
“வெள்ளியின் விலை, டாலர் மதிப்பில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இதுவரை 125% உயர்வைக் கண்டுள்ளது. தங்கத்தின் விலையும் இந்த ஆண்டு கணிசமாக (63%) உயர்ந்த போதிலும், வெள்ளி விலை உயர்வுடன் ஒப்பிடும்போது பாதி அளவுதான்.
“வெள்ளியின் சகாப்தம் இப்போதுதான் தொடங்குகிறது. இது தனித்துவமானது. ஏனெனில் உள்ளார்ந்த மதிப்பையும் அதேசமயம் தொழில் துறை தேவையையும் கொண்ட ஒரே உலோகம் இதுவே ஆகும்.
சூரிய ஆற்றல் மின்கலங்கள், மின்சாரபேட்டரி வாகனங்கள், ராணுவ தளவாடங்கள் என புதிய தொழில்நுட்பங்கள் எதுவாக இருந்தாலும், வெள்ளியை ஒரு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுத்துகின்றன.
இந்தியாவின் ஒரே வெள்ளி உற்பத்தியாளர் என்ற முறையில் எங்கள் குழுமத்தைச் சேர்ந்த இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்தில் இதை நாங்கள் நேரடியாகக் கண்டுள்ளோம். வெள்ளியின் விலையில் ஏற்ற இறக்கம் இருக்கலாம். ஆனால் வெள்ளியின் அசாதாரண பிரகாசம் நிலைத்திருக்கும்.” என்று வேதாந்தா குழுமத்தின் தலைவரான அனில் அகர்வால் குதூகலித்துள்ளார்.
அமெரிக்கா விதித்த வரி விதிப்பு மற்றும் அமெரிக்காவுடன் போடப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் அனைத்தும் டாலரில் தொடர்வதால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, டாலர் மீதான நம்பிக்கை இழப்பு ஆகியவை அனைத்தும் ஒன்று சேர்ந்து தங்கத்தின் மீதான முதலீடு மற்றும் தங்கத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்திருப்பதால் உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி இந்திய தங்கத்தின் சந்தை மதிப்பும், அதன் விலையும் அன்றாடம் எகிறிக்கொண்டே செல்கிறது. இதனால் தங்கத்துடன் பிறந்த மற்றொரு உலோகம் என்று சொல்லப்படுகின்ற வெள்ளியின் தேவை இந்தியாவில் அதிகரித்துள்ளது.
கடந்த 15 நாட்களில் தங்கம் மற்றும் வெள்ளி பற்றி ஊடகங்களில் வந்துள்ள விலை உயர்வு பற்றிய செய்தி அடிப்படையில் பார்த்தால், “தங்கத்தின் விலை டிச.12-ல் ரூ.98,960 ஆக இருந்தது. டிச.15-ல் ரூ.1 லட்சத்தை தாண்டி வரலாறு படைத்தது. இந்நிலையில், டிச.23-ல் ரூ.1 லட்சத்து 2,160 என்ற புதிய உச்சத்தை தொட்டது. பவுனுக்கு ரூ.1,600 உயர்ந்தது. ஒரு கிராம் தங்கம் ரூ.200 உயர்ந்து ரூ.12,770-க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் டிச.27 நிலவரப்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,000-க்கும், பவுனுக்கு ரூ.880 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,04,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதற்கு நிகராகவே வெள்ளியின் விளையும் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் ரூ.274-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.2,74,000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை கடந்த 11 நாட்களில் கிலோவுக்கு ரூ.52 ஆயிரம் அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.” என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை தங்கத்தின் மீதான மோகம் மற்றும் திருமணம் மற்றும் முக்கியமான விசேட நிகழ்வுகளில் தங்கத்தை பயன்படுத்துவது எந்த அளவிற்கு உழைக்கும் மக்களின் வாழ்க்கையில் கடும் நெருக்கடியை உருவாக்கியுள்ளது என்பதை பற்றி நவம்பர் 2025 புதிய ஜனநாயகம் கேள்வி பதிலில் எழுதி இருந்தோம்.
இது ஒரு புறமிருக்க வெள்ளியை உற்பத்தி செய்கின்ற ஒரே உற்பத்தியாளர் என்ற முறையில் தேசங்கடந்த தரகு முதலாளிகளில் ஒருவரான அனில் அகர்வால் குழுமம் தற்போது வெள்ளி வேட்டையில் இறங்கியுள்ளது.
அகர்வாலைப் பற்றி புரிந்து கொள்ள தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மூலம் உற்பத்தி செய்யப்பட்டு வந்த தாமிரத்தை கொண்டு இந்திய தாமிர சந்தையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற வெறியுடன் அலைந்த லண்டனில் செட்டிலாகியுள்ள, ஆர்எஸ்எஸ் இன் புரவலர்களில் ஒருவரான ‘தேசபக்த முதலாளி’ என்பதுதான்.
இவர் நடத்துகின்ற வேதாந்தா குழுமத்தின் சொத்து மதிப்பு 2.35 லட்சம் கோடி ஆகும். கனிமங்கள் மற்றும் சுரங்கங்கள் ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் இயற்கை வளத்தை சூறையாடுகின்ற இந்த தேசங்கடந்த தரகு முதலாளி தான் தற்போது வெள்ளி வேட்டையில் இறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
படிக்க:
♦ நாட்டின் அபாயம் அம்பானி, அதானி, அகர்வால் சேர்த்துள்ள சொத்துக்களே!
♦ அனில் அகர்வால் கைக்குள் சிபிஐயும் அடக்கம்!
இந்தியாவின் தாமிர சந்தையை கைப்பற்ற வேண்டும் என்று அலைந்து கொண்டிருந்த அகர்வால் தற்போது இந்தியாவின் வெள்ளி சந்தையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற வெறித்தனத்துடன் அலையத் துவங்கி உள்ளார் என்ற அடிப்படையிலேயே அவர் முன் வைத்துள்ள கருத்துக்கள் பரிசீலிக்கப்பட வேண்டும்.. இதனால்தான் தங்கத்துக்கு நிகராகவே வெள்ளியின் விலையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது அவரே முன்வைத்துள்ளது போல தங்கத்தின் உயர்வு 63 சதவீதம் தான் ஆனால் வெள்ளியின் உயர்வு 125 மடங்கு என்று கூறியுள்ளதை வைத்து பார்க்கும் போது அவரது நிறுவனத்தின் உள்ளடி வேலைகள் இதில் நமக்கு தெளிவாக தெரிகிறது.
ஏற்கனவே மக்கள் வாங்குகின்ற அனைத்து பொருள்களின் மீதும் ஜிஎஸ்டி என்ற வரி விதிப்பின் மூலம் சொந்த நாட்டு மக்களை கொள்ளையடித்து வருகின்ற ஒரு பயங்கரவாத அரசாங்கம் தான் இந்தியாவை ஆண்டு கொண்டுள்ளது.
மன்னர்கள் ஆட்சியில் தான் கொடுமையான வரிகளைப் போட்டு மக்களை சுரண்டி உல்லாச, ஊதாரி ஆடம்பர வாழ்க்கை வாழ்வார்கள் என்று வரலாற்றில் படித்திருக்கின்றோம். தற்போது இந்தியாவின் புதிய மன்னர்களாகவும், சக்கரவர்த்திகளாகவும் உலா வருகின்ற ஆர்எஸ்எஸ் பாஜக கும்பலைச் சேர்ந்த அரசியல் கட்சி தலைவர்கள் முதல் ஒன்றிய அமைச்சர்கள் மற்றும் பிரதமர் வரை உல்லாச, ஊதாரி வாழ்க்கை வாழ்வதற்கு சொந்த நாட்டு மக்களை வரி விதிப்பின் மூலம் கொடூரமான நெருக்கடிக்கு உள்ளாக்கி வருகின்றனர்.
இதன் விளைவாகவே அன்றாடம் உபயோகிக்கின்ற உணவுப் பொருட்கள் முதல் தங்கம், வெள்ளி போன்ற பொருட்கள் வரை அனைத்தின் விலையும் கடந்த 10 ஆண்டுகளில் கடுமையாக விலையேறி கழுத்தை நெறித்துக் கொண்டுள்ளது.
ஆர்எஸ்எஸ் பாஜகவின் விசுவாசிகள் மற்றும் அபிமானிகள், வெறியர்கள் போன்றவர்கள் ஆர்எஸ்எஸ் பாஜகவினை விமர்சித்தாலே மிகவும் கீழ்த்தரமாகவும், நரகல் நடையிலும் பின்னூட்டங்களை போடுவதில் இருந்து அவர்களின் அறிவு மட்டத்தையும், அவர்கள் எந்த அளவிற்கு பாசிச குண்டர் படையின் அங்கத்தினராக உருவாகியுள்ளார்கள் என்பதை புரிந்துக் கொள்ள முடியும்.
ஒவ்வொரு பிரச்சனையாக எடுத்து அதன் விளைவுகளையும் ஆபத்துகளையும் விளக்கிக் கொண்டிருப்பதை விட அனைத்து பிரச்சினைகளுக்கும் அடிப்படையாக உள்ள ஒரே காரணமான கார்ப்பரேட் பொருளாதாரக் கொள்கையை அதாவது ஏகாதிபத்திய நிதி மூலதனத்தின் காலனியாதிக்க வடிவங்களில் ஒன்றான மறுகாலனியாக்கம் என்ற கொடூரமான சுரண்டல் கொள்ளையை எதிர்த்து முறியடிப்பதற்கு அவை உருவாக்கியுள்ள பாசிச பயங்கரவாத அடக்குமுறைகளையும், கொடுமைகளையும் முறியடிப்பதற்கு ஒரே மாற்று ஜனநாயகக் கூட்டரசு ஒன்றை உருவாக்குவது தான்.
இந்தத் திட்டம் இல்லாமல் பாஜகவை எதிர்க்கின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காக பாஜக எதிர்ப்பு அணியில் உள்ள கட்சிகளை அளவுக்கதிகமாக நம்புவது, அவர்கள் முன்வைக்கின்ற பாசிச எதிர்ப்பு சவடால்களை நம்பி பின்னால் ஓடுவது ஆகியவை அனைத்தும் சொந்த காசில் சூனியம் வைத்துக் கொள்வதற்கு சமம்.
எனவே குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் பாசிச எதிர்ப்பு ஜனநாயக ஐக்கிய முன்னணியை உருவாக்கி அதன் வழியில் உருவாக்கப்படும் ஜனநாயகக் கூட்டரசு தான் நாடு இன்று எதிர்நோக்கியுள்ள அனைத்து சிக்கல்களுக்கும் ஒரே தீர்வு.
இதன் மூலமே வெள்ளி வேட்டை மட்டுமல்ல. நாட்டின் இயற்கை வளங்களை சூறையாடி வருகின்ற கார்ப்பரேட்டுகளுக்கு தக்க பதிலடி கொடுக்க முடியும்.
◾பார்த்தசாரதி.
புதிய ஜனநாயகம் தினசரி






