குஜராத்தில் 2002 ஆம் ஆண்டு நடந்த இஸ்லாமியர்களுக்கு எதிரான இனப்படுகொலை பற்றிய விவாதம் இன்றளவும் தொடர்கிறது என்றால் அதற்கு முக்கிய காரணம் தனது உயிரை பணயம் வைத்து ஆர் எஸ் எஸ் பாஜக பாசிச குண்டர் படைகளுக்கு எதிராக துணிச்சலுடன் போராடுகின்ற தீஸ்டா செதல்வாட், மற்றும் நேர்மையான போலீஸ் அதிகாரிகளான ஸ்ரீகுமார், ஐபிஎஸ் அதிகாரியான சஞ்சீவ் பட் போன்றவர்களின் தியாகம்தான் காரணம்.
சீக்கிய தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பாசிச இந்திராவின் மரணத்திற்கு எதிர் விளைவாக சீக்கியர்கள் மீது 1984 ல் டெல்லியில் நடத்தப்பட்ட வரலாறு காணாத வன்முறை வெறியாட்டங்களும், மும்பை குண்டுவெடிப்பு ஒன்றை காரணம் காட்டி 1992 இல் மும்பையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை வெறியாட்டங்களும் போதுமான சாட்சியங்கள் ஒன்றுமில்லை அல்லது கிடைத்த சாட்சியங்கள் அனைத்தும் ஒழித்து கட்டப்பட்டு, வழக்குகள் அனைத்தும் ஊத்தி மூடப்பட்டது.
ஆனால் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை பயன்படுத்தி குஜராத்தில் ஆர்எஸ்எஸ் பாஜக குண்டர்களால் நடத்தப்பட்ட இனப்படுகொலை குறித்த சாட்சியங்களை விசாரணை செய்து அதனை கொண்டு பல குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைப்பதற்கு உதவியது தீஸ்தா செதல்வாட்டின் உண்மை அறியும் குழுவின் அறிக்கை.
குஜராத்தில் 2002-ம் ஆண்டு நடந்த முஸ்லிம் இனப்படுகொலையை நிகழ்த்திய இந்து மதவாதச் சக்திகளுக்கு எதிராக அதிகமாகப் போராடியவை மனித உரிமை அமைப்புகளும், நேர்மையாக செயல்படும் ஒரு சில தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும்தான். அப்படி குஜராத்தில் போராடி வருபவர்களுள் நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் (Citizen for Justice and Peace) அமைப்பின் சார்பில் செயல்படும் தீஸ்தா செதல்வாட்டும் ஒருவர். கிரிமினல் குற்றவாளிகளை கைது செய்ய போராடியதற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் அவரது ஜாமீன் மீதான விசாரணைகள் பல அலைக்கழிப்புகளுக்குப் பிறகு இன்று (19/7/2023) உச்சநீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டுள்ளது.
“மதக் கலவரத்தை நிகழ்த்தியவர்கள் எப்போதுமே தண்டனை பெறாமல் தப்பித்துவிடுவதுதான், எங்கள் மனஉறுதியை ஆழப்படுத்தி, நமது சமூக அமைப்பில் உள்ள கோளாறுகளை வெளிக்கொண்டுவர வேண்டுமெனத் தூண்டியது.
எனது தாயகம் குஜராத். 1998-ல் இருந்து குஜராத் பற்றி நான் ஆராய்ச்சி செய்துவருகிறேன். அங்கு வழக்கத்துக்கு மாறான வெறுப்புணர்வு விதைக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 27 அன்று கோத்ராவில் ரயில் எரிந்தபோது, துயரம் நிரம்பிய நெருக்கடியான பல அழைப்புகள் எனக்கு வந்தன. நடந்ததை நேரில் அறிய குஜராத்தில் கால் பதித்தபோது, நான் உடைந்து போனேன். எல்லா நம்பிக்கைகளும் நொறுங்கிப் போய்விட்ட நிலையில், குறைந்தபட்ச நம்பிக்கையையாவது உத்தரவாதப்படுத்த வேண்டிய தேவை எனக்கு இருந்தது.

பெண்களின் கோபமும், அவநம்பிக்கையும், ஆண்களின் பயம் மிகுந்த கையாலாகத்தன்மையும் என்னை ஆழமாகப் பாதித்தன. பாதிக்கப்பட்டவர்களின் பயங்கரமான கதைகளைப் பதிவு செய்தபோது, ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நெருக்கடியும், விடை தேடும் கேள்விகளும் என் மனதை அரித்தெடுத்தன.
மதக் கலவரத்தில் நிகழ்த்தப்பட்ட தவறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தியாவில் தீர்வே அளிக்கப்படுவதில்லை. குற்றமிழைத்தவர்களுக்குத் தண்டனையும் கிடைப்பதில்லை. அடுத்தடுத்த தேர்தல்களில் அவர்கள் மீண்டும் மீண்டும் வெற்றி பெற்று, மேலும் மேலும் வலுவடைகிறார்கள்” இதனால் குஜராத் இனப்படுகொலைக்கு தண்டனை பெற்று தருவதன் மூலம் மீண்டும் இது போன்ற கலவரங்கள் உருவாகாமல் தடுக்க முடியும் என்று நம்பிக்கையுடன் போராடிக் கொண்டிருக்கும் சமகால போராளி தீஸ்தா.
அவரது நம்பிக்கை முற்றிலுமாக பாசிஸ்டுகளாலும், பாசிச அடிவருடி நீதிமன்றங்களாலும் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது. பெஸ்ட் பேக்கரி வழக்கு உட்பட பாதிக்கப்பட்டவர்களை கொண்டு தொடுக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் ஒழித்துக் கட்டப்பட்டு அதில் உள்ள குற்றவாளிகள் அனைவரும் குஜராத் உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். குஜராத் இனப்படுகொலைக்கு காரணமானவர் என்று குற்றம் சுமத்தப்பட்ட மோடி இன்று நாட்டின் பிரதமராக உலா வருகிறார்.
குஜராத் இஸ்லாமியர்களுக்கு எதிரான இனப்படுகொலையில் கைது செய்யப்பட்ட உண்மை குற்றவாளிகளை கைது செய்வதற்கு முயற்சித்த குஜராத் முன்னாள் டிஜிபி ஸ்ரீ குமார் மற்றும் சஞ்சீவ் பட் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவரும் தீஸ்டாவுடன் இணைந்து பொய் சாட்சிகளை உருவாக்கி, குஜராத் இனப்படுகொலையில் ஈடுபட்டதாக பல ‘உத்தமர்களை’ சிறையில் அடைக்க காரணமாக இருந்தார்கள் என்பதே இவர்கள் மீதான குற்றச்சாட்டாகும்.
மாயா கோட்னானி போன்ற உத்தமர்கள் மீது 2002 முதல் நடைபெற்று வரும் இந்த வழக்குகள் குஜராத் உயர்நீதிமன்றத்தில் உள்ள நீதியரசர்களால் பல கோணங்களில் விசாரணை செய்யப்பட்டு குற்றம் சுமத்தப்பட்டவர்கள் அனைவரும் ஏதுமறியாத அப்பாவிகள் என்று விடுவிக்கப்பட்டனர். இவ்வாறு விடுவிக்க உதவிய நீதியரசர்கள் கைமேல் பலன்களை அனுபவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்
- குஜராத் படுகொலை! நீதிக்காக போராடிய வழக்கறிஞர் தீஸ்தா, டி.ஜிபி சிறீகுமார் கைது ! காவி பாசிசத்தின் பிடியில் நீதித்துறை !
- நுபுர் சர்மாவுக்கு ஒரு நீதி! தீஸ்தாவுக்கு ஒரு நீதி!. இதுதாண்டா பார்ப்பன மனுநீதி!
குற்றவாளிகளை கைது செய்ய போராடிய தீஸ்தா உட்பட கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது மட்டுமின்றி மோடியின் நற்பெயருக்கு ஊறுவிளைவித்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். இத்தகைய கேடுகெட்ட குற்றச்சாட்டுகள் நாடு முழுவதும் பெறும் கண்டனங்களையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. தீஸ்தா செதல்வாட் கைது இன்றளவும் நேர்மையின் மனசாட்சிக்கு சவால் விட்டுக் கொண்டிருக்கிறது.
2002 குஜராத் கலவர வழக்கில் போலி சாட்சியம் அளித்ததாகக் கூறி, குஜராத் மாநில முன்னாள் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆர்.பி.ஸ்ரீகுமார் மற்றும் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் ஆகியோருடன் செடல்வாட் கடந்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதி அகமதாபாத் குற்றப்பிரிவு வழக்கில் கைது செய்யப்பட்டார். இன்று வரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
குஜராத்தில் உள்ள உயர் நீதிமன்றம் முழுவதும் பாசிச அடிவருடி நீதிபதிகளால் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்கின்ற வகையில் தீஸ்தாவிற்கு ஜாமீன் வழங்கப்பட்டதை ரத்து செய்து மீண்டும் அவரை சிறையில் அடைக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வந்தது ஆனால் அத்தகைய உத்தரவுகள் அனைத்தும் மோசமானவை என்று நிராகரிக்கப்பட்டு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வு, அவருக்கு வழக்கமான ஜாமீன் வழங்க மறுத்த குஜராத் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்தது.
“ எனது பலம் எல்லாம் உயிர் பிழைத்திருப்பவர்களிடம் இருந்து கிடைக்கும் பலம்தான். அறம் சார்ந்த ஆழமான, திடமான நம்பிக்கைதான். மதக் கலவரக் குற்றவாளிகள், குற்றத்துக்குப் பொறுப்பாக்கப்பட்டால், எதிர்காலத்தில் இதுபோன்று நடக்காது என்ற எண்ணம்தான், எங்கள் அனைவருடைய போராட்டத்துக்கும் காரணம்” என்று ஒரு பேட்டியில் தீஸ்தா குறிப்பிட்டிருந்தார்.
பாசிச அடக்குமுறைகளுக்கு எதிராக போராடுவது என்பது ஒரு தொலைக்காட்சி பெட்டியில் அமர்ந்து பேட்டியளிப்பதை போலவோ அல்லது youtube சேனல் முன்னாள் அமர்ந்து கொண்டு பேசுவதைப் போலவோ அவ்வளவு எளிமையானது அல்ல.
ரத்தமும், சதையும் கொண்ட மனித உயிர்களை நரவேட்டையாடுகின்ற பாசிச பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடுகின்ற போது நேர இழப்பு, பொருள் இழப்பு, வேலை இழப்பு, உயிர் இழப்பு ஆகிய அனைத்து வகை தியாகத்தையும் கோருகிறது என்பதுதான் எதார்த்த உண்மை ஆகும்.
ஒவ்வொரு இந்தியரும் தேர்ந்தெடுக்க வேண்டிய பாதை இரண்டே இரண்டு தான் ஒன்று பாசிசத்தை எதிர்த்துப் போராடி வீழ்த்துவது, அதற்கே உரிய தியாகம் அர்ப்பணிப்புக்கு தயாராவது அல்லது பாசிச பயங்கரவாதிகளின் கொடூரமான ஆட்சியின் கீழ் அடிமையாக வாழ்வது., இந்த இரண்டில் எதை தேர்ந்தெடுத்துக் கொள்வது என்பது நம் அனைவரின் முன்னே உள்ள கேள்வியாகும்.
- பா. மதிவதனி