நாட்டின் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் இந்தியாவின் வளர்ச்சி பன்மடங்கு பெருகி உள்ளது என்று வாரணாசியில் நடந்த கூட்டம் ஒன்றில் இந்திய ஒன்றியத்தின் பிரதமர் ஆன மோடி பேசியுள்ளார்.
“நாட்டின் உள்கட்டமைப்பு வசதி என்றால் வெறும் சாலைகள் வசதி, போக்குவரத்து வசதி என்பது மட்டுமல்ல ஆன்மீக தலங்களுக்கு அனைவரும் சென்று சேர்வதற்கு பொருத்தமாக கட்டமைப்பை உருவாக்குவது என்பதுதான்” என்பது அவர் முன் வைத்துள்ள வளர்ச்சி பற்றியதான அறிவிப்பாகும்.
அதிலும் குறிப்பாக அவர் போட்டியிட்டு வென்ற வாரணாசி இந்தியாவின் ஆன்மீக மையமாக மாறிக்கொண்டு உள்ளதாக வந்தே பாரத் துவக்க நிகழ்ச்சியில் பெருமைப்படுத்தி கொண்டு உள்ளார். “உத்தரபிரதேசத்தில் உள்ள ஆன்மீக தலங்கள் மிக சிறப்பாக மேம்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக வாரணாசிக்கு மற்ற மாநிலங்களில் இருந்து மக்கள் வருவதை ஒரு புதிய எழுச்சியாக மாற்றி உள்ளனர். வாரணாசியில் ஒருநாள் தங்கியிருந்து இறைவழிபாடு செய்வது ஒவ்வொருவருக்கும் சிறப்பான அனுபவத்தை கொடுக்கும்.” என்று ஆன்மீக பஜனை மடத்தின் தலைவரைப் போல நாட்டின் பிரதமர் பேசுவது பலருக்கும் அவமானகரமாகவும் பார்ப்பன கும்பலுக்கு மிகவும் சந்தோஷமாகவும் இருக்கலாம்.
இந்தியாவில் உள்ள மக்கள் ஆன்மீக தலங்களுக்கு சென்று வழிபடுவது அதன் மூலமாக மன நிம்மதியை அடைவது என்பதுதான் வளர்ச்சி என்பது பற்றிய ஆர்.எஸ்.எஸ். – பாஜக முன்வைக்கின்ற கொள்கை என்பதை மோடி வெளிப்படையாகவே அறிவித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக குஜராத் மாடல் முன் வைக்கப்பட்டு தோல்வி அடைந்த பிறகு புதிதாக முன்வைக்கப்படும் உ.பி மாடல் என்பதில் அயோத்தி ராமன் கோவில் உள்ளிட்ட ஆன்மீக மையங்களை நோக்கி இந்திய மக்களை ஈர்ப்பது தான் தனது குறிக்கோள் என்ற கண்ணோட்டத்தில், “மற்ற மாநிலங்களில் இருந்து உத்தரபிரதேசத்துக்கு ஆன்மீக சுற்றுப்பயணம் வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து உள்ளது. அவர்கள் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் உத்தரபிரதேச மாநில அரசுக்கு வருவாயாக கிடைக்கிறது.”என்றெல்லாம் பேசி உள்ளார்.
நவீன அறிவியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமெரிக்க மேல்நிலை வல்லரசு மற்றும் அதற்கு போட்டியாக புதிதாக உருவெடுத்துள்ள நவீன சமூக ஏகாதிபத்தியமான சீனா போன்றவை சரக்கு உற்பத்தியை பல மடங்கு உற்பத்தி செய்து இந்தியா உள்ளிட்ட மறு காலனியாக்கத்தை அமல்படுத்துகின்ற நாடுகளின் தலையில் திணிக்கிறது.
இந்த மறுகாலனியாதிக்கம் என்பது பிரிட்டன் இந்தியாவை ஆண்ட போது சுரண்டி கொண்டு சென்ற செல்வ வளங்களை காட்டிலும் பல மடங்கு அதிகமான செல்வ வளங்களை சூறையாடுவதற்கு ஏகாதிபத்திய முதலாளித்துவ நிறுவனங்களுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் பயன்படுகிறது என்பதை பல்வேறு தரவுகளின் மூலம் அம்பலப்படுத்தியுள்ளனர்.
நாட்டின் குறுக்கு நெடுக்கான தோற்றத்தை எடுத்துக்கொண்டு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து மாநிலங்களும் எவ்வாறு வளர்ச்சியை பெற்றுள்ளது. அந்த மாநிலங்களின் நிகர உள்நாட்டு உற்பத்தி என்ன? மக்களின் வாழ்நிலை என்ன? அவர்களின் கல்வியறிவு மற்றும் சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட கட்டமைப்புகள் எந்த அளவிற்கு மேம்பட்டு உள்ளது.
மக்களின் வேலை வாய்ப்பிற்கான தொழிற்சாலைகள் எந்த அளவிற்கு உருவாகியுள்ளது என்பதை எல்லாம் வைத்துக் கொண்டு நாட்டின் வளர்ச்சியை தீர்மானிப்பது என்பதை காட்டிலும், எந்த அளவிற்கு கோவில்கள் கட்டப்பட்டுள்ளது; மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளது; பஜனை மடங்களாக ஆன்மீக மையங்கள் எவ்வாறு மாறிக் கொண்டுள்ளது என்பதை எல்லாம் வைத்துக்கொண்டு ஒரு நாடு வளர்ச்சி பெறுகிறது என்பதை கூறுகின்ற பாசிச பயங்கரவாத முகம் கொண்ட ஒரு பிரதமரை இந்தியா எதிர் கொண்டுள்ளது.
அவர் வாரணாசியில் புதிய ரயில் போக்குவரத்தை துவங்கி பேசும்போது “இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ள 4 வந்தே பாரத் ரெயில்களும் நாட்டின் வளர்ச்சியை மேலும் மேம்படுத்தும். இந்த ரெயில்கள் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும். நேரத்தை கணிசமாக குறைக்கும்.
படிக்க:
♦ வட மாநில தொழிலாளர்களின் ரயில் பயணங்களும் அவர்கள் படும் துயரங்களும்!
♦ மோடி அரசின் அலட்சியத்தால் அவல நிலையில் இந்திய ரயில்வேத் துறை!
பனாரஸ்- கஜுர்கோ நகரங்களுக்கு இடையே விடப்பட்டுள்ள வந்தே பாரத் ரெயில் வாரணாசி, பிரயாக்ராஜ், சித்தரகூட் போன்ற ஆன்மீக கலாச்சார நகரங்களை இணைக்கிறது. நாட்டின் வளர்ச்சியில் வந்தே பாரத் ரெயில்கள் புதிய மைல்கல்களாக இருக்கின்றன.” என்று வந்தே பாரத் ரயில் விடுவது ஒன்றே இந்தியாவின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு என்பதைப் போல பாசிச வெறிபிடித்து ஆடிக் கொண்டுள்ளார்.
பார்ப்பன இந்து மதம் கற்றுக் கொடுக்கின்ற ஒழுக்க விதிகளின்படி ஒரு தனிப்பட்ட மனிதன் ஆணாதிக்கவாதியாகவோ பெண்களை வன்கொடுமை செய்கின்ற வக்கிர புத்தி கொண்டவனாகவோ அல்லது நண்பர்களுடன் உறவினர்களுடன் உறவாடி கிடைக்கின்ற சூழ்ச்சிக்காரனாகவோ இருந்தாலும் அதை பற்றி கவலை இல்லை.
மாறாக கோவிலுக்கு செல்வது ஆன்மீக தலங்களுக்கு சென்று பிராயச்சித்தம் செய்து கொள்வது காசிக்குச் சென்று பாவத்தை தீர்ப்பது கங்கையில் புனித நீராடி தனது தலைவிதியை மாற்றிக்கொள்வது என்றெல்லாம் போதிக்கப்படுகின்ற காரணத்தினால் தான் ஆன்மீக மையங்கள் அதிகரித்துக் கொண்டு செல்வதைப் பற்றியும் பார்ப்பன பஜனை மடங்களான கோவில்கள் அதிக அளவில் உருவாக்கப்படுவது குறித்தும் நாட்டின் பிரதமர் பேசுகின்றார் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
“நாட்டின் மிகப் பெரிய அபாயமாக பார்ப்பன பாசிசம் உருவெடுத்துள்ளது என்று கூறினால், இவர்களுக்கு இதே தான் வேலை இவர்கள் நாத்திகவாதிகள் பகுத்தறிவு என்ற பெயரில் பார்ப்பன ஆதிக்கத்திற்கு எதிராக போராடுபவர்கள், நகர்ப்புற நக்சல்கள் இவர்களை அனுமதிப்பதே தேசத்திற்கு ஆபத்தானது” என்றெல்லாம் பிரச்சாரம் செய்கிறது ஆர் எஸ் எஸ் – பாஜக சங் பரிவார கும்பல்.
மிகவும் பிற்போக்குத்தனமான பார்ப்பன மேலாதிக்கத்தை வலியுறுத்துகின்ற கோவில்கள் மடங்கள் மற்றும் ஆசிரமங்கள் தான் இந்தியாவிற்கு வழிகாட்டுகின்ற மையம் என்று பேசுகின்ற ஆர்எஸ்எஸ் இன் கொள்கை பிரச்சாரத்தை மக்களின் வரிப்பணத்தில் நாட்டின் பிரதமர் மேற்கொண்டு வருகிறார் என்பது ஒட்டுமொத்த தேசத்திற்கும் அவமானம் என்று பிரச்சாரம் செய்து எதிர் தாக்குதல் தொடுக்க வேண்டும்.
◾கணேசன்






