“நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் மொழிரீதியிலான வேறுபாடும், வேற்றுமை உணர்வும் எழத் தொடங்கின. காஷ்மீரில் தீவிரவாதிகள், வடகிழக்கு பிராந்தியத்தில் பிரிவினைவாதிகள், நக்சலைட்டுகள் என ஆங்காங்கே வெவ்வேறு வடிவில் வன்முறைகள் ஏற்பட்டன. ஆண்டுதோறும் சுமார் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் பேர் வன்முறைகளால் உயிரிழந்தனர். ஆனால் பிரதமர் மோடி ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த 10 ஆண்டுகளில் வன்முறைகள் அடியோடு மறைந்தன”. என்றும்,
“காஷ்மீரிலும், வடகிழக்கு பிராந்தியத்திலும் அமைதி ஏற்பட்டுள்ளது. நாட்டுக்கு கிடைத்த சரியான தலைமைதான் இந்த மாற்றங்களுக்கு எல்லாம் காரணம். 10 ஆண்டுக்கு முன்பு பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருந்த இந்தியா இன்றைய உலக அளவில் 4-வது பெரிய பொருளாதாரமாக வளர்ந்துள்ளது. விரைவில் 3-வது இடத்தை எட்டிவிடுவோம். 2047-ம் ஆண்டு முற்றிலும் வளர்ந்த இந்தியாவாக மாறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது “ என்றும் தமிழகத்தின் ஆளுநர் திருவாளர் ஆர் என் ரவி திருவாய் மலர்ந்துள்ளார்.

இந்திய ஒன்றிய அரசாங்கத்தை ஆர்எஸ்எஸ் பாஜக கைப்பற்றியுள்ள இந்த பத்தாண்டுகளில் அதுவும் குறிப்பாக மோடியின் ஆட்சியின் கீழ் இந்தியா நிறைய மாறி இருப்பதாக தமிழகத்தில் கவர்னர் திருவாளர் ஆர் என் ரவி புகழ்ந்து பேசி உள்ளார். இதனை நாமும் அப்படியே ஏற்றுக் கொள்கிறோம்.

ஏனென்றால் 2014க்கு முன்னாள் இருந்த இந்திய நிலைமை இப்போது இல்லை. விவசாயிகளின் வாழ்க்கை நிலைமை; தொழிலாளர்களின் வேலை பாதுகாப்பு; மாணவர்களின் உயர்கல்வி பெறும் உரிமை; பட்டியலின மக்கள் ஊருக்குள் சுதந்திரமாக வாழ்கின்ற உரிமை; மத சிறுபான்மையினரான இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் வழிபடும் உரிமை; தாங்கள் விரும்பிய மதத்தை தாங்கள் கடைபிடிக்கின்ற உரிமை; சிறு குறு தொழில் முனைவர்களின் தொழில்கள் நடத்துவதற்கான உரிமை முதற்கொண்டு, வழக்கறிஞர்கள், பேராசிரியர்கள், ஊடகவியலாளர்கள் இன்ன பிற அறிவுத்துறையினர் தாங்கள் விரும்பிய கருத்துக்களை சுதந்திரமாக அனைவருக்கும் முன் வைக்கின்ற உரிமை ஆகியவை அனைத்தும் ஒழித்துக் கட்டப்பட்டு அனைத்தும் பாசிச பயங்கரவாத குண்டர் படையின் கண்காணிப்பின் கீழ் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. இந்த வகையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது தான்.

சுதந்திரம் வாங்கியதாக சொல்லப்பட்ட 1947 முதல் தனியார் மயம், தாராளமயம், உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகள் அமல்படுத்த துவங்கிய 90கள் வரை கார்ப்பரேட்டுகள் இந்தியாவை சூறையாடி கொண்டு சென்ற சொத்துக்களின் அளவிற்கும், அதன் பிறகு 90களில் இருந்து 2014 வரை கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் சொத்துக்களை சூறையாடி கொண்டு சென்ற சொத்துக்களின் அளவிற்கும், 2014 முதல் 2025 வரையிலான காலகட்டத்தில் கார்ப்பரேட்டுகள் இந்தியாவை சூறையாடி சொத்துக்களை கொண்டு சென்றுள்ள அளவிற்கும் கண்டிப்பாக வேறுபாடு உள்ளது.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை தான் மட்டுமே சொத்தாக அனுபவித்து வருகின்ற ஆதிக்க சாதி நிலப்பிரபுக்கள் முதல் ஆதீனங்கள், மடங்கள், கோவில்கள், வாரியங்கள் வரை சேர்த்து வைத்திருந்த நிலக் குவியல் அளவு பன்மடங்கு அதிகரித்து ஏற்கனவே இருந்த விவசாயிகளிடமிருந்து நிலங்கள் பிடுங்கப்பட்டு வருகிறது என்ற அளவில் வேறுபாடு கண்டிப்பாக உள்ளது.

சூத்திர, பஞ்சம சாதிகளைச் சார்ந்த மாணவர்கள் ஒரு நூற்றாண்டு காலம் போராடிப் பெற்ற கல்வி பெறுகின்ற உரிமை ஒன்று, இரண்டு தலைமுறைக்குள்ளாகவே அவர்களிடமிருந்து பறிக்கப்பட்டு கல்வி பார்ப்பனமயமாகியுள்ளது மட்டுமின்றி, கார்பரேட் மயமாகியுள்ளது. இதனால் ஏழை எளிய மக்கள் முயற்சி செய்தாலும் படிக்க முடியாத நிலைமை உருவாகியுள்ளது என்ற வகையில் கல்வி கற்பதில் வேறுபாடு உள்ளது.

பல்முனை வரிவிதிப்பு என்பதை மாற்றி “ஒரே நாடு, ஒரே வரி” என்ற அடிப்படையில் கொண்டு வரப்பட்ட ஜிஎஸ்டி வரி விதிப்பு மூலம் பல்லாயிரக்கணக்கான சிறு குறு தொழில் முனைவர்களின் வாழ்க்கை அழிக்கப்பட்டு அரசாங்கம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தர துப்பு கெட்ட நிலையில் அவர்களே உருவாக்கிக் கொண்ட வேலைவாய்ப்பு, சுய தொழில் ஆகியவை அழிந்து சிறு குறு தொழில்கள் நாசமாகி உள்ளது என்ற வேறுபாடு கண்டிப்பாக மறக்கவே முடியாது.

பத்திரிக்கை சுதந்திரம், எழுத்தாளர்களின் எழுத்துரிமை, பேச்சாளர்களின் பேச்சுரிமை, தொழிலாளர்களின் சங்கம் கட்டும் உரிமை, சுதந்திரமாக கூடுகின்ற உரிமை ஆகியவை அனைத்தும் படிப்படியாக மட்டறுக்கப்பட்டு இன்று ஆர்எஸ்எஸ் பாஜக சங் பரிவாரக் கும்பல் கையை காட்டிய இடத்தில் அனுமதிக்கின்ற அளவிற்கு போலீஸ் மற்றும் நீதிமன்றம் மாறி உள்ளது என்ற வகையில் வேறுபாடு நிச்சயமாக உள்ளது.

படிக்க:

 தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் உச்சந்தலையில் சம்மட்டியால் ஓங்கி அடித்த உச்சநீதிமன்றம்!

 சங்கி ரவி அவர்களே! மதச்சார்பின்மை வேண்டாம்! சாதி- தீண்டாமைதான் வேண்டுமா? 

இந்த பத்தாண்டுகளில் இவ்வாறு பல்முனை தாக்குதல் நடத்தப்பட்டுள்ள போதிலும், அதனை எதிர்த்து போராடுவதற்கு மக்கள் ஒன்று திரள விடாமல் தடுப்பதற்கு சாம, தான, தண்ட பேதங்களை கையாளுகின்ற ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக , மாநிலங்களின் உரிமையை பறிப்பது; ஏட்டில் உள்ள மாநிலங்களில் உரிமையையும் கவர்னரின் மூலமாக ஒழித்துக் கட்டுவது; கிரிமினல் குற்ற வழக்குகளில் நீதிபதிகளை மிரட்டி தீர்ப்புகளை வாங்குவது; ஒரு பக்க சார்பாக தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு கவர்னர் பதவி முதல் பல்வேறு பதவிகளை வழங்கி ஊக்கப்படுத்துவது போன்ற அளவிற்கு பண்பாடு, விழுமியம், ஜனநாயகம் பற்றிய கோட்பாடுகள் அனைத்தும் சந்தி சிரித்து வருகிறது என்ற அளவில் வேறுபாடுகள் அதிகரித்துள்ளது.

பாசிசத்திற்கு எதிராக போராடுகின்ற புரட்சிகர, ஜனநாயக சக்திகள் இடதுசாரி அமைப்புகள் அனைத்தின் மீதும் ஒருங்கிணைந்த முறையில் தாக்குதல் தொடுக்கின்ற அளவிற்கு கொடூரமான பாசிச பயங்கரவாதம் தலைவிரித்தாடுகிறது என்ற அளவில் ஏற்கனவே போலி ஜனநாயக அரசு கட்டமைப்பு அனுமதித்த அளவிற்கு கூட சில உரிமைகள் தற்போதைய பாசிச உள்ளடக்கம் கொண்ட பாராளுமன்ற அமைப்பு மற்றும் பாசிசமயமாகியுள்ள அரச கட்டமைப்பு ஆகியவற்றின் மூலம் முற்றிலுமாக தடுக்கப்படுகிறது என்ற வேறுபாடு கண்டிப்பாக உள்ளது.

இந்த வகையில் தமிழகத்தின் கவர்னர் திருவாளர் ஆர்என் ரவி முன்வைத்துள்ள மோடி ஆட்சியில் நடந்துள்ள மாற்றங்கள் என்பதை கணக்கில் கொண்டு, கண் மூடிக்கொண்டு பயணிக்கும் பாட்டாளி வர்க்கத்தை அணி திரட்டுகின்ற மாபெரும் இமாலய பணியை விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டு களம் இறங்குவோம்.

கணேசன்

1 COMMENT

  1. மோடி ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகளில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது என்று ஆளுநர் ஆர் என் ரவி கூறுவது ஒரு பிதற்றல் !

    மோடி ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளாக வன்முறைகளை கட்டுப்படுத்தியுள்ளது பொருளாதாரத்தில் நான்காவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்திற்கு நாடு முன்னேறி உள்ளது என்றும் ஆர் என் ரவி பிதற்றுகிறார்

    மோடி ஆட்சியில் தொழிலாளர்கள் விவசாயிகள் கல்வி மருத்துவம் சுகாதாரம் ஜி எஸ் டி சிறு தொழில் பேச்சுரிமை கருத்துரிமை எழுத்துரிமை அனைத்தும் மோடி ஆட்சியில் பறிக்கப்பட்டுள்ளது இதெல்லாம் மாற்றம் தான் என் பதிலடியாக கட்டுரை ஆசிரியர் தோழர் கணேசன் அவர்கள் சரியான பதிலை கொடுத்துள்ளார் தோழருக்கு நன்றி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here