவாக இந்தியா முதல் முறையாக ஈரானில் நடக்கின்ற மனித உரிமைகளை பற்றி அமெரிக்காவின் மனித உரிமை அமைப்பு முன் கொண்டு வந்த தீர்மானத்திற்க்கு எதிராக வாக்களித்துள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.
தனது எஜமானர்களின் வருமானத்திற்கும், வாழ்க்கைக்கும் ஏதாவது நெருக்கடி ஏற்பட்டால் விசுவாசமான ஜந்துகள் செய்கின்ற நடவடிக்கையை போன்றது தான் இந்திய ஒன்றிய அரசாங்கம் ஈரான் விஷயத்தில் நடந்து கொண்டுள்ள விவகாரமாகும்.
எனவே இத்தகைய மோசடிகளை எதிர்த்து நிரந்தரமாக தீர்வு காண்பதற்கு கார்ப்பரேட் முதலாளிகளில் தேசக்கடந்த முதலாளிகளான அம்பானி, அதானி மற்றும் அகர்வால் போன்றவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்! மக்களின் உழைப்பைச் சுரண்டி கொள்ளையடித்து வரும் பணக்காரர்கள் மீது செல்வவரி போடு! என்ற முழக்கத்தின் கீழ் நாட்டு மக்களை ஒன்று திரட்ட வேண்டியது பிரதான பணியாக மாறியுள்ளது.
◾கணேசன்.






